கடைசி நாட்கள் அதற்குப் பின்?
கடைசி நாட்கள் அதற்குப் பின்?
‘கடைசி நாட்களைப்’ பற்றி யோசிக்கவே சிலர் பயப்படுகிறார்கள். (2 தீமோத்தேயு 3:1) அது கொடிய காலமாய் இருக்குமென்று அவர்கள் நினைக்கிறார்கள். அப்படியானால், காலங்காலமாக எத்தனையோ பேர் அந்த நாட்களுக்காக ஆவலோடு காத்திருந்ததற்கு என்ன காரணம்? கடைசி நாட்களுக்குப் பிறகு நல்ல நிலைமைகள் வருமென்ற எதிர்பார்ப்பே அதற்கு காரணம்.
உதாரணத்திற்கு சர் ஐசக் நியூட்டன், முடிவு காலத்திற்குப் பிறகு கடவுளுடைய ஆயிரவருட அரசாட்சியில் உலகெங்கும் சமாதானமும் செழுமையும் கொழிக்கும் என்று நம்பினார். அந்தச் சமயத்தில் மீகா 4:3-லும் ஏசாயா 2:4-லும் உள்ள தீர்க்கதரிசனம் நிறைவேறும் என்று அவர் சொன்னார். “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை” என்று அந்தத் தீர்க்கதரிசனம் சொல்கிறது.
முடிவு காலத்தைப் பற்றி பேசுகையில் அதைக் குறித்து பயப்படாதிருக்கும்படி இயேசு தம்மைப் பின்பற்றினவர்களிடம் கூறினார். மிகுந்த உபத்திரவத்தின் போது கஷ்டம், கவலை, பயம் ஆகியவையெல்லாம் இருக்குமென்று சொன்ன பிறகு, “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்” என்றார். (லூக்கா 21:28) எதிலிருந்து மீட்பு கிடைக்குமென்று இயேசு சொன்னார்?
கடவுள் அளித்திருக்கும் வாக்குறுதிகள்
போர், உள்நாட்டு கலவரங்கள், குற்றச்செயல், வன்முறை, பசிப்பட்டினி ஆகியவை இன்று மனிதர்களை வாட்டிவதைக்கின்றன. இதனால், லட்சக்கணக்கானோர் பயத்திலும் திகிலிலும் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். இவற்றால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் கடவுள் அளித்திருக்கும் வாக்குறுதிகளைக் கவனியுங்கள்.
“இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான் . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:10, 11.
‘என் மக்கள் அமைதிசூழ்ந்த வீடுகளிலும் பாதுகாப்பான கூடாரங்களிலும் தொல்லையற்ற தங்குமிடங்களிலும் குடியிருப்பர்.’—ஏசாயா 32:18, பொது மொழிபெயர்ப்பு.
யெகோவா “பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.”—சங்கீதம் 46:9.
“அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்.”—மீகா 4:4.
“வயல் நிலங்கள் மிகுதியான தானியத்தை விளைவிக்கும். மலைகளும் பயிர்களால் நிரம்பிவழியும்.”—சங்கீதம் 72:16, NW.
“எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி [அதாவது, பயமின்றி] வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.”—நீதிமொழிகள் 1:33.
நாம் வாழும் இடத்தில் நிலைமைகள் ஓரளவு நன்றாக இருந்தாலும்
நாம் அனைவரும் வியாதியையும் மரணத்தையும் எதிர்ப்படுகிறோம். ஆனால், கடவுள் கொண்டுவரப்போகும் புதிய உலகில் இவையும் இருக்காது. மரணத்தில் பறிகொடுத்த நம் அன்பானவர்களை அங்கு மீண்டும் பார்க்கலாம். பின்வரும் வாக்குறுதிகளைக் கவனியுங்கள்:“வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.”—ஏசாயா 33:24.
“அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.”—வெளிப்படுத்துதல் 21:4.
“கடைசியில் அழிக்கப்படும் சத்துரு மரணம் ஆகும்.”—1 கொரிந்தியர் 15:26, ஈஸி டு ரீட் வர்ஷன்.
“அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது [இயேசுவின்] குரலைக் கேட்டு வெளியே வருவர்.”—யோவான் 5:28, 29.
இந்த அனைத்து வாக்குறுதிகளையும் அப்போஸ்தலன் பேதுரு ரத்தினச்சுருக்கமாக இவ்வாறு எழுதினார்: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13) பூமியெங்கும் நீதி குடியிருக்க வேண்டுமென்றால், அதற்கு இடையூறாய் இருப்பவர்கள் அகற்றப்பட வேண்டும். அப்படியானால், இன்றுள்ள தேசங்களையும் அழிக்க வேண்டியிருக்கும். ஏனெனில், அவர்களுடைய சுயநலத்தால்தான் இன்று போர்களும், மரணங்களும் விளைகின்றன. பூமியிலுள்ள எல்லா ஆட்சிகளும் நீக்கப்பட்டு கிறிஸ்துவின் தலைமையில் கடவுளுடைய அரசாங்கமே என்றென்றும் அரசாளும். அந்த அரசாங்கத்தைப் பற்றி நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உறுதியாவது: “தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.”—ஏசாயா 9:7.
நீங்களும் இப்படிப்பட்ட எதிர்காலத்தைப் பெறலாம். ஏனெனில், “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் [கடவுள்] சித்தமுள்ளவராயிருக்கிறார்” என்று பைபிள் உறுதியளிக்கிறது. (1 தீமோத்தேயு 2:4) எனவே, தாமதிக்காதீர்கள்! முடிவில்லா வாழ்க்கையை அடைவதற்குத் தேவையான அறிவைப் பெறுங்கள். (யோவான் 17:3) இதற்கு முதற்படியாக இந்தப் பத்திரிகையின் பிரசுரிப்பாளர்களைத் தொடர்புகொண்டு இலவச பைபிள் படிப்புக்காகக் கேளுங்கள். (g 4/08)
[பக்கம் 8, 9-ன் படங்கள்]
பூமியில் வரவிருக்கும் அந்தப் பரதீஸில் சமாதானத்துடனும் சௌக்கியத்துடனும் என்றென்றும் வாழும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது