உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்!
ரூஸ்டம் என்பவர் ரஷ்யாவில் வாழ்கிறார். நிற்கக்கூட நேரம் இல்லாத அளவுக்கு படுபிஸியாக இருக்கிறார். பல வருடங்களுக்கு முன்போ, கெட்ட பழக்கங்கள் சிலவற்றிற்கு அவர் அடிமையாக இருந்தார். நாளாக ஆக, தானே தன் உடலைக் கெடுத்துக்கொண்டிருப்பதைப் புரிந்துகொண்டார். இதனால், புகைப் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அளவுக்குமீறி குடிப்பதை நிறுத்திவிட்டார். இதையெல்லாம் செய்தும், நாள் முழுக்க கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து வேலை செய்தபிறகு, ரொம்ப களைப்பாக உணர்ந்தார்.
ரூஸ்டம் காலை எட்டு மணிக்கே வேலையைத் தொடங்கிவிடுவார்; இருந்தாலும் பத்து மணி வரை அவருக்குத் தூக்கக் கலக்கமாகவே இருக்கும். அடிக்கடி அவருக்கு உடம்பு முடியாமல் போய்விடும். எனவே, தன்னுடைய அன்றாட பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களைச் செய்தார். விளைவு? “இப்போதெல்லாம் சோர்வுக்கு ‘டாட்டா’ சொல்லிவிட்டேன். இந்த ஏழு வருஷமா வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கிறேன். ரொம்ப சுறுசுறுப்பாக, உற்சாகமாக இருக்கிறேன். உடம்புக்கு முடியவில்லை என்று வருஷத்துக்கு இரண்டு நாளுக்கு மேல் ‘லீவு’ எடுத்ததில்லை” என்கிறார் ரூஸ்டம்.
ராம் அவருடைய மனைவியோடு நேபாளத்தில் வசிக்கிறார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்கள் வாழும் பகுதி, சாக்கடையும் குப்பையுமாகக் காட்சியளிக்கும். கொசுக்களும் ஈக்களும் அங்கே குடித்தனம் நடத்துகின்றன. முன்பெல்லாம், ராமும் அவருடைய குடும்பத்தாரும் சுவாசக் கோளாறாலும், கண் நோயாலும் அடிக்கடி அவதிப்பட்டார்கள். பிறகு, நிறைய மாற்றங்களைச் செய்தார்கள், இப்போது ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.
உங்கள் உடல்நலம் உங்கள் கையில்!
ஒருவர் பணக்காரரோ ஏழையோ, அவருடைய பழக்கவழக்கங்களுக்கும் உடல்நலத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது. இந்த உண்மை நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. ஆரோக்கியமான வாழ்க்கை என்பது நம் கையில் இல்லை என்றோ, ‘இப்பவே ஏன் அதை நினைத்துக் கவலைப்பட வேண்டும், வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்றோ அவர்கள் நினைக்கலாம். இப்படி நினைப்பவர்கள் உடல்நலத்தின்மீது துளிகூட அக்கறை எடுக்க மாட்டார்கள்; நலமாக வாழ்வதற்கு எந்த முயற்சியும் எடுக்க மாட்டார்கள்.
உண்மையில், நீங்கள் வசதி வாய்ப்புள்ளவர்களாக இருந்தாலும் சரி, வறுமையில் வாடினாலும் சரி, நீங்களும் உங்கள் குடும்பமும் இன்னும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு, சில அடிப்படைப் படிகளை எடுக்க வேண்டும். அப்படிச் செய்வதால், ஏதாவது பலன் இருக்கிறதா? ஆம், இருக்கிறது. உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும், உங்கள் ஆயுளைக் கூட்ட முடியும்.
முக்கியமாகப் பெற்றோர் சொல்லிலும் செயலிலும் தங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும். அது ஆரோக்கியத்திற்கு ஆணிவேர். ஆனால், அதற்கு ‘நிறைய நேரம் வேண்டுமே’ ‘நிறைய காசாகுமே’, என்றெல்லாம் கவலைப்படாதீர்கள். ஏனென்றால், “வந்த பின் காப்பதைவிட வரும் முன் காப்பதே மேல்.” அப்படிச் செய்யும்போது நோயினால் வரும் வலியைக் குறைக்கலாம், படுக்கையில் முடங்கிப் போவதைத் தவிர்க்கலாம், மருந்துகளுக்கு ஆகும் செலவுகளையும் குறைக்கலாம்.
ரூஸ்டம், ராம் மற்றும் பலருக்கு உதவிய ஐந்து முக்கிய டிப்ஸ்களை பின்வரும் கட்டுரைகளில் சிந்திப்போம். அவை உங்களுக்கும்கூட உதவும்! (g11-E 03)