Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“சாரி, வேறு வேலை தேடிக்கொள்ளுங்கள்”

“சாரி, வேறு வேலை தேடிக்கொள்ளுங்கள்”

“சாரி, வேறு வேலை தேடிக்கொள்ளுங்கள்”

தாமஸ் வேலை செய்த கம்பெனியின் அதிகாரிகள் அவரை ‘தூள் கிளப்புகிற தாமஸ்’ என அழைத்தார்கள். * அந்தக் கம்பெனியில் ஆறு வருடங்களாக அவர் வேலை செய்து வந்தார். அவருடைய புதுமையான ஐடியாக்களால் அந்தக் கம்பெனிக்கு நிறைய லாபம் கிடைத்திருந்தது. எனவே, மேலதிகாரி அவரை அழைத்தபோது, தனக்கு சம்பள உயர்வோ பதவி உயர்வோ கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு சென்றார். ஆனால், “சாரி, வேறு வேலை தேடிக்கொள்ளுங்கள்” என்று அந்த மேலதிகாரி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

தாமஸ் அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டார். “நான் கைநிறைய சம்பாதித்தேன், சந்தோஷமாக வேலை செய்து வந்தேன். ஆனால், எல்லாம் ஒரே நிமிடத்தில் தலைகீழாக மாறிவிட்டது” என்று அவர் சொல்கிறார். இதைப் பற்றி பின்பு அவருடைய மனைவி ஆஷாவிடம் சொன்னபோது, அவரும் அதிர்ச்சியில் உறைந்தே போனார். “என் இரத்தமெல்லாம் சுண்டிப்போன மாதிரி இருந்தது. ‘இனி அடுத்து என்ன செய்யப்போகிறோம்’ என யோசிக்க ஆரம்பித்தேன்” என்று ஆஷா சொல்கிறார்.

தாமஸுக்கு நடந்தது போலவே உலகிலுள்ள லட்சக்கணக்கானோருக்கு நடந்திருப்பதாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள வரைபடம் காட்டுகிறது. எத்தனை பேருக்கு வேலை போய்விட்டதென்று இந்த வரைபடம் காட்டினாலும், அவர்கள் மனதளவில் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அது காட்டுவதில்லை. ராகுல் என்பவர் பெருவிலிருந்து நியு யார்க் நகரத்திற்குக் குடிமாறினார். இவர் 18 வருடங்களாக ஒரு பெரிய ஹோட்டலில் வேலை செய்துகொண்டிருந்தார். ஆனால், அந்த வேலை திடீரென பறிபோனது. வேலை தேடி அலைந்த ராகுலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. “கிட்டத்தட்ட 30 வருடங்களாக என்னுடைய குடும்பத்தைக் கவனித்து வந்தேன், ஆனால் குடும்பத்தைக் கவனிக்க முடியாமல் போனபோது லாயக்கற்றவனாக உணர்ந்தேன்” என்று அவர் சொல்கிறார்.

ஒருவருக்கு வேலை பறிபோகும்போது, அவர் பொருளாதார ரீதியில் மட்டுமல்ல, உணர்ச்சி ரீதியிலும் அதிகம் பாதிக்கப்படுகிறார் என்பதை ராகுலுடைய உதாரணம் காட்டுகிறது. இது வேலை இழந்த அனைவரின் விஷயத்திலும் உண்மையே. மூன்று வருடங்களுக்கும் மேலாக வேலை இல்லாமல் இருக்கும் மாத்யூ என்பவரின் மனைவி ரீனா இவ்வாறு சொல்கிறார்: “நான் ஒன்றுக்கும் உதவாதவளைப் போல உணர ஆரம்பித்தேன். நம்மிடம் காசு இல்லையென்றால், யாரும் நம்மை மதிக்க மாட்டார்கள். கொஞ்சக் காலத்தில் நம்மை நாமேகூட மதிக்க மாட்டோம்.”

வேலை பறிபோகும்போது, ஒருவர் மனதளவில் பாதிக்கப்படுவதோடுகூட, இருப்பதை வைத்து வாழ்க்கை ஓட்ட வேண்டிய சவாலையும் எதிர்ப்படுகிறார். “காசு இருந்தபோது சிக்கனமாக வாழ வேண்டும் என்ற எண்ணமே எங்களுக்கு இருக்கவில்லை. ஆனால், வருமானம் இல்லாமல் அதே செலவுகளைச் சமாளிக்க வேண்டியிருந்தபோது சிக்கனமாக வாழ்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது” என்கிறார் தாமஸ்.

நீங்கள் வேறு வேலை தேடிக்கொண்டிருக்கும்போது, வேலையின்றி இருப்பதால் ஏற்படும் மனக்கவலைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். அதோடு, சிக்கனமாக வாழ வேண்டியிருக்கும். உணர்ச்சி சம்பந்தமான சவால்களைச் சமாளிக்க நடைமுறையான இரண்டு வழிகளை நாம் முதலாவது பார்க்கலாம். (g10-E 07)

[அடிக்குறிப்பு]

^ இந்தக் கட்டுரையில் வரும் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

[பக்கம் 3-ன் வரைபடம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

2008-ல் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை (மூன்று நாடுகளில் மட்டும்)

ஜப்பான் 26,50,000

ஸ்பெயின் 25,90,000

ஐக்கிய மாகாணங்கள் 89,24,000