பைபிளை நம்புவதற்கான காரணங்கள்
5. நிறைவேறிய தீர்க்கதரிசனம்
வானிலை அறிவிப்பாளர் ஒருவரின் முன்னறிவிப்பு ஒருபோதும் பொய்த்துப் போனதில்லை, ஒவ்வொரு முறையும் அவர் அறிவித்தபடியே நிகழ்கிறது. இப்போதோ மழை வரப்போவதாக அவர் அறிவிக்கிறாரென வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் குடையை எடுத்துச் செல்வீர்களா மாட்டீர்களா?
பைபிளில் எண்ணிலடங்கா தீர்க்கதரிசனங்கள் அல்லது முன்னறிவிப்புகள் உள்ளன. a இதில் எழுதப்பட்டுள்ள உண்மைகள் யாவும் இது ஒரு தீர்க்கதரிசன புத்தகம் என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகின்றன; சரித்திரமும் அவற்றை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. பைபிள் தீர்க்கதரிசனங்கள் ஒருபோதும் பொய்த்துப் போவதில்லை.
குறிப்பிடத்தக்க அம்சங்கள்.
பைபிள் தீர்க்கதரிசனங்கள் பெரும்பாலும் திட்டவட்டமாக அறிவிக்கப்படுவதோடு அவற்றிலுள்ள நுட்ப விவரங்கள்கூட நிறைவேறியிருக்கின்றன. பொதுவாக, அதிமுக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களே தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டன. அவை எழுதப்பட்ட காலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் நேர்மாறான விஷயங்களே அவ்வாறு முன்னறிவிக்கப்பட்டன.
தலைசிறந்த எடுத்துக்காட்டு.
யூப்ரட்டீஸ் நதியின் இரு கரையிலும் பூர்வ பாபிலோன் கட்டப்பட்டிருந்தது; மற்ற நாடுகள் அதை எதிர்த்துப் போர்புரிய முடியாதபடி அந்த நகரம் அமைந்திருந்தது; அது, “பண்டைய கிழக்கத்திய நாடுகளின் அரசியல், மதம் மற்றும் கலாச்சார மையம்” என அழைக்கப்பட்டது. பாபிலோனுக்கு வரவிருக்கும் தீங்கை, அதாவது அது வீழ்ச்சியடையும் என்ற செய்தியை சுமார் பொ.ச.மு. 732-ல் ஏசாயா தீர்க்கதரிசி முன்னுரைத்தார். அவர் திட்டவட்டமான விவரங்களை அளித்தார்: பாபிலோனைத் தோற்கடிக்கும் தலைவரின் பெயர் ‘கோரேசு’; நகரத்திற்கு அரணாய் விளங்கும் யூப்ரட்டீஸ் நதி ‘வற்றிப்போகும்’; நகரத்தின் வாசல்கள் ‘பூட்டப்படாதிருக்கும்’ என்று குறிப்பிட்டார். (ஏசாயா 44:27–45:3) சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு, பொ.ச.மு. 539 அக்டோபர் 5-ல் இவை யாவும் துல்லியமாய் நிறைவேறின. பாபிலோன் இவ்வாறே வீழ்ச்சி அடைந்தது என கிரேக்க சரித்திராசிரியர் ஹிராடட்டஸ் (பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டு) ஊர்ஜிதப்படுத்தினார். b
துணிச்சலான தகவல்.
பாபிலோனைக் குறித்து அதிர்ச்சியூட்டும் மற்றொரு விவரத்தையும்கூட ஏசாயா கொடுக்கிறார்: ‘இனி ஒருபோதும் அதில் ஒருவரும் குடியேறுவதில்லை.’ (ஏசாயா 13:19, 20) சாதகமான ஓர் இடத்தில் பரந்துவிரிந்து கிடக்கும் நகரம் முற்றிலும் பாழாக்கப்படும் என்பதை முன்னறிவிக்க கண்டிப்பாக தைரியம் தேவைப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட ஒரு நகரம் அழிக்கப்பட்டால் அது திரும்பவும் கட்டப்படும் என்றுதான் பொதுவாக நீங்கள் நினைப்பீர்கள். ஆனால், அதுதான் இல்லை; அதன் வீழ்ச்சிக்குப் பிறகு சில காலத்திற்கு மக்கள் அங்கே குடியிருந்தபோதிலும், நாளடைவில் ஏசாயா சொன்னது அப்படியே நிறைவேறியது. பூர்வ பாபிலோன் இருந்த இடம் இன்று “தரைமட்டமாக, அனல்வீசும் பாலைநிலமாக, மனித சஞ்சாரமற்று புழுதிக்காடாகக் கிடக்கிறது” என்று ஸ்மித்சோனியன் பத்திரிகை குறிப்பிடுகிறது.
ஏசாயா சொன்ன அந்தத் தீர்க்கதரிசனத்தின் முக்கியத்துவத்தை ஆழ்ந்து சிந்திப்பது நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது. இன்றைய நியு யார்க், லண்டன் நகரங்களைப் போன்ற ஒரு நகரம் 200 ஆண்டுகளுக்குப் பிறகு அழிக்கப்படும் என்றும் அதன் பிறகு அதில் மனித வாசமே இல்லாமற்போய்விடும் என்றும் ஆணித்தரமாகச் சொன்னால் எப்படியிருக்குமோ அதுபோலத்தான் ஏசாயாவின் தீர்க்கதரிசனமும் இருக்கிறது. ஆம், ஏசாயா தீர்க்கதரிசனத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் அதன் நிறைவேற்றம்தான்! c
பலமிக்க பாபிலோனை கோரேசு எனும் பெயருடைய தலைவர் வீழ்த்துவாரென பைபிள் துல்லியமாக முன்னறிவித்தது
இந்தத் தொடர் கட்டுரைகளில் பைபிளின் நம்பகத்தன்மைக்கு சில அத்தாட்சிகளை நாம் சிந்தித்தோம்; பைபிளில் நம்பிக்கை வைக்க இவை லட்சக்கணக்கானோருக்கு உதவியுள்ளன. ஆகவே, தங்களைச் சரியான பாதையில் நடத்துவதற்கு ஏற்ற வழிகாட்டியாக அதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படியானால், நீங்களும்கூட பைபிளை நம்பலாமா என்பதைத் தீர்மானிக்க பைபிளைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ளலாம் அல்லவா?
a வானிலை முன்னறிவிப்புகள் ஒருவேளை நிகழலாம், நிகழாமலும் போகலாம். பைபிள் தீர்க்கதரிசனமோ கடவுளுடைய ஏவுதலால் எழுதப்பட்டது. அவர் விரும்பினால் அதை நிகழும்படிச் செய்ய அவரால் நிச்சயம் முடியும்.
b ஏசாயா தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற சிற்றேட்டில் பக்கங்கள் 27-29-ஐக் காண்க. இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
c பைபிள் தீர்க்கதரிசனங்களுக்கும் அவற்றின் நிறைவேற்றங்களுக்கும் கூடுதலான எடுத்துக்காட்டுகளுக்கு பைபிள்—கடவுளுடைய வார்த்தையா, மனிதனுடையதா? என்ற ஆங்கில புத்தகத்தில் பக்கங்கள் 117-33-ஐக் காண்க. இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.