குடும்ப ஸ்பெஷல் | பிள்ளை வளர்ப்பு
டீனேஜ் பிள்ளையிடம் எப்படிப் பேசுவது?
சவால்
உங்கள் பிள்ளை சிறுவனாக இருந்தபோது தன் மனதிலிருந்ததை ஒன்றுவிடாமல் உங்களிடம் ஒப்பித்திருப்பான். ஆனால், இப்போது டீனேஜ் வயதை எட்டியதும் வாயே திறப்பதில்லை. நீங்கள் எவ்வளவுதான் பேசினாலும் ஆம்-இல்லை என்ற பதிலோடு நிறுத்திக்கொள்வான். இல்லையென்றால் வாக்குவாதம் செய்து வீட்டையே போர்க்களமாக்குவான்.
ஆனால், உங்கள் டீனேஜ் பிள்ளையிடம் உங்களால் பேச முடியும். பேச்சுத்தொடர்புக்குச் சவாலாக இருக்கும் இரண்டு விஷயங்களை இப்போது பார்க்கலாம். *
பிரச்சினைக்குக் காரணம்
சுதந்திரம். இத்தனை நாளாக உங்கள் மகன் உங்கள் நிழலில் வளர்ந்துவந்தான். ஆனால் டீனேஜ் பருவத்தைத் தொடும் சமயத்திலிருந்து சொந்தக்காலில் நிற்க, அதாவது வாழ்க்கையில் முக்கியமான தீர்மானங்களை எடுக்கவும் பிரச்சினைகளைச் சமாளிக்கவும் படிப்படியாகக் கற்றுக்கொள்கிறான். இதுபோன்ற சூழ்நிலையில் சில டீனேஜர்கள் தங்களுக்குக் கிடைக்கும் சுதந்திரத்தைவிட அதிகமான சுதந்திரத்தை எதிர்பார்ப்பார்கள்; மறுபட்சத்தில், சில பெற்றோர்கள் கொடுக்க வேண்டிய சுதந்திரத்தைவிட குறைவான சுதந்திரத்தையே கொடுக்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் பெற்றோருக்கும் பிள்ளைக்கும் மிஞ்சுவது மன உளைச்சலே. “என் அப்பா-அம்மா என்னை அவங்க கைக்குள்ளேயே வச்சுக்க நினைக்கிறாங்க. 18 வயசு வரைக்கும்தான் பார்ப்பேன். அதுக்கு மேல சுதந்திரம் கொடுக்கலன்னா வீட்டை விட்டுப் போயிடுவேன்!” என்கிறான் 16-வயது ப்ரேம். *
சிந்திக்கும் திறன். பொதுவாக, சிறுபிள்ளைகள் ஒரு விஷயத்தை சரியா தவறா என்று மட்டும்தான் பார்ப்பார்கள். ஆனால், டீனேஜ் பிள்ளைகள் ஏன், எதற்கு என்றெல்லாம் ஆழமாக யோசிப்பார்கள். இப்படி யோசிப்பது நல்லதுதான், ஞானமான தீர்மானம் எடுக்க இது அவர்களுக்கு உதவும். உதாரணமாக, ஒரு சிறு பிள்ளை எப்படி யோசிக்கும் என்று பாருங்கள்: அம்மா பிஸ்கட்டை சரிபாதியாக பங்கிட்டு தனக்கும் தம்பிக்கும் கொடுத்தால், அது அந்தச் சிறு பிள்ளைக்குச் சரியாகப் படும். ஆனால் டீனேஜ் பிள்ளைகள் அப்படி யோசிக்க மாட்டார்கள். எல்லோரையும் ஒரேமாதிரி நடத்துவது சரியில்லை என்றே நினைப்பார்கள். அது உண்மைதான். ஏனென்றால் எல்லோரையும் சரிசமமாக நடத்துவது எப்போதுமே நியாயமாக இருக்காது. டீனேஜர்கள் அப்படி யோசிப்பதால்தான் தங்கள் கருத்தை வலியுறுத்த வாதாடுகிறார்கள். இதன் விளைவு? உங்களிடமே வாதாட ஆரம்பிப்பார்கள்.
நீங்கள் என்ன செய்யலாம்?
சகஜமாகப் பேசுங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சாதாரணமாகப் பேசுங்கள். பொதுவாக டீனேஜ் பிள்ளைகள் பெற்றோரோடு காரில் பயணம் செய்யும்போதோ வீட்டு வேலைகளைச் செய்யும்போதோ மனம் திறந்து பேசுவதை சில பெற்றோர்கள் கவனித்திருக்கிறார்கள். ஏனென்றால் முகத்தைப் பார்த்து பேச பிள்ளைகள் தயங்குகிறார்கள், ஆனால் ஏதாவது வேலை செய்துகொண்டோ பக்கத்தில் உட்கார்ந்துகொண்டோ இருக்கும்போது மனம்விட்டுப் பேசுகிறார்கள்.—பைபிள் நியமம்: உபாகமம் 6:6, 7.
சுருக்கமாகப் பேசுங்கள். உங்களுடைய கருத்தை புரிய வைப்பதற்காக எல்லா சமயத்திலும் அவனிடம் வாதாடாதீர்கள். சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு நிறுத்திவிடுங்கள். அந்தச் சமயத்தில் அவன் கவனிக்காத மாதிரி தெரிந்தாலும், தனியாக இருக்கும்போது அதையெல்லாம் யோசித்துப் பார்ப்பான். அப்படி யோசித்து முடிவு எடுக்க அவனுக்கு வாய்ப்பு கொடுங்கள்.—பைபிள் நியமம்: நீதிமொழிகள் 1:1-4.
காதுகொடுத்து கேளுங்கள், வளைந்துகொடுங்கள். அவன் பேசி முடிக்கும்வரை குறுக்கே பேசாதீர்கள், கவனித்து கேளுங்கள். அப்போதுதான் பிரச்சினையின் முழு பரிமாணத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியும். பதில் சொல்லும்போது நியாயமாக இருங்கள். நீங்கள் ரொம்ப கெடுபிடியாக இருந்தால் உங்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தன் இஷ்டத்திற்கு செய்ய பார்ப்பான். “இந்த மாதிரி சமயத்தில்தான் பிள்ளைகள் இரட்டை வாழ்க்கை வாழ்வார்கள். அம்மா-அப்பாவுக்கு எது பிடிக்குமோ அதைச் செய்வதாகச் சொல்வார்கள், ஆனால், பின்னாடி போய் தங்களுக்குப் பிடித்தமாதிரி நடந்துகொள்வார்கள்” என்று ஸ்டேயிங் கனெக்ட்டட் டு யுவர் டீனேஜர் புத்தகம் எச்சரிக்கிறது.—பைபிள் நியமம்: பிலிப்பியர் 4:5.
பொறுமையாக இருங்கள். “எனக்கும் அம்மாவுக்கும் ஏதாவது ஒரு விஷயத்தில ஒத்துப்போகலன்னா நான் சொல்ற எல்லாத்தையும் அவங்க தப்பா புரிஞ்சிக்குவாங்க. எனக்கு அது பிடிக்கவே பிடிக்காது. அந்தப் பேச்சு உடனே வாக்குவாதத்துல போய் முடியும்” என்கிறாள் டீனேஜ் கீதா. ஆகையால், ஒரு விஷயத்தைக் கேட்டவுடன் உணர்ச்சிவசப்படாதீர்கள். உங்கள் பிள்ளையின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டீர்கள் என்பதை வார்த்தையில் தெரிவியுங்கள். உதாரணமாக, அவன் ஏதாவது சொல்லும்போது “அது ஒன்னும் பெரிய விஷயமே இல்ல” என்று சொல்லாதீர்கள். “உனக்கு இது எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது” என்று சொல்லுங்கள்.—பைபிள் நியமம்: நீதிமொழிகள் 10:19.
வழிகாட்டுங்கள், அடக்கி ஆளாதீர்கள். உங்கள் டீனேஜ் பிள்ளையின் சிந்திக்கும் திறனை உடலிலுள்ள தசைகளுக்கு ஒப்பிடலாம். எந்தளவு உடற்பயிற்சி செய்கிறோமோ அந்தளவு தசைகள் பலமாகும். அவனுக்காக நீங்கள் உடற்பயிற்சி செய்ய முடியுமா? எனவே, உங்கள் மகன் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப்போய் இருக்கும்போது, அவனுக்காக நீங்கள் தீர்மானம் எடுக்காதீர்கள். அதைப் பற்றி அவனிடம் பேசும்போது என்ன செய்யலாம் என்று அவனையே சொல்லச் சொல்லுங்கள். பிறகு, என்னென்ன வழிகள் இருக்கிறது என்று சொல்லிவிட்டு “இதையெல்லாம் யோசிச்சு பாரு. ரெண்டு-மூனு நாள் கழிச்சு இதப்பத்தி பேசலாம். நீ என்ன செய்யலாம்னு நினைக்கிற, ஏன் அப்படி நினைக்கிறன்னு சொல்லு” என்று சொல்லுங்கள்.—பைபிள் நியமம்: எபிரெயர் 5:14. ▪ (g13-E 01)