நிம்மதி உங்கள் வாசல் வருமா?
நிம்மதி உங்கள் வாசல் வருமா?
“மனப் புழுக்கத்திலேயே வாழ்க்கையை ஓட்டுகிறார்கள் மக்கள்” என 1854-ல் ஹென்றி தோரூ என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதினார்.
அவருடைய காலத்தில் பெரும்பாலானோர் மன அமைதியின்றி வாழ்ந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. இது, சுமார் 150 வருடங்களுக்கு முன்னால் நிலவிய சூழல். இன்றைய சூழல்? ஏதாவது மாற்றம் நிலவுகிறதா? அல்லது தோரூவின் வார்த்தைகள் இன்றைக்கும் ஒலிக்கின்றனவா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் திருப்தியாக, நிம்மதியாக வாழ்கிறீர்களா? அல்லது நீங்களும் எதிர்காலத்தை பற்றி நம்பிக்கை இல்லாமல் “மனப் புழுக்கத்திலேயே” வாடுகிறீர்களா?
இன்று மக்களின் அமைதியை கெடுக்கும் அவலங்கள் ஏராளம்! இப்பொழுது சில உதாரணங்களை கவனிக்கலாம்: பல நாடுகளில் வேலையில்லாமல் அல்லது போதிய வருமானமில்லாமல் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். பண நெருக்கடியாலும் செய்வதறியாமல் படபடக்கிறார்கள். மற்ற நாடுகளிலோ பொன்னையும் பொருளையும் குவிக்க வேண்டும் என்ற துடிப்பில் நிமிரக்கூட நேரமில்லாமல் உழைக்கிறார்கள் பலர். இப்படி போட்டிப்போட்டு வாழ்வதால் நிம்மதி கிடைப்பதில்லை, கவலைதான் மிஞ்சுகிறது. நோய், போர், குற்றச்செயல், அநீதி, அராஜகம்—இவையும் மக்களை நிம்மதியாக இருக்கவிடுவதில்லை.
நிம்மதியைத் தேடி
பலரும் இந்த உலகம் போகிற போக்கில் சகித்துக்கொண்டு செல்ல விரும்புவதில்லை. பிரேஸிலிலுள்ள சாவோ பாலோ என்ற நகரில் ஒரு பெரிய தொழிற்சாலையின் தொழிற்சங்க தலைவராக இருந்தார் அன்டோன்யு. a அதிக சலுகைகளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டார். ஆனால் மன அமைதியை பெறவில்லை.
மணம் முடித்துவிட்டால் மன நிம்மதியோடு வாழலாம் என சிலர் மனக்கோட்டை கட்டுகிறார்கள். அதுவும் அவர்களுக்கு மணற்கோட்டையாகத்தான் சரிந்துவிடுகிறது. மாற்கோஸ் என்பவர் பிரபல வியாபார புள்ளி. அவர் அரசியலில் அடியெடுத்து வைத்து, தொழில் நகரத்தின் மேயரானார். ஆனால் அவருடைய குடும்பமோ தகர்ந்தது. அவருடைய பிள்ளைகள் கரையேறியபின், அவரும் மனைவியும் கொஞ்சமும் ஒத்துப்போகாததால் ஒதுங்கிவிட்டனர்.
பிரேசிலில் சால்வடார் தெருவில் திரியும் கர்ஸன் என்ற பையன் வாழ்க்கையில் ‘த்ரில்’ வேண்டுமென விரும்பினான். லிஃப்ட் கேட்டு கேட்டே டிரக்கில் ஒவ்வொரு நகரமாக ஓசியில்
சுற்றித்திரிந்தான். கொஞ்ச நாட்களிலேயே, போதை மருந்துக்கு அடிமையானான். அவற்றை வாங்க மக்களிடம் கொள்ளையடிக்கவும் ஆரம்பித்தான். பல தடவை போலீஸார் அவனுக்கு விலங்கு போட்டதுண்டு. எடுத்ததற்கெல்லாம் அடிதடியில் இறங்கும் முரடன் என்றாலும், கர்ஸனும்கூட மன அமைதிக்காக ஏங்கினான். ஆனால் அதை அடைய முடிந்ததா?வானியா சிறு வயதிலேயே அம்மாவை இழந்து விட்டாள். வீட்டையும் சுகவீனமான தங்கையையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு அவளுடைய தலையில் விடிந்தது. வானியா சர்ச்சுக்கு தவறாமல் சென்று வந்தாலும் தன்னை கடவுள் கைவிட்டு விட்டதாகவே உணர்ந்தாள். அவளுக்கும்கூட வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கவில்லை.
எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும் என்பதே மார்ஸிலோவின் விருப்பம். பார்ட்டியில் மற்ற இளைஞரோடு சேர்ந்து ஆடிப்பாடினான், குடித்து கூத்தாடினான், போதை உலகில் மிதந்தான். ஒரு சமயம் அவன் சண்டை போடும்போது மற்றொரு இளைஞனுக்குக் காயம் ஏற்பட்டுவிட்டது. அதற்குப்பின் தான் செய்ததை நினைத்து மனம்வருந்தி கடவுளிடம் மன்றாடினான். அவனும் மன அமைதியை நாடினான்.
வாழ்க்கையில் மன அமைதியை சூறையாடிவிடும் சூழ்நிலைகள் சிலவற்றையே இந்த அனுபவங்கள் காட்டுகின்றன. தொழிற்சங்க தலைவர், அரசியல்வாதி, தெரு பையன், சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை சுமந்த மகள், ஜாலியாக இருக்க விரும்பியவன்—இவர்கள் எல்லாரும் ஏங்கிய மன நிம்மதியை கண்டுபிடிக்க வழி இருந்ததா? இவர்களுடைய அனுபவத்திலிருந்து நாம் எதையாவது கற்றுக்கொள்ள முடியுமா? ஆம் என்பதே இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில். இதை நாம் அடுத்த கட்டுரையில் சிந்திக்கலாம்.
[அடிக்குறிப்புகள்]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 3-ன் படம்]
நிம்மதிக்காக ஏங்குகிறீர்களா?