Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

 யாருடைய கைவண்ணம்?

பட்டாம்பூச்சியின் சிறகுகள்

பட்டாம்பூச்சியின் சிறகுகள்

சூரிய ஒளியைச் சேகரிக்கும் கருவிகளின் திறனை அதிகரிக்க விஞ்ஞானிகள் கடும் முயற்சி எடுக்கிறார்கள். ஏனென்றால் பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருள்கள் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகின்றன. ‘இதற்கான தீர்வு பட்டாம்பூச்சியின் சிறகுகளில் ஒளிந்திருக்கிறது’ என்று ஒரு விஞ்ஞானி சொன்னார்.

பட்டாம்பூச்சியின் சிறகுகளில் தேன்கூடு வடிவ குழிகள் இருக்கும்

சிந்தித்துப் பாருங்கள்: பட்டாம்பூச்சிகள், குளிர் காலத்தில் தங்களைக் கதகதப்பாக வைத்துக்கொள்ள சூரிய ஒளியில் இறக்கைகளை விரிக்கின்றன. ஸ்வாலோட்டெய்ல் (swallowtail) என்ற வகை பட்டாம்பூச்சிகள் சூரிய ஒளியை ஈர்த்துக்கொண்டு அதை சேமித்து வைப்பதில் திறமைசாலிகள். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, அதன் கருமையான இறக்கைகள். மற்றொன்று, அந்த இறக்கைகள்மேல் படர்ந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத செதில்கள். அந்தச் செதில்களில் தேன்கூடு வடிவ குழிகள் இருக்கும்; அதன் இடையிடையே கூரை வடிவில் ‘மேடுகள்’ இருக்கும். இது சூரிய ஒளியை தேன்கூடு வடிவ குழிகளுக்குள் விழச் செய்கிறது. இந்த வடிவமைப்பு சூரிய ஒளியை ஈர்த்துக்கொள்ளவும், கதகதப்பாக வைத்துக்கொள்ளவும் பட்டாம்பூச்சிக்கு உதவுகிறது. பட்டாம்பூச்சியின் இறக்கைகள் மிகவும் கருப்பாக இருப்பதற்கும் இந்த வடிவமைப்புதான் காரணம். பட்டாம்பூச்சியின் சிறிய இறக்கைகள் எவ்வளவு பெரிய வேலையைச் செய்கின்றன!

“பட்டாம்பூச்சியின் சிறகுகள் ரொம்ப மென்மையானவை. இருந்தாலும் அதைப் பார்த்து, தண்ணீர் மற்றும் சூரிய ஒளியிலிருந்து எடுக்கப்படும் ஹைட்ரஜன் எரிவாயுவை இரண்டு மடங்காக உற்பத்தி செய்வதற்கு விஞ்ஞானிகள் திட்டமிட்டிருக்கிறார்கள்” என்று சயின்ஸ் டெய்லி பத்திரிகை சொல்கிறது. இந்த வடிவமைப்பைப் பயன்படுத்தி சென்ஸார் கருவிகளையும் சோலார் செல்களையும்கூட உருவாக்க முடியும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பட்டாம்பூச்சியின் சிறகுகள் தானாகவே வந்ததா அல்லது படைக்கப்பட்டதா? ▪ (g14-E 08)