Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளின் கருத்து

சூதாட்டம்

சூதாட்டம்

சும்மா ‘ஜாலி’க்காக சூதாடுவது தப்பு இல்லைனு சிலர் நினைக்கிறாங்க. இன்னும் சிலர், அது ஒரு பெரிய தப்புனு நினைக்கிறாங்க.

சூதாடுவது சரியா?

மக்கள் என்ன சொல்றாங்க?

அரசாங்கமே சூதாட்டத்தை அனுமதிக்கிறதுனால, அதை ‘ஜாலி’க்காக விளையாடுறதுல எந்த தப்பும் இல்லனு நிறைய பேர் நினைக்கிறாங்க. சில அரசாங்கங்கள் லாட்டரி டிக்கெட்டுகளை விக்கிறாங்க. இந்த மாதிரி சூதாட்டங்கள்ல கிடைக்கிற பணத்தை வெச்சு, மக்களுக்கு நிறைய நல்லது செய்றாங்க.

பைபிள் என்ன சொல்லுது?

சூதாடுவது தப்புனு பைபிள்ல எங்கயும் சொல்லலை. ஆனா சூதாட்டத்தை பத்தி கடவுள் என்ன நினைக்கிறார்னு புரிஞ்சுக்கிறதுக்கு பைபிள் உதவி செய்யுது.

சூதாடுறவர் மத்தவங்களோட பணத்தை அடையணும்னு ஆசைப்படுறார். ஆனா “எல்லா விதமான பேராசையைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருங்கள்”னு பைபிள் சொல்லுது. (லூக்கா 12:15) நிறைய பணம் ஜெயிக்கலாம்னு சூதாட்டம் நடத்துற கிளப்-கள், மக்களுக்கு ஆசை காட்டுறாங்க. மக்களும் சீக்கிரமா பணக்காரங்களா ஆகிடலாம்னு நினைச்சு நிறைய பணம் கட்டுறாங்க. ஆனா ஜெயிக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டங்கிற உண்மையை அந்த கிளப்-கள் மக்கள்கிட்ட இருந்து மறைக்கிறாங்க. இதனால மக்கள் அளவுக்கு அதிகமா ஆசைப்படுறாங்க; உழைக்காம பணம் சம்பாதிக்கலாம்னு நினைக்கிறாங்க.

“ஒவ்வொருவனும் தனக்குப் பிரயோஜனமானதை நாடாமல், மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதையே நாட வேண்டும்”னு பைபிள் சொல்லுது. (1 கொரிந்தியர் 10:24) ஆனா சூதாடுற ஒருத்தர், தான் ஜெயிக்கிறதுக்காக மத்தவங்க தோற்கணும்னு நினைக்கிறார். இது எவ்வளவு பெரிய சுயநலம்! அதுமட்டுமில்ல, “இன்னொருவனுக்குச் சொந்தமான எந்தப் பொருளையும் வஞ்சித்து எடுத்துக்கொள்ளக்கூடாது”னும் கடவுள் கட்டளை கொடுத்திருக்கிறார். (யாத்திராகமம் 20:17, ஈஸி டு ரீட் வர்ஷன்) ஆனா, சூதாடுறவர் மத்தவங்களை தோற்கடிச்சு, தான் மட்டும் எப்படியாவது ஜெயிக்கணும்னு நினைக்கிறார்; மத்தவங்களோட பணத்தை அடையணும்னு நினைக்கிறார்.

ஒருத்தருக்கு அதிர்ஷ்டம் இருந்ததுனா அவரால சூதாட்டத்துல ஜெயிக்க முடியும்னு நிறைய பேர் நினைக்கிறாங்க. ஆனா அந்த மாதிரி நம்புறது தப்புனு பைபிள் சொல்லுது. ஒரு சமயம் இஸ்ரவேல் மக்கள் கடவுளை நம்பாம, “அதிர்ஷ்ட” தெய்வத்தை வணங்குனாங்க. இதை கடவுள் ஏத்துக்கிட்டாரா? இல்ல. “நான் தீமை என்று சொன்னதை நீங்கள் செய்தீர்கள். நான் விரும்பாதவற்றையெல்லாம் நீங்கள் செய்ய முடிவு செய்தீர்கள்”னு கடவுள் சொன்னார்.—ஏசாயா 65:11, 12, ஈஸி டு ரீட் வர்ஷன்.

சில நாடுகள்ல, சட்டப்பூர்வமா நடக்கிற சூதாட்டத்தினால அரசாங்கத்துக்கு நிறைய பணம் கிடைக்குது. அந்த பணத்தை வெச்சு அரசாங்கம், மக்களுக்கு நிறைய நல்லது செய்றாங்க. உதாரணத்துக்கு பிள்ளைங்களோட படிப்புக்கு உதவி செய்றாங்க, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துறாங்க. சூதாட்டத்தினால கிடைக்கிற பணத்தை வெச்சு, இந்த மாதிரி நல்ல விஷயங்களை செய்றது சரியா இருக்குமா? சூதாட்டம் மக்களை பேராசை பிடிச்சவங்களா, சுயநலக்காரங்களா ஆக்குது. இதன் மூலமா கிடைக்கிற பணத்தை வெச்சு நல்ல விஷயங்களை செஞ்சாகூட அது சரியாகிடாது.

“இன்னொருவனுக்குச் சொந்தமான எந்தப் பொருளையும் வஞ்சித்து எடுத்துக்கொள்ளக்கூடாது.” யாத்திராகமம் 20:17, ஈஸி டு ரீட் வர்ஷன்.

சூதாடுவதுனால என்ன பிரச்சினை வரும்?

பைபிள் என்ன சொல்லுது?

“பணக்காரராவதில் குறியாக இருக்கிறவர்கள், சோதனையிலும் கண்ணியிலும் சிக்கிக்கொள்கிறார்கள்; அதோடு, தீங்கிழைக்கும் முட்டாள்தனமான பலவித ஆசைகளுக்கு அடிபணிந்துவிடுகிறார்கள்; இவை மனிதர்களைக் கேட்டிலும் அழிவிலுமே அமிழ்த்துகின்றன”னு பைபிள் சொல்லுது. (1 தீமோத்தேயு 6:9) பேராசை இருக்கிறதுனாலதான் எல்லாரும் சூதாடுறாங்க. இது ரொம்ப ரொம்ப மோசமான குணம். நமக்கு ஒருபோதும் “பேராசை” இருக்க கூடாதுனு பைபிள் சொல்லுது.—எபேசியர் 5:3.

சீக்கிரமா பணம் சம்பாதிக்கலாம்னு நினைச்சு சூதாடும்போது, மக்கள் இன்னும் பண ஆசை பிடிச்சவங்களா ஆகிடுறாங்க. இந்த “பண ஆசை எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது”னு பைபிள் சொல்லுது. இப்படி ‘பணம் பணம்’னு அலையிற ஒருத்தர், வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்படுவார்; கடவுள் மேல இருக்கிற நம்பிக்கையை இழந்திடுவார். அதனாலதான், பண ஆசை இருக்கிறவங்க “பலவித வேதனைகளால் தங்களையே ஊடுருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்”னு பைபிள்ல கடவுள் சொல்லியிருக்கார்.—1 தீமோத்தேயு 6:10.

“பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை”னு பிரசங்கி 5:10 சொல்லுது. பண ஆசை இருக்கிறவர் எவ்வளவுதான் சம்பாதிச்சாலும் வாழ்க்கையில திருப்தியடைய மாட்டார், சந்தோஷமா இருக்க மாட்டார்னு இந்த வசனம் சொல்லுது.

சூதாட்டத்துல ஈடுபட்ட நிறைய பேர் அதோட பிடியில சிக்கி, அந்த பழக்கத்துக்கு அடிமையாகி இருக்காங்க. இது உலகம் முழுசும் நடந்துட்டு இருக்கு. உதாரணத்துக்கு, அமெரிக்காவுல மட்டும் லட்சக்கணக்கான பேர் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி இருக்காங்கனு ஒரு ஆய்வு சொல்லுது.

“பேராசையினால் பெற்ற சொத்து, முடிவிலே ஆசீர்வாதம் தராது”னு ஒரு பைபிள் பழமொழி சொல்லுது. (நீதிமொழிகள் 20:21, NW) சூதாட்டத்துக்கு அடிமையான நிறைய பேர் வேலையை இழந்திருக்காங்க, கடன்காரங்களாகி இருக்காங்க, நடுத்தெருவுக்கு வந்திருக்காங்க, குடும்பத்தையும் நண்பர்களையும் இழந்திருக்காங்க. பைபிள் சொல்றதை கேட்டு நடந்தா இந்த பிரச்சினைகளை தவிர்க்க முடியும், சந்தோஷமா வாழ முடியும். ▪ (g15-E 03)

“பணக்காரராவதில் குறியாக இருக்கிறவர்கள், சோதனையிலும் கண்ணியிலும் சிக்கிக்கொள்கிறார்கள்; அதோடு, தீங்கிழைக்கும் முட்டாள்தனமான பலவித ஆசைகளுக்கு அடிபணிந்துவிடுகிறார்கள்; இவை மனிதர்களைக் கேட்டிலும் அழிவிலுமே அமிழ்த்துகின்றன.”1 தீமோத்தேயு 6:9.