குடும்ப ஸ்பெஷல் | கணவன்-மனைவிக்காக...
கல்யாண வாழ்க்கை கசக்கிறதா?
பிரச்சினை
‘எனக்கு எப்பவும் விளையாட பிடிக்கும்; ஆனா அவளுக்கு புக் படிக்கதான் பிடிக்கும். நான் எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்வேன்; அவ ஏனோதானோனு செய்வா. நான் எல்லாரோடயும் சேர்ந்து இருக்கணும்னு ஆசைப்படுவேன். ஆனா, அவ எப்பவும் தனியாதான் இருப்பா.’
‘எனக்கும் அவளுக்கும் கொஞ்சம்கூட ஒத்துவரல! காதலிக்கும்போது எப்படி இதெல்லாம் தெரியாம போச்சு!’ என்று யோசிக்கிறீர்களா?
காதலிக்கும்போதே இதையெல்லாம் நீங்கள் கவனித்திருப்பீர்கள்! ஒன்று-இரண்டு விஷயமாவது கண்ணில் பட்டிருக்கும். ஆனால், ‘இதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயமில்லை’ என்று அப்போது நினைத்திருப்பீர்கள். இப்போது ஏன் அப்படி நினைக்க முடியவில்லை? அது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும், சின்ன சின்ன விஷயங்களை ஊதி பெரிதாக்காமல், விட்டுக்கொடுத்து போவது எப்படி என்று இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
யோசித்துப் பாருங்கள்...
யாரை வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணலாம் என்று நினைக்காதீர்கள். காதலிக்கும்போதே உங்கள் இருவருக்கும் ஒத்துவருமா என்று நன்றாக யோசிக்க வேண்டும். ஏதாவது ஒரு முக்கியமான விஷயத்தில் உங்களுக்கு ஒத்துப்போகவில்லை என்றால், அவசரப்பட்டு கல்யாணம் பண்ணாதீர்கள். இல்லையென்றால், காலம் முழுக்க நீங்கள்தான் கஷ்டப்பட வேண்டும். அதற்காக, சின்ன சின்ன விஷயத்தில்கூட உங்களுக்கும் அவருக்கும் ஒத்துப்போக வேண்டுமா?
எல்லா விஷயத்திலும் ஒத்துப்போக வேண்டும் என்று நினைக்காதீர்கள். எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். அதனால், எல்லாவற்றிலும் ஒத்துப்போக வேண்டும் என்று நினைக்காதீர்கள், விட்டுக்கொடுத்து வாழக் கற்றுக்கொள்ளுங்கள். எந்த விஷயத்தில் எல்லாம் சின்ன சின்ன வித்தியாசங்கள் இருக்கலாம்?
பிடித்த விஷயங்கள்: “நான் வீட்டுக்குள்ளயே இருந்து பழகிட்டேன். ஆனா, அவர் மலை ஏறுறது, காட்டை சுத்தி பார்க்கிறதுனு எப்பவும் வெளிலதான் சுத்திட்டு இருப்பார்.”—ஜெஸிகா. *
பழகிய விஷயங்கள்: “அவ, எவ்ளோ லேட்டா தூங்குனாலும், காலைல டான்னு 5 மணிக்கு எழுந்திடுவா. எனக்கு தினமும் ஏழு மணிநேரமாவது தூங்கணும். இல்லனா, அடுத்த நாள் வேலையே ஓடாது.”—எட்வின்.
வளர்ந்த விதம்: ஒருவேளை, நீங்க எல்லாரிடமும் சகஜமாக பழகுவீர்கள்; ஆனால், உங்கள் கணவன்/மனைவி அந்தளவுக்கு மற்றவர்களிடம் பேச மாட்டார். “எங்க வீட்ல எல்லாம், பிரச்சினையை பத்தி வெளிப்படையா பேசிக்க மாட்டோம்; ஆனா, அவளோட வீட்ல இருக்கிறவங்க, எல்லா பிரச்சினையையும் மனசுவிட்டு பேசிடுவாங்க.”—டேவிட்.
உங்கள் கணவன்/மனைவி யோசிப்பதும் சரியாகத்தான் இருக்கும். “நான் யோசிக்கிறது சரியா இருக்கலாம். அதுக்காக மத்தவங்க யோசிக்கிறது எல்லாம் தப்புனு சொல்ல முடியாது.”—ஜெனி.
என்ன செய்ய வேண்டும்?
புரிந்து நடந்துகொள்ளுங்கள். “கேரனுக்கு விளையாட்டுனா சுத்தமா பிடிக்காது. ஆனாலும் என்னோட விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு வருவா, அதை ரசிச்சு பார்ப்பா. அவளுக்கு ஓவியங்கள்னா ரொம்ப பிடிக்கும். அதனால, நான் ஓவியங்களை ரசிக்க கத்துக்கிட்டேன். அவளோட சேர்ந்து ஓவியக் கண்காட்சிக்கு எல்லாம் போவேன். எவ்ளோ நேரம் ஆனாலும் அவளோட சேர்ந்து சுத்தி பார்ப்பேன்” என்று ஏடம் சொல்கிறார்.—பைபிள் தரும் ஆலோசனை: 1 கொரிந்தியர் 10:24.
உங்கள் கணவன்/மனைவி சொல்வதையும் யோசித்துப் பாருங்கள். உங்கள் மனைவி உங்களை மாதிரியே யோசிக்க மாட்டார். ஆனால், அவர் யோசிப்பதிலும் ஒரு நியாயம் இருக்கும். “ஒரு பிரச்சினைக்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்க முடியும்னு நினைப்பேன். ஆனா, ஒரு பிரச்சினையை தீர்க்க நிறைய வழி இருக்குனு கல்யாணத்துக்கு அப்புறம்தான் புரிஞ்சிக்கிட்டேன்” என்று அலெக்ஸ் சொல்கிறார்.—பைபிள் தரும் ஆலோசனை: 1 பேதுரு 5:5.
பிரிந்துபோக வேண்டும் என்று நினைக்காதீர்கள். கணவன்-மனைவி என்றால் எல்லா விஷயத்திலும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒன்றிரண்டு விஷயத்தில் ஒத்துப்போகவில்லை என்பதற்காக உங்கள் இருவருக்கும் ஒத்தே வராது என்று நினைக்காதீர்கள். “‘காதலிக்கும்போதே ஏன் இதெல்லாம் தெரியாம போச்சு. காதல் என் கண்ணை மறைச்சிடுச்சு’னு நிறைய பேர் சொல்றாங்க. ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் சில விஷயங்கள் ஒத்துப்போகலனாலும் இவ்ளோ நாள் ஒருத்தர்மேல ஒருத்தர் அன்பு வெச்சிருந்தீங்க, சந்தோஷமா இருந்தீங்க. இதே மாதிரி வாழ்க்கை முழுக்க உங்களால இருக்க முடியும்” என்று விவாகரத்துக்கு எதிரான வழக்கு என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. “ஒருவர்மீது ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள்.”—கொலோசெயர் 3:13.
இப்படிச் செய்து பாருங்கள்: உங்களுக்கும் உங்கள் கணவனுக்கும்/மனைவிக்கும் எந்தெந்த விஷயத்தில் ஒத்துப்போகும் எந்தெந்த விஷயத்தில் ஒத்துப்போகாது என்று எழுதுங்கள். அப்படி எழுதினால், சின்ன சின்ன விஷயத்தில்தான் நீங்கள் ஒத்துப்போகவில்லை என்று புரிந்துகொள்வீர்கள். அந்த விஷயத்தில் எல்லாம் நீங்கள் விட்டுக்கொடுத்துப் போனால் உங்கள் கல்யாண வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும். கென்னத் என்பவர் இப்படி சொல்கிறார்: “நிறைய விஷயத்தில நான் விட்டுக்கொடுத்து போவேன். அதேமாதிரி அவளும் விட்டுக்கொடுப்பா. அவ சந்தோஷம்தான் என் சந்தோஷம். அவ சந்தோஷமா இருக்கணுங்கறதுக்காக நான் எதை வேணாலும் விட்டுக்கொடுக்க தயாரா இருக்கேன்.”—பைபிள் தரும் ஆலோசனை: பிலிப்பியர் 4:5. ▪ (g15-E 12)
^ பாரா. 10 சில பெயர்களை மாற்றியிருக்கிறோம்.