பைபிளின் கருத்து
மனஸ்தாபங்களைச் சரிசெய்வது எப்படி?
ம னஸ்தாபம் ஏன் ஏற்படுகிறது? “எல்லாருமே பாவம் செய்து கடவுளுடைய மகிமையான குணங்களைப் பிரதிபலிக்கத் தவறியிருக்கிறார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 3:23) இந்த உலகிலுள்ள 700 கோடிக்கும் அதிகமான மக்களும், தவறு செய்கிறவர்களே. அதனால்தான், அவர்களுக்குள் மனஸ்தாபங்கள் ஏற்படுகின்றன. அவற்றைச் சரிசெய்து அவர்களோடு சமாதானமாவது எப்படி?
பைபிள் நல்ல ஆலோசனைகளைத் தருகிறது. நம்மைப் படைத்த கடவுளான யெகோவாவை “சமாதானத்தின் கடவுள்” என்று அது சொல்கிறது. (எபிரெயர் 13:20; சங்கீதம் 83:17) பூமியிலுள்ள தம் பிள்ளைகள் சமாதானமாக வாழ வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். அதற்கு அவரே நல்ல முன்மாதிரியும் வைக்கிறார். முதல் மனித ஜோடி அவருக்குக் கீழ்ப்படியாமல் போய், யெகோவாவுடன் வைத்திருந்த உறவை முறித்தபோது அதை ஒட்டவைக்க யெகோவா உடனே நடவடிக்கை எடுத்தார். (2 கொரிந்தியர் 5:19) இப்போது, மனஸ்தாபங்களைச் சரிசெய்து சமாதானமாவதற்கு உதவும் மூன்று வழிகளைப் பாருங்கள்.
தாராளமாக மன்னியுங்கள்
பைபிளின் புத்திமதி: “ஒருவர்மீது ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள். யெகோவா உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல் நீங்களும் ஒருவரையொருவர் மன்னியுங்கள்.”—கொலோசெயர் 3:13.
எதிர்ப்படும் சவால்: ஒருவர்மீது நியாயமாகவே உங்களுக்கு “மனக்குறை” ஏற்பட்டிருக்கலாம். அவரோடுள்ள உறவை முறித்துக்கொள்வதே சரி என நினைக்கலாம். ‘தப்பு செஞ்சது அவர்தானே, அவரே வந்து முதலில் மன்னிப்பு கேட்கட்டும்’ என்று சொல்லலாம். ஆனால், அந்த நபர் தவறு செய்திருக்கிறார் என்று அவருக்கே தெரியாமல் இருந்தால்? நீங்கள்தான் தவறு செய்தீர்கள் என்று அவர் நினைத்தால்? பிரச்சினை இழுத்துக்கொண்டே தான் போகும்.
என்ன செய்யலாம்? சின்ன பிரச்சினை என்றால் அதை ஊதி பெரிதாக்காமல் பைபிள் சொல்வதுபோல் மன்னித்துவிடலாம், அல்லவா? நாம் செய்யும் எல்லாத் தவறுகளையும் கடவுள் கணக்கு வைத்திருந்தால் நம் கதி என்னவாகியிருக்கும்! (சங்கீதம் 130:3) ஆனால், யெகோவா “உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்” என்று பைபிள் சொல்கிறது. ஆம், அவர் தாராளமாக மன்னிக்கிறார்.—சங்கீதம் 103:8, 14.
“மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை” என்ற பைபிளின் நீதிமொழியையும் மனதில் நிறுத்துங்கள். (நீதிமொழிகள் 19:11) விவேகமாக யோசித்துப் பார்த்தால் பிரச்சினையின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கலாம். ஏன் அப்படி பேசினார்கள், ஏன் அப்படி நடந்துகொண்டார்கள் என்று கண்டுபிடித்துவிடலாம். யாராவது உங்களைப் புண்படுத்திவிட்டால் ‘அவர் களைப்பா இருந்தாரா, உடம்பு சரியில்லையா, ஏதாவது பிரச்சினையில் இருந்தாரா?’ என்று யோசித்துப் பாருங்கள். மற்றவர்களுடைய உள்ளெண்ணங்களை, உணர்ச்சிகளை, சூழ்நிலைகளை புரிந்துகொண்டால் உங்கள் கோபம் குறையும், தவறை பெரிதுபடுத்த மாட்டீர்கள்.
மனந்திறந்து பேசுங்கள்
பைபிளின் புத்திமதி: “உங்கள் சகோதரர் ஒரு பாவம் செய்தால், அவரிடம் தனியாகப் போய், அவருடைய தவறை எடுத்துச் சொல்லுங்கள்; அவர் உங்களுக்குச் செவிகொடுத்தால், உங்கள் சகோதரரை நல்வழிக்குக் கொண்டுவந்திருப்பீர்கள்.”—மத்தேயு 18:15.
எதிர்ப்படும் சவால்: ‘பயமா இருக்கு,’ ‘கோபம் கோபமா வருது,’ ‘தர்மசங்கடமா ஆகிடுமோ’ என்றெல்லாம் நினைத்து பிரச்சினையைப் பேசித் தீர்க்க தயங்கலாம். பிரச்சினையைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லி உங்கள் பக்கம் ஆள் சேர்க்கவும் நினைக்கலாம். அப்படிச் செய்தால், பிரச்சினை இன்னும் பெரியதாகி வெடித்துவிடும்.
என்ன செய்யலாம்? பிரச்சினை பெரியது என்றால், உங்களால் மன்னிக்க முடியவில்லை என்றால் நேரில் பேசுங்கள். எப்படிப் பேசுவது?
(1) உடனடியாக... காலம் கடத்தாதீர்கள். கடத்தினால், பிரச்சினை இன்னும் மோசமாகிவிடும். இயேசு சொன்ன ஆலோசனையைக் கடைப்பிடியுங்கள்: “உங்கள் காணிக்கையைச் செலுத்த பலிபீடத்திற்கு நீங்கள் வந்திருக்கும்போது உங்கள் சகோதரனுக்கு உங்கள்மீது ஏதோ மனக்குறை இருப்பது உங்கள் நினைவுக்கு மத்தேயு 5:23, 24.
வந்தால், அங்கேயே அந்தப் பலிபீடத்திற்குமுன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முதலில் அவனிடம் சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.”—(2) தனியாக... பிரச்சினையை எல்லாரிடமும் ‘கிசுகிசுப்பது’ வேண்டவே வேண்டாம். ‘உங்களுக்குள் பேசி முடிவு செய்யுங்கள். அடுத்தவனின் இரகசியத்தை வெளியில் கூறாதீர்கள்.’—நீதிமொழிகள் 25:9, ஈஸி டு ரீட் வர்ஷன்.
(3) சமாதானமாக... ‘என் தப்பா, உன் தப்பா?’ என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யாதீர்கள். ‘நான் ஜெயிக்கணும்’ என்பதல்ல, சமாதானம் ஆக வேண்டும் என்பதே உங்கள் குறிக்கோள். “நீங்க என் மனச காயப்படுத்திட்டீங்க” என்று சொல்லாமல் “. . . இப்படி சொன்னது என் மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு” என்று சொல்லுங்கள். “சமாதானத்தை உண்டாக்குகிற காரியங்களையும் ஒருவரையொருவர் பலப்படுத்துகிற காரியங்களையும் நாடிச்செல்வோமாக” என்று பைபிள் சொல்கிறது.—ரோமர் 14:19.
நீண்ட பொறுமை காட்டுங்கள்
பைபிளின் புத்திமதி: “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்; . . . உங்கள் எதிரி பசியாக இருந்தால், அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்; அவன் தாகமாயிருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக் கொடுங்கள்.”—ரோமர் 12:17, 20.
எதிர்ப்படும் சவால்: சமாதானமாவதற்கு நீங்கள் முயற்சி செய்தும் ஒத்துவரவில்லை என்றால், இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்று முடிவுகட்டிவிடாதீர்கள்.
என்ன செய்யலாம்? பொறுமையாக இருங்கள். எல்லாருடைய சுபாவமும் மனப்பக்குவமும் ஒரே மாதிரி இருக்காது. சிலருடைய கோபம் தணிய நாட்கள் எடுக்கும், சிலர் கடவுளுடைய குணங்களை இப்போதுதான் வளர்க்க ஆரம்பித்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்களிடம் அன்போடும் கனிவோடும் நடந்துகொள்ளுங்கள். “தீமை உங்களை வெல்லும்படி விடாமல், தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்” என்று பைபிள் சொல்கிறது.—ரோமர் 12:21.
மனஸ்தாபங்களை மறந்து சமாதானமாக வாழ வேண்டுமென்றால், அன்பாக... பொறுமையாக... மனத்தாழ்மையாக... விவேகமாக... நடந்துகொள்ள வேண்டும். இதற்காகப் பாடுபடுகிறவர்களுக்கு நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும்! (g12-E 03)
உங்கள் பதில்?
● மற்றவர்களைத் தாராளமாக மன்னிக்க எது உதவும்?—கொலோசெயர் 3:13.
● நேரில் சந்தித்து பிரச்சினையைப் பேசித் தீர்க்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? —மத்தேயு 5:23, 24.
● முயற்சி செய்தும் மனஸ்தாபங்களைச் சரிசெய்துகொள்ள முடியவில்லை என்றால் என்ன செய்வது?—ரோமர் 12:17-21.
[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]
“மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.”—நீதிமொழிகள் 19:11.