Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இருப்பதை வைத்து வாழ்க்கை ஓட்டுவது எப்படி?

இருப்பதை வைத்து வாழ்க்கை ஓட்டுவது எப்படி?

இருப்பதை வைத்து வாழ்க்கை ஓட்டுவது எப்படி?

இருப்பதை வைத்து வாழ்க்கை ஓட்ட கவனமாகத் திட்டம் போட வேண்டும். இதன் அவசியத்தை இயேசு வலியுறுத்தினார். “உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட விரும்பினால், அதைக் கட்டி முடிக்கப் போதுமான வசதி தனக்கு இருக்கிறதா என்று முதலில் உட்கார்ந்து செலவைக் கணக்கிட்டுப் பார்க்காமல் இருப்பானா?” என்று அவர் கேட்டார். (லூக்கா 14:28, 29) இந்த நியமத்தின்படி, நீங்கள் ‘செலவைக் கணக்கிட்டுப் பார்த்தால்,’ இருப்பதை வைத்து வாழ்க்கை ஓட்ட முடியும்; இதற்கு நீங்கள் ஒரு பட்ஜெட்டைப் போட வேண்டும். இதை எப்படிச் செய்யலாம்? இப்படிச் செய்து பாருங்கள்:

உங்களுக்குக் கிடைக்கும் பணத்தில் தற்போதைய செலவுகளுக்கும் எதிர்காலச் செலவுகளுக்கும் தேவையான தொகையைத் தனித்தனியாக ஒதுக்கி வையுங்கள். ( பக்கம் 8-ல் உள்ள பெட்டியைக் காண்க.) இப்படி, செலவுகளை நீங்கள் கணக்கு வைத்துக்கொண்டால் எதற்கெல்லாம் உங்கள் பணத்தைச் செலவழிக்கிறீர்கள், தேவை இல்லாததற்கு எவ்வளவு செலவழிக்கிறீர்கள் என்பவற்றைத் தெரிந்துகொள்ள முடியும். இதன் மூலமாக, எப்படியெல்லாம் உங்கள் செலவைக் குறைக்கலாம் என்று நீங்கள் தீர்மானிக்க முடியும்.

உங்களுக்குப் பலன் தருகிற பட்ஜெட்டைப் போட வேண்டும் என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளைக் கடைப்பிடியுங்கள்.

விவேகமாக ‘ஷாப்பிங்’ செய்யுங்கள்

ராகுல் வேலையை இழந்தபோது, அவருடைய மனைவி ப்ரியா, ஷாப்பிங் செய்யும் முறையை மாற்றிக்கொண்டார். “தள்ளுபடி கூப்பன்கள் கிடைக்குமா என்று பார்ப்பேன்; எந்த மளிகைக்கடையில் மலிவு விலையில் பொருள்கள் கிடைக்கும் என்று பார்த்து வாங்குவேன்” என அவர் சொல்கிறார். இதோ, வேறு சில ஆலோசனைகள்:

அந்த வாரத்தில் மலிவு விலையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு சமைப்பதற்குத் திட்டமிடுங்கள்.

‘இன்ஸ்டன்ட்’ உணவுகளை விலைகொடுத்து வாங்காதீர்கள்; உணவுப் பதார்த்தங்களை வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடுங்கள்.

மலிவு விலையிலோ குறிப்பிட்ட சமயத்திலோ கிடைக்கும் பொருள்களை அதிகமாகவே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

சீக்கிரத்தில் கெட்டுப்போகும் பொருள்களை அளவுக்கு அதிகமாக வாங்கி வைக்காதீர்கள். மற்ற பொருள்களை மொத்தமாக வாங்கி வையுங்கள்.

கம்பெனிகளுடைய நேரடி விற்பனையில் துணிமணிகள் வாங்கி செலவை மிச்சப்படுத்துங்கள்.

பொருள்கள் எந்த இடங்களில் மலிவாகக் கிடைக்குமோ அங்கு போய் வாங்குவது லாபகரமாக இருந்தால், அதைச் செய்யுங்கள்.

அடிக்கடி ஷாப்பிங் செய்வதைத் தவிருங்கள். *

எழுதி வையுங்கள்

“ஒரு பட்ஜெட் எங்களுக்குக் கட்டாயம் தேவையாக இருந்தது; ஆகவே, உடனடியாக என்னென்ன செலவுகள் இருக்கின்றன, அந்த மாதம் முழுவதும் ஆகும் செலவுகளுக்கு கையில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்பதையெல்லாம் எழுதி வைத்துக்கொண்டோம்” என்கிறார் தாமஸ். அவருடைய மனைவி ஆஷா இவ்வாறு சொல்கிறார்: “கடைவீதிக்குப் போனால் எவ்வளவு செலவு செய்ய வேண்டுமென்று எனக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. வீட்டுக்கோ குழந்தைகளுக்கோ ஏதாவது வாங்க வேண்டியிருந்தால், நான் பட்ஜெட்டைப் பார்ப்பேன்; ‘இப்போது முடியாது, அடுத்த மாதம்தான் வாங்க வேண்டும்’ என்று நினைத்துக் கொள்வேன். பட்ஜெட் வைத்திருந்ததுதான் எனக்குக் கைகொடுத்தது.”

வாங்குவதற்குமுன் யோசியுங்கள்

பொருட்களை வாங்கும் முன் உங்களை நீங்களே இவ்வாறு கேட்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்: ‘உண்மையிலேயே இது எனக்குத் தேவையா? என்னிடம் இருப்பது உபயோகிக்க முடியாத அளவிற்குப் பழையதாகிவிட்டது என்பதற்காக இதை வாங்க நினைக்கிறேனா, அல்லது புதியது வேண்டும் என்பதற்காக இதை வாங்க நினைக்கிறேனா?’ எப்போதாவது உபயோகிக்கிற பொருளை நீங்கள் பணம் கொடுத்து வாங்குவதற்குப் பதிலாக வாடகைக்கு எடுத்துக்கொள்ள முடியுமா? அல்லது, அடிக்கடி உபயோகிக்கிற பொருளை நீங்கள் வாங்க நினைத்தால், நல்ல நிலையில் இருக்கும் பழைய பொருளை வாங்க முடியுமா?

மேலே சொல்லப்பட்டுள்ள சில விஷயங்கள் உங்களுக்கு அற்பமாகத் தெரிந்தாலும், எல்லாவற்றையும் சேர்த்து செய்யும்போது பலன் கிடைப்பது உறுதி! சின்னச் சின்ன செலவுகளில் நீங்கள் பணத்தை மிச்சப்படுத்தப் பழகிக்கொண்டால், பெரிய செலவுகளிலும் அதையே செய்வீர்கள்.

செலவுகளைக் குறைக்க வழிதேடுங்கள்

அநாவசியமான செலவுகளைக் குறைக்க வழிதேடுங்கள். உதாரணத்திற்கு, “எங்களிடம் இரண்டு கார்கள் இருந்தன. அதனால், ஒன்றை உடனடியாக விற்றுவிட்டோம், மற்றொன்றில் எல்லாரும் சேர்ந்து பயணம் செய்தோம். இல்லையென்றால், மற்றவர்களுடைய காரில் பயணம் செய்தோம். பெட்ரோல் செலவை மிச்சப்படுத்த, ஒரே சமயத்திலேயே எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வர முயன்றோம். எது தேவையோ அதற்கு மட்டுமே பணத்தைச் செலவழிக்கத் தீர்மானமாயிருந்தோம்” என்று ஆஷா சொல்கிறார். செலவுகளைக் குறைக்க வேறு சில வழிகள் இதோ:

உங்கள் வீட்டிலேயே ஒரு காய்கறித் தோட்டம் போடுங்கள்.

வீட்டு உபயோகப் பொருள்களை, அவற்றின் கையேடுகளில் சொல்லப்பட்டிருப்பதுபோல் பயன்படுத்துங்கள். அப்போது அவை நிறையக் காலத்திற்கு உழைக்கும்.

வீட்டுக்கு வந்தவுடன் உங்களுடைய நல்ல உடைகளை மாற்றிவிடுங்கள். அப்படிச் செய்தால், உங்களுடைய உடைகள் நிறையக் காலத்துக்குப் புதியதுபோல் இருக்கும்.

உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள்

வேலையை இழந்துபோகும் அநேகர், யாருடனும் ஒட்டாமல் தங்களையே தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், தாமஸ் அவ்வாறு செய்யவில்லை. அவருடைய வளர்ந்த பிள்ளைகள் உட்பட குடும்பத்தார் எல்லாரும் அவருக்கு அனுதாபத்தையும் ஆதரவையும் காட்டினார்கள். “நாங்கள் ஒருவருக்கொருவர் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள பழகிக்கொண்டோம்; இப்படிச் செய்ததால் நாங்கள் ஒருவரோடொருவர் நெருக்கமானோம். ‘எங்கள் பிரச்சினையைச் சேர்ந்து சமாளிக்க வேண்டும்’ என்று எல்லாரும் உணர்ந்தோம்” என அவர் சொல்கிறார்.

தாமஸ், யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் சக கிறிஸ்தவர்களைத் தவறாமல் சந்தித்தார்; இதுவும் அவரைப் பலப்படுத்தியது. “கிறிஸ்தவக் கூட்டங்களுக்குப் போய் வந்த போதெல்லாம் நான் உற்சாகமாக உணர்ந்தேன். அங்கிருந்த எல்லோரும் எங்கள்மீது அன்பையும் அக்கறையையும் காட்டினார்கள். அவர்கள் எங்களுக்கு உதவி செய்தார்கள், ஆறுதல் அளித்தார்கள்; இதனால் நாங்கள் தனியாக இல்லை என்பதை உணர்ந்தோம்” என்று அவர் சொல்கிறார்.—யோவான் 13:35.

விசுவாசத்தினால் கிடைக்கும் நன்மைகள்

வேலை இழந்ததால் லட்சக்கணக்கானோர் மனங்கசந்து போயிருக்கின்றனர்; தங்களுடைய முதலாளிகள் தங்களுக்குத் துரோகம் செய்துவிட்டதாக நினைக்கின்றனர். முன்னால் குறிப்பிடப்பட்ட ராகுல், இரண்டு தடவை, அதாவது ஒருமுறை தன்னுடைய சொந்த நாடான பெருவிலும், பின்பு நியு யார்க் நகரத்திலும் திடீரென வேலை இழந்தார்; அப்போது அவருடைய இதயம் சுக்குநூறானது. இரண்டாவது முறை வேலையிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, “இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் இல்லை” என்று அவர் நினைத்தார். பின்பு, பல மாதங்களாக வேலை தேடியும் அவருக்குக் கிடைக்கவில்லை. இதைச் சமாளிக்க எது அவருக்கு உதவியது? “நான் கடவுளோடு ஒரு நெருக்கமான நட்பை வளர்த்துக் கொண்டேன்; அதோடு, அவரை நம்பியிருந்தால் மட்டும்தான் கவலையில்லாமல் பாதுகாப்பாக வாழ முடியும் என்று புரிந்துகொண்டேன்” என்கிறார் ராகுல்.

ராகுல் ஒரு யெகோவாவின் சாட்சி; அவர் பைபிளைப் படித்ததால், பின்வருமாறு வாக்குறுதி அளித்திருக்கும் அக்கறையுள்ள பரலோகத் தகப்பன்மீது பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளத் தூண்டப்பட்டார்: “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்.” (எபிரெயர் 13:5) இருந்தாலும், ராகுலுக்கு ஒவ்வொரு நாளையும் ஓட்டுவதே மிகவும் கஷ்டமாக இருந்தது. “எங்களுடைய அடிப்படைத் தேவைகளுக்காக எப்பொழுதும் ஜெபம் செய்தோம்; அதோடு, கடவுள் எங்களுக்குக் கொடுத்ததில் திருப்தியாக இருக்கக் கற்றுக்கொண்டோம்” என்கிறார் அவர். அவருடைய மனைவி ப்ரியா இவ்வாறு சொல்கிறார்: “என் கணவருக்கு ஒரு வேலை கிடைக்குமா கிடைக்காதா என்று நினைத்து சில நேரங்களில் ரொம்பக் கவலைப்பட்டேன். ஆனால், ஒவ்வொரு நாளும் எங்களுக்கு வேண்டியதைக் கொடுத்து எங்களுடைய ஜெபத்திற்கு யெகோவா பதிலளித்தார். உண்மையில், முன்பிருந்த அளவிற்கு எங்களிடம் வசதி இல்லாவிட்டாலும்கூட எங்களுடைய வாழ்க்கை சிக்கலில்லாமல் இருந்தது.”

தாமஸும் ஒரு யெகோவாவின் சாட்சிதான்; பைபிளைப் படித்தது அவருடைய சூழ்நிலையைச் சரியான விதத்தில் கையாள அவருக்குப் பெரிதும் கைகொடுத்தது. “சில சமயங்களில், ஒரு வேலையோ, அந்தஸ்தோ, வங்கியில் இருக்கும் சேமிப்போ பாதுகாப்பைத் தருமென்று நாம் நினைக்கலாம். ஆனால், யெகோவா ஒருவரால் மட்டும்தான் பாதுகாப்பைத் தர முடியும் என்றும், அவருடன் நமக்கிருக்கும் நட்பே உண்மையான பாதுகாப்பைத் தரும் என்றும் நான் கற்றுக்கொண்டேன்” என்று அவர் சொல்கிறார். * (g10-E 07)

[அடிக்குறிப்பு]

^ ஒரு ஆய்வின்படி, ஷாப்பிங் செய்பவர்கள் கிட்டத்தட்ட 60 சதவீதம் பொருள்களைத் திட்டமிடாமலேயே வாங்குகின்றனர்.

^ பணத்தை நிர்வகிப்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, இதன் துணைப் பத்திரிகையான காவற்கோபுரம், ஜனவரி-மார்ச் 2010, பக்கங்கள் 18-20-ஐக் காண்க.

[பக்கம் 9-ன் சிறுகுறிப்பு]

“எங்களுடைய அடிப்படைத் தேவைகளுக்காக எப்பொழுதும் ஜெபம் செய்தோம்; அதோடு, கடவுள் எங்களுக்குக் கொடுத்ததில் திருப்தியாக இருக்கக் கற்றுக்கொண்டோம்”

[பக்கம் 8-ன் பெட்டி/ அட்டவணை]

 பட்ஜெட் போடுவது எப்படி?

(1) முக்கியமான மாதாந்திரச் செலவுகளை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு மாதம் முழுவதும் உணவுக்காக, வீட்டுக்காக (வாடகை அல்லது கடன்) ஆகும் செலவுகள், தண்ணீர், மின்சாரம் மற்றும் கேஸ் கட்டணங்கள், காருக்கான செலவுகள், இதர செலவுகள் ஆகியவற்றை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். வருடத்திற்கு ஒருமுறை செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கான தொகையை 12-ஆல் வகுத்து, மாதாமாதம் எவ்வளவு பணம் எடுத்து வைக்க வேண்டும் என்பதை எழுதிக்கொள்ளுங்கள்.

(2) செலவுகளைத் தனித்தனிப் பிரிவுகளாக எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதில் உணவு, வீடு, வாகனம், போக்குவரத்து போன்ற செலவுகள் அடங்கும்.

(3) ஒவ்வொரு மாதமும் அந்தந்தச் செலவுகளுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதைக் கணக்குப்போட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வருடமும் செலுத்த வேண்டிய கட்டணங்களுக்காக மாதாமாதம் எவ்வளவு பணம் ஒதுக்க வேண்டும் என்பதைக் கணக்குப்போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

(4) உங்கள் வீட்டிலுள்ளவர்களுடைய மொத்த வருமானத்தை (பிடித்தம் போக கிடைக்கும் நிகர வருமானத்தை) எழுதி வையுங்கள். நீங்கள் செலுத்த வேண்டிய வரிகளையும் மற்ற கட்டணங்களையும் கழித்துக்கொள்ளுங்கள். இந்தத் தொகையை மொத்தச் செலவுகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

(5) மாதாமாதம் ஒவ்வொரு செலவுக்கும் தேவைப்படுகிற பணத்தை ஒதுக்கி வையுங்கள். நீங்கள் ரொக்கப் பணத்தை ஒதுக்குகிறீர்கள் என்றால், தனித்தனி கவரில் அந்தந்தச் செலவை எழுதி வைப்பது நல்லது. பிறகு, மாதாமாதம் அந்தந்தக் கவரில் அந்தந்தச் செலவுக்கான பணத்தைப் போட்டு வையுங்கள்.

எச்சரிக்கை: நீங்கள் ‘கிரெடிட் கார்டை’ பயன்படுத்தினால் பொறுப்பாகப் பயன்படுத்துங்கள்! ‘இன்று வாங்குங்கள், நாளை செலுத்துங்கள்’ என்ற வசீகர வார்த்தைகளில் மயங்கி அநேகர் தங்களுடைய பட்ஜெட்டையே பாழாக்கியிருக்கிறார்கள்.

[அட்டவணை]

(For fully formatted text, see publication)

மாதாந்திர வரவு

மாதாந்திர வருமானம் ரூ. ..... மற்றவை ரூ.

வீட்டிலுள்ள

மற்றவர்களுடைய வருமானம் ரூ. ..... மொத்த வரவு

ரூ. .....

பட்ஜெட்டிலுள்ள உண்மையில் செய்த

மாதாந்திரச் செலவுகள் மாதாந்திரச் செலவுகள்

ரூ. வாடகை அல்லது கடன் ரூ.

ரூ. காப்பீடு/வரிகள் ரூ.

ரூ. தண்ணீர், மின்சாரம், கேஸ் போன்ற கட்டணங்கள் ரூ.

ரூ. வாகனங்கள் ரூ.

ரூ. பொழுதுபோக்கு/போக்குவரத்து ரூ.

ரூ. தொலைபேசி ரூ.

ரூ. உணவு ரூ.

ரூ. மற்றவை ரூ.

பட்ஜெட்டிலுள்ள மொத்தச் செலவு உண்மையில் செய்த மொத்தச் செலவு

ரூ. ரூ.

வரவையும் செலவையும் ஒப்பிடுங்கள்

மாதாந்திர வரவு ரூ. .....

கழித்தல்− மீதம்

மாதாந்திரச் செலவுகள் ரூ. ..... ரூ.