Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப ஸ்பெஷல் | திருமணம்

புண்படுத்தும் பேச்சைத் தவிர்க்க

புண்படுத்தும் பேச்சைத் தவிர்க்க

சவால்

சண்டை வெடிக்கும்போதெல்லாம் நீங்களும் உங்கள் மணத்துணையும் சரமாரியாகத் திட்டித்தீர்த்துக்கொள்கிறீர்கள். புண்படுத்திப் பேசுவதே உங்கள் பாணியாகிவிட்டது.

அதுவே தொடர்கதை என்றால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க உங்களால் முடியும். ஆனால், புண்படுத்தும் பேச்சுக்கான காரணங்களையும், அதைத் தவிர்ப்பதற்கான ஆலோசனைகளையும் முதலில் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பிரச்சினைக்கான காரணங்கள்

குடும்பப் பின்னணி. கணவன் மனைவி ஒருவரையொருவர் புண்படுத்திப் பேசுவதற்கு, அவர்கள் வளர்ந்துவந்த குடும்பச் சூழல் காரணமாக இருக்கலாம். தங்கள் பெற்றோர் ஒருவரையொருவர் புண்படுத்திப் பேசுவதைக் கேட்டு வளர்ந்ததால் கணவன், மனைவி, அல்லது இருவருமே அதேபோல் பேசலாம்.

பொழுதுபோக்கு அம்சங்களின் பாதிப்பு. சினிமா மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் கடுகடுப்பான பேச்சு கேலிகூத்தாகச் சித்தரிக்கப்படுகிறது. இதன் காரணமாக, மக்கள் அதை காமெடியாக எடுத்துக்கொள்கிறார்கள். அதில் எந்தத் தீங்குமில்லை என நினைக்கிறார்கள்.

கலாச்சாரம். ஆண்கள் என்றால் அடக்கி ஒடுக்குபவர்களாகவும், பெண்கள் என்றால் எதற்குமே சளைத்தவர்களல்ல என்பதைக் காட்ட அதட்டி மிரட்டுபவர்களாகவும் இருக்க வேண்டுமெனச் சில கலாச்சாரங்களில் கற்பிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட மனப்பான்மையுடைய தம்பதிகள் ஒருவரையொருவர் நண்பர்களாகப் பார்க்காமல் எதிரிகளாகப் பார்க்க ஆரம்பித்துவிடலாம். மனதை இதமாக்கும் வார்த்தைகளைப் பேசாமல் மனதை ரணமாக்கும் வார்த்தைகளைப் பேச ஆரம்பித்துவிடலாம்.

காரணம் எதுவாக இருந்தாலும்சரி, புண்படுத்தும் பேச்சு விவாகரத்திற்கு வித்திடலாம், உங்கள் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கலாம். சிலர் சொல்வதுபோல், தீயினால் சுட்ட புண் ஆறிவிடும், நாவினால் சுட்ட புண் ஆறவே ஆறாது. உதாரணத்திற்கு, கணவனிடமிருந்து கையினாலும் வாயினாலும் “அடிவாங்கிய” ஒரு பெண் இப்படிச் சொல்கிறாள்: “என்னை அவர் அடிச்சதைக்கூட தாங்கிட்டேன், ஆனா வார்த்தைகளால என் மனசை நொறுக்கினதைத்தான் என்னால தாங்கிக்கவே முடியல. அவர் அந்த மாதிரி பேசறதுக்குப் பதிலா என்னை நாலு அடி அடிச்சிருக்கலாம்.”

புண்படுத்தும் பேச்சு உங்கள் மணவாழ்க்கையில் புயல் வீசச் செய்திருக்கிறதா? அப்படியானால், சமாதானத் தென்றல் வீச என்ன செய்யலாம்?

நீங்கள் என்ன செய்யலாம்?

துணையின் இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள். உங்கள் வார்த்தைகள் உங்கள் மணத்துணையை எப்படிப் பாதித்திருக்கலாம் எனப் புரிந்துகொள்ள முயலுங்கள். உங்களுடைய பேச்சினால் அவர் புண்பட்ட ஒரு சமயத்தைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அந்தச் சமயத்தில் என்ன சொன்னீர்கள் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டாம்; உங்கள் மணத்துணை எப்படி உணர்ந்தார் என்று சிந்திப்பதுதான் முக்கியம். புண்படுத்தும் விதத்தில் பேசியதற்குப் பதிலாக அன்பான விதத்தில் எப்படிப் பேசியிருக்கலாமென யோசித்துப் பாருங்கள். பைபிள் இப்படிச் சொல்கிறது: “சாந்தமான பதில் கோபத்தை அடக்கும். கடுஞ்சொல் கோபத்தை மூட்டும்.”—நீதிமொழிகள் 15:1, கத்தோலிக்க பைபிள்.

முன்மாதிரியான தம்பதிகளைக் கவனியுங்கள். ஒருவேளை கெட்ட முன்மாதிரிகளைப் பார்த்து “கெட்டுப்போயிருந்தீர்கள்” என்றால், நல்ல முன்மாதிரிகளைப் பார்த்துக் கனிவோடு, மதிப்பு மரியாதையோடு பேசக் கற்றுக்கொள்ளுங்கள்.—பைபிள் நியமம்: பிலிப்பியர் 3:17.

சந்தோஷ நினைவுகளை மீண்டும் மலரச் செய்யுங்கள். புண்படுத்தும் பேச்சு வாயிலிருந்து அல்ல, இருதயத்திலிருந்தே வருகிறது. எனவே, உங்கள் இருதயத்தில் உங்கள் மணத்துணையைப் பற்றிய நல்ல எண்ணங்களை வளர்க்க கடும் முயற்சியெடுங்கள். நீங்கள் இருவரும் அனுபவித்த அன்யோன்யமான தருணங்களை ஆசை ஆசையாக நினைத்துப் பாருங்கள். பழைய புகைப்படங்களைப் பார்த்து மகிழுங்கள். இருவரும் மனம்விட்டுச் சிரித்த சமயங்களை அசைபோட்டு பாருங்கள். மணத்துணையிடம் உள்ள எந்தக் குணம் உங்களைக் கவர்ந்ததென யோசித்துப் பாருங்கள்.—பைபிள் நியமம்: லூக்கா 6:45.

“எனக்கு” என்றே பேசிப் பழகுங்கள். உங்கள் கருத்தைத் தெரிவிக்கும்போது, பொரிந்து தள்ளுவதற்குப் பதிலாக, நீங்கள் எப்படிப் பாதிக்கப்பட்டீர்கள் என்பதைத் தெரியப்படுத்துங்கள். உதாரணத்திற்கு, “எப்பவுமே நீங்க என்னைக் கேட்காமதான் முடிவெடுக்கிறீங்க—உங்க புத்தியே இப்படித்தான்” என்று எரிந்துவிழுவதற்குப் பதிலாக, “என்னைக் கேட்காம நீங்க முடிவெடுக்கறது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்குங்க” என்று சொல்லுங்கள்; இது நல்ல பலனை அளிக்கலாம்.—பைபிள் நியமம்: கொலோசெயர் 4:6.

எப்போது நிறுத்துவதெனத் தெரிந்துகொள்ளுங்கள். கோபத்தில் இருவருமே வாய்க்கு வந்தபடி கத்த ஆரம்பித்தால், அத்துடன் பேச்சை நிறுத்திக்கொள்வது சிறந்தது. வாக்குவாதம் வெடிப்பதற்கு முன்னரே அந்த இடத்தைவிட்டுப் போய்விடுவதில் எந்தத் தவறும் இல்லை. சூழல் அமைதியான பிறகு பேச்சைத் தொடரலாம்.—பைபிள் நியமம்: நீதிமொழிகள் 17:14. ◼ (g13-E 04)

புண்படுத்தும் பேச்சு வாயிலிருந்து அல்ல, இருதயத்திலிருந்தே வருகிறது