Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெற்றோரே, பிள்ளைகளுக்கு வழிகாட்டுங்கள்

பெற்றோரே, பிள்ளைகளுக்கு வழிகாட்டுங்கள்

பெற்றோரே, பிள்ளைகளுக்கு வழிகாட்டுங்கள்

“முன்பெல்லாம், பிள்ளைகள் அதிகமாக டிவி பார்ப்பதைக் குறித்து மட்டுமே நாம் கவலைப்பட வேண்டியிருந்தது. இப்போதோ வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர், செல்ஃபோன் என நிறைய வந்துவிட்டன. இதனால், இளம் பிள்ளைகள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள், அவற்றிற்கு அடிமையாகி விட்டதுபோல் நடந்துகொள்ள ஆரம்பிக்கிறார்கள். . . . எந்நேரமும் எதையாவது கேட்டுக் கொண்டிருப்பதற்கும் பார்த்துக் கொண்டிருப்பதற்கும் அவர்களுடைய மூளை பழக்கப்பட்டுவிடுகிறது. அப்படிப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் எதுவும் இல்லாதபோது என்ன செய்வதென்றே தெரியாமல் அவர்கள் தவிக்கிறார்கள்.’​—⁠மாலி மேன், எம்.டி.

இன்டர்நெட் போன்ற தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் முன்னேறிக்கொண்டே போகும் ஓர் உலகில் நாம் வாழ்ந்துவருகிறோம். அநேக இளைஞர்களால், சிறிய மீடியா ப்ளேயரோ செல்ஃபோனோ இல்லாமல் வெளியே செல்ல முடிவதில்லை. இவையும் பிற சாதனங்களும் மிகச் சக்திவாய்ந்ததாகவும் பல்வகை பயனுள்ளதாகவும் மலிவானதாகவும் ஆகிவருவதால் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் புரட்சி இன்னும் தீவிரமடையலாம்; அதனால், பிள்ளைகளைக் கண்காணிப்பது, பயிற்றுவிப்பது, சிட்சிப்பது ஆகிய விஷயங்களில் பெற்றோர் இன்னுமதிக சவால்களைச் சந்திக்கலாம்.

பெற்றோர் இரண்டு முக்கியக் காரியங்களைச் செய்தால் இந்தச் சவால்களைச் சமாளிக்க முடியும். முதலாவதாக, பைபிளில் நீதிமொழிகள் 22:15-லுள்ள உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்: “பிள்ளையின் இதயத்தில் மடமை ஒட்டிக்கொண்டிருக்கும்; கண்டித்துத் திருத்தும் பிரம்பால் அதை அகற்றி விடலாம்.” (பொது மொழிபெயர்ப்பு) இரண்டாவதாக, இன்றைய தொழில்நுட்பம் பிள்ளைகள்மீது நல்ல விதத்திலோ தீய விதத்திலோ செல்வாக்கு செலுத்த முடியும் என்பதைப் புரிந்துகொண்டு, அது நல்ல விதத்தில் செல்வாக்கு செலுத்தும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

தளிர் பருவத்திலேயே துவங்குங்கள்!

அநேக வீடுகளில், பிள்ளைகளுக்குத் தெரிய வருகிற முதல் தொழில்நுட்ப சாதனம் டிவி ஆகும். சொல்லப்போனால், அது பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ளும் ‘ஆயாவாகவும்’ ஆகியிருக்கிறது. ஆனாலும், தளிர் பருவத்திலேயே டிவியைப் பார்ப்பதும் அதை அளவுக்கதிகமாகப் பார்ப்பதும் உடற்பயிற்சியில் ஆர்வம் குறைவதற்கும், நிஜத்திற்கும் கற்பனைக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் குழம்புவதற்கும், உணர்ச்சி ரீதியிலான பிரச்சினைகளை எதிர்ப்படுவதற்கும், பிற்பாடு வகுப்பில் கவனம் குறைவதற்கும் வழிவகுக்கலாம் என மனநல நிபுணர்கள் சிலர் நினைக்கிறார்கள். சில பிள்ளைகளுக்கு “கவனப் பற்றாக்குறை கோளாறு [ADD] அல்லது கவனப் பற்றாக்குறை மிகை இயக்கக் கோளாறு [ADHD] இருப்பதாகவோ, பதற்ற-சோர்வு மனநோய் இருப்பதாகவோகூட தவறாகக் கணிக்கப்படலாம்” என்கிறார் டாக்டர் மாலி மேன். ஆகவே, இரண்டு வயதுக்குட்பட்ட பிள்ளைகளை டிவி பக்கம் அண்டவிடக் கூடாது என சில நிபுணர்கள் ஆலோசனை தருகிறார்கள்.

“பிள்ளையின் ஆரம்ப வருடங்களில் நடக்கிற மிக முக்கியமான காரியம், பெற்றோருடன் அது வளர்த்துக்கொள்ளும் நெருங்கிய பந்தமாகும்” என்கிறார் குழந்தை மருத்துவத்திற்கான அமெரிக்கன் அகாடமியின் பிரதிநிதி டாக்டர் கென்னத் கின்ஸ்பர்க். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் பேசும்போதும் விளையாடும்போதும் அவர்களுக்கு வாசித்துக் காட்டும்போதும் அப்படிப்பட்ட நெருங்கிய பந்தம் உருவாகிறது. பிள்ளைகளுக்குத் தவறாமல் வாசித்துக் காட்டும்போது வாசிப்பதற்கான ஆசை அவர்களுக்கு வந்துவிடுகிறது என்பதை நிறையப் பெற்றோர் அறிந்திருக்கிறார்கள்; இந்த ஆசை, மற்றொரு மதிப்புமிக்க சொத்து.

கம்ப்யூட்டர்களையும் அதோடு சம்பந்தப்பட்ட தொழில்நுட்பங்களையும் பற்றி அறிந்துகொள்வது லட்சக்கணக்கான பிள்ளைகளுக்கு முக்கியமானதாக இருக்கலாம், ஏன், அத்தியாவசியமானதாகக்கூட இருக்கலாம். ஆனால், உங்களுடைய பிள்ளைகள் கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் கேம்ஸ், இன்டர்நெட் போன்றவற்றிலேயே மூழ்கிவிடுவதுபோல் தெரிந்தால், அவர்களுடைய ஆர்வத்தை வேறு பக்கமாய்த் திருப்புவது ஞானமானதாய் இருக்கலாம். அதை எப்படிச் செய்வது? வித்தியாசமான, சுவாரஸ்யமான, ஊக்கமூட்டுகிற ஏதாவதொரு பயனுள்ள காரியத்தை ஏன் கற்றுக்கொடுக்கக் கூடாது? உதாரணத்திற்கு, ஒரு கைவேலையை அல்லது இசைக் கருவியை ஏன் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கக் கூடாது?

இப்படிப்பட்ட பயனுள்ள காரியம் அவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிற மாற்றமாக மட்டுமே இருக்காது. பொறுமை, மனவுறுதி, சுயக்கட்டுப்பாடு, படைப்பாற்றல் போன்றவற்றை வளர்த்துக்கொள்ளவும் அது அவர்களுக்கு உதவலாம்; பிரச்சினைகளை அவ்வளவு சுலபமாகச் சமாளிக்க முடியாத இந்தக் காலத்தில், வாழ்க்கையில் முன்னேறுவதற்கு இப்பண்புகள் அவர்களுக்கு அத்தியாவசியம்.

பிள்ளைகளுக்கு ‘ஞானமும் சிந்திக்கும் திறனும்’ தேவை

பெரியவர்களும் சரி பிள்ளைகளும் சரி, “சிந்திக்கும் திறனை” வளர்த்துக்கொள்ளும்படி பைபிள் ஊக்குவிக்கிறது. (ரோமர் 12:1; நீதிமொழிகள் 1:8, 9; 3:21, NW) அப்படிச் செய்வது, எது சரி எது தவறு எனக் கண்டறிவதற்கு மட்டுமல்ல, எது ஞானமானது எது ஞானமற்றது எனக் கண்டறிவதற்கும் நமக்கு உதவுகிறது. உதாரணத்திற்கு, மணிக்கணக்காக உட்கார்ந்து கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதோ டிவி பார்ப்பதோ பெரிய குற்றம் அல்ல, ஆனால் அது ஞானமானதா? அவ்வாறே, அதிநவீன சாதனங்களையோ கம்ப்யூட்டர் புரோகிராம்களையோ வாங்குவது பெரிய குற்றம் அல்ல, ஆனால் அது ஞானமானதா? அப்படியானால், தொழில்நுட்பம் சம்பந்தமாக ஞானமாய்த் தீர்மானங்கள் எடுக்க உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?

ஆபத்துகளை விளக்குங்கள். தொழில்நுட்பத்தையும் இன்டர்நெட்டையும் பிள்ளைகள் எளிதில் கற்றுக்கொள்ளலாம்; ஆனால், ஞானமும் அனுபவமும் இல்லாததால் அவர்கள் வெகுளித்தனமாக இருக்கலாம். ஆகவே, என்னென்ன ஆபத்துகளைத் தவிர்க்க வேண்டும், அவற்றை எப்படித் தவிர்க்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்களுக்கு விளக்குங்கள். உதாரணத்திற்கு, ஆன்லைன் சமூக வலைப்பின்னலை எடுத்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட வலைப்பின்னலைப் பயன்படுத்தி இளைஞர்கள் தங்களுடைய குணாம்சத்தைத் தெரிவிக்கவும் மற்ற இளைஞர்களோடு அறிமுகமாகவும் முடியும் என்பது உண்மைதான்; ஆனால், காமுகர்களுக்கும் கெட்ட எண்ணமுள்ள மற்றவர்களுக்கும் இப்படிப்பட்ட தளங்கள் “கடைவீதியாக” இருக்கின்றன. * (1 கொரிந்தியர் 15:33) ஆகவே விவேகமுள்ள பெற்றோர், ஆன்லைனில் சொந்த விஷயங்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்கக் கூடாதென தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்துகிறார்கள். *

உண்மைதான், யாருடைய தலையீடும் இல்லாமல் சுதந்திரமாய் இருக்க பிள்ளைகளுக்கு உரிமை உள்ளது; இது, அவர்களுடைய முதிர்ச்சியைப் பொறுத்தது. ஆனால், ஒரு பெற்றோராக உங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதற்கும் கண்காணிப்பதற்குமான பொறுப்பைக் கடவுள் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். (நீதிமொழிகள் 22:6; எபேசியர் 6:4) அதன்படி நீங்கள் அவர்கள்மீது அக்கறை காண்பிக்கும்போது, தேவையில்லாமல் தங்கள் விஷயத்தில் தலையிடுவதாக அவர்கள் நினைக்க மாட்டார்கள்; மாறாக, சுயநலமற்ற அன்பு காட்டுவதாகவே நினைப்பார்கள்.

“ஆனால், பிள்ளைகள் பயன்படுத்துகிற சாதனங்களைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாவிட்டால் அவர்களுக்கு நான் எப்படி உதவுவது?” என நீங்கள் கேட்கலாம். அப்படியானால், சில அடிப்படை விஷயங்களையாவது நீங்கள் கற்றுக்கொள்ளலாம், அல்லவா? 90 வயதுக்கும் மேலான மெல்பா 80 வயதுக்குப் பிறகுதான் கம்ப்யூட்டரையே தொட்டாராம். “அதை முதலில் உபயோகிக்க முயன்றபோது, ஜன்னல் வழியாக வீசி எறிந்துவிடலாம் போல் இருந்தது. சில மாதங்களுக்குப் பிறகு, அதை எப்படிப் பயன்படுத்துவதென புரிந்துவிட்டது; இப்போது, ஈ-மெயிலும் மற்ற புரோகிராம்களும் எனக்கு அத்துப்படி” என்கிறார் அவர்.

உங்களுடைய பிள்ளை தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவதில் தகுந்த வரம்புகள் வையுங்கள். உங்கள் பிள்ளை தனிமையில் மணிக்கணக்காக டிவி பார்த்துக்கொண்டு, இன்டர்நெட்டை அலசிக்கொண்டு, அல்லது கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடிக்கொண்டு இருந்தால், அப்படிப்பட்ட சாதனங்களை எந்தெந்த நேரங்களிலும் எந்தெந்த இடங்களிலும் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறையை வகுக்கலாம், அல்லவா? இப்படிச் செய்வது, “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு” என்ற பைபிள் நியமத்தைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை உங்கள் பிள்ளை புரிந்துகொள்வதற்கு உதவலாம். அப்படியென்றால், குடும்பத்தாருக்காக, நண்பர்களுக்காக, வீட்டுப்பாடத்திற்காக, சாப்பிடுவதற்காக, உடற்பயிற்சிக்காக என ஒவ்வொன்றிற்கும் ஒரு நேரம் உண்டு. (பிரசங்கி 3:1) நியாயமான விதிமுறைகளை வைத்து அவற்றை எப்போதும் கடைப்பிடிப்பது, குடும்பம் கட்டுக்கோப்பாக இருக்க உதவுகிறது; அதோடு, பண்பாடுடன் நடந்துகொள்ளவும் மற்றவர்களிடம் கரிசனை காட்டவும் எல்லாரிடமும் நன்றாகப் பழகவும் பிள்ளைகளுக்கு உதவுகிறது. (g09-E 11)

[அடிக்குறிப்புகள்]

^ விழித்தெழு! பத்திரிகையின் ஜனவரி 2009 இதழில் “ஆன்லைனில் பிள்ளைகள்—பெற்றோருடைய கவனத்திற்கு” என்ற கட்டுரையை வாசிப்பது பெற்றோருக்குப் பயனுள்ளதாய் இருக்கும். ஆபாசம், வீடியோ கேம்ஸ், இன்டர்நெட் ஆகியவை சம்பந்தமாக மார்ச் மற்றும் டிசம்பர் 2007, ஜனவரி 2008 இதழ்களிலும் பயனுள்ள கட்டுரைகள் உள்ளன.

^ டீனேஜர்கள் சிலர் செல்ஃபோன் மூலமாகத் தங்களுடைய ஆபாசப் படங்களை நண்பர்களுக்கு அனுப்புகிறார்கள். இது, கீழ்த்தரமாக இருப்பதோடு மடத்தனமாகவும் இருக்கிறது; ஏனென்றால், இந்தப் படங்களை அவர்கள் என்ன நோக்கத்தோடு அனுப்பினாலும் பொதுவாக இவற்றை அவர்களுடைய நண்பர்கள் மற்றவர்களிடம் காட்டுகிறார்கள்.

[பக்கம் 17-ன் படம்]

பிள்ளைகள் பல்வேறு காரியங்களில் ஈடுபடுவது அறிவை வளர்த்துக்கொள்வதற்கும் பொறுமை, மனவுறுதி போன்ற குணங்களை வளர்த்துக்கொள்வதற்கும் அவசியம்