அட்டைப்படக் கட்டுரை
பணம்தான் வாழ்க்கையா?
‘கருவறையில் இருந்து கல்லறை வரை சில்லறை தேவை’ என்று சொல்லி கேட்டிருப்போம். இது ஒருவிதத்தில் உண்மைதான். சாப்பாடு, துணிமணி, வீடு என்று எல்லாவற்றுக்கும் பணம் தேவை. ஒரு வணிக பத்திரிகையின் ஆசிரியர் சொல்கிறார்: “பணம்தான் சமுதாயத்துக்கு ரொம்ப முக்கியம் . . . ஒருவேளை பணத்தை வைத்து எந்த பொருளையும் வாங்கவோ விற்கவோ முடியாது என்ற நிலை வந்துவிட்டால், எல்லாரும் குழம்பிபோய்விடுவார்கள். ஒரே மாதத்தில் போரே வெடிக்கும்.”
இருந்தாலும், பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது. பணத்தை வைத்துக்கொண்டு, சாப்பாட்டை வாங்கலாம் பசியை வாங்க முடியாது, மருந்தை வாங்கலாம் ஆரோக்கியத்தை வாங்க முடியாது, மெத்தையை வாங்கலாம் தூக்கத்தை வாங்க முடியாது, புத்தகத்தை வாங்கலாம் புத்தியை வாங்க முடியாது, நகையை வாங்கலாம் அழகை வாங்க முடியாது, ஆடம்பரத்தை வாங்கலாம் அன்பை வாங்க முடியாது, கூட்டத்தை வாங்கலாம் நண்பர்களை வாங்க முடியாது, வேலைக்காரர்களை வாங்கலாம் விசுவாசத்தை வாங்க முடியாது என்று நார்வே நாட்டு கவிஞர் அர்னா கர்பார்க் சொன்னார்.
வாழ்வதற்கு பணம் தேவைதான், ஆனால் பணமே வாழ்க்கையாகிவிடக் கூடாது. இந்த உண்மையை உணரும் ஒருவர் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வார். “பண ஆசை எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக்கொண்டு . . . பலவித வேதனைகளால் தங்களையே ஊடுருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று பைபிள் சொல்கிறது.—1 தீமோத்தேயு 6:10.
பணம் வைத்திருப்பது தப்பில்லை ஆனால், பணத்தின் மீது ஆசை வைத்திருப்பதுதான் தப்பு. பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்போது உறவுகளுக்கு இடையே விரிசல்கள் ஏற்படலாம். இதற்கு சில உதாரணங்களைப் பாருங்கள்.
* “என் ஃப்ரெண்ட் தாமஸ் ரொம்ப தங்கமானவர், நேர்மையானவர். ஆனா என் காரை அவருக்கு வித்ததுக்கு அப்புறம்தான் பிரச்சினையே ஆரம்பிச்சுது. ‘கார்ல எந்த பிரச்சினை இருந்தாலும் திருப்பி கொடுக்க மாட்டேன்’னு தாமஸ் எனக்கு எழுதி கொடுத்தார். வித்தப்போ கார்ல எந்த பிரச்சினையும் இல்லைனு நினைச்சேன். ஆனா, மூணு மாசத்துக்கு அப்புறம் கார் திடீர்னு ஓடாம போயிடுச்சு. நான் ஏமாத்திட்டேன்னு அவர் நினைச்சார். ‘பணத்தை திருப்பி கொடு’னு கோவமா கேட்டார். அவர் நடந்துக்கிட்டதை பாத்து நான் ‘ஷாக்’ ஆயிட்டேன். அவருக்கு புரிய வைக்கணும்னு நினைச்சப்போ, கத்தி கூச்சல் போட்டார். நான் பார்த்த தாமஸ் இவர் இல்லை. பணம் எங்க ரெண்டு பேரையும் பிரிச்சிடுச்சு.”
டேனியேல்:ஈசென்: “எனக்கு ஒரேவொரு தங்கச்சி, அவ பேரு நெஸ்ரிம். நாங்க ரொம்ப பாசமா இருப்போம். ஆனா, பணத்தால எங்களுக்குள்ள பிரச்சினை வரும்னு நான் நினைச்சுகூட பார்க்கல. எங்க அப்பா அம்மா இறக்குறதுக்கு முன்னாடி, அவங்க சேத்து வைச்ச கொஞ்ச பணத்தை நாங்க ரெண்டு பேரும் சமமா பிரிச்சிக்கணும்னு சொன்னாங்க. ஆனா அவங்க இறந்ததுக்கு அப்புறம், என் தங்கச்சி பணத்துல நிறைய பங்கு கேட்டா. நான் அப்பா-அம்மா சொல்லை மீறக்கூடாதுனு நினைச்சேன். அவ அதுக்கு ஒத்துக்கவே இல்லை. என்னை மிரட்டினா... பயமுறுத்தினா... இன்னைக்கு வரைக்கும் கோவமாதான் இருக்கா.”
தப்புக்கணக்கு போடாதீர்கள்
பணத்தை வைத்து யாரையும் எடைபோட முடியாது. உதாரணத்துக்கு பணக்காரர்கள் ஏழைகளை பார்த்து, ‘இவங்க எல்லாரும் சோம்பேறிங்க, உழைக்க தெரியாதவங்க’ என்று நினைக்கலாம். ஏழைகள் பணக்காரர்களைப் பார்த்து, ‘இவங்க எல்லாரும் பேராசை பிடிச்சவங்க’ என்று நினைக்கலாம். லியான் என்ற 17 வயது பெண்ணையும் நிறைய பேர் இப்படித்தான் தவறாக நினைத்தார்கள். அவள் சொல்கிறாள்:
பணத்தை பற்றி பைபிள் சொல்லும் ஆலோசனை இன்றும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது
“எல்லாரும் என்னை பணக்கார வீட்டு பொண்ணுனுதான் சொல்லுவாங்க. ‘உனக்கு என்ன, எதை கேட்டாலும் உங்க அப்பா வாங்கி கொடுத்துடுவார்’னு சொல்வாங்க. இல்லைனா, ‘நாங்கெல்லாம் உங்க அளவுக்கு பணகாரங்க இல்லை, உங்களை மாதிரியெல்லாம் எங்களால கார் வாங்க முடியுமா?’னு கேட்பாங்க. அவங்க இப்படி பேசுறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். ஒருநாள் என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட, அந்த மாதிரி பேசாதீங்கனு சொல்லிட்டேன். பணக்கார பொண்ணுனு பேர் எடுக்குறதைவிட, நல்ல பொண்ணு, மத்தவங்களுக்கு உதவி செய்யுற பொண்ணுனுதான் பேர் எடுக்க ஆசைப்படுறேன்னு சொன்னேன்.”
பைபிள் என்ன சொல்கிறது
பணம் சம்பாதிக்கவே கூடாது என்றோ, பணக்காரர்கள் எல்லாரும் மோசமானவர்கள் என்றோ பைபிள் சொல்வதில்லை. பணம் வைத்திருப்பது தவறில்லை ஆனால், பணமே கதி என்று இருப்பதுதான் தவறு. பணத்தைப் பற்றி பைபிள் நல்ல ஆலோசனைகளைக் கொடுக்கிறது. அது இன்றும் நமக்கு பிரயோஜனமாக இருக்கிறது. சில ஆலோசனைகளைப் பாருங்கள்.
பைபிள் ஆலோசனை: “செல்வந்தனாக முயன்று உனது உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளாதே.”—நீதிமொழிகள் 23:4, ஈஸி டு ரீட் வர்ஷன்.
நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு “மனநோய் வர வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்ல முதுகுவலி, தலைவலி, தொண்டைவலி போன்ற பிரச்சினைகளும் வருகின்றன. அவர்கள் போதை மருந்துக்கும், குடிப்பழக்கத்துக்கும் அடிமையாக வாய்ப்பு இருக்கிறது. பணக்காரராக வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறவர்கள் நிறைய பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறார்கள்” என்று தி நார்சிஸிஸம் எபிடெமிக் என்ற புத்தகம் சொல்கிறது.
பைபிள் ஆலோசனை: “பண ஆசையில்லாமல் வாழுங்கள்; உள்ளதை வைத்துத் திருப்தியுடன் இருங்கள்.”—இருப்பதை வைத்து திருப்தியோடு வாழவேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு பணக் கஷ்டமே இருக்காது என்று சொல்ல முடியாது. ஆனால், அவர்கள் பணத்தைப் பற்றிய கவலையிலேயே மூழ்கிவிட மாட்டார்கள். உதாரணத்துக்கு, அவர்களுக்கு ஏதாவது நஷ்டம் ஏற்பட்டால் அதை பற்றி அதிகமாக கவலைப்பட்டுக்கொண்டு இருக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக, இயேசுவின் சீடரான பவுலைப் போல் நடந்துகொள்வார்கள். “குறைவான பொருள்களோடும் எனக்கு வாழத் தெரியும், ஏராளமான பொருள்களோடும் எனக்கு வாழத் தெரியும்; வயிறார உண்ணும்போதும் சரி பட்டினி கிடக்கும்போதும் சரி, நிறைவிலும் சரி குறைவிலும் சரி, எந்தச் சூழ்நிலையிலும் எல்லாவற்றிலும் திருப்தியுடன் இருப்பதற்கான ரகசியத்தை நான் கற்றுக்கொண்டேன்” என்று பவுல் சொன்னார்.—பிலிப்பியர் 4:12.
பைபிள் ஆலோசனை: “தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்”—நீதிமொழிகள் 11:28.
பண பிரச்சினையினால்தான் நிறையப் பேர் விவாகரத்து செய்துகொள்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். பணப் பிரச்சினையால் சிலர் தற்கொலையும் செய்துகொள்கிறார்கள். சிலருக்கு தங்கள் துணையைவிட, ஏன் தங்கள் உயிரைவிட பணம்தான் முக்கியமாக இருக்கிறது. ஆனால், பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் அதையே முழுமையாக நம்பி இருக்க மாட்டார்கள். “ஒருவனுக்கு ஏராளமான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு வாழ்வைத் தராது” என்ற இயேசுவின் அறிவுரையை புரிந்துகொள்கிறார்கள்.—லூக்கா 12:15.
பணம் உங்களுக்கு எவ்வளவு முக்கியம்?
பணத்துக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று நன்றாக யோசித்துப் பாருங்கள். இதுபோன்ற கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
-
‘திடீர் பணக்காரர்’ ஆகுற திட்டத்துல சேர்ந்துக்க ஆசைப்படுறேனா?
-
மத்தவங்களுக்கு தாராளமா கொடுக்குறேனா, இல்ல கஞ்சனா இருக்கேனா?
-
எப்போவும் பணத்தை பத்தியும் சொத்துபத்துகளை பத்தியும் பேசிட்டு இருக்கிறவங்களோட பழகுறேனா?
-
பணத்துக்காக பொய் பேசுறேனா, ஏதாவது மோசடி செய்றேனா?
-
பணம் வைச்சிருந்தாதான் எல்லாரும் என்னை மதிப்பாங்கனு நினைக்கிறேனா?
-
எப்போவும் பணத்தை பத்தியே யோசிச்சிட்டு இருக்கிறேனா?
-
பணத்தை பத்தின கவலை என் ஆரோக்கியத்தை பாதிக்குதா? பணத்துனால எனக்கும் என் குடும்பத்துல இருக்கிறவங்களுக்கும் பிரச்சினை வருதா?
மற்றவர்களுக்கு தாராளமாக கொடுத்து பழகுங்கள்
இதில் ஒரு கேள்விக்காவது நீங்கள் ‘ஆம்’ என்று பதில் சொல்லியிருந்தால், பண ஆசையை தவிர்க்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். பணத்தையும் சொத்து சுகத்தையும் பெரிதாக நினைக்கிற ஆட்களோடு பழகாதீர்கள். பணத்தைவிட நல்ல குணங்களை பெரிதாக மதிக்கும் நபர்களோடு பழகுங்கள்.
பண ஆசை உங்களுக்குள் வேர்விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களைவிட, குடும்பத்தைவிட, உங்களைவிட பணம் முக்கியம் இல்லை. பணம் தேவைதான், ஆனால் பணமே வாழ்க்கையாகிவிடாது. ▪ (g15-E 09)
^ பாரா. 7 இந்த கட்டுரையில் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.