Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட வேண்டுமா?

நான் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட வேண்டுமா?

இளைஞர் கேட்கின்றனர்

நான் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட வேண்டுமா?

நீங்கள் எந்த வகுப்பு வரை படித்தால் போதுமென நினைக்கிறீர்கள்?

....

நீங்கள் எந்த வகுப்பு வரை படிக்க வேண்டுமென உங்கள் அப்பா-அம்மா நினைக்கிறார்கள்?

....

இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் ஒன்றுதானா? பதில் ஒன்றுபோல் இருந்தாலும்கூட நீங்கள் இன்னும் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட நீங்கள் விரும்பிய நாட்களும் இருக்கலாம். அப்படியானால், இவர்களைப் போலவே நீங்களும் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா?

“சில சமயம் ஸ்கூலைப் பற்றி நினைத்தாலே மனசு படபடப்பாக இருக்கும்; அதனால், படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே தோன்றாது. ‘நான் ஏன் ஸ்கூலுக்குப் போகனும், அங்க படிக்கிறதைத்தான் நான் பயன்படுத்தப் போவதில்லையே?’ என்று யோசிப்பேன்.”—ரேச்சல்.

“நிறைய சமயம்... ஸ்கூலுக்குப் போவது என்றாலே எனக்கு ரொம்ப வெறுப்பாக இருந்தது; ‘பேசாமல் படிப்பை நிறுத்திவிட்டு, வேலைக்குப் போகலாமா’ என்றுகூட யோசித்திருக்கிறேன். ‘ஸ்கூலில் அப்படி என்ன பெரிதாக கற்றுக்கொள்ளப் போகிறேன், அதற்குப் பதிலாக வேலைக்குப் போனாலாவது நாலு காசு சம்பாதிக்கலாம்’ என்று நினைத்திருக்கிறேன்.”—ஜான்.

“தினமும் உட்கார்ந்து நாலு மணிநேரம் ஹோம்வர்க் செய்ய வேண்டியிருந்தது! ‘அஸைன்மென்ட், புராஜெக்ட், டெஸ்ட்’ என்று ஒன்று மாறி ஒன்று வந்துகொண்டே இருந்தது; இதெல்லாம் எனக்குப் பெரிய சுமையா தெரிந்ததால், படிப்பை விட்டுவிட நினைத்தேன்.”—சின்டி.

“எங்க ஸ்கூல்ல ஒரு தடவை வெடிகுண்டு வைத்திருப்பதாகச் சொன்னார்கள், மூன்று பிள்ளைகள் தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தார்கள், ஒரு பிள்ளை நிஜமாகவே தற்கொலை செய்துகொண்டது, பையன்கள் கும்பலாக அடிதடியில் இறங்கினார்கள். இதையெல்லாம் என்னால் தாங்கவே முடியவில்லை; அதனால், சில சமயங்களில் ‘ஸ்கூலும் வேண்டாம், படிப்பும் வேண்டாம்’ என்று நினைத்தேன்!”—ரோஸ்.

இதுபோன்ற பிரச்சினைகளை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? அப்படியென்றால், எந்தப் பிரச்சினை காரணமாக பள்ளிப் படிப்பை விட்டுவிட வேண்டுமென்று நினைத்தீர்கள்?

....

பள்ளிப் படிப்பை விட்டுவிடுவது பற்றி ஒருவேளை நீங்கள் இப்போது தீவிரமாகச் யோசித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் ஏன் அப்படி யோசிக்கிறீர்கள்? உங்கள் படிப்பு முடிந்துவிட்டதாலா, அல்லது பள்ளிக்குப் போகப் பிடிக்காததாலா?

பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிடுவது சரியா?

சில நாடுகளில்... பொதுவாகப் பிள்ளைகள் ஐந்திலிருந்து எட்டு வருடங்களுக்குப் பள்ளியில் படிக்க வேண்டியிருக்கிறது. வேறு சில நாடுகளில்... பத்து முதல் பன்னிரண்டு வருடங்கள் படிக்க வேண்டியிருக்கிறது. எனவே, எத்தனை வயதுவரை அல்லது எந்த வகுப்புவரை படிக்க வேண்டும் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.

அதோடு, கொஞ்ச காலத்துக்கு மட்டும் பள்ளியில் படித்துவிட்டு பிறகு வீட்டிலிருந்து படிப்பதற்கு... அல்லது முழுக்க முழுக்க வீட்டிலிருந்தே படிப்பதற்கு... சில நாடுகள் அல்லது மாநிலங்கள் அனுமதி அளிக்கலாம். இதனால், பெற்றோரின் அனுமதியோடும் ஆதரவோடும் பிள்ளைகள் வீட்டிலிருந்தே படித்து வரலாம்; அப்படிப் படிக்கிற பிள்ளைகளை... படிப்பைப் பாதியில் விட்டுவிட்டவர்கள் என்று சொல்ல முடியாது.

ஆனால், நீங்கள் பள்ளிக்குச் சென்று படித்தாலும்சரி வீட்டிலிருந்து படித்தாலும்சரி, பள்ளிக் காலம் முடிவதற்கு முன்பாகவே படிப்பை விட்டுவிட நினைத்தால்... பின்வரும் கேள்விகளுக்குக் கவனம் செலுத்த வேண்டும்:

சட்டப்படி எந்த வகுப்புவரை படிக்க வேண்டும்? முன்பு குறிப்பிட்டதுபோல், சட்டப்படி ஒரு மாணவர் எந்த வகுப்புவரை படிக்க வேண்டுமென்பது இடத்துக்கு இடம் வேறுபடுகிறது. உங்கள் நாட்டில் சட்டப்படி... ஒருவர் குறைந்தபட்சம் எவ்வளவு படித்திருக்க வேண்டும்? அதன்படி நீங்கள் படித்து முடித்துவிட்டீர்களா? இல்லையென்றால், ‘அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு . . . கட்டுப்பட்டு நடக்க வேண்டும்’ என்று பைபிள் சொல்கிற ஆலோசனையை நீங்கள் புறக்கணித்துவிடுகிறீர்கள் என்றே அர்த்தம்.—ரோமர் 13:1.

என் பள்ளிப் படிப்பின் லட்சியத்தை எட்டிவிட்டேனா? என்ன லட்சியத்தோடு நீங்கள் பள்ளியில் படிக்கிறீர்கள்? உங்களுக்குச் சரியாகத் தெரியவில்லையா? அதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்! இல்லாவிட்டால், எங்கே போகிறோம் என்றே தெரியாமல் ரயிலில் ஏறி பயணம் செய்கிற ஒருவரைப் போல் இருப்பீர்கள். எனவே, உங்கள் அப்பா அம்மாவுடன் உட்கார்ந்து பக்கம் 28-ல் கொடுக்கப்பட்டுள்ள “ என் படிப்பின் லட்சியம்” என்ற பகுதியைப் பூர்த்திசெய்யுங்கள். அப்படிச் செய்வது, படிப்பில் கவனம் செலுத்த உங்களுக்கு உதவும்; அதோடு, நீங்கள் எந்த வகுப்புவரை படிக்க வேண்டும் என்பதைத் திட்டமிட உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் உதவும்.—நீதிமொழிகள் 21:5.

நீங்கள் எந்த வகுப்புவரை படிக்க வேண்டுமென பள்ளி ஆசிரியர்களும் மற்றவர்களும்கூட ஆலோசனை கொடுப்பார்கள்தான். என்றாலும், இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் உங்கள் பெற்றோருக்குத்தான் இருக்கிறது. (நீதிமொழிகள் 1:8; கொலோசெயர் 3:20) எனவே, நீங்களும் உங்கள் பெற்றோரும் தீர்மானித்த லட்சியங்களை எட்டுவதற்கு முன்பே படிப்பை நிறுத்திவிடுவது நல்லதல்ல.

நான் படிப்பைப் பாதியில் விட்டுவிடுவதற்கான காரணங்கள்? உங்களையே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். (எரேமியா 17:9) நல்ல காரணங்கள் இருப்பதாக நினைத்துக்கொண்டு சுயநல காரியங்களில் ஈடுபடுவது மனித இயல்பு.—யாக்கோபு 1:22.

உங்கள் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்துவதற்கான தகுந்த காரணங்களை இங்கே எழுதுங்கள்.

....

தன்னல காரணங்கள் சிலவற்றை இங்கே எழுதுங்கள்.

....

தகுந்த காரணங்களுக்குக் கீழ் எவற்றை எழுதினீர்கள்? குடும்பத்திற்குப் பண உதவி செய்ய... கடவுளைப் பற்றிக் கற்றுக்கொள்ள... மற்றவர்களுக்கு உதவ... என்றெல்லாம் நீங்கள் எழுதியிருக்கலாம். தன்னல காரணங்களுக்குக் கீழ், பரீட்சையைத் தவிர்க்க... ஹோம்வர்க்கிலிருந்து தப்பிக்க... என எழுதியிருக்கலாம். நீங்கள் எதற்காகப் படிப்பைப் பாதியில் விட்டுவிட நினைக்கிறீர்கள்—தகுந்த காரணங்களாலா, தன்னல காரணங்களாலா என்பதை அறிந்துகொள்வதுதான் சவால்.

நீங்கள் எழுதிய குறிப்புகளை மீண்டும் பாருங்கள்; நீங்கள் படிப்பைப் பாதியில் விட்டுவிடுவதற்கான காரணங்களை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என வரிசைப்படுத்துங்கள் (அந்தளவு முக்கியமில்லாத காரணத்தை 1 என்று குறிப்பிட்டு, அப்படியே தொடர்ந்து, அதிமுக்கியமான காரணத்தை 5 என்று குறிப்பிடுங்கள்). பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே நீங்கள் படிப்பைப் பாதியில் நிறுத்திவிடுகிறீர்கள் என்றால் உங்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருக்கிறது.

படிப்பைப் பாதியில் விட்டுவிடுவதால் வரும் நஷ்டங்கள்

பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிடுவது, ரயிலிலிருந்து பாதி வழியிலேயே குதித்துவிடுவதைப் போல் இருக்கிறது. அந்த ரயில் பயணம் அசௌகரியமானதாக இருக்கலாம்... சக பயணிகள் கடுகடுப்பாக நடந்துகொள்ளலாம். அதற்காக, ரயிலிலிருந்து நீங்கள் குதித்துவிட்டால் என்னவாகும்? போய்ச் சேர வேண்டிய இடத்தை அடையவும் முடியாது; அதோடு, பலத்த காயமும் ஏற்பட்டுவிடும். அதேபோல், நீங்கள் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டால், உங்கள் பள்ளிப் படிப்பின் லட்சியத்தை எட்ட முடியாமல் போகலாம்; அதோடு, உடனடி பிரச்சினைகளையும் நீண்ட காலப் பிரச்சினைகளையும்கூட நீங்கள் எதிர்ப்படலாம். அவற்றில் சில:

உடனடி பிரச்சினைகள் உங்களுக்கு வேலை கிடைப்பது பெரும்பாடாகிவிடலாம்; அப்படியே கிடைத்தாலும் கையில் வாங்கும் சம்பளம் குறைவாக இருக்கலாம்; படிப்பை முழுமையாய் முடித்திருந்தால் அதைவிட அதிக சம்பளம் வாங்கியிருக்கலாம். வாழ்க்கையின் அடிப்படை தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக நீங்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கலாம்; அதுவும் இப்போது உங்கள் பள்ளியில் உள்ளதைவிட மோசமான சூழலில் வேலை செய்ய வேண்டியிருக்கலாம்.

நீண்ட காலப் பிரச்சினைகள் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டவர்கள் உடல்நலக் குறைவால் அவதிப்பட... இளம்வயதிலேயே பெற்றோர்களாகிவிட... சிறையில் தள்ளப்பட... சமூக நல திட்டங்களைச் சார்ந்து வாழ... அதிக வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது.

பள்ளிப் படிப்பை முழுமையாக முடித்தால் இந்தப் பிரச்சினைகள் எல்லாம் உங்களுக்கு வராது என்று சொல்ல முடியாதுதான். என்றாலும், படிப்பைப் பாதியில் விட்டுவிடுவதன் மூலம் தேவையில்லாமல் பிரச்சினைகளை ஏன் விலைக்கு வாங்க வேண்டும்?

படிப்பை முழுமையாய் முடிப்பதால் பயன்கள்

ஒரு பரிட்சையில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கிவிட்டதாலோ... ஏதாவது பிரச்சினை ஏற்பட்டதாலோ படிப்பைப் பாதியில் விட்டுவிட நீங்கள் நினைக்கலாம்; பின்னால் வரப்போகிற பிரச்சினைகளைவிட இப்போதுள்ள பிரச்சினைதான் பெரிதாகத் தெரியலாம். ஆனால், இந்தக் ‘குறுக்கு வழியில்’ உங்கள் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்கு முன், இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட மாணவர்கள் படிப்பைப் பாதியில் விட்டுவிடாததால் தாங்கள் பெற்ற நன்மைகளைப் பற்றி சொல்வதைக் கொஞ்சம் கவனியுங்கள்.

“பொறுத்துப் போகவும் மனதைத் தைரியமாக வைத்துக்கொள்ளவும் கற்றுக்கொண்டேன். ஒரு காரியத்தில் ஈடுபாடு காட்டுவதும் காட்டாதிருப்பதும் நம் கையில்தான் இருக்கிறது என்பதையும் புரிந்துகொண்டேன். பின்னால், வேலைக்கு பயன்படும் திறமைகளையும் பள்ளியில் வளர்த்துக்கொண்டேன்.”—ரேச்சல்.

“கஷ்டப்பட்டு படித்தால் என்னுடைய லட்சியத்தை எட்ட முடியுமென இப்போது நான் புரிந்துகொண்டேன். உயர்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வியைத் தேர்ந்தெடுத்துப் படிக்கிறேன். எனக்குப் பிடித்த பிரஸ் மெக்கானிக் வேலைக்கு அது ரொம்பவே கைகொடுக்கும்.”—ஜான்.

“வகுப்பிலும்சரி வெளியிலும்சரி, பிரச்சினை வந்தால் அதை எப்படிச் சமாளிப்பது என்பதைக் கற்றுக்கொள்ள பள்ளி எனக்கு உதவியிருக்கிறது. படிப்பு விஷயத்தில்... மற்றவர்களுடன் பழகும் விஷயத்தில்... அல்லது தனிப்பட்ட விஷயங்களில்... வருகிற பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது எனக் கற்றுக்கொண்டது என்னைக் கெட்டிக்காரியாக ஆக்கியிருக்கிறது.”—சின்டி.

“வேலை செய்யும் இடத்தில் வருகிற சவால்களைச் சமாளிக்க பள்ளி எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. அதோடு, என் மத நம்பிக்கைகளைப் பற்றி சக மாணவிகள் என்னிடம் கேள்வி கேட்பார்கள்; அவர்களுக்குப் பதில் சொல்வதற்காக நான் நிறைய ஆராய்ச்சி செய்து படித்தேன். அதனால் என் மத நம்பிக்கை இன்னும் அதிகமாகப் பலப்பட்டிருக்கிறது.”—ரோஸ்.

“ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்” என்று ஞானியான சாலொமோன் ராஜா எழுதினார். (பிரசங்கி 7:8) எனவே, பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிடுவதற்குப் பதிலாக, பள்ளியில் எதிர்ப்படுகிற பிரச்சினைகளைப் பொறுமையாய்ச் சரிசெய்யுங்கள். அப்படிச் செய்தால், முடிவு நல்லதாகவே இருப்பதைக் காண்பீர்கள். (g10-E 11)

“இளைஞர் கேட்கின்றனர்” தொடரில் வேறு சில கட்டுரைகளுக்கு: www.watchtower.org/ype

சிந்திப்பதற்கு

● குறுகிய கால லட்சியங்களை வைப்பது பள்ளி படிப்பிலிருந்து நன்கு பயனடைய உங்களுக்கு எப்படி உதவலாம்?

● பள்ளிப் படிப்புக்குப் பிறகு நீங்கள் செய்யப் போகிற வேலையைப் பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருப்பது ஏன் முக்கியம்?

[பக்கம் 27-ன் பெட்டி/படங்கள்]

உங்கள் சகாக்கள் சொல்வது

“நான் புத்தகப் பிரியையானது பள்ளியில்தான். மற்றவர்களுடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் எழுத்தில் படிப்பது ஓர் அருமையான அனுபவம்.”

“நேரத்தை நன்கு ஒழுங்கமைப்பதுதான் எனக்குப் பிரச்சினை. ஸ்கூலுக்கு மட்டும் நான் போகாதிருந்திருந்தால் அதைக் கற்றிருக்கவே மாட்டேன்! ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு நேரம் ஒதுக்கி, அந்தந்த நேரத்தில் அதைச் செய்வதற்கும், முக்கியமான காரியங்களைச் செய்து முடிப்பதற்கும் ஸ்கூல்தான் எனக்கு உதவுகிறது.”

[படங்கள்]

எஸ்மா

கிறிஸ்டஃபர்

[பக்கம் 28-ன் பெட்டி]

 என் பள்ளிப் படிப்பின் லட்சியம்

பள்ளிப் படிப்பின் முக்கிய நோக்கம்... ஒரு வேலையைத் தேடிக்கொள்ள உங்களைத் தயார்படுத்துவதே; அதனால், நீங்கள் உங்களுடைய சொந்தக் காலில் நிற்க முடியும்; எதிர்காலத்தில் உங்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொள்ள முடியும். (2 தெசலோனிக்கேயர் 3:10, 12) என்ன வேலைக்குப் போக வேண்டும் என்று தீர்மானித்துவிட்டீர்களா? அதற்குப் பள்ளிப் படிப்பு உங்களை எப்படித் தயார்படுத்தும்? இவற்றைத் தெரிந்துகொள்ள பின்வரும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

என்னுடைய திறமைகள் என்ன? (உதாரணத்திற்கு, நீங்கள் மற்றவர்களுடன் நன்கு பழகுகிறீர்களா? புதிது புதிதாகப் பொருள்களை உருவாக்குவது அல்லது பழுதுபார்ப்பது போன்ற வேலைகள் உங்களுக்குப் பிடிக்குமா? பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்வதில் கரைகண்டவரா?)

....

என் திறமைகளுக்கு ஏற்ற என்ன வேலைகளை நான் செய்யலாம்?

....

நான் வசிக்கிற இடத்தில் எப்படிப்பட்ட வேலைகள் கிடைக்கும்?

....

ஒரு வேலையைத் தேடிக்கொள்ள உதவும் என்னென்ன பாடங்களை நான் எடுத்துப் படிக்கிறேன்?

....

என்னுடைய லட்சியத்தை எட்டுவதற்கு உதவும் வேறென்ன பாடங்களை இப்போது நான் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்?

....

வாழ்க்கைக்குப் பயன்படுகிற கல்வியைக் கற்றுக்கொள்வதே உங்கள் லட்சியம் என்பதை மறந்துவிடாதீர்கள். அதற்காகக் காலம் முழுவதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்; அப்படிச் செய்வது, ரயிலைவிட்டு இறங்காமல் அதிலேயே பயணிப்பதைப் போல் இருக்கும்; இது பெரியவர்களுக்குரிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் ஓடி ஒளிவதைப்போல் இருக்கும்.

[பக்கம் 29-ன் பெட்டி]

பெற்றோரின் கவனத்திற்கு

“டீச்சர்கள் கிளாஸ் எடுத்தாலே போரடிக்கிறது!” “எக்கச்சக்கமான ஹோம்வர்க் செய்ய வேண்டியிருக்கிறது!” “பாஸ் மார்க் வாங்குவதே பெரும் பாடாக இருக்கும்போது நான் ஏன் படிக்க வேண்டும்?” என்று சில பிள்ளைகள் நொந்துகொள்கிறார்கள். இதனால் பிழைப்புக்குத் தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கு முன்பே படிப்பை விட்டுவிட நினைக்கிறார்கள். உங்களுடைய மகனோ மகளோ பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட நினைத்தால் நீங்கள் என்ன செய்யலாம்?

படிப்பைக் குறித்த உங்கள் மனோபாவத்தை ஆராய்ந்து பாருங்கள். பள்ளிக்குப் போவதே வீண் என்று நீங்கள் நினைத்தீர்களா? ‘சிறை தண்டனையாக’ அதைக் கருதினீர்களா? அதாவது, உங்களுக்கு பிடித்தமான லட்சியங்களை எட்டும் வரை எப்படியாவது அதைச் சகித்துக்கொள்ளலாம் என நினைத்தீர்களா? அப்படியென்றால், இதே மனோபாவம் உங்கள் பிள்ளைகளையும் தொற்றிக்கொள்ளலாம். ஆனால், பள்ளிப் படிப்பை முழுமையாக முடிப்பது, “நடைமுறை ஞானத்தையும் யோசிக்கும் திறனையும்” வளர்த்துக்கொள்ள பிள்ளைகளுக்கு நிச்சயம் உதவும்; அவர்கள் வளர்ந்து வாழ்க்கையில் முன்னுக்கு வர இந்தப் பண்புகள் தேவை.—நீதிமொழிகள் 3:21.

வேண்டிய வசதிகளைச் செய்துகொடுங்கள். நல்ல மார்க் வாங்க முடிந்த பிள்ளைகளுக்கு எப்படிப் படிப்பது என்று தெரியாதிருக்கலாம்; அல்லது படிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாதிருக்கலாம். எனவே, படிப்பதற்கு வசதியான இடத்தை அமைத்துக் கொடுங்கள்; மேசையில் பொருள்கள் கண்டபடி இரைந்து கிடக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள்; அங்கே, போதுமான வெளிச்சம் இருக்கிறதா எனப் பாருங்கள்; படிப்புக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுங்கள். படிப்பிலும்சரி ஆன்மீகத்திலும்சரி, உங்கள் பிள்ளைகள் முன்னேற உதவுங்கள்; அதற்குத் தேவையான பயிற்சி அளியுங்கள்; புதிய விஷயங்களையும் கருத்துக்களையும் மனதில் அசைபோடுவதற்குப் பொருத்தமான சூழலை ஏற்படுத்திக்கொடுங்கள்.—1 தீமோத்தேயு 4:15.

பிள்ளையின் நலனில் அக்கறை காட்டுங்கள். ஆசிரியர்களையும் ஆலோசகர்களையும் நண்பர்களாகக் கருதுங்கள், எதிரிகளாக அல்ல. அவர்களைப் போய்ச் சந்தியுங்கள். அவர்களுடைய பெயர்களைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய பிள்ளையின் லட்சியங்களையும் அவன் எதிர்ப்படுகிற பிரச்சினைகளையும் பற்றிப் பேசுங்கள். உங்கள் பிள்ளை நல்ல மார்க் வாங்க கஷ்டப்படுகிறான் என்றால்... அதற்கான காரணத்தைக் கண்டறிய முயற்சி செய்யுங்கள். உதாரணத்திற்கு, உங்கள் பிள்ளை பள்ளியில் கெட்டிக்காரனாக இருந்தால் மற்றவர்கள் அவனை வம்புக்கு இழுப்பார்களென அவன் நினைக்கிறானா? ஆசிரியரைக் கண்டு பயப்படுகிறானா? பாடங்கள் கஷ்டமாக இருக்கின்றனவா? கஷ்டமாக இருந்தாலும் அவன் திணறிப் போய்விடும் அளவுக்கு இருக்கக்கூடாது. மற்றொரு காரணம் உடல்நலப் பிரச்சினையாக இருக்கலாம். பார்வை கோளாறு, கற்றுக்கொள்வதில் கோளாறு போன்ற ஏதாவது பிரச்சினைகள் இருக்கின்றனவா?

கல்வியிலும்சரி கடவுள் பக்தியிலும்சரி, உங்கள் பிள்ளைக்குப் பயிற்சி அளிக்க எந்தளவு அக்கறை காட்டுகிறீர்களோ அந்தளவு அவன் வாழ்க்கையில் வெற்றிகாண வாய்ப்பிருக்கிறது.—நீதிமொழிகள் 22:6.

[பக்கம் 29-ன் படம்]

பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிடுவது, ரயிலிலிருந்து பாதி வழியிலேயே குதித்துவிடுவதைப் போன்றது