Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்பட கட்டுரை

போராட்டம் பிரச்சினைக்குத் தீர்வா?

போராட்டம் பிரச்சினைக்குத் தீர்வா?

இந்தப் பத்திரிகையின் பிரசுரிப்பாளர்களான யெகோவாவின் சாட்சிகள் அரசியலில் நடுநிலைமை வகிப்பவர்கள். (யோவான் 17:16; 18:36) எனவே, பின்வரும் கட்டுரை உள்நாட்டுக் கலவரங்கள் பற்றிய உதாரணங்களைக் குறிப்பிட்டிருந்தாலும், அது ஒரு நாட்டை மற்றொன்றுக்கு மேலாக உயர்த்துவதில்லை. எந்தவொரு அரசியல் விவகாரத்தையும் ஆதரித்துப் பேசுவதில்லை.

டிசம்பர் 17, 2010. முகமது பூவாசிசி பொறுமையின் விளிம்புக்கே தள்ளப்பட்டார். டுனீஷியாவில் தெருவோரமாகக் கடை வைத்திருந்த 26 வயது பழ வியாபாரி இவர். நல்ல வேலை கிடைக்காமல் வாழ்க்கையில் ஏற்கெனவே விரக்தியடைந்திருந்தார். அதுபோதாதென்று, தன் கடைக்கு மாமூலாக வரும் சில ஊழல் “பெருச்சாளிகளுக்கு” “தீனிபோட” வேண்டியிருக்கும் என்று அறிந்து நொந்துபோயிருந்தார். குறிப்பிட்ட அந்தத் தினத்தன்று அதிகாரிகள் அவருடைய கடையிலிருந்து பழங்களைப் பறிமுதல் செய்தார்கள். தராசுகளைப் பிடுங்கினார்கள்; ஒரு பெண் போலீஸ் அவருடைய கன்னத்தில் அறைந்தாராம்!

அவமானமும் ஆத்திரமும் அடைந்த அவர், அருகிலிருந்த அரசு அலுவலகத்திற்குச் சென்று முறையிட்டார். ஆனால், யாருமே காதுகொடுத்துக் கேட்கவில்லை. எனவே, அந்த அலுவலகத்திற்குமுன் நின்றுகொண்டு, “பிழைப்புக்கு இனி நான் என்ன செய்வேன்?” என்று விரக்தியில் கத்தினார். பின்பு, பெட்ரோல் ஊற்றி தன்னையே கொளுத்திக்கொண்டார். தீக்காயங்களுடன் போராடிய அவர், மூன்றே வாரங்களுக்குள் மூச்சை விட்டார்.

விரக்தியின் உச்சத்திற்கே சென்ற முகமது பூவாசிசியின் இந்தச் செயல் டுனீஷியாவிலும் அண்டை நாடுகளிலும் மக்கள் மத்தியில் எதிரொலித்தது. போராட்டம் வெடித்தது. ஆட்சி கவிழ்வதற்கு அதுவே காரணமாக இருந்ததென்பது அநேகருடைய கருத்து. சீக்கிரத்திலேயே, மற்ற அரபு நாடுகளிலும் போராட்டங்கள் துவங்கின. பூவாசிசி உட்பட ஐந்து பேருக்கு... சிந்தனைச் சுதந்திரத்திற்கான 2011 சாக்கராவ் விருதை ஐரோப்பிய பாராளுமன்றம் வழங்கியது. லண்டனின் த டைம்ஸ் செய்தித்தாள் இவரை 2011-ன் மிகச் சிறந்த மனிதர் என்று அறிவித்தது.

பூவாசிசியின் உதாரணம் காட்டுகிறபடி, போராட்டங்கள் மிகமிகச் சக்திவாய்ந்தவை. ஆனால், சமீப காலமாக நடந்துவருகிற தொடர் போராட்டங்களுக்குக் காரணம் என்ன? போராட்டம்தான் பிரச்சினைகளுக்குத் தீர்வா?

போராட்டங்கள் அதிகரிப்பது ஏன்?

போராட்டங்கள் காட்டுத் தீயாகப் பரவுவதற்குக் காரணம் பின்வரும் சில தீப்பொறிகள்:

  • சமூக அமைப்புகளைக் குறித்த அதிருப்தி. தேவைகளைப் பூர்த்தி செய்கிற அரசாங்கமும் திருப்தியான பொருளாதாரமும் இருந்தால், போராட்டங்களை நடத்த வேண்டுமென்ற எண்ணம்கூட மக்கள் மனதில் துளிர்விடாது. அப்படியே பிரச்சினைகள் எழுந்தாலும், அரசு அமைப்புகளின் உதவியோடு அதைச் சரிசெய்ய முயற்சியெடுப்பார்கள். ஆனால், அந்த அமைப்புகள் ஊழல் நிறைந்தவையாக, அநியாயம் செய்பவையாக, ஓரவஞ்சனை காட்டுபவையாக இருக்கிறதென அவர்கள் நினைத்தால், எந்த நொடி வேண்டுமானாலும் கலகம் வெடிக்கலாம், கலவரம் ஏற்படலாம், போராட்டம் தொடங்கலாம்.

  • அதிர்ச்சி அலையடிக்க வைக்கிற சம்பவம். போராட்டத்தில் ஈடுபட மக்களை உசுப்பிவிடுவது பெரும்பாலும் ஒரு சம்பவமாகத்தான் இருக்கும். நீதிக்காகப் போராட வேண்டுமென்ற உந்துதலை அளித்து, செயலில் இறங்க வைக்கிறது. உதாரணத்திற்கு, முகமது பூவாசிசியின் விவகாரம் டுனீஷியாவில், நாடு தழுவிய போராட்டங்களைத் தொடக்கி வைத்தது. இந்தியாவில், ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே தீவிரமாய் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம், 450 நகரங்களிலும் ஊர்களிலும் அவருடைய ஆதரவாளர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வைத்தது.

“ஒருவன்மேல் ஒருவன் அதிகாரம் செலுத்தினால் துன்பம் விளைகிறது” என்று பைபிள் எத்தனையோ நூற்றாண்டுகளுக்குமுன் சொன்னது. (பிரசங்கி  8:9, பொது மொழிபெயர்ப்பு) அதைத்தான் நாம் இன்று பார்க்கிறோம். ஆனால், அன்றைக்குவிட இன்றைக்குத்தான் ஊழலும் அநியாயமும் சொல்ல முடியாதளவு மண்டிக் கிடக்கிறது. அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகள் எப்படியெல்லாம் தங்களை ஏமாற்றியிருக்கின்றன என்பதை முன்னொருபோதும் இல்லாதளவுக்கு மக்களால் தெரிந்துகொள்ள முடிகிறது. காரணம்? ஸ்மார்ட் ஃபோன்கள், இணையதளங்கள், 24 மணிநேர செய்திச் சேனல்கள்! எங்கோ ஒரு மூலையில் நடக்கிற சம்பவங்களைச் சந்திக்குக் கொண்டுவந்து நாடெங்கும் அதிர்ச்சி அலையடிக்க வைத்துவிடுகின்றன.

போராட்டங்கள் என்ன சாதித்திருக்கின்றன?

சமூகப் போராட்டங்கள் பின்வருபவற்றைச் சாதித்திருப்பதாக அவற்றின் ஆதரவாளர்கள் மார்தட்டிக்கொள்கிறார்கள்:

  • ஏழைகளுக்கு நிவாரணம் அளித்தன: 1930-களில், மாபெரும் பொருளாதார வீழ்ச்சி காலத்தின்போது அமெரிக்காவிலுள்ள சிகாகோவில் நடந்த “வாடகை” போராட்டத்தின் விளைவாக, வீட்டு வாடகை கொடுக்க முடியாதவர்கள் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட அவலம் முடிவுக்கு வந்தது; சில போராளிகளுக்கு வேலை கிடைக்கக்கூட நகர நிர்வாகிகள் ஏற்பாடு செய்தார்கள். நியு யார்க் நகரத்தில் நடந்த அதுபோன்ற போராட்டங்களின் விளைவாக, வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டிருந்த 77,000 குடும்பங்கள் வீடுதிரும்ப அனுமதிக்கப்பட்டன.

  • அநீதிக்கு முடிவுகட்டின. அமெரிக்காவிலுள்ள அலபாமா என்ற நகரத்தைச் சேர்ந்த மான்ட்கோமெரி என்ற ஊரில், நிறவேற்றுமை காரணமாக 1955/1956-களில் அரசு பேருந்துகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. விளைவு? பேருந்து இருக்கைகள் இன ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்த சட்டங்கள் நீக்கப்பட்டன.

  • கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று காரணங்காட்டி, ஹாங்காங் அருகே நிலக்கரியால் இயங்குகிற மின் உற்பத்தி ஆலையின் கட்டுமானப் பணிக்கு எதிராக டிசம்பர் 2011-ல் லட்சக்கணக்கான மக்கள் திரண்டெழுந்தார்கள். கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது.

போராளிகள் சிலர் தங்கள் போராட்டத்தில் வெற்றி கண்டாலும், கடவுளுடைய அரசாங்கமே பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வு

ஆனால், எல்லாச் சமயங்களிலும் போராளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில்லை. சிலசமயம், போராட்டம் நடத்தப்பட்ட கடுப்பில் தலைவர்கள் இன்னும் கடுமையான சட்டங்களைக் கொண்டுவந்துவிடலாம். உதாரணத்திற்கு, மத்திய கிழக்கு நாடு ஒன்றின் ஜனாதிபதி சமீபத்தில் அங்கு நடந்த ஒரு போராட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “இதை இரும்புக் கரத்தால் நொறுக்க வேண்டும்” என்றார். ஆயிரக்கணக்கானோர் அந்தப் போராட்டத்தில் உயிரிழந்தார்கள்.

போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஒருவேளை வெற்றி கிடைத்தாலும், போராட்டத்திற்குப் பின்னர் புதுப்புது பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்துவிடுகின்றன. ஓர் ஆப்பிரிக்க நாட்டின் தலைவரது ஆட்சியைக் கலைக்க உதவிய ஒரு நபர், புதிய ஆட்சியைப் பற்றி டைம் பத்திரிகையில் சொல்லும்போது, “ஆட்சி ஆரம்பமான புதிதில் எங்கள் நாடு சொர்க்க பூமியாகத் திகழ்ந்தது, ஆனால் சீக்கிரத்திலேயே நிலைமை படுமோசமானது” என்றார்.

வேறு ஏதாவது நல்ல தீர்வு?

அடக்குமுறையைக் கையாளும் அமைப்புகளை எதிர்த்துப் போராடுவது தங்களது தார்மீகக் கடமை என்று நிறையப் பிரமுகர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, மனித உரிமைகளுக்காகப் போராடிய, மறைந்த முன்னாள் செக் குடியரசுத் தலைவரான வட்ஸ்லாஃப் ஹாவெல் 1985-ல் இவ்வாறு எழுதினார்: “[போராளிகளிடம்] இருப்பது அவர்களுடைய உயிர் மட்டும்தான். தங்கள் நம்பிக்கைகளை வலியுறுத்த வேறு வழியில்லாமல் அதை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கிறது.”

இந்த வார்த்தைகள் முகமது பூவாசிசி போன்றோர் எடுத்த சோகமான முடிவையே படம்பிடித்துக் காட்டுகின்றன. ஆசிய நாடு ஒன்றில், மதம் மற்றும் அரசியல் அடக்குமுறையை எதிர்த்து ஏராளமானோர் சமீபத்தில் தீக்குளித்தார்கள். சிலர் ஏன் இத்தகைய பயங்கரமான முடிவை எடுக்கிறார்கள் என்பது பற்றிச் சொல்லும்போது, நியூஸ்வீக் பத்திரிகையில் ஒருவர் இவ்வாறு தெரிவித்தார்: “எங்களிடம் துப்பாக்கிகள் இல்லை. சக மனிதர்களைக் காயப்படுத்தவும் விரும்பவில்லை. நாங்கள் வேறு என்னதான் செய்வோம்?”

அநியாயம்... அக்கிரமம்... அடக்குமுறை... இவை எல்லாவற்றுக்கும் பைபிள் ஒரு தீர்வை அளிக்கிறது. பரலோகத்தில் கடவுள் நிறுவியிருக்கும் ஓர் அரசாங்கம், போராட்டங்களுக்குக் காரணமான அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளை அகற்றிவிடும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. அந்த அரசாங்கத்தின் அரசரைப் பற்றி ஒரு வசனம் இப்படி முன்னறிவிக்கிறது: “தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார்.” —சங்கீதம் 72:12, 14, பொ.மொ.

கடவுளுடைய அரசாங்கத்தால் மட்டுமே சமாதானமான புதிய உலகத்தை உருவாக்க முடியும் என்று யெகோவாவின் சாட்சிகள் உறுதியாக நம்புகிறார்கள். (மத்தேயு 6:9, 10) அதனால்தான், போராட்டங்களில் அவர்கள் ஈடுபடுவதில்லை. போராட்டங்களுக்குக் காரணமான எல்லாவற்றையுமே கடவுளுடைய அரசாங்கம் நீக்கப்போகிறது. இது நம்புவதற்குக் கடினமாக இருக்கிறதா? ஒருவேளை உங்களுக்கு அப்படித் தோன்றலாம். என்றாலும், லட்சக்கணக்கானோர் கடவுளுடைய அரசாங்கத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்த்திருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்களை நீங்கள் ஏன் ஆராய்ந்து பார்க்கக் கூடாது? ◼ (g13-E 07)