டூகன் பறவையின் அலகு
யாருடைய கைவண்ணம்?
டூகன் பறவையின் அலகு
◼ மத்திய அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் காணப்படும் டூகன் பறவைக்குச் சரியாகப் பறக்கத் தெரியாது; அது பொதுவாகத் தத்தித் தத்தியே செல்லும். டூகனின் சில இனங்கள் தவளையைப் போல் ‘கொர்கொர்’ என்று சத்தமிடும், ஆனால் அதைவிட உரக்கமாகச் சத்தமிடும். சொல்லப்போனால், காட்டுக்குள் ஒரு கிலோமீட்டருக்கு அப்பாலும் அதன் சத்தத்தைக் கேட்க முடியும். என்றாலும், டூகனின் அலகைப் பார்த்துத்தான் விஞ்ஞானிகள் வியந்துபோகிறார்கள்.
சிந்தனைக்கு: சில டூகன் பறவைகளின் அலகு அதன் உடல் நீளத்தில் மூன்றிலொரு பங்குக்கும் அதிகமாக இருக்கிறது. அது பார்ப்பதற்கு மிகவும் கனமானதாகத் தெரிந்தாலும் உண்மையில் லேசானது. “அதன் அலகின் மேற்பரப்பு, விரல் நகங்களிலும் தலைமுடியிலும் காணப்படுகிற கெரட்டின் என்ற பொருளால் ஆனது. . . . அதில், சின்னஞ்சிறிய அறுகோண தட்டுகள் பல, கூரை ஓடுகளைப் போல் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கின்றன” என மார்க் ஆன்ட்ரே மையர்ஸ் என்ற பொருள் அறிவியலாளர் சொல்கிறார்.
ஸ்பன்ஜ் கெட்டியாக இருந்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் டூகனுடைய அலகும் இருக்கும். அதனுடைய உட்புறத்தின் சில பகுதிகள் வெற்றிடங்களாக இருக்கின்றன, மற்ற பகுதிகளோ விட்டங்களாலும் சவ்வுகளாலும் நிறைந்திருக்கின்றன. இந்த வடிவமைப்பினால் டூகனுடைய அலகு மிக லேசாக இருக்கிறது, அதேசமயத்தில் மிக உறுதியாகவும் இருக்கிறது. “டூகனை ஓர் இயந்திரப் பொறியியல் மேதை என்றே சொல்லலாம்” என்கிறார் மையர்ஸ்.
டூகனுடைய அலகு இப்படி அருமையாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் எங்கேயாவது போய்ப் பயங்கரமாக மோதிக்கொண்டாலும் அதற்கு ஒன்றும் ஆவதில்லை. டூகனின் அலகு, விமானப் பொறியியல் வல்லுநர்களுக்கும் வாகனப் பொறியியல் வல்லுநர்களுக்கும் ஒரு ‘மாடலாக’ இருக்குமென விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். “காரின் பானல்கள் டூகனின் அலகைப் போலவே தயாரிக்கப்பட்டால் விபத்துகளின்போது ஓட்டுநருக்குப் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது” என்கிறார் மையர்ஸ்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? டூகனின் உறுதியான, ஆனால் லேசான அலகு ஏதோ தற்செயலாகத் தோன்றியதா? அல்லது ஒருவருடைய கைவண்ணமா? (g 1/09)
[பக்கம் 32-ன் படம்/படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
வெற்றிடங்கள்
ஸ்பன்ஜ் போன்ற பகுதி