Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பூமி கோளம் ஆபத்திலா?

பூமி கோளம் ஆபத்திலா?

பூமி கோளம் ஆபத்திலா?

புவி சூடடைவதே மனித குலத்தை வாட்டியெடுக்கும் மிகப் பெரிய பிரச்சினை என சொல்லப்படுகிறது. “யாராலும் தடுத்து நிறுத்த முடியாத மாபெரும் ஆபத்தை நோக்கி நாம் பயணிக்கிறோம்” என்று ஆராய்ச்சியாளர்கள் கவலைப்படுவதாக ஸையன்ஸ் பத்திரிகை சொல்கிறது. இந்தக் கூற்றை சந்தேகவாதிகள் எதிர்க்கிறார்கள். பூமி வெப்பமடைந்து வருவதை அநேகர் ஒத்துக்கொண்டாலும் அதற்கான காரணங்களையும் அதன் விளைவுகளையும் குறித்து நிச்சயமில்லாமல் இருக்கிறார்கள். மனிதர்களின் ஏடாகூடமான செயல்கள் அதற்கு காரணமாய் இருந்தாலும் அவையே முக்கிய காரணமல்ல என்று சொல்கிறார்கள். ஏன் இந்தக் கருத்து வேறுபாடு?

ஒரு விஷயம் என்னவென்றால், இந்தப் பூமியில் இயற்கையாகவே நடைபெறும் சீதோஷ்ண மாற்றங்கள் படுசிக்கலானவை, புரிந்துகொள்ள கடினமானவை. அதோடு, பூமியின் வெப்பநிலை ஏன் அதிகரித்து வருகிறது என்பதற்கு இயற்கை ஆர்வலர்கள் தங்கள் சொந்த விளக்கத்தை வேறு கொடுக்கிறார்கள்.

வெப்பநிலை உயர்வு​—⁠உண்மையா?

புவி வெப்பமடைந்து வருவதை “யாரும் மறுக்க முடியாது;” அதற்கு மனிதனே முக்கிய காரணம் “எனலாம்” என்று ஐநா ஆதரவில் இயங்கும் விஞ்ஞானிகள் குழு (Intergovernmental Panel on Climate Change [IPCC]) வெளியிட்ட அறிக்கை சொல்கிறது. இதை ஒத்துக்கொள்ளாத சிலர், நகரங்கள் வளர்ந்து வருவதாலேயே அவை சூடடைவதாக வாதாடுகிறார்கள். அதுமட்டுமல்ல, கான்கிரீட்டும் ஸ்டீலும் சூரிய வெப்பத்தை சீக்கிரமாக ஈர்த்துக்கொண்டு இரவில் மெதுவாகவே குளிர்ச்சியடைகின்றன என்றும் அவர்கள் வாதாடுகிறார்கள். நகரங்களில் எடுக்கப்படும் வெப்பநிலை அளவுகளும் கிராமங்களில் எடுக்கப்படும் வெப்பநிலை அளவுகளும் வேறுபடுவதால் உலகளாவிய அறிக்கை சரியாக இருக்காது என சந்தேகவாதிகள் சொல்கிறார்கள்.

மறுபட்சத்தில், அலாஸ்காவின் கடற்கரைக்கு அருகே உள்ள தீவில் வசிக்கும் கிராமத் தலைவர் கிலிஃபர்ட், புவியின் வெப்பநிலை மாற்றங்களைத் தான் கண்ணார கண்டிருப்பதாக கூறுகிறார். பொதுவாக, அந்தக் கிராம மக்கள் சில வகை மான்களை வேட்டையாடுவதற்காக கடலில் மிதக்கும் பனிப்பாறைகளைக் கடந்து நிலப்பகுதிக்குச் செல்வார்கள். ஆனால், வெப்பநிலை உயர்வு அவர்களுடைய பாரம்பரிய வாழ்க்கைக்குத் தடையாக இருக்கிறது. “நீரோட்டங்களின் பாதை மாறிவிட்டன, பனிக்கட்டிகள் உருக ஆரம்பித்துவிட்டன, சக்சி கடலின் உறைநிலையும் . . . மாறிவிட்டது” என கிலிஃபர்ட் சொல்கிறார். முன்பெல்லாம் அக்டோபர் கடைசியிலேயே கடல்நீர் உறைந்துவிடும், ஆனால், இப்போதெல்லாம் டிசம்பர் கடைசி வரையிலும் உறைவதில்லை என்று அவர் சொல்கிறார்.

எப்போதும் உறைந்தே காணப்படும் வடமேற்கு ஜலசந்தி, சரித்திரத்திலேயே முதல் முறையாக 2007-⁠ல் முழுவதுமாய் உருகிவிட்டது. புவிச்சூடடைவதற்கு இதுவும் ஓர் அத்தாட்சி. “இந்த வருடத்தில் நாம் நேரடியாகப் பார்த்த காட்சியும் பனிக்கட்டிகள் உருகியோடும் காலங்கள் அதிகரித்திருப்பதாகக் காட்டும் புள்ளிவிவரங்களும் ஒத்திருக்கின்றன” என்று ஐக்கிய மாகாணங்களில் உள்ள தேசிய வெண்பனி மற்றும் பனிக்கட்டி தகவல் மையத்தின் மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறினார்.

பசுங்கூட விளைவு​—⁠உயிர்வாழ்வுக்கு இன்றியமையாதது

இத்தகைய மாற்றங்களுக்கு ஒரு காரணம், பூமியில் வாழும் உயிர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான பசுங்கூட விளைவு தீவிரமடைந்திருப்பதே. சூரியனின் ஆற்றல் பூமிக்கு வந்து சேருகையில் அதில் 70 சதவீதத்தை காற்றும், நிலமும், கடலும் உறிஞ்சிக்கொள்கின்றன. இப்படி நடக்கவில்லை என்றால், பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை -18 டிகிரி செல்சியஸுக்கு வந்துவிடும். உறிஞ்சிக்கொள்ளப்படும் இந்த வெப்பம் அகச்சிவப்பு ஒளிக்கதிர்களாக மறுபடியும் வளிமண்டலத்திற்குள் செலுத்தப்படுகிறது. இதனால், பூமி மிதமிஞ்சி வெப்பமடையாமல் பாதுகாக்கப்படுகிறது. ஆனால், வளிமண்டலத்தின் கலவையை மாசுப் பொருள்கள் மாற்றிவிடும்போது குறைந்தளவு வெப்பமே வெளியேறுகிறது. இதனால் பூமியின் வெப்ப நிலை அதிகரிக்கலாம்.

கார்பன்டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு, மீத்தேன் ஆகிய வாயுக்கள் பசுங்கூட விளைவை ஏற்படுத்துகின்றன. இதில் நீராவிக்கும் பங்குண்டு. கடந்த 250 ஆண்டுகளாக வளிமண்டலத்தில் பசுங்கூட வாயுக்களின் அடர்த்தி அதிகரித்து வந்திருக்கிறது; அதாவது, நிலக்கரி, எண்ணெய் போன்ற புதைபடிவ எரிபொருள்களை மக்கள் அதிகமாய் பயன்படுத்துவதும் தொழில் புரட்சியும் ஆரம்பமானதுமுதல் அதிகரித்து வந்திருக்கிறது. பண்ணை விலங்குகள் அதிகரித்திருப்பதும் பசுங்கூட வாயுக்களின் விளைவுக்கு இன்னொரு காரணமாக இருக்கலாம். ஏனென்றால், அவற்றின் உணவு ஜீரணமாவதன் விளைவாக மீத்தேனும் நைட்ரஸ் ஆக்ஸைடும் வெளியேறுகின்றன. சீதோஷ்ண மண்டலத்தை மனிதன் கெடுப்பதற்கு முன்பே புவி வெப்பமடைய ஆரம்பித்துவிட்டதாக சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்; அதற்கு பல காரணங்களையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

சீதோஷ்ண மாற்றம் இயற்கையானதா?

புவி சூடடைவதற்கு மனிதன் காரணமல்ல என்று வாதாடுபவர்கள், கடந்த காலத்திலேயே பூமியின் வெப்பநிலையில் பெரும் மாற்றம் நிகழ்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கு பனிக் காலம் என்று அவர்கள் சொல்கிற காலத்தை, அதாவது பூமி இப்போது இருப்பதைவிட மிகவும் குளுமையாக இருந்த காலத்தை, ஆதாரமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள்; கிரீன்லாந்து போன்ற பனிப் பிரதேசத்தில் வெப்பமண்டல தாவரங்கள் ஒருகாலத்தில் வளர்ந்திருந்ததை அத்தாட்சியாக காட்டி பூமி இயற்கையாகத்தான் வெப்பமடைகிறது என்கிறார்கள். என்றாலும், இன்னும் பின்நோக்கிப் போகப்போக சீதோஷ்ண நிலையைப் பற்றி அவர்களால் எதையும் திட்டவட்டமாகச் சொல்லமுடியாது என்பதை விஞ்ஞானிகள் ஒத்துக்கொள்கிறார்கள்.

மனிதன் தலையிடுவதற்கு முன்பு சீதோஷ்ணத்தை எது பெருமளவு பாதித்திருக்கலாம்? ஒருவேளை சூரியனிலுள்ள கரும்புள்ளிகளும் அதன் அனல்பறக்கும் ஜூவாலைகளும் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம். இவை இரண்டுமே சூரியனிலிருந்து வெளிவரும் ஆற்றலை நேரடியாகப் பாதித்திருக்கலாம். அதோடுகூட பூமி அதன் வட்டப்பாதையில் சுற்றிவர ஆயிரக்கணக்கான ஆண்டுகள் எடுப்பதால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள இடைவெளியில் மாற்றம் ஏற்படுகிறது. காற்றில் மிதக்கும் எரிமலை துகள்களும், சமுத்திரத்தின் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றங்களும் புவி சூடடைவதற்குக் காரணமாய் இருக்கின்றன.

சீதோஷ்ணத்தின் கம்ப்யூட்டர் கணிப்பு

பூமியின் வெப்ப நிலை உயர்ந்து வருவதற்கு என்ன காரணமாக இருந்தாலும்சரி, நம்மையும் சுற்றுச்சூழலையும் அது எப்படி பாதிக்கும்? விஞ்ஞானிகளால் அதற்கான காரணத்தை திட்டவட்டமாகச் சொல்வது கடினம். ஆனால், இன்றைக்கு சக்திவாய்ந்த கம்ப்யூட்டர்களின் உதவியால் அவர்கள் சீதோஷ்ண நிலையின் டிஜிட்டல் சிமுலேஷனை (digital simulations) உருவாக்குகிறார்கள். அதாவது, தட்பவெப்பத்தை கணிப்பதற்காக இயற்பியல் சட்டங்கள், சீதோஷ்ண தகவல்கள், வானிலையைப் பாதிக்கும் இயற்கை நிகழ்வுகள் போன்றவற்றை கம்ப்யூட்டரில் பதிவு செய்கிறார்கள்.

சீதோஷ்ணத்தை வேறெந்த முறையிலும் பரிசோதித்துப் பார்க்க முடியாததால் இந்த சிமுலேஷன் முறையால் விஞ்ஞானிகள் அதைப் பரிசோதித்துப் பார்க்கிறார்கள். உதாரணத்திற்கு, சூரியன் வெளியிடும் ஆற்றலின் அளவை “மாற்றி” துருவப் பிரதேசத்திலுள்ள உறைபனி, வளிமண்டலம் மற்றும் கடலின் வெப்பநிலை, நீராவியாகும் விகிதம், வளிமண்டலத்தின் அழுத்தம், மேகங்கள் உருவாவது, காற்று, மழை ஆகியவை எப்படிப் பாதிக்கப்படுகின்றன என்பதை அவர்களால் அறிந்துகொள்ள முடியும். சிமுலேஷன் முறையில் எரிமலை வெடிப்பை “உண்டாக்கி,” அதன் துகள்கள் சீதோஷ்ணத்தில் ஏற்படுத்தும் மாற்றத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியும். அதோடு, ஜனத்தொகை பெருகுவதாலும், காடுகள் அழிக்கப்படுவதாலும், நில பயன்பாட்டாலும், பசுங்கூட வாயுக்கள் வெளியேறும் விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களாலும் உண்டாகும் விளைவுகளையும் அவர்களால் ஆராய முடியும். தாங்கள் உருவாக்கும் சிமுலேஷன் மாடல்கள் காலப்போக்கில் அதிக துல்லியமாகவும் நம்பகமாகவும் இருக்குமென அவர்கள் நம்புகிறார்கள்.

தற்போது விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கும் சிமுலேஷன் மாடல்களின் கணிப்பு எந்தளவு துல்லியமானது? அவர்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் தகவல்கள் எந்தளவு துல்லியமானவை என்பதையும் எவ்வளவு தகவல்கள் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதையுமே இது பெரிதும் சார்ந்திருக்கிறது. எனவே, இந்தக் கணிப்புகள் மிதமான சீதோஷ்ண நிலையிலிருந்து கடுமையான சீதோஷ்ண நிலைவரை மாறுபடலாம். அப்படியிருந்தாலும், “[இயற்கை] சீதோஷ்ண நிலையில் எதிர்பாரா சம்பவங்கள் நிகழலாம்” என்று ஸையன்ஸ் பத்திரிகை சொல்கிறது. ஏற்கெனவே அப்படி நிகழ்ந்தும் இருக்கின்றன. உதாரணத்திற்கு, ஆர்டிக் பிரதேசத்தில் வழக்கத்துக்கு மாறாக அதிவேகமாய் பனிக்கட்டி உருகி வருவது வானியலாளர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. மனிதனின் நல்ல செயல்களாலோ தீய செயல்களாலோ ஏற்படும் விளைவுகளை சட்டம் விதிப்பவர்கள் ஓரளவுக்கு அறிந்திருந்தாலும்கூட எதிர்காலத்தில் வரும் பிரச்சினைகளைக் குறைப்பதற்கு இப்போதே ஏதாவது நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

இதை மனதில் வைத்து, கம்ப்யூட்டரைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு விதமான சிமுலேஷன் மாடல்களின் கணிப்புகளை IPCC குழுவினர் ஆராய்ந்து பார்த்தார்கள். அதாவது, பசுங்கூட வாயுக்களை கட்டுப்பாடற்ற விதத்தில் வெளியிடுவது முதல், அவற்றை மிதமான விதத்திலும் மிகவும் கட்டுப்பாடான விதத்திலும் வெளியிடுவதுவரை வித்தியாசமான மாடல்களின் கணிப்புகளை ஆராய்ந்து பார்த்தார்கள். அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு சீதோஷ்ண நிலையையும் அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் காட்டின. இந்தக் கணிப்புகளை ஆதாரமாகக் கொண்டு ஆய்வாளர்கள் பல்வேறு சட்டங்களை உருவாக்கும்படி சிபாரிசு செய்கிறார்கள். புதைபடிவ எரிபொருள்களிலிருந்து வெளியேறும் வாயுக்களின் அளவைக் கட்டுப்படுத்துதல், மீறுபவர்களுக்கு அபராதம் விதித்தல், அணுசக்தி உற்பத்தியை அதிகரித்தல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.

இந்தக் கணிப்புகள் நம்பகமானவையா?

வானிலையை முன்னறிவிக்க தற்போது பயன்படுத்தப்படும் முறையில் சீதோஷ்ண மாற்றங்களுக்குப் “போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை,” “சில மாற்றங்கள் முற்றிலும் அசட்டை செய்யப்படுகின்றன” என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். சீதோஷ்ணத்தைப் பற்றிய கம்ப்யூட்டர் கணிப்புகளில் முரண்பாடுகள் இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த IPCC குழுவினர் நடத்திய உரையாடல்களில் பங்கேற்ற விஞ்ஞானி ஒருவர் இவ்வாறு கூறினார்: “சீதோஷ்ண நிலையைக் கணிப்பதற்கும் அதன் சிக்கலான தன்மையைக் புரிந்துகொள்வதற்கும் முயற்சி செய்தபோதுதான் அதெல்லாம் மனித அறிவுக்கு எட்டாத ஒன்று என்பதையே எங்களில் சிலர் உணர முடிந்தது. சீதோஷ்ண அமைப்பு முறையில் என்ன நிகழ்கிறது, ஏன் நிகழ்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு எங்களுக்குத் திறமை இருக்கிறதா என்பதையே நாங்கள் சந்தேகிக்க ஆரம்பித்தோம்.”  a

பூமியில் ஏற்படும் மாற்றங்களுக்கான காரணம் தெரியாது என்பதற்காக எதையுமே செய்யாமல் விட்டுவிட்டால் எதிர்காலத்தைக் குறித்து அக்கறையே இல்லை என்றாகிவிடும் என்று சிலர் வாதாடலாம். விஞ்ஞானிகளின் அச்சமூட்டும் கணிப்புகள் நிஜமானால் “வருங்கால சந்ததிக்கு நாம் என்ன பதில் சொல்வோம்?” கம்ப்யூட்டர் மாடல்கள் சீதோஷ்ண நிலையைத் துல்லியமாகக் கணிக்கிறதோ இல்லையோ பூமி மிக ஆபத்தான நிலையில் இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். விஷ வாயுக்கள், காடுகள் அழிக்கப்படுதல், நகரமயமாக்குதல், உயிரினங்கள் அழிந்து வருதல் போன்ற காரணங்களால் உயிர் காக்கும் பூமியின் சுற்றுச்சூழல் படுபயங்கரமாகப் பாதிக்கப்படுவதை யாராலும் மறுக்க முடியாது.

நிலைமை இப்படி இருப்பதால், நம் அழகிய வீட்டையும், ஏன், நம்மையும்கூட பாதுகாப்பதற்கு முழு மனிதகுலத்தினரும் தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா? இன்னும் சொல்லப்போனால், பூமி வெப்பமடைவதற்கு மனிதனே காரணம் என்றால், தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு நூற்றாண்டுகள் அல்ல சில வருடங்களே எஞ்சியுள்ளன. குறைந்தபட்சம் மனிதனின் பேராசை, சுயநலம், அறியாமை, திறமையற்ற அரசாங்கம், அக்கறையின்மை ஆகியவற்றை நீக்க வேண்டும்; பூமியின் பிரச்சினைகளுக்கு இவையே மூலக் காரணம். இவற்றையெல்லாம் நீக்குவது சாத்தியமா அல்லது வெறும் கனவுதானா? கனவுதான் என்றால் நமக்கு வேறெந்த நம்பிக்கையுமே இல்லையா? அடுத்த கட்டுரை இதற்குப் பதிலளிக்கும். (g 8/08)

[அடிக்குறிப்பு]

a தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நவம்பர் 1, 2007 இதழில் ஜான் ஆர். கிறிஸ்டி சொன்னது; இவர் அ.ஐ.மா., ஹன்ட்ஸ்வில்லில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தின் பூமி அமைப்புமுறை பற்றிய விஞ்ஞான மையத்தின் இயக்குனர்.

[பக்கம் -ன் படம்] 5]

NASA photo

[பக்கம் -ன் படம்] 7]

Based on NASA/Visible Earth imagery

[பக்கம் 5-ன் பெட்டி/படம்]

பூமியின் வெப்பநிலையை எப்படி அளவிடுவீர்கள்?

இதில் உட்பட்டுள்ள சவால்களைப் புரிந்துகொள்வதற்கு இந்த உதாரணத்தைக் கவனியுங்கள். ஒரு பெரிய அறையின் வெப்பநிலையை எப்படி அளவிடுவீர்கள்? வெப்பமானியை எங்கே வைத்து அளவிடுவீர்கள்? வெளியே வெயில் கொளுத்துகிறதென்று வைத்துக்கொள்ளுங்கள். கூரைக்குப் பக்கத்தில் வைத்து அளந்தால் வெப்ப அளவு அதிகமாய் இருப்பதாகக் காட்டும், ஆனால் தரைக்கு பக்கத்தில் வைத்து அளந்தால் குறைவாகக் காட்டும். அதேபோல், வெப்பமானியை ஜன்னலுக்குப் பக்கத்தில் நேரடியாகச் சூரிய ஒளி படுகிற இடத்திலோ நிழலிலோ வைத்து அளந்தாலும் அளவுகள் பெரிதும் மாறுபடும். கருமை நிறம் வெப்பத்தை நன்கு உள்வாங்கிக்கொள்வதால் வண்ணங்களைப் பொறுத்து வெப்ப அளவும் மாறுபடலாம்.

ஆகவே, வெப்பமானியை ஒரேவொரு இடத்தில் வைத்து தட்பவெப்பத்தை அளவிட்டால் அது போதுமானதாக இருக்காது. ஓர் அறையில் வெவ்வேறு இடங்களில் அளவெடுத்து அதன் சராசரியைக் கணக்கிட வேண்டும். நாளுக்கு நாளும் பருவத்திற்குப் பருவமும் அளவுகள் மாறுபடலாம். ஆகவே, சரியான சராசரி அளவைக் கண்டுபிடிப்பதற்கு, நீண்ட காலத்திற்கு பல தடவை அளவெடுக்க வேண்டும். அப்படியானால், பூமியினுடைய மேற்பரப்பு, வளிமண்டலம், சமுத்திரங்கள் ஆகியவற்றின் சராசரி வெப்பநிலையை அளவிடுவது எவ்வளவு சிக்கலானது என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்! என்றாலும், சீதோஷ்ண மாற்றத்தைத் துல்லியமாக மதிப்பிடுவதற்கு இப்படிப்பட்ட புள்ளிவிவரங்கள் முக்கியம்.

[பக்கம் 6-ன் பெட்டி]

அணுசக்தி பரிகாரமா?

உலகமுழுவதும் மக்கள் என்றுமில்லாத அளவு ஆற்றலை அதிகதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். எண்ணெய்யையும் நிலக்கரியையும் எரிப்பது பசுங்கூட வாயுக்களை உற்பத்தி செய்கிறது, அதனால் அணுசக்தியைப் பயன்படுத்துவதே மிகச் சிறந்த வழியென சில அரசாங்கங்கள் கருதுகின்றன. ஆனால், இதிலும் ஆபத்துகள் உள்ளன.

அணுசக்தியை மிக அதிகமாய் சார்ந்திருக்கும் நாடுகளில் ஒன்றான பிரான்ஸில், அணு உலைகளைக் குளிர்விப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் 1,900 கோடி கனமீட்டர் தண்ணீர் தேவைப்படுவதாக இன்டர்நேஷனல் ஹெரல்டு டிரிப்யூன் அறிவிக்கிறது. 2003-⁠ல் கோடை வெயில் படுபயங்கரமாக இருந்ததால், பிரான்ஸிலுள்ள அணு உலைகளிலிருந்து வழக்கமாக வெளியேறிய வெப்பநீர் ஆறுகளின் வெப்பநிலையை அதிகரித்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என்ற பயம் நிலவியது. ஆகவே, சில அணுசக்தி நிலையங்களை இழுத்துமூட வேண்டியதாயிற்று. பூமியின் வெப்பநிலை உயர்ந்தால், இந்த நிலை இன்னும் மோசமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“அணுசக்தியைப் பயன்படுத்துவோமாகில், சீதோஷ்ண மாற்றத்தினால் வரும் பிரச்சினையையும் சமாளிக்க வேண்டியிருக்கும்” என கூறுகிறார் அணுசக்தி விஞ்ஞானிகள் யூனியனின் பொறியியலாளரான டேவிட் லாக்பாம்.

[பக்கம் 7-ன் பெட்டி/தேசப்படம்]

2007-⁠ல் வானிலை சம்பந்தப்பட்ட பேரழிவுகள்

2007-ஆம் ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு வானிலை சம்பந்தப்பட்ட பேரழிவுகள் நிகழ்ந்ததால் மனிதநேய காரியங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் 14 அவசரகால வேண்டுகோள்களை விடுத்தது; 2005-ஆம் ஆண்டு பதிவைவிட 4 அதிகம். 2007-⁠ல் நடைபெற்ற பேரழிவுகளில் சில இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. என்றாலும், இந்த இடங்களிலெல்லம் இயற்கை சீற்றங்கள் வாடிக்கையான ஒன்று என நினைத்துக்கொள்ளாதீர்கள்.

◼ பிரிட்டன்: கடந்த 60 ஆண்டுகளில் பயங்கரமான வெள்ளத்தினால் 3,50,000-⁠க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 1766 முதல் பதிவு செய்யப்பட்ட அறிக்கைகளைப் பார்க்கையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 2007 மே முதல் ஜூலை வரை அடித்த மழையே பலத்த மழையென தெரிகிறது.

◼ மேற்கு ஆப்பிரிக்கா: 14 நாடுகளில் 8,00,000 மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டார்கள்.

◼ லெசோதோ: அதிக வெப்பநிலை, வறட்சி காரணமாக பயிர்கள் நாசம். சுமார் 5,53,000 மக்களுக்கு உணவுத் திண்டாட்டம்.

◼ சூடான்: அடைமழை 1,50,000 மக்களை வீடின்றி தவிக்கவிட்டது. குறைந்தபட்சம் 5,00,000 பேரே நிவாரண உதவி பெற்றார்கள்.

◼ மடகாஸ்கர்: கடும் புயல்களும் பலத்த மழையும் இத்தீவை சூறையாடிவிட்டன, இதனால் 33,000 மக்கள் அங்கிருந்து இடம்பெயர வேண்டிய நிலை; 2,60,000 மக்களின் பயிர்களையும் துவம்சம் செய்துவிட்டன.

◼ வட கொரியா: வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகள், மண்சரிவுகள் ஆகியவற்றினால் 9,60,000 பேர் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள்.

◼ வங்காளதேசம்: வெள்ளத்தினால் 85 கோடி மக்களுக்கு பாதிப்பு, 3,000-⁠க்கும் அதிகமானோரை அது காவு கொண்டது. அதோடு, 12.5 கோடி பண்ணை விலங்குகளும் இதற்கு பலியாகின. கிட்டத்தட்ட கிட்டத்தட்ட 15 கோடி பேரின் வீடுகள் நாசமாக்கப்பட்டன அல்லது தரைமட்டமாக்கப்பட்டன.

◼ இந்தியா: வெள்ளப் பெருக்கில் மூன்று கோடி பேர் காலி.

◼ பாகிஸ்தான்: புயலுடன்கூடிய மழையால் 3,77,000 பேர் குடிபெயர்ந்தார்கள், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தார்கள்.

◼ பொலிவியா: வெள்ளப்பெருக்கால் 3,50,000 பேர் பாதிக்கப்பட்டார்கள். 25,000 பேர் அங்கிருந்து குடிபெயர்ந்துவிட்டார்கள்.

◼ மெக்சிகோ: ஆங்காங்கே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குறைந்தபட்சம் 5,00,000 பேர் வீடுகளை இழந்து நின்றார்கள், இன்னும் கோடிக்கணக்கானோர் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

◼ டொமினிகன் குடியரசு: தொடர்ந்து பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலும் நிலச்சரிவுகளாலும் 65,000 பேர் அந்த ஊரைவிட்டு கிளம்பிவிட்டார்கள்.

◼ ஐக்கிய மாகாணங்கள்: தென் கலிபோர்னியாவின் காய்ந்துபோன காடுகளும் வயல்களும் தீப்பிடித்து எரிந்ததால் 5,00,000 குடிமக்கள் வேறு வழியின்றி தங்கள் வீடுகளையெல்லாம் விட்டுவிட்டு குடிபெயர்ந் தார்கள்.