பைபிள் சொல்கிறபடி வாழவேண்டுமா?
இளைஞர் கேட்கின்றனர் . . .
பைபிள் சொல்கிறபடி வாழவேண்டுமா?
உங்கள்பள்ளியிலுள்ள கேன்டீனில் இரண்டு பெண்களுடன் நீங்கள் உட்கார்ந்து மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பெண் மட்டும் புதிதாக வந்திருக்கும் ஒரு பையனை உற்று கவனிக்கிறாள்.
“ஏய், அவனுக்கு உன்னை ரொம்ப பிடித்திருக்கிறதென நினைக்கிறேன். அவன் உன்னை பார்க்கிற பார்வையிலே தெரிகிறது. அப்படியே உன்னை விழுங்கிவிடுவது போல் பார்க்கிறான்!” என்று முதல் பெண் உங்களிடம் சொல்கிறாள்.
“இன்னொரு முக்கியமான விஷயம் தெரியுமா? அவனுக்கு கேர்ல் ஃபிரெண்ட் யாரும் இல்லையாம்!” என்று இரண்டாவது பெண் உங்கள்மீது சாய்ந்துகொண்டே காதில் கிசுகிசுக்கிறாள்.
“செ! எனக்கு ஏற்கெனவே ஒரு பாய் ஃபிரெண்ட் இருக்கிறான். ஆனால், இவன் மட்டும் செக்ஸ் வைத்துக்கொள்ள என்னை கூப்பிட்டால் ஒருகணம் யோசிக்காமல் சம்மதம் தெரிவிப்பேன்!” என்று முதல் பெண் சொல்கிறாள்.
உங்களுக்குப் பிடிக்காத ஒரு கேள்வியை இப்போது முதல் பெண் கேட்கிறாள்.
“அதுசரி, உனக்கு ஏன் இன்னும் பாய் ஃபிரெண்ட் இல்லை?”
இது நீங்கள் எதிர்பார்த்த கேள்விதான். உண்மையை சொல்லவேண்டும் என்றால் உங்களுக்கு பாய் ஃபிரெண்ட் வைத்துக்கொள்ள ஆசைதான். ஆனால், டேட்டிங் செய்வதற்கு திருமண வயது வரும்வரை காத்திருப்பது நல்லது என்று உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. இல்லையென்றால் நீங்கள்கூட . . .
“எனக்குத் தெரியும், இதற்கு எல்லாம் உன் மதம்தானே காரணம்?” என்கிறாள் இரண்டாவது பெண்.
‘என் மனதில் இருப்பதை அப்படியே பிட்டு பிட்டு வைக்கிறாளே?’ என உங்களுக்குள்ளேயே நீங்கள் யோசிக்கிறீர்கள்.
“ஆமாம்! உனக்கு பைபிள்தான் உலகமே, எதற்கெடுத்தாலும் பைபிள், பைபிள், பைபிள். அதைத் தவிர உனக்கு ஒன்றும் தெரியாது” என்று முதல் பெண் கிண்டலாகச் சொல்கிறாள். “வாழ்க்கையை கொஞ்சங்கூட அனுபவிக்கவில்லை என்றால் எப்படி?” என்கிறாள்.
நீங்கள் எப்போதாவது இதுபோன்ற சூழலை எதிர்ப்பட்டிருக்கிறீர்களா? அதாவது, பைபிள் நெறிகளுக்கு இசைய வாழ முயலுகையில் கேலி கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறீர்களா? அந்தமாதிரி சமயத்தில் நீங்கள் எப்படிப் பிரதிபலித்தீர்கள்?
◼ ஒழுக்க விஷயத்தில் நீங்கள் ஏன் உறுதியாக இருக்கிறீர்கள் என்பதை தைரியமாகச் சொன்னீர்களா?
◼ முதலில் தயங்கினாலும், பிறகு உங்கள் நம்பிக்கைகளைப்பற்றி முடிந்தவரை எடுத்துச் சொன்னீர்களா?
◼ ஆம், உங்களுடைய பள்ளி நண்பர்கள் சொல்வதுபோல் பைபிள் நெறிகள் உங்கள் சந்தோஷத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தீர்களா?
‘பைபிள் நெறிகளுக்கு இசைய வாழ்வதனால் ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா’ என்று நீங்கள் என்றைக்காவது யோசித்ததுண்டா? டெபரா என்ற இளம் பெண் அதைக் குறித்து யோசித்திருக்கிறாள். a அவள் இவ்வாறு சொல்கிறாள்: “என் பள்ளி நண்பர்கள் மனம்போனபோக்கில் வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அவர்கள் யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லாததுபோல் தெரிந்தது. என் பள்ளி நண்பர்களைப்போல் நானும் இஷ்டத்திற்கு வாழவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், பைபிள் நெறிகள் என்னை கட்டிப்போடுவதாக நான் உணர்ந்தேன்.”
இப்படி யோசிப்பது தவறா?
பைபிள் எழுத்தாளரான ஆசாப், தன் வாழ்க்கையின் ஒரு காலக்கட்டத்தில் கடவுளுக்குப் பிரியமாக வாழ்வதில் ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா என்று யோசித்தார். “துன்மார்க்கரின் சங்கீதம் 73:3, 13.
வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன்” என்று எழுதினார். அவர் மேலும் சொன்னார்: “நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்.”—கடவுளுடைய நெறிகளுக்கு இசைய வாழ்வதால் என்ன பயன் இருக்கிறது என சில சமயங்களில் ஜனங்கள் யோசிப்பார்கள் என்பதை யெகோவா தேவன் புரிந்துகொள்கிறார். அதனால்தான் ஆசாபின் எண்ணங்களை, பைபிளில் இடம்பெறச் செய்துள்ளார். ஆசாப் கடைசியில், கடவுளுடைய சட்டங்களுக்கு இசைய வாழ்வதுதான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார். (சங்கீதம் 73:28) அவர் ஏன் அந்த முடிவுக்கு வந்தார்? ஆசாப் ஞானமாகச் செயல்பட்டார். அவர் தவறு செய்து அதிலிருந்து பாடத்தைக் கற்றதால் அந்த முடிவுக்கு வரவில்லை. மாறாக, மற்றவர்கள் செய்த தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டார். (சங்கீதம் 73:16-19) நீங்களும் அவரைப்போலவே ஞானமான தீர்மானத்தை எடுக்க முடியுமா?
நிஜத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
ஆசாபைப்போல் இல்லாமல் தாவீது ராஜாவோ தவறு செய்து, அந்தக் கசப்பான அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டார். அதாவது, கடவுளுடைய நெறிகளை அசட்டை செய்கிறவர்களுக்குக் கஷ்டம்தான் மிஞ்சும் என்பதைக் கற்றுக்கொண்டார். தாவீது, தன் ஊழியக்காரனின் மனைவியோடு விபச்சாரம் செய்து அதை மூடிமறைக்க முயற்சி செய்தார். இதன் விளைவாக கடவுளையும் புண்படுத்தி, மற்றவர்களையும் புண்படுத்தி, தானும் மன நிம்மதியின்றி தவித்தார். (2 சாமுவேல் 11:1-12:23) தாவீது மனந்திருந்திய பிறகு, பரிசுத்த ஆவியின் தூண்டுதலோடு தன்னுடைய உணர்ச்சிகளைப் பாடலாக எழுதும்படியும் நம்முடைய நலனுக்காக அவை பைபிளில் பதிவாகும்படியும் யெகோவா பார்த்துக்கொண்டார். (சங்கீதம் 51:1-19; ரோமர் 15:4) எனவே, மற்றவர்கள் செய்த தவறிலிருந்து கற்றுக்கொள்வது ஞானமானது, பைபிளுக்கு இசைவாகவும் உள்ளது.
நீங்கள் ஆசாபின் முன்மாதிரியைப் பின்பற்றவும் தாவீது செய்த தவறுகளைத் தவிர்க்கவும் உதவுவதற்காக பல நாடுகளைச் சேர்ந்த சில இளைஞர்கள் சொல்வதை கவனியுங்கள். இவர்கள் சில காலத்திற்கு கடவுளுடைய நெறிகளை ஒதுக்கி தள்ளினார்கள். குறிப்பாக இவர்கள், திருமணத்திற்கு முன் செக்ஸில் ஈடுபட்டார்கள். ஆனால், தாவீதைப்போல், மனந்திரும்பி மீண்டும் கடவுளுக்கு முன் சுத்தமான நிலைநிற்கையைப் பெற்றிருக்கிறார்கள். (ஏசாயா 1:18; 55:7) அவர்கள் சொல்வதைக் கவனியுங்கள்.
விழித்தெழு!: என்னென்ன விஷயங்கள் உங்கள் எண்ணங்களையும் செயல்களையும் பாதித்தன?
டெபரா: “நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் என்னைத் தவிர எல்லோருக்கும் பாய் ஃபிரெண்டுகளும் கேர்ல் ஃபிரெண்டுகளும் இருந்தார்கள். அவர்கள் ரொம்ப சந்தோஷமாக இருப்பதுபோல் தெரிந்தது. நான் அவர்களோடு இருந்தபோது, அவர்கள் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுப்பதையும் கட்டி அணைத்துக்கொள்வதையும் பார்க்க பொறாமையாக இருந்தது. நான் மட்டும் தன்னந்தனியாக விடப்பட்டதுபோல் உணர்ந்தேன். எனவே, எனக்குப் பிடித்த ஒரு பையனோடு உல்லாசமாக இருப்பதைப்போல் பகல்கனவு காண ஆரம்பித்தேன். அதனால், அவனோடு ‘ஜாலியாக’ இருக்கவேண்டும் என்ற ஆசை எனக்குள் வெறியாக மாறியது. அதற்காக எதையும் செய்ய தயாராக இருந்தேன்.”
மைக்: “செக்ஸை சிறப்பித்துக்காட்டும் விஷயங்களை படித்தேன், பார்த்தேன். செக்ஸைப்பற்றி என்னுடைய நண்பர்களுடன் பேசுகையில் அதன்மீது எனக்கிருந்த ஆர்வம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. பிறகு, நான் ஒரு பெண்ணுடன் தனியாக இருந்த சமயத்தில், செக்ஸ் வைத்துக்கொள்ளாமலே அவளுடன் நெருக்கமாக இருக்கலாம், ஒருவேளை வரம்புமீறி போவதாகத் தெரிந்தால் சட்டென நிறுத்திவிடலாம் என்று நினைத்தேன்.”
ஆண்ட்ரூ: “இன்டர்நெட்டில் ஆபாச படங்களைப் பார்க்கிற பழக்கம் எனக்கு இருந்தது. நான் அளவுக்கு அதிகமாக மதுபானத்தைக் குடிக்க ஆரம்பித்தேன். பைபிளிலுள்ள ஒழுக்கநெறிகளை துச்சமாக மதிக்கும் இளைஞர்களோடு பார்ட்டிகளுக்கு சென்றேன்.”
டிரேஸி: “எனக்கு 16 வயதாக இருந்தபோது, என் உலகமே என் பாய் ஃபிரெண்டுதான் என்று நினைத்தேன். திருமணத்திற்கு முன் பாலுறவு வைத்துக்கொள்வது தவறு என்று எனக்குத் தெரியும். இருந்தாலும், அதை நான் வெறுக்கவில்லை. அந்த வலையில் விழுந்துவிடக்கூடாது என்றுதான் நினைத்தேன். ஆனால், என் உணர்ச்சிகள் என் எண்ணங்களை மிஞ்சிவிட்டன. சில காலத்திற்கு எனக்கு எந்த ஒரு குற்ற உணர்வும் ஏற்படவில்லை, அந்தளவுக்கு என் மனசாட்சி மரத்துப்போயிருந்தது.”
விழித்தெழு!: இப்படி வாழ்ந்ததில் சந்தோஷம் கிடைத்ததா?
டெபரா: “ஆரம்பத்தில் நான் சுதந்திரமாகச் சிறகடித்து பறப்பதுபோல் உணர்ந்தேன். என் தோழிகளுக்கு சரிசமமாகிவிட்டேன் என்று நினைத்து சந்தோஷப்பட்டேன். ஆனால், அந்தச் சந்தோஷம் ரொம்ப நாட்களுக்கு நீடிக்கவில்லை. என்னை பார்க்க எனக்கே அருவருப்பாக இருந்தது. என் அப்பாவித்தனத்தைத் தொலைத்துவிட்டது போலவும் அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்வதுபோலவும் உணர்ந்தேன். என் கற்பை தொலைத்துவிட்டதை நினைத்து நெருப்பில் விழுந்த புழுவைப்போல் துடித்தேன். அதைத் திரும்ப பெற முடியாததை நினைத்து தவிதவித்தேன். ‘நான் ஏன் எனக்கு மட்டும் ஒன்றும் ஆகாது என்று நினைத்தேன்?’ என்று அப்போதிலிருந்து என்னை நானே அடிக்கடி கேட்டுக்கொள்வேன். இன்றுவரை என் மனதை அரித்துக்கொண்டிருக்கும் கேள்வி—‘யெகோவா அன்புடன் கொடுத்திருக்கும் நெறிகளை நான் ஏன் அலட்சியம் செய்தேன்?’”
மைக்: “நான் நடைப்பிணமாக வாழ்வதுபோல் உணர்ந்தேன். நான் செய்த தவறுகள் மற்றவர்களை எப்படிப் பாதித்தது என்பதை மறந்துவிட முயற்சி செய்தேன். ஆனால், என்னால் முடியவில்லை. என்னுடைய சுயநலத்திற்காக மற்றவர்களைப் புண்படுத்திவிட்டேனே என்று நினைத்தபோது என் மனம் வலித்தது. நான் தூக்கமின்றி தவித்தேன். செக்ஸில்
ஈடுபட்டேனே தவிர, இந்தத் தவறான வழியில் கிடைத்த இன்பம் நீடிக்கவில்லை, வேதனையும் வெட்கமும்தான் என்னை ஆட்டிப் படைத்தன.”ஆண்ட்ரூ: “வக்கிர ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள தவறுகள் மேல் தவறுகள் செய்வது சுலபமாக இருந்தது. ஆனால், அதேசமயத்தில் தவறு செய்துவிட்டேன் என்ற உறுத்தல் என்னை கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றது. என் மீதே எனக்கு வெறுப்பாக இருந்தது.”
டிரேஸி: “உப்பைத் தின்றவன் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்பதுபோல் நான் செய்த தவறுக்கான விளைவுகளைச் சீக்கிரத்தில் அனுபவிக்கவேண்டியிருந்தது. ஒழுக்கயீனம் என் இளமைக் காலத்தை அழித்துவிட்டது. நானும் என் பாய் ஃபிரெண்டும் சந்தோஷமாக இருப்போம் என்று நினைத்தேன். ஆனால், நாங்கள் நினைத்தபடி நடக்கவில்லை. இருவருக்குமே தாங்கமுடியாத மன வேதனையும் துன்பமும் கஷ்டமும்தான் மிஞ்சின. யெகோவா தேவன் சொன்னமாதிரி செய்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்து நினைத்து ஒவ்வொரு நாள் இரவும், படுக்கையில் விம்மி விம்மி அழுதேன்.”
விழித்தெழு!: பைபிளின் ஒழுக்கநெறிகள் கெடுபிடியானவை என நினைக்கும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
டெபரா: “பைபிள் நெறிகளை அசட்டை செய்தால் நீங்கள் சந்தோஷமாக இருக்க வாய்ப்பே இல்லை. நீங்கள் யெகோவாவின் அறிவுரைகளைக் கேட்டு நடக்கும்போது, யெகோவா எப்படி உணருவார் என்பதை யோசித்து பாருங்கள். அதோடு, அவருடைய புத்திமதிகளை அலட்சியப்படுத்தினால் வரும் பின்விளைவுகளையும் நிறுத்தி நிதானமாக யோசித்துப் பாருங்கள். உங்களுடைய செயல் உங்களோடும் உங்கள் விருப்பத்தோடும் முடியப்போவதில்லை. அது மற்றவர்களையும் பாதிக்கும். நீங்கள் கடவுளுடைய புத்திமதிகளைப் புறக்கணித்தால் உங்களுக்குத்தான் நஷ்டம்.”
மைக்: “உங்கள் நண்பர்களின் வாழ்க்கைமுறையை மேலோட்டமாகப் பார்த்தால், அவர்கள் ரொம்ப சந்தோஷமாக இருப்பதுபோல் தெரியலாம். அதைப் பார்த்து நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள். ஏனென்றால், நிஜம் அதுவல்ல. யெகோவா உங்களுக்குக் கொடுத்திருக்கிற விலையேறப்பெற்ற சொத்துக்களில் சுயமரியாதையும் கற்பும் அடங்கும். உங்களுடைய ஆசைகளை அடக்கமுடியவில்லை என்பதற்காக அந்தப் பரிசுகளை நீங்கள் இழப்பது உங்களையே நீங்கள் கேவலப்படுத்துவதற்குச் சமமாகும். உங்கள் பிரச்சினைகளைக் குறித்து உங்கள் பெற்றோரிடமும் முதிர்ச்சியுள்ள மற்றவர்களிடமும் பேசிப்பாருங்கள். நீங்கள் ஏதாவது தவறு செய்துவிட்டால் அதை மூடிமறைக்காமல் உடனடியாகச் சொல்லிவிடுங்கள்; நிலைமையைச் சரிசெய்ய வழிதேடுங்கள். யெகோவா சொல்கிறபடி செய்தால் மன அமைதி நிச்சயம்!”
ஆண்ட்ரூ: “உங்களுக்குப் போதிய அனுபவம் இல்லாதிருக்கையில், உங்கள் நண்பர்கள் சந்தோஷமாக வாழ்வதாக நினைப்பீர்கள். அவர்களைப் போலவே நீங்களும் யோசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். எனவே, உங்கள் நண்பர்களை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள். யெகோவாவை நம்புங்கள்; பல மன வேதனைகளிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம்.”
டிரேஸி: “‘எனக்கெல்லாம் அப்படி நடக்காது’ என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். ‘நீ இப்படிச் செய்தால் பின்னால் ரொம்ப வருத்தப்படுவாய்’ என்று என்னுடைய அம்மா என்னை உட்காரவைத்து என் முகத்துக்கு நேராகச் சொன்னார்கள். அப்படி அவர்கள் சொன்னபோது கோபம் கோபமாக வந்தது! நான் ஒன்றும் சிறுபிள்ளை இல்லை, எனக்கு எல்லாம் தெரியும், நான் எந்தத் தவறையும் செய்துவிடமாட்டேன் என்று நினைத்தேன். ஆனால், நான் நினைத்ததற்கு நேர்மாறாகத்தான் நடந்தது. எனவே, யெகோவாவின் நெறிகளுக்கு இசைய வாழுங்கள்; அப்படி வாழ்கிறவர்களோடு சகவாசம் வைத்துக்கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் உங்களுக்கு சந்தோஷம் உறுதி.”
பைபிள் நெறிகள்—கைவிலங்கா? சீட் பெல்டா?
பைபிள் நெறிகளுக்கு இசைய வாழ நீங்கள் முயற்சி செய்கையில் உங்களுடைய நண்பர்கள் கிண்டல் செய்கிறார்களா? அப்படியென்றால் பின்வரும் கேள்விகளை உங்களையே நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்: அவர்கள் ஏன் பைபிளிலுள்ள ஒழுக்கநெறிகளின்படி வாழ விரும்புவதே இல்லை? அவர்கள் சொந்தமாக பைபிளை வாசித்திருக்கிறார்களா, கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதால் வரும் நன்மைகளைப்பற்றி யோசித்திருக்கிறார்களா? அவற்றை அவமதிப்பதால் வரும் பின்விளைவுகளைப்பற்றி ஆழமாகச் சிந்தித்திருக்கிறார்களா? இல்லையென்றால், பத்தோடு பதினொன்றாக எல்லோரைப் போலவும் இருந்துவிடலாம் என்று நினைக்கிறார்களா?
‘திரளானபேர்களைப் பின்பற்றி’ வாழ்கிறவர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். (யாத்திராகமம் 23:2) அவர்களைவிட நல்ல தீர்மானங்களை எடுக்கவே நீங்கள் விரும்புவீர்கள், அல்லவா? அதை எப்படிச் செய்யலாம்? ‘தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறிந்து’ அதில் உறுதியாயிருங்கள் என்ற பைபிளின் அறிவுரைக்கு செவிசாய்ப்பதன்மூலம் நீங்கள் நல்ல தீர்மானங்களை எடுக்கலாம். (ரோமர் 12:2) யெகோவா ‘நித்தியானந்த தேவன்’, நீங்களும் சந்தோஷமாய் இருக்கவே அவர் விரும்புகிறார். (1 தீமோத்தேயு 1:11; பிரசங்கி 11:9) பைபிளில் பதிவாகியுள்ள நெறிகள் உங்கள் நன்மைக்காகத்தான். ஒருவேளை உங்கள் சுதந்திரத்தை முடக்கிப்போடும் கைவிலங்காக அவற்றை நீங்கள் கருதலாம். ஆனால், உண்மையில் பைபிளின் ஒழுக்கநெறிகள், பயணிகளைப் பாதுகாக்கும் சீட் பெல்ட்டைபோல் இருக்கின்றன.
பைபிளை நீங்கள் நூறு சதம் நம்பலாம். எனவே, அதன் நெறிகளுக்கு ஏற்றபடி வாழ நீங்கள் தீர்மானித்தால் யெகோவாவைச் சந்தோஷப்படுத்துவீர்கள், நீங்களும் பயனடைவீர்கள்.—ஏசாயா 48:17.
www.watchtower.org/ype என்ற வெப் சைட்டில் “இளைஞர் கேட்கின்றனர் . . . ” தொடரின் கூடுதலான கட்டுரைகளைக் காண்க
சிந்திப்பதற்கு
◼ பைபிள் நெறிகளின்படி வாழ்வது ஏன் உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம்?
◼ கடவுளுடைய நெறிகளின்படி வாழ்வதுதான் சிறந்தது என்பதில் நீங்கள் ஏன் உறுதியாய் இருக்க வேண்டும்?
[அடிக்குறிப்பு]
a இந்தக் கட்டுரையில் வரும் பெயர்கள் நிஜப்பெயர்கள் அல்ல.