Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆன்லைனில் பிள்ளைகள்—பெற்றோருடைய கவனத்திற்கு

ஆன்லைனில் பிள்ளைகள்—பெற்றோருடைய கவனத்திற்கு

ஆன்லைனில் பிள்ளைகள்​—⁠பெற்றோருடைய கவனத்திற்கு

ஒருகாலத்தில், எல்லாரும் பார்க்கிற இடத்தில் கம்ப்யூட்டரை வைத்தால் ஆபத்தான இணைய தளங்களுக்குள் (வெப் சைட்) பிள்ளைகள் நுழைய மாட்டார்கள் என்று கருதப்பட்டது. இந்த யோசனை இன்றும் வரவேற்கப்படுகிறது. அதேசமயத்தில் ஞானமுள்ள எந்தப் பெற்றோரும் பிள்ளைகளுடைய பெட்-ரூமில் இன்டர்நெட் கனெக்‍ஷன் கொடுக்க மாட்டார்கள். ஆனால், இவையெல்லாம் முற்றிலும் பிரச்சினையைத் தீர்த்துவிடாது. ஏனென்றால், இன்று வயர்லெஸ் கனெக்‍ஷன்கள் இருப்பதால் இளைஞர்கள் எங்கு போனாலும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும். சொல்லப்போனால், செல்ஃபோன்களில்கூட ஆன்லைன் கனெக்‍ஷன் இருக்கிறது. அதுமட்டுமா, ‘இன்டர்நெட் கஃபேக்களில்’ ஷாப்பிங் மால்களில், லைப்ரரிகளில் இன்டர்நெட் கனெக்‍ஷன் வந்துவிட்டது. இதுபோக இருக்கவே இருக்கிறது ஃபிரெண்ட் வீடு. இப்படித் திரும்பும் இடமெல்லாம் இன்டர்நெட் இருப்பதால், பிள்ளைகள் மிகச் சுலபமாக பெற்றோர் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு இன்டர்நெட்டில் பவனி வருகிறார்கள்.

இளசுகளைக் கவர்ந்திழுக்கும் சில வெப் சைட்டுகளையும் அவற்றின் ஆபத்துகளையும் இப்போது பார்ப்போம்.

ஈமெயில்

அது என்ன? எலக்ட்ரானிக் முறையில் தகவல்களை ‘டைப்செய்து’ அனுப்புவதே ஈமெயில் (மின் அஞ்சல்).

அதன் பயன்? குறைந்த செலவில் நண்பர்களோடும் குடும்பத்தினரோடும் சீக்கிரமாகத் தொடர்புகொள்ள முடியும்.

உங்கள் கவனத்திற்கு. கேட்காமலேயே வந்து குவியும் ஈமெயில்கள், அல்லது ஸ்பாம், உங்களுக்கு எரிச்சல் மட்டுமா ஊட்டுகின்றன, கூடவே ஆபத்துகளையும் கூட்டிக்கொண்டு வருகின்றன. பெரும்பாலும் இவற்றில் ஆபாசமான விஷயங்கள் இருக்கின்றன. சில சமயம் இந்த ஈமெயில்களுடன் ‘லிங்க்’குகளும் சேர்ந்து வரலாம். அவற்றைப் பார்ப்பவர்கள்​—⁠ஒருவேளை அப்பாவி பிள்ளைகள்​—⁠தங்களைப் பற்றிய தகவலை அனுப்பி வைக்க தூண்டப்படலாம். இவர்கள் அனுப்புகிற தகவலைத் திருடி யாராவது மோசடி செய்ய வாய்ப்பிருக்கிறது. ஈமெயில் அனுப்ப வேண்டாம் என்று சொல்லி நீங்கள் பதிலளிப்பதும் ஆபத்துதான். ஏனென்றால், அப்படிப் பதில் அனுப்பும்போதும் உங்களுக்கென்று ஓர் ஈமெயில் விலாசம் இருக்கிறதென்று தெரிந்துவிடும். இதனால், தேவையில்லாத ஈமெயில்கள் இன்னும் அதிகமாக வந்து குவியலாம்.

இணைய தளம்

அது என்ன? தனிநபர்கள் உட்பட கல்வி நிறுவனங்களும் வணிக நிறுவனங்களும் கம்ப்யூட்டரில் உருவாக்கி, தொகுத்து வைத்திருக்கும் பக்கங்கள்.

அதன் பயன்? இளவட்டங்கள் ஷாப்பிங் செய்ய, தகவல் அறிய, நண்பர்களுடன் பேச, விளையாட, பாட்டு கேட்க அல்லது அதை ‘டவுன்லோடு’ செய்ய.. இன்டர்நெட்டில் கோடிக்கணக்கான இணைய தளங்கள் இருக்கின்றன.

உங்கள் கவனத்திற்கு. இணையத்தில் “எல்லாவித” பேர்வழிகளும் சுற்றித்திரிகிறார்கள். அநேக இணைய தளங்கள் ஆபாசமான காட்சிகளை அப்பட்டமாகக் காட்டுகின்றன. வேறெதாவது வேலையாக நாம் இணையத்திற்குள் போனாலும் அப்படிப்பட்ட தளங்கள் தானாகத் திறந்துவிடும். உதாரணத்திற்கு, அமெரிக்காவில் சுற்றாய்வு செய்யப்பட்ட 8 முதல் 16 வயது இளைஞர்களில் 90 சதவீதத்தினர் ஆன்லைனில் ஹோம்-வர்க் செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராமல் ஆபாசக் காட்சிகள் எட்டிப் பார்த்ததாகக் கூறினார்கள்.

இளைஞர் பட்டாளம் சூதாட இணையத்தில் தனி தளங்களே உள்ளன. கனடா நாட்டில் 10, 11 கிரேடுகளில் படிக்கும் மாணவர்களிடம் சுற்றாய்வு நடத்தப்பட்டபோது அவர்களில் 4 பேரில் ஒருவர் இப்படிப்பட்ட இணைய தளங்களுக்கு விஜயம் செய்ததாகச் சொன்னார்கள். ஆன்லைன் சூதாட்டம் ஒருவரை சீக்கிரத்தில் அடிமையாக்கிவிடும் என்பதால் நிபுணர்கள் இதைக் குறித்து கவலை தெரிவித்திருக்கிறார்கள். அதோடு, இணையத்தில், ‘புரோ-அனா’ என்ற இணைய தளங்களும் உள்ளன; இவை அனோரெக்ஸியாவை வாழ்க்கை பாணியாகச் சிபாரிசு செய்கின்றன. * இதுபோக, பகைமையைத் தூண்டும் இணைய தளங்களும் இருக்கின்றன; இவை சிறுபான்மை மதத்தவரையும் இனத்தவரையும் குறிவைக்கின்றன. இன்னும் சில இணைய தளங்கள், வெடிகுண்டுகளையும் விஷ மருந்துகளையும் தயாரிப்பதைப் பற்றிச் சொல்லித் தருகின்றன; பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதைப் பற்றியும் கற்றுத் தருகின்றன. ஆன்லைன் விளையாட்டுகளில் அதிர்ச்சியூட்டும் வன்முறையும், இரத்தக்களறியும் நிறைந்த காட்சிகள் சித்தரித்துக் காட்டப்படுகின்றன.

சாட் ரூம்

அது என்ன? குறிப்பிட்ட தலைப்பின் பேரில் அல்லது உங்களுக்குப் பிடித்த விஷயத்தின் பேரில் இன்டர்நெட் மூலம் மற்றவர்களுக்குத் தகவல்களை ‘டைப்செய்து’ அனுப்பி உரையாடுவதாகும்.

அதன் பயன்? உங்கள் மகனோ மகளோ முன்பின் தெரியாத பல பேருடன் பரஸ்பர விஷயங்களைப் பரிமாறிக்கொள்ள முடியும்.

உங்கள் கவனத்திற்கு. சாட் ரூம்களுக்கு அடிக்கடி விஜயம் செய்யும் காமுகர்கள் ஆன்லைனில் அல்லது நேரடியாகவே உங்கள் பிள்ளையுடன் செக்ஸில் ஈடுபட வலைவீசுகிறார்கள். ஆன்லைனில் உங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்? (ஆங்கிலம்) என்ற புத்தகத்தின் ஆசிரியர்களில் ஒருவர் இன்டர்நெட் பாதுகாப்பு சம்பந்தமாக ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்; அப்போது அந்தப் பெண்மணிக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கவனியுங்கள். ஒருமுறை ஆராய்ச்சிக்காக 12 வயது பிள்ளையாக ஆன்லைனில் அவள் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள். “எடுத்த எடுப்பிலேயே ஒருவன் அவளை அந்தரங்க சாட் ரூமுக்கு அழைத்தான். ‘அதற்குள் எப்படி வருவதென்று எனக்குத் தெரியாது’ என அந்தப் பெண் சொன்னபோது, அந்தப் புதிய நண்பன் சொல்லிக் கொடுத்தான். அதன் பின் [ஆன்லைனில்] தன்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள விருப்பமா என்றும் கேட்டான்” என்று அந்தப் புத்தகம் சொல்கிறது.

உடனுக்குடன் தகவல் பரிமாற்றம்

அது என்ன? உடனுக்குடன் தகவல் அனுப்பி இரண்டு அல்லது மூன்று நபர்களோடு உரையாடுவதாகும்.

அதன் பயன்? இந்த முறையில், நீங்கள் வைத்திருக்கும் பட்டியலிலிருந்து நீங்கள் விரும்பும் நபரைத் தேர்ந்தெடுத்து உடனுக்குடன் தகவலைப் பரிமாறிக்கொள்ள முடியும். கனடாவில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியின்படி, 16-⁠க்கும் 17-⁠க்கும் இடைப்பட்ட வயதினரில் 84 சதவீதத்தினர் தங்கள் நண்பர்களுக்கு உடனுக்குடன் தகவல் அனுப்புகிறார்கள். அதுவும் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக இதில் செலவிடுகிறார்கள்.

ங்கள் கவனத்திற்கு. மனதை ஒருமுகப்படுத்தி படிக்க வேண்டிய அல்லது வேலை செய்ய வேண்டிய நேரத்தில் உடனடித் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடுவது உங்கள் பிள்ளையின் கவனத்தைச் சிதறடிக்கலாம். அதோடு, உங்கள் மகனோ மகளோ ஆன்லைனில் யாருடன் “பேசுகிறார்கள்” என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவர்கள் பேசுவதை உங்களால்தான் “கேட்க” முடியாதே!

ப்ளாக்

அது என்ன? ஆன்லைன் டையரி.

அதன் பயன்? இளைஞர்கள் தங்களுடைய எண்ணங்களை, ஆசைகளை, செயல்களை எழுதி வைப்பதற்கு ‘ப்ளாக்’ வாய்ப்பளிக்கிறது. அந்த ப்ளாக்கை வாசிக்கிற பிறரும் தங்களுடைய கருத்துக்களை அதில் எழுத முடியும். அநேக இளைஞர்கள் தாங்கள் எழுதியதை மற்றவர்களும் படித்து அதன் பேரில் கருத்து தெரிவித்திருப்பதைப் பார்த்து குதூகுலமடைகிறார்கள்.

உங்கள் கவனத்திற்கு. ப்ளாக்கை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். சில இளைஞர்கள், யோசிக்காமல் கொள்ளாமல் தங்கள் அப்பா அம்மா பெயர், படிக்கும் பள்ளிக்கூடம், வீட்டு விலாசம் போன்ற தகவல்களை அதில் எழுதிவிடுகிறார்கள். எச்சரிக்கை: ப்ளாக் ஒருவருடைய நன்மதிப்பை கெடுத்துவிடும். அதன் சொந்தக்காரருக்கே உலைவைத்துவிடும். உதாரணத்திற்கு, ஒருவரை வேலைக்கு எடுப்பதற்கு முன்பு சில முதலாளிகள் அந்த நபருடைய ப்ளாக்கை புரட்டிப் பார்க்கிறார்களாம்.

சமூக வலைப்பின்னல் அமைப்புகள்

அது என்ன? இளைஞர் தங்களுக்கென்று சொந்தமாக ஓர் இணைய பக்கத்தை (வெப் பேஜ்) உருவாக்கி அதில் படங்கள், வீடியோக்கள், ப்ளாக்ஸ்.. என பலவற்றை போட்டு அழகுபடுத்த உதவும் தளங்கள்.

அதன் பயன்? இப்படி இணைய பக்கங்களை உருவாக்கி அதில் பல விஷயங்களைச் சேர்க்க முடிவதால், ஓர் இளைஞன் அல்லது இளைஞி தன்னைப் பற்றிய தகவலை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த முடிகிறது. இளைஞர் புதிய “நண்பர்களைச்” சந்திப்பதற்கு சமூக வலைப்பின்னல் அமைப்புகள் வழி திறக்கின்றன.

உங்கள் கவனத்திற்கு. “சமூக வலைப்பின்னல் தளம் என்பது ஓர் ஆன்லைன் பார்ட்டி மாதிரி. விசித்திரமான ஆட்களைக்கூட அதில் சந்திக்க நேரிடும்” என்கிறாள் ஜோயன்னா. சமூக வலைப்பின்னல்களில் நீங்கள் பதிவு செய்யும் அந்தரங்க தகவல்கள் மோசடிக்காரர்களின் (வாலிபரின்/வயதுவந்தவரின்) கையில் கிடைத்துவிட்டால் அவ்வளவுதான். அதனால்தான், இதுபோன்ற இணைய தளங்களை, “காமுகர்களின் ஒன் ஸ்டாப் ஷாப்பிங்” என்று அழைக்கிறார் இன்டர்நெட் பாதுகாப்பு நிபுணர் பாரி அஃப்டாப்.

அதோடு, ஆன்லைன் நட்புகள் ரொம்ப நாள் நீடிக்காது. இளைஞர் சிலர் தாங்கள் உருவாக்கிய இணைய பக்கங்களில், தங்களது ஆன்லைன் தொடர்புகளைப் பக்கம் பக்கமாக எழுதி வைத்திருக்கிறார்கள்; இத்தனைக்கும் இவர்களை நேரில் சந்தித்திருக்கவே மாட்டார்கள். தங்களுடைய தளத்தை விஜயம் செய்பவர்களுக்குத் தாங்கள் பிரபலமானவர்கள் என்பதைக் காட்டிக்கொள்ளவே இப்படியெல்லாம் எழுதி வைக்கிறார்கள். சொல்லப்போனால், “ஒரு பையனை அல்லது பெண்ணை எத்தனை பேருக்குப் பிடித்திருக்கிறது என்பதைப் பொறுத்தே சமூகத்தில் அவர்களுடைய மதிப்பு எடைபோடப்படுகிறது” என கான்டிஸ் கெல்சி என்பவர் ஜெனரேஷன் மை ஸ்பேஸ் என்ற தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அவர் மேலும் கூறுகிறார்: “ஒருவருடைய நண்பர்களின் எண்ணிக்கையை வைத்து அவருடைய மதிப்பை கணக்கிடும் போக்கு, நம் பிள்ளைகளை மனித நேயமற்ற ஜந்துக்களாக ஆக்கிவிடுகிறது; அதிகமான நண்பர்களைச் சம்பாதிக்க ஆன்லைனில் தங்களை எப்படி வேண்டுமானாலும் காட்டிக்கொள்வதற்கு அவர்கள்மீது அளவுகடந்த பாரத்தைச் சுமத்துகிறது.” ஆகவே, ஆன்லைனில் உங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்? என்ற புத்தகம் அர்த்தமுள்ள இந்தக் கேள்வியைக் கேட்கிறது: “இஷ்டமானால் பழகிவிட்டு, கஷ்டமானால் கழற்றிவிடும் இந்த எலக்ட்ரானிக் உலகத்தில், அனுதாபத்தையும் இரக்கத்தையும் வளர்த்துக்கொள்வது முக்கியம் என்பதை உங்களுடைய பிள்ளைகளுக்கு எப்படி உணர்த்துவீர்கள்?”

இந்த ஆறு உதாரணங்களும் இன்றைய இளைய தலைமுறையை வசீகரிப்பதற்கு இன்டர்நெட்டில் உள்ள சில அம்சங்களே. நீங்கள் ஒரு பெற்றோர் என்றால், ஆன்லைன் எனும் வலையிலிருந்து உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்ற என்ன செய்யலாம்? (g 10/08)

[அடிக்குறிப்பு]

^ ‘புரோ-அனா’ இணைய தளங்களும் நிறுவனங்களும் அனோரெக்ஸியாவை சிபாரிசு செய்வதில்லை என சொல்லிக்கொள்கின்றன. ஆனால், இவற்றில் சில, அனோரெக்ஸியா என்பது வியாதியல்ல, வாழ்க்கை பாணியே என்கின்றன; ஒருவருடைய உண்மையான உடல் எடையையும் முறையற்ற உணவு பழக்கங்களையும் எப்படிப் பெற்றோரிடமிருந்து மறைப்பது என்பதன் பேரில் இந்த இணைய தளங்கள் நடத்தும் கருத்தரங்குகள் தகவல் அளிக்கின்றன.

[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]

இந்தியாவில் இன்டெர்நெட் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை ஒரே வருடத்தில் கிடுகிடுவென 54 சதவிகிதம் உயர்வு; இவர்களில் பெரும்பாலோர் இளவட்டங்கள்

[பக்கம் 15-ன் சிறு குறிப்பு]

“பிள்ளைகள் தங்களுடைய நண்பர்களோடும் உறவினர்களோடும் குறைந்த செலவில் சுலபமாகத் தொடர்புகொள்வதற்கு ‘வெப்-கேம்’ பயன்படுத்துவது சிறந்த வழி என்று பெற்றோர் நினைக்கலாம்; ஆனால், உங்கள் பிள்ளையின் பெட் ரூமுக்குள் மோசமான பேர்வழிகள் நுழைய நீங்களே கதவைத் திறந்து வைப்பதுபோல் ஆகிவிடுகிறது.”​—⁠ராபர்ட் எஸ். மல்லர், FBI இயக்குனர்