Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கவலையைக் குறைக்க . . .

கவலையைக் குறைக்க . . .

கவலையைக் குறைக்க . . .

‘மிகுந்த கவலையும் தொல்லையும் நிறைந்த கொடிய காலத்தை’ பற்றி பைபிள் பேசுகிறது. அப்படிப்பட்ட கவலை நிறைந்த காலத்தில்தான் நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். —2 தீமோத்தேயு 3:1, தி ஆம்ப்ளிஃபைட் பைபிள்.

காட்டுத் தீயை அணைப்பதைவிட தீச்சுடரை அணைப்பது எவ்வளவோ சுலபம்; இது உங்களுக்கே நன்றாகத் தெரியும். அதுபோலவே, கடலெனப் பெருகியிருக்கிற கவலைக்கு அணை போடுவதைவிட சிறு துளியாக இருக்கிற கவலையைத் துடைத்தழிப்பது சுலபம்தானே? “நாம் பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்தாலும் கவலையைக் கட்டுப்படுத்த தினமும் முயற்சி செய்வது ரொம்ப முக்கியம்” என்கிறார் ஒரு மருத்துவர். *

கவலையைக் கட்டுப்படுத்த தினமும் முயற்சி செய்வது இரண்டு விதங்களில் நமக்கு உதவும். முதலாவது, நம்மால் குறைக்க முடிந்த கவலையைக் குறைக்க உதவும். இரண்டாவது, தவிர்க்க முடியாத கவலையைச் சமாளிக்க உதவும்.

கவலையைக் கட்டுப்படுத்த பைபிள் ஏதாவது ஆலோசனை அளிக்கிறதா?

நிவாரணம் அளிக்கும் பைபிள் சத்தியங்கள்

பைபிள் சத்தியங்களைப் படிக்கப் படிக்க, கடவுளுடைய எண்ணங்களை நாம் புரிந்துகொள்ள முடியும்; அவை புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளிக்கும். கடவுளுடைய வார்த்தை விலைமதிக்க முடியாத ஆலோசனைகளை அள்ளித் தருகிறது. உண்மையில், அது கவலையைப் போக்குகிற ஆன்மீகச் சத்தியங்கள் நிறைந்த பெருங்களஞ்சியம். அந்தச் சத்தியங்கள், நாம் ‘திகைக்காமலும் கலங்காமலும்’ இருக்க உதவுவதுடன், தினமும் நமக்கு வருகிற கவலைகளைச் சமாளிக்கவும் உதவுகின்றன.—யோசுவா 1:7-9.

நம்முடைய பரலோகத் தகப்பனாகிய யெகோவா, ‘கனிவான பாசமும் இரக்கமும் நிறைந்தவர்’ என்ற உறுதியை பைபிள் அளிக்கிறது; இது கவலையைக் குறைக்கும் அருமருந்தாக இருக்கிறது. (யாக்கோபு 5:11) கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த பட்ரிஷா இவ்வாறு விளக்குகிறார்: “கடவுளுடைய விருப்பத்தையும் அவர் செய்துவருகிற அதிசயமான காரியங்களையும் பற்றி யோசித்துப் பார்ப்பது எனக்கு ரொம்ப உதவியாக இருந்திருக்கிறது.”

கடவுளுடைய மகனாகிய இயேசு கிறிஸ்து சொல்லிலும் செயலிலும் மென்மையைக் காட்டினார்; இதன் காரணமாக, ஒடுக்கப்பட்டவர்களும் கவலையில் மூழ்கியிருந்தவர்களும் எந்தளவிற்குப் புத்துணர்ச்சி அடைந்திருப்பார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். “உழைத்துக் களைத்துப் போனவர்களே, பெருஞ்சுமை சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பேன்” என்று அவர் சொன்னார்.—மத்தேயு 11:28-30.

சொன்ன சொல்லை அவர் காப்பாற்றினார்; மென்மையாக நடந்துகொண்டார். சீடர்களுடைய உணர்ச்சி ரீதியான தேவைகளையும் உடல் ரீதியான தேவைகளையும் மனதில் வைத்துச் செயல்பட்டார்; அவர்கள் மிக மும்முரமாகப் பிரசங்கித்துக் களைத்துப்போய் இருந்தபோது ஓய்வெடுப்பதற்கும்கூட ஏற்பாடுகள் செய்தார். (மாற்கு 6:30-32) கவலை நம்மை உருக்குகையில், இப்போது பரலோகத்தில் ராஜாவாக இருக்கும் இயேசு நம்மீது கரிசனையையும் அனுதாபத்தையும் காட்டுவார் என்பதில் நாம் நிச்சயமாய் இருக்கலாம். அவர் நம்மீது இரக்கப்பட்டு ‘தக்க சமயத்தில் உதவி’ அளிப்பார்.—எபிரெயர் 2:17, 18; 4:16.

மனம்விட்டுப் பேசுவதன் முக்கியத்துவம்

கவலையைக் குறைக்க மிக முக்கியமாகச் செய்ய வேண்டிய காரியங்களில் ஒன்று மனம்விட்டுப் பேசுவதாகும். “மனம்விட்டுப் பேசவில்லை என்றால் திட்டங்கள் தோல்வியடையும்; ஆலோசனை சொல்பவர்கள் நிறையப் பேர் இருந்தால் அத்திட்டங்கள் வெற்றியடையும்” என்று பைபிள் கற்பிக்கிறது. (நீதிமொழிகள் 15:22, NW) ஆகவே, மணத்துணையிடமோ நண்பரிடமோ சக பணியாளரிடமோ மனம்விட்டுப் பேசுவது கவலையைப் பெருமளவு குறைக்குமென அநேகர் அனுபவத்தில் சொல்கின்றனர்.

‘மனம்விட்டுப் பேச’ மிக முக்கியமான, பிரயோஜனமான, எளிதான ஒரு வழி கடவுளிடம் ஜெபிப்பதுதான். தவறாமல் ஜெபிப்பது, ‘எதைப் பற்றியும் கவலைப்படாமல்’ இருக்க உங்களுக்கு உதவும். எப்போதுமே ஜெபம் செய்வது ‘எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானத்தை’ அடைய உதவியிருப்பதாக அநேகர் சொல்கின்றனர். பைபிள் வாக்குறுதி அளிப்பதுபோல், அப்படிப்பட்டவர்களுடைய ‘இருதயமும் மனமும்’ பாதுகாக்கப்பட்டிருக்கிறது.—பிலிப்பியர் 4:6, 7; நீதிமொழிகள் 14:30.

கவலையைப் பற்றி ஒரு புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “ஒற்றை ஆளாக நின்று எல்லாவற்றையும் சமாளிக்க முயலுபவர்களைக் காட்டிலும் நண்பர்களை உடையவர்கள் கவலையை நன்றாகச் சமாளிக்கிறார்கள்; அதோடு, நல்ல மன ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள்.” உண்மையான கடவுளாகிய யெகோவாவின் வணக்கத்தார் அனுபவிக்கிற தோழமையைவிட சிறந்த தோழமையை வேறு எங்கும் காண முடியாது. பைபிள் அறிவுறுத்துகிறபடி, அவர்கள் தவறாமல் ஒன்றுகூடிவந்து ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்துகிறார்கள். (எபிரெயர் 10:24, 25) அப்படிக் கூடிவருகிறவர்களில் ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “சில சமயம் நான் நீண்ட நேரத்திற்கு வேலை செய்ய வேண்டியிருக்கிறது; அதனால், பயங்கர மன அழுத்தம் ஏற்படுகிறது; ஆனால், சபைக் கூட்டத்திற்குப் போய்விட்டால் போதும், என் மனதில் இருக்கிற பாரமெல்லாம் குறைந்து, புதுத்தெம்பு கிடைத்துவிடும்.”

கவலையைக் குறைக்க நகைச்சுவை உணர்வுக்கு இருக்கிற வலிமையை நாம் குறைவாக எடைபோடக் கூடாது. “அழுவதற்கு ஒரு காலமுண்டு, சிரிப்பதற்கும் ஒரு காலமுண்டு” என்று பிரசங்கி 3:4 (ஈஸி டு ரீட் வர்ஷன்) சொல்கிறது. சிரிப்பது புத்துணர்ச்சியை மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் அளிக்கிறது; இதற்கான காரணத்தை ஒரு மருத்துவர் இவ்வாறு சொல்கிறார்: “நாம் சிரிக்கும்போது நம்முடைய உடல் எண்டார்ஃபினைச் சுரக்கிறது; அதோடு, அட்ரினலின் உற்பத்தியைக் குறைக்கிறது.” ஒரு மனைவி இவ்வாறு குறிப்பிட்டார்: “மிகவும் வேதனையான சூழ்நிலையிலும்கூட என்னுடைய கணவர் நகைச்சுவை உணர்வை வெளிக்காட்டுவார்; வேதனையைச் சமாளிக்க இது ரொம்ப உதவியாக இருந்திருக்கிறது.”

கவலையைக் குறைக்கும் குணங்கள்

சில குணங்களை வளர்க்கும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது; இந்தக் குணங்கள் கவலையைக் குறைக்கப் பெரிதும் உதவும். இவற்றுள் “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, கருணை, நல்மனம், விசுவாசம், சாந்தம், சுயக்கட்டுப்பாடு” ஆகியவை அடங்கும்; இவையெல்லாம் ‘கடவுளுடைய சக்தியினால் பிறப்பிக்கப்படும் குணங்கள்.’ மேலும், “மனக்கசப்பையும், சினத்தையும், கடுங்கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும்” தவிர்க்கும்படி பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. அதோடு, “ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள்; ஒருவரையொருவர் தாராளமாக மன்னியுங்கள்” என்று அது சொல்கிறது.—கலாத்தியர் 5:22, 23; எபேசியர் 4:31, 32.

குறிப்பாக இன்றைய உலகில், இப்படிப்பட்ட பைபிள் போதனைகளைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை ஒரு மருத்துவர் விளக்குகிறார். “மக்களிடம் மரியாதையாக நடந்துகொள்வது கவலையைப் போக்கும் சிறந்த நிவாரணி” என்று சொல்கிறார். தன்னடக்கத்தை வளர்த்துக்கொள்ளவும் பைபிள் நமக்கு உதவுகிறது; திறமைகள் இருந்தாலும் நிறைகுடம் போல் தழும்பாமல் இருப்பதே தன்னடக்கமாகும்.—மீகா 6:8.

உடல், உள்ளம், உணர்ச்சி சம்பந்தமாக நமக்கு வரம்புகள் இருப்பதை நாம் தாழ்மையாக ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார்; நினைப்பதை எல்லாம் நம்மால் செய்ய முடியாது என்பதையும் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நம்மால் செய்ய முடியாததை யாராவது செய்யச் சொல்லுகையில் மறுப்புத் தெரிவிப்பது கடினமாக இருக்கலாம்; என்றாலும், எப்போது, எப்படி மறுப்புத் தெரிவிப்பது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

பைபிளின் அடிப்படையில் மேலே சொல்லப்பட்ட ஆலோசனைகளையெல்லாம் கடைப்பிடித்தால் நம் கவலைகள் பஞ்சாகப் பறந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. உண்மை என்னவென்றால், கடவுளுடைய வணக்கத்தாரைப் பிசாசாகிய சாத்தான் குறி வைக்கிறான்; அவர்களைக் கவலையில் ஆழ்த்திவிட்டால் உண்மை வணக்கத்தை விட்டுவிடுவார்கள் என்பதை நிரூபிக்க அவன் முயற்சி செய்கிறான். (வெளிப்படுத்துதல் 12:17) இருந்தாலும், நாம் பார்த்தபடி, கவலையைக் குறைக்கவும் சமாளிக்கவும் தேவையான காலத்திற்கேற்ற உதவிகளை அநேக வழிகளில் கடவுள் நமக்கு அளிக்கிறார். * (g10-E 06)

[அடிக்குறிப்புகள்]

^ உங்கள் கவலை ரொம்பக் காலத்திற்கு நீடிக்கிறது என்றாலோ, உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிற அளவுக்குக் கடுமையாக இருக்கிறது என்றாலோ சிகிச்சைக்காக நீங்கள் ஒரு மருத்துவரைச் சந்திப்பது நல்லது.

^ கவலையைச் சமாளிக்க உதவுகிற கூடுதல் தகவலுக்கு, ஆங்கில விழித்தெழு!-வின் பிப்ரவரி 8, 2005-ம் இதழில் “கவலையிலிருந்து நிவாரணம்!” என்ற தொடர் கட்டுரையையும், பிப்ரவரி 8, 2001-ம் இதழில் “இன்றைய அவசரகதியான வாழ்க்கையைச் சமாளித்தல்” என்ற கட்டுரையையும் காண்க.

[பக்கம் 27-ன் பெட்டி]

கவலையைக் குறைக்க சில வழிகள்

● நீங்களும் மற்றவர்களும் பரிபூரணமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். —பிரசங்கி 7:16.

● ஒவ்வொரு காரியத்திற்கும் அதற்குரிய முக்கியத்துவத்தைக் கொடுங்கள். —பிலிப்பியர் 1:10, 11.

● தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். —1 தீமோத்தேயு 4:8.

● யெகோவாவின் படைப்புகளை ரசித்து மகிழுங்கள். —சங்கீதம் 92:4, 5.

● தினமும் கொஞ்ச நேரத்தைத் தனியாகச் செலவிடுங்கள். —மத்தேயு 14:23.

● நன்றாக ஓய்வெடுங்கள், நன்றாகத் தூங்குங்கள்.—பிரசங்கி 4:6, NW.

[பக்கம் 25-ன் படம்]

கவலையைக் குறைப்பதற்கு மனம்விட்டுப் பேசுவது ரொம்ப முக்கியம்

[பக்கம் 25-ன் படம்]

தெய்வீகக் குணங்களை வளர்த்துக்கொள்வது கவலையைக் குறைக்க உதவும்