யாருடைய கைவண்ணம்?
பூனையின் மீசை
பூனைகள் [ஃபெலிஸ் கேடஸ்] இரவு நேரத்தில்தான் அதிகமாக நடமாடும். இருட்டாக இருந்தாலும், பூனைகளால் எப்படி இரையை வேட்டையாட முடிகிறது? தன் அருகே உள்ள பொருட்களை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது? அந்த ரகசியம் பூனையின் மீசையில்தான் இருக்கிறது!
யோசித்துப் பாருங்கள்: பூனையின் மீசை, அதன் முகத்தில் இருக்கும் திசுக்களோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த திசுக்களில் இருக்கும் நரம்புகளால் காற்றில் ஏற்படும் சிறு சிறு அதிர்வுகளைக்கூட உணர்ந்துகொள்ள முடியும். அதனால்தான், இரவு நேரத்தில்கூட தன் பக்கத்தில் என்ன இருக்கிறது என்று பூனைகளால் பார்க்காமலேயே தெரிந்துகொள்ள முடிகிறது.
தன்னை சுற்றி பொருட்கள் (அல்லது இரை) எங்கே இருக்கிறது, அவை அசைகிறதா இல்லையா, என்று தெரிந்துகொள்வதற்கு பூனை தன் மீசையைப் பயன்படுத்துகிறது. ஏனென்றால் சிறய அழுத்தத்தைக்கூட பூனையின் மீசையால் உணர்ந்துகொள்ள முடியும். அதுமட்டுமல்ல, ஏதாவது ஒரு பொந்துக்குள் போவதற்கு முன்னால், அது எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்று பூனை தன் மீசையைக் கொண்டு தெரிந்துகொள்ளும். என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இப்படி சொல்கிறது: “விலங்குகளின் மீசை (vibrissae) செயல்படும் விதத்தை முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. பூனையின் மீசை வெட்டப்பட்டால் தன்னுடைய ஆற்றலை பூனை சிறிது காலத்திற்கு இழந்துவிடுகிறது.”
எந்தவொரு பொருள்மீதும் மோதாமல், சுலபமாக நகர்ந்து செல்லும் ரோபோட்டுகளை விஞ்ஞானிகள் தயாரித்து இருக்கிறார்கள். பூனையின் மீசை செயல்படும் விதத்தை போலவே இதிலுள்ள சென்சார்கள் செயல்படுகின்றன. இந்த சென்சார்களை ‘ஈ-விஸ்கர்ஸ்’ என அழைக்கிறார்கள். இதைக் குறித்து பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானியாக பணிபுரியும், அலீ ஜாவீ இப்படி சொல்கிறார்: ஈ-விஸ்கர்ஸ்களை, “அதிநவீன ரோபோட்டுகள் தயாரிப்பதற்கும், மேன்-மெஷின் இன்டர்ஃபேஸ்களை (Human-machine user interfaces) தயாரிப்பதற்கும், உயிரியல் துறையில் பயன்படுத்துவதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.”
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பூனையின் மீசை செயல்படும் விதம் நம்மை வியக்க வைக்கிறது. அது எப்படி தோன்றியிருக்கும்? பரிணாமத்தினாலா? படைப்பினாலா? (g15-E 04)