தொல்பொருள் ஆராய்ச்சி—பைபிளை ஆதரிக்கிறதா?
தொல்பொருள் ஆராய்ச்சி—பைபிளை ஆதரிக்கிறதா?
பைபிளை ஊக்கமாய்ப் படிப்பவர்களுக்கு தொல்பொருள் ஆராய்ச்சி பயனுள்ளதாய் இருக்கிறது; ஏனெனில், அதன் கண்டுபிடிப்புகள் பெரும்பாலும், பைபிள் காலங்களில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கையையும் சூழலையும் பழக்கவழக்கங்களையும் மொழிகளையும்பற்றி இன்னும் அதிகமாய்த் தெரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுகின்றன. அதோடு, பண்டைய பாபிலோன், நினிவே, தீரு ஆகிய பட்டணங்களின் வீழ்ச்சியைப் பற்றிய தீர்க்கதரிசனங்களும் இன்னும்பிற தீர்க்கதரிசனங்களும் நிறைவேறியது சம்பந்தமாகப் பயனுள்ள தகவல்களையும் அது அளிக்கிறது. (எரேமியா 51:37; எசேக்கியேல் 26:4, 12; செப்பனியா 2:13-15) எனினும், அதிலும் சில குறைகள் உள்ளன. கலைப்பொருள்களைத் தோண்டியெடுக்கையில் அவற்றைப்பற்றி விளக்குவது அவசியமாயிருக்கிறது. அச்சமயங்களில், அவற்றைத் தவறாகவும் கூட்டிக்குறைத்தும் விளக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது.
உடைந்த ஜாடிகள், சிதைந்த செங்கல், இடிந்த சுவர்கள் போன்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுக்கும் பொருள்களின்மீது கிறிஸ்தவர்களுடைய விசுவாசம் சார்ந்தில்லை; அது, ஒன்றுக்கொன்று ஒத்திசைவாய் இருக்கும் பைபிள் சத்தியங்கள் முழுவதையும் சார்ந்திருக்கிறது. (2 கொரிந்தியர் 5:6; எபிரெயர் 11:1) பைபிள் புத்தகங்களிடையே முரண்பாடுகள் இல்லாதிருப்பது, எழுத்தாளர்கள் நேர்மையாய் எழுதியிருப்பது, தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் ஆகியவையும் இன்னும் பிற அம்சங்களும், “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” என்பதற்கு மறுக்க முடியாத அத்தாட்சியை அளிக்கின்றன. (2 தீமோத்தேயு 3:16) எனினும், பைபிள் பதிவுகளை உறுதிப்படுத்துகிற சுவாரசியமான தொல்பொருள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் சிலவற்றைக் கவனிக்கலாமா?
1970-ல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஒரு குழு, எருசலேமில் தோண்டியபோது தீயில் கருகிய, இடிந்துபோன ஒரு கட்டடத்தைக் கண்டுபிடித்தது. “ஆராய்ச்சி செய்து பழக்கப்பட்ட கண்களுக்கு அங்கு என்ன சம்பவித்திருக்கும் என்பது தெள்ளத் தெளிவாய்த் தெரிந்தது. . . . அந்தக் கட்டடம் தீக்கிரையாகியிருந்தது, சுவர்களும் உட்கூரையும் நொறுங்கி விழுந்திருந்தன” என்று அந்த ஆய்வுக்குழுவின் தலைவரான நமான் ஆவீகாட் எழுதினார். படிக்கட்டைப் பிடிப்பதற்கு விரல்களை நீட்டிய நிலையில் இருந்த கை ஒன்றின் எலும்புகள் [1] ஓர் அறையில் கிடந்தன.
தரை முழுவதும் நாணயங்கள் [2] சிதறிக்கிடந்தன; அவற்றில், பொ.ச. 69-ஐச் சேர்ந்த நாணயங்களும் அதற்கு முந்தைய ஆண்டுகளைச் சேர்ந்தவையும் இருந்தன; பொ.ச. 69-க்குப்பின் தயாரிக்கப்பட்ட நாணயங்கள் எதுவும் காணப்படவில்லை. இதுவே ரோமர்களுக்கு எதிராக யூதர்கள் கலகம் செய்த நான்காவது வருடமாகும். கட்டடம் நொறுங்கி விழுவதற்கு முன்பாக பொருள்கள் நாலாபுறமும் இறைக்கப்பட்டிருந்தன. “இதைப் பார்த்தபோது, பட்டணத்தைக் கைப்பற்றிய பிறகு ரோம படைவீரர்கள் வீடுகளைச் சூறையாடியதைப்பற்றி ஜொஸிஃபஸ் விவரித்தது எங்கள் நினைவுக்கு வந்தது” என்று ஆவீகாட் சொன்னார். பொ.ச. 70-ல் ரோமர்கள் எருசலேம் நகரத்தை அழித்து, அதிலிருந்த பொருள்களைக் கொள்ளையடித்தார்களென சரித்திராசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அந்த எலும்புகள் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணினுடையது என ஆய்வின் முடிவில் தெரியவந்தது. “கருகிக்கிடந்த அந்த வீட்டின் சமையலறையில் இருந்த அந்த இளம் பெண், ரோமர்கள் தாக்கியபோது மூண்ட தீயில் சிக்கிக்கொண்டாள்; தரையில் தடுமாறி விழுந்தவள் கதவருகே இருந்த படியைப் பிடிப்பதற்கு முயன்று கொண்டிருந்தபோது இறந்துவிட்டாள். நெருப்பு மளமளவென பரவியதால்
. . . தப்பிக்க முடியாமல் இடிபாடுகளில் புதையுண்டாள்” என்று பிப்ளிக்கல் ஆர்க்கியாலஜி ரிவ்யூ என்ற பத்திரிகை சொல்கிறது.இந்தக் காட்சி, எருசலேமைக் குறித்து இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்தை நமக்கு நினைப்பூட்டுகிறது; இப்படிச் சம்பவிப்பதற்கு சுமார் 40 வருடங்களுக்கு முன்பு அவர் இவ்வாறு சொன்னார்: “உன் சத்துருக்கள் . . . உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்[வார்கள்].”—லூக்கா 19:43, 44.
பைபிளில் குறிப்பிடப்பட்ட நபர்களின் பெயர்களும்கூட தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன; இவையும் அதன் நம்பகத்தன்மைக்கு சான்றளிக்கின்றன. பைபிள் எழுத்தாளர்கள் சில கற்பனை கதாபாத்திரங்களை உருவாக்கியிருப்பதாக அல்லது அவர்களின் புகழை மிகைப்படுத்தி எழுதியிருப்பதாக விமர்சகர்கள் சொல்லியிருந்தார்கள்; ஆனால், இத்தகைய கண்டுபிடிப்புகளில் சில, அவர்களுடைய கூற்றைத் தவிடுபொடியாக்கியிருக்கின்றன.
பைபிள் பெயர்களின் எழுத்துப்பொறிப்புகள்
அசீரிய ராஜாவான இரண்டாம் சர்கோனின் பெயர் ஏசாயா 20:1-ல் காணப்படுகிறது; ஆனால், அப்படி ஒரு நபர் உண்மையில் வாழவே இல்லையென ஒரு சமயம் பிரபல அறிஞர்கள் நினைத்தார்கள். எனினும், 1843-ல் ஈராக்கில் இன்றைய கர்சபாத் நகருக்கு அருகில், டைகிரீஸ் நதியின் உபநதியினுடைய கரையில் சர்கோனின் அரண்மனை [3] கண்டுபிடிக்கப்பட்டது. அது சுமார் 25 ஏக்கர் பரப்பளவை ஆக்கிரமித்திருக்கிறது. ஒருகாலத்தில் உலகத்தார் எவரும் அறிந்திராத இரண்டாம் சர்கோன், இன்று பிரபல அசீரிய ராஜாக்களில் ஒருவராய் கருதப்படுகிறார். அவருடைய பதிவேடுகள் [4] ஒன்றில், இஸ்ரவேலரின் நகரமான சமாரியாவைக் கைப்பற்றியதாக அவர் சொல்கிறார். பைபிள் காலவரிசைப் பட்டியலின்படி, பொ.ச.மு. 740-ல் சமாரியாவை அசீரியர்கள் கைப்பற்றினார்கள். அஸ்தோத்தைக் கைப்பற்றியதாகவும்கூட சர்கோன் எழுதியிருப்பது, ஏசாயா 20:1-ஐ மேலும் உறுதிப்படுத்துகிறது.
இன்றைய ஈராக்கில், பண்டைய பாபிலோன் நகரத்தின் இடிபாடுகளைத் தோண்டி எடுத்தபோது, இஷ்டார் வாயில் அருகே க்யூனிஃபார்ம், அதாவது, ஆப்புவடிவ எழுத்துகளுள்ள சுமார் 300 பலகைகளைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். அவை, பாபிலோனின் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் ஆட்சிகாலத்தைச் சேர்ந்தவை; அவற்றிலுள்ள பெயர் பட்டியல் ஒன்றில், “யுகின், யஹூத் தேசத்தின் ராஜா” என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. இது, யூத தேசத்தின் ராஜாவான யோயாக்கீனைக் குறிக்கிறது; இவர், பொ.ச.மு. 617-ல் எருசலேமை முதன்முறையாக நேபுகாத்நேச்சார் கைப்பற்றியபோது பாபிலோனுக்குச் சிறைபிடித்துச் செல்லப்பட்டார். (2 இராஜாக்கள் 24:11-15) யோயாக்கீனின் ஐந்து மகன்களுடைய பெயர்களும் அந்தப் பலகைகளில் காணப்படுகின்றன.—1 நாளாகமம் 3:17, 18.
2005-ஆம் ஆண்டு, தாவீது ராஜாவின் அரண்மனையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஓர் இடத்தைத் தோண்டினார்கள்; அப்போது, பெரிய கல் கட்டடம் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். அது, 2,600-க்கும் அதிக ஆண்டுகளுக்கு முன்பு கடவுளுடைய தீர்க்கதரிசியான எரேமியா வாழ்ந்த காலத்தில், எருசலேமை பாபிலோனியர்கள் தீக்கிரையாக்கியபோது அழிக்கப்பட்டிருக்கலாமென அவர்கள் நம்பினார்கள். அது தாவீதின் அரண்மனையின் எஞ்சிய பாகமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. எனினும், சுவாரசியமூட்டும் முக்கியப் பொருள் ஒன்றை அங்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஏலாட் மசார் கண்டுபிடித்தார்; அது 1 சென்டிமீட்டர் அகலமுள்ள களிமண் முத்திரை [5] ஆகும்: அதில், “ஷாவியின் மகனான ஷெலெமியாஹுவின் மகனான யஹுகாலுடையது” என்ற வாசகம் காணப்படுகிறது. இந்த முத்திரை உண்மையில் எரேமியாவை எதிர்த்து வந்ததாக பைபிளில் குறிப்பிடப்படும் யூத அதிகாரியான யஹுகால் (யூகால் என்றும் அறியப்பட்டார்) என்பவருடையது.—எரேமியா 37:3; 38:1-6.
இந்த யூகால், சாப்பானின் குமாரனான கெமரியாவுக்கு அடுத்தபடியான “இரண்டாவது அரசவை மந்திரி” என்று மசார் குறிப்பிடுகிறார்; இந்த யூகாலின் பெயரே தாவீதின் நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட முத்திரையில் காணப்படுகிறது. இந்த யூகாலை, செலேமியாவின் (ஷெலெமியாஹுவின்) குமாரன், யூதாவின் பிரபுவென பைபிள் அடையாளம் காட்டுகிறது. இந்த முத்திரை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, பைபிளை வாசிப்பவர்கள் மட்டுமே இவரை அறிந்திருந்தார்கள். மற்றவர்கள் அறியாதிருந்தார்கள்.
இஸ்ரவேலருக்கு எழுத, படிக்கத் தெரிந்திருந்ததா?
பண்டைய இஸ்ரவேலர் படிப்பறிவு பெற்றவர்கள் என பைபிள் சொல்கிறது. (எண்ணாகமம் 5:23; யோசுவா 24:26; ஏசாயா 10:19) விமர்சகர்களோ இதை ஒத்துக்கொள்ளவில்லை; பைபிள் வரலாறு பெரும்பாலும் வழி வழியாகச் சொல்லப்பட்டு வந்த நம்பகமற்ற தகவல்கள்தான் என அவர்கள் தர்க்கம் பண்ணினார்கள். ஆனால், இதற்கு 2005-ல் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. எப்படி? எருசலேமுக்கும் மத்தியதரைக் கடலுக்கும் இடையே உள்ள டெல் ஜயிட் என்ற இடத்தில் ஆய்வு நடத்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், புழக்கத்தில் இல்லாத எழுத்துக்களைக் கண்டுபிடித்தார்கள். அவை, இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிக மிகப் பழமையான எபிரெய எழுத்துக்கள் [6] ஆகும்; அந்த எழுத்துக்கள் சுண்ணாம்புக்கல்மீது செதுக்கப்பட்டிருந்தன.
இது, பொ.ச.மு. பத்தாம் நூற்றாண்டிற்குரியது; இதன் அடிப்படையில், “வேதபாரகருக்குரிய முறையான பயிற்சி,” “கலாச்சாரத்தில் முன்னேற்றம்” ஆகியவை இருந்தது என்றும், “இஸ்ரவேலருடைய நிர்வாகம் எருசலேமில் வேகமாக மேம்பட்டு வந்தது தெரிகிறது” என்றும் அறிஞர்கள் சிலர் சொல்கிறார்கள். எனவே, விமர்சகர்களின் கருத்துக்கு நேர்மாறாக, பொ.ச.மு. பத்தாம் நூற்றாண்டிலாவது இஸ்ரவேலர் படிப்பறிவு பெற்றவர்களாகவும் தங்களது வரலாற்றை எழுதி வைக்க முடிந்தவர்களாகவும் இருந்தது தெரிகிறது.
கூடுதல் ஆதாரங்கள் அளிக்கிற அசீரிய பதிவுகள்
ஒருகாலத்தில் பலம்படைத்த வல்லரசாய் திகழ்ந்த அசீரியாவைப்பற்றி பைபிள் அடிக்கடி குறிப்பிடுகிறது; அங்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தவை பைபிள் எந்தளவு துல்லியமானது என்பதற்கு அத்தாட்சி அளிக்கின்றன. உதாரணத்திற்கு, அசீரியாவின் தலைநகரான பண்டைய நினிவே நகரம் இருந்த இடத்தை ஆய்வு செய்தபோது, சனகெரிப் ராஜாவின் அரண்மனையில் சிற்பவேலைப்பாடுமிக்க கற்பலகை [7] ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது; அதில், பொ.ச.மு. 732-ல் லாகீசைக் கைப்பற்றிய பிறகு, யூத கைதிகளை அசீரிய படைவீரர்கள் சிறைபிடித்துச் செல்லும் காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்தை பைபிளில் நீங்கள் 2 இராஜாக்கள் 18:13-15-ல் வாசிக்கலாம்.
நினிவேயில் கண்டுபிடிக்கப்பட்ட, சனகெரிப்பின் பதிவேடுகள் [8], யூதாவை ஆண்ட எசேக்கியா ராஜாவின் ஆட்சிக்காலத்தில் அவர் படையெடுத்ததைப்பற்றி விவரிக்கின்றன; இவற்றில், எசேக்கியாவின் பெயர் காணப்படுகிறது. மற்ற அசீரிய ராஜாக்களுடைய ஆப்புவடிவ எழுத்துகளுள்ள பதிவேடுகளில், யூதாவை ஆண்ட ஆகாஸ், மனாசே ஆகிய ராஜாக்களின் பெயர்களும் இஸ்ரவேலை ஆண்ட உம்ரி, யெகூ, யோவாஸ், மெனாகேம், ஓசேயா ஆகிய ராஜாக்களின் பெயர்களும் காணப்படுகின்றன.
யுத்தங்களில் பெற்ற வெற்றிகளைப்பற்றி சனகெரிப் இந்தப் பதிவுகளில் பெருமிதத்தோடு குறிப்பிட்டிருக்கிறார்; ஆனால், எருசலேமைக் கைப்பற்றியதாக அவர் குறிப்பிடவில்லை. இந்தத் தகவல் முக்கியமாய் விடுபட்டிருப்பது, பைபிள் பதிவுகள் எந்தளவு நம்பகமானவை என்பதற்குக் கூடுதல் அத்தாட்சி அளிக்கிறது. ஏனெனில், அந்த ராஜா எருசலேமை முற்றுகையிடவே இல்லை, மாறாக, கடவுளால் தோற்கடிக்கப்பட்டார் என பைபிள் குறிப்பிடுகிறது. எனவே, சனகெரிப் அவமானத்தால் கூனிக்குறுகி, நினிவேக்குத் திரும்பினார், அங்கே, அவருடைய மகன்களால் கொல்லப்பட்டார் என்று பைபிள் தெரிவிக்கிறது. (ஏசாயா 37:33-37) இப்படிக் கொல்லப்பட்டதை, அசீரியர்களது இரண்டு எழுத்துப்பொறிப்புகள் ஆமோதிப்பது ஆர்வத்திற்குரியது.
நினிவேவாசிகளின் துன்மார்க்கத்தால், அந்த நகரம் முற்றிலும் அழிக்கப்படுமென யெகோவாவின் தீர்க்கதரிசிகளான நாகூமும் செப்பனியாவும் முன்னுரைத்தார்கள். (நாகூம் 1:1; 2:8–3:19; செப்பனியா 2:13-15) இவர்கள் சொன்ன தீர்க்கதரிசனங்கள், பொ.ச.மு. 632-ல் பாபிலோனின் ராஜாவான நபோபொலாசாரின் படைகளும் மேதிய ராஜாவான சையாக்சரிஸின் படைகளும் ஒன்றிணைந்து நினிவேயை முற்றுகையிட்டுக் கைப்பற்றியபோது நிறைவேற்றமடைந்தன. அதன் இடிபாடுகளைக் கண்டுபிடித்து, அகழ்வாய்வு நடத்தியபோது பைபிள் பதிவுகள் உண்மையென்பதற்கு அவை கூடுதல் சான்றளித்தன.
டைக்ரீஸ் நதிக்குக் கிழக்கே, நினிவே நகரத்திற்கு ஆதியாகமம் 31:14-16, 19, 25-35.
தென்கிழக்கே அமைந்திருந்த நூஜீ என்ற பண்டைய நகரத்தில் 1925-க்கும் 1931-க்கும் இடைப்பட்ட வருடங்களில் அகழ்வாய்வு நடத்தியபோது அநேக பூர்வகால பொருள்கள் கிடைத்தன; அவற்றில் சுமார் 20,000 களிமண் பலகைகளும் இருந்தன. பாபிலோனிய மொழியில் எழுதப்பட்டிருந்த அந்தப் பலகைகளில் ஏராளமான தகவல்கள் விளக்கமாகக் காணப்பட்டன; அவற்றில், முற்பிதாக்களின் காலத்தில் பின்பற்றப்பட்டதாய் ஆதியாகமப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டதைப் போன்ற சட்டப்பூர்வ பழக்கங்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. உதாரணத்திற்கு, குடும்ப தெய்வங்களாக வழிபடப்பட்ட சிறிய சிலைகள் ஒருவகை உரிமை பத்திரங்களாய் பயன்படுத்தப்பட்டதாக இந்தப் பலகைகள் கூறுகின்றன. பொதுவாக, களிமண்ணால் செய்யப்பட்ட இந்தச் சிலைகளை வைத்திருப்பவர்களுக்கு, இவை பரம்பரைச் சொத்தைப் பெறுவதற்கு உரிமை அளித்தன. முற்பிதாவான யாக்கோபு தன் குடும்பத்தாரோடு புறப்படுகையில் அவருடைய மனைவியான ராகேல் தன் தகப்பன் லாபானுக்குச் சொந்தமான குடும்ப தெய்வங்களை, அதாவது “சுரூபங்களை” எடுத்து வந்ததற்கான காரணத்தை இதிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. இந்தச் சுரூபங்களைத் திரும்பப் பெற லாபான் ஏன் முயற்சி செய்தார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.—ஏசாயாவின் தீர்க்கதரிசனமும் கோரேசுவின் உருளையும்
இங்கே படத்தில் காட்டப்பட்டுள்ள, பண்டைய கால களிமண் உருளையில் காணப்படும் ஆப்புவடிவ எழுத்துகள், மற்றொரு பைபிள் பதிவை உறுதிப்படுத்துகின்றன. இது, கோரேசுவின் உருளை [9] என்று அழைக்கப்படுகிறது. யூப்ரடீஸ் நதிக்கரையில், பாக்தாத் நகரிலிருந்து சுமார் 32 கிலோமீட்டர் தொலைவில், சிப்பார் என்ற பண்டைய நகரம் இருந்த இடத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உருளை, பெர்சிய சாம்ராஜ்யத்தை உருவாக்கிய மகா கோரேசு ராஜா பாபிலோனைக் கைப்பற்றியதைப்பற்றிக் குறிப்பிடுகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே தம்முடைய தீர்க்கதரிசியான ஏசாயா மூலமாக, கோரேசு என பெயரிடப்படவிருந்த மேதிய-பெர்சிய ராஜாவைப்பற்றி யெகோவா சொல்லியிருந்தார் என்ற தகவல் நமக்கு பிரமிப்பூட்டுகிறது. “அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்று . . . சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான்” என்று சொல்லியிருந்தார்.—ஏசாயா 13:1, 17-19; 44:26–45:3.
கோரேசுவின் கொள்கையைப்பற்றி அந்த உருளை சொல்வது குறிப்பிடத்தக்கது. பண்டைய வெற்றியாளர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவராக இந்த கோரேசு நடந்துகொண்டார்; தான் கைப்பற்றிய நாட்டில் ஏற்கெனவே சிறைப்பட்டிருப்பவர்களை அவர்களது தாய்நாட்டுக்கு அனுப்பி வைப்பது அவரது வழக்கம். அதன்படி, யூதர்களை கோரேசு விடுதலை செய்தார்; அவர்கள் தாயகம் திரும்பி எருசலேமைத் திரும்பவும் கட்டினார்கள். இதற்கு பைபிளும் உலக சரித்திரமும் அத்தாட்சி அளிக்கின்றன.—2 நாளாகமம் 36:23; எஸ்றா 1:1-4.
சொல்லப்போனால், பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கிற இடங்களைத் தொல்பொருள் ஆராய்ச்சி செய்கிற துறை ஓரளவுக்குப் புதியதே. இருந்தாலும், இப்போது முக்கிய ஆய்வுத் துறையாக ஆகியிருக்கிறது; இது, பயனுள்ள சில தகவல்களை அளித்திருக்கிறது. நாம் இதுவரை பார்த்த விதமாக, பைபிள் நம்பகமானது, துல்லியமானது என்பதற்கு பல கண்டுபிடிப்புகள் சான்றளிக்கின்றன. பைபிளிலுள்ள நுணுக்கமான விவரங்கள்கூட உண்மையானவை என்பதற்கு அத்தாட்சிகள் கிடைத்திருக்கின்றன.
கூடுதல் தகவலுக்கு
சந்தோஷமான, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ பைபிள் உங்களுக்கு உதவ முடியுமா? பைபிள்—உண்மையும் தீர்க்கதரிசனமும் அடங்கிய புத்தகம் என்று தலைப்பிடப்பட்ட இரண்டு மணிநேர ஆங்கில டிவிடியில் இந்த முக்கிய விஷயமும் சிந்திக்கப்படுகிறது; அதில், ஆர்வத்தைத் தூண்டுகிற பேட்டிகளும் இடம்பெறுகின்றன.—இது 32 மொழிகளில் கிடைக்கிறது.
பைபிளில் கட்டுக்கதைகளோ முரண்பாடுகளோ இல்லை என்பதற்கு கூடுதல் அத்தாட்சி வேண்டுமா?
பைபிளில் உள்ள அற்புதங்கள் உண்மையானவையா? இந்த 192 பக்க புத்தகத்தைப் படித்து உண்மைகளைக் கண்டறியுங்கள்.—56 மொழிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
[படத்திற்கான நன்றி]
மகா அலெக்சாந்தர்: Roma, Musei Capitolini
பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தப்படுகிற இந்தப் புத்தகத்தில் 19 அதிகாரங்கள் உள்ளன; இது பைபிளிலுள்ள முக்கியமான எல்லா போதனைகளையும் அலசுகிறது. பூமியையும் மனிதரையும் கடவுள் ஏன் படைத்தார் என்பதை விவரிக்கிறது.—தற்போது 162 மொழிகளில் கிடைக்கிறது.
பிள்ளைகளுக்கென்றே தயாரிக்கப்பட்டுள்ள அழகிய படங்கள் நிறைந்த இந்தப் புத்தகம் 116 நபர்களையும் சம்பவங்களையும்பற்றிக் காலவரிசைப்படி விவரிக்கிறது.—194 மொழிகளில் கிடைக்கிறது.
[பக்கம் 15-ன் படத்திற்கான நன்றி]
நாணயங்கள்: Generously Donated by Company for Reconstruction & Development of Jewish Quarter, Jerusalem Old City
[பக்கம் 15-ன் படத்திற்கான நன்றி]
Society for Exploration of Land of Israel and its Antiquities
[பக்கம் 16-ன் படங்களுக்கான நன்றி]
3: Musée du Louvre, Paris; 4: Photograph taken by courtesy of the British Museum; 5: Gabi Laron/Institute of Archaeology/Hebrew University © Eilat Mazar
[பக்கம் 17-ன் படங்களுக்கான நன்றி]
6: AP Photo/Keith Srakocic; 7, 8: Photograph taken by courtesy of the British Museum
[பக்கம் 18-ன் படத்திற்கான நன்றி]
Photograph taken by courtesy of the British Museum