Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

◼ பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பின் முழு தொகுப்பு 43 மொழிகளிலும் மூன்று ப்ரெயில் மொழிகளிலும் கிடைக்கிறது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு கூடுதலாக 18 மொழிகளிலும் ஒரு ப்ரெயில் மொழியிலும் கிடைக்கிறது. ஜூலை 2007 வரையில் மொத்தம் 14,34,58,577 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன.

◼ ஆசாரியரின் ஆசீர்வாதக் கூற்று என்று அழைக்கப்படும் எண்ணாகமம் 6:24-26-⁠லுள்ள பகுதிதான் இதுவரை கிடைத்துள்ள பைபிள் பகுதிகளிலேயே மிகப் பழமையானது. இந்தக் கூற்று சுருள் வடிவில் காணப்பட்ட இரு வெள்ளி தாயத்துகளில் பொறிக்கப்பட்டிருந்தது. இது பொ.ச.மு. ஏழாவது நூற்றாண்டின் பிற்பகுதியையோ ஆறாவது நூற்றாண்டின் முற்பகுதியையோ சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.​—⁠பிப்ளிக்கல் ஆர்க்கியாலஜி ரிவ்யூ, அ.ஐ.மா.

◼ டிசம்பர் 31, 2006-⁠ன் கணக்கெடுப்பின்படி, 2,426 மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பைபிளின் ஒரு புத்தகமாவது பிரசுரிக்கப்பட்டிருப்பதாகப் பதிவாகியுள்ளது. கடந்த வருடத்தைவிட 23 மொழிகள் அதிகம்.​—⁠யுனைட்டட் பைபிள் சொஸைட்டீஸ், பிரிட்டன்.

◼ அமெரிக்கர்களில் சுமார் 28 சதவீதத்தினர் பைபிளை “வார்த்தைக்கு வார்த்தை கடவுளுடைய வசனமாக” கருதுகிறார்கள். அது “கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்டிருந்தாலும் அதிலுள்ள அனைத்தையும் அப்படியே நம்பிவிட முடியாது” என 49 சதவீதத்தினர் நினைக்கிறார்கள். இன்னும் 19 சதவீதத்தினரோ அது “கட்டுக்கதைகளின் புத்தகம்” என்கிறார்கள்.​—⁠காலப் நியூஸ் செர்விஸ், அ.ஐ.மா.

மிகப் பழைய சீன பைபிள்?

“எபிரெய பைபிளின் சீன மொழிபெயர்ப்பு பற்றிய மிகப் பழமையான தகவல் பொ.ச. 781-ஆம் ஆண்டைச் சேர்ந்த நினைவுக்கல் [இடது] ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ளது” என்கிறார், பீக்கிங் பல்கலைக்கழக நிபுணர் இயீ சென். நெஸ்டாரிய கிறிஸ்தவர்களால் எழுப்பப்பட்ட இந்த நினைவுக்கல் 1625-⁠ஆம் ஆண்டில் ஷீயான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. “இந்தக் கல்லின் சீனப் பெயரை அப்படியே மொழிபெயர்த்தால், ‘டாச்சினிலிருந்து வந்த அறிவொளியூட்டும் மதம் சீனாவில் பரப்பப்பட்டதன் நினைவாக’ என வாசிக்கிறது; (. . . டாச்சின் என்பது ரோம பேரரசைக் குறிக்கும் சீனப் பதம்),” என்பதாக சென் விவரிக்கிறார். “அந்த நினைவுக்கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களில், ‘அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பைபிள் புத்தகங்களின் பட்டியல்’ மற்றும் ‘பைபிளை மொழிபெயர்த்தல்’ போன்ற சீனக் கூற்றுகளை காண முடிகிறது.”

[பக்கம் 30-ன் படத்திற்கான நன்றி]

© Réunion des Musées Nationaux/Art Resource

சகதியிலிருந்து புதையல்

அயர்லாந்தில், மக்கிப்போன தாவரங்களால் சகதியாக இருந்த ஒரு பகுதியைத் தோண்டிக்கொண்டிருந்தவர்கள் பைபிளின் பாகமான சங்கீத புத்தகம் ஒன்றை 2006-ஆம் ஆண்டில் கண்டெடுத்தார்கள். இந்தச் சங்கீத புத்தகம் பொ.ச. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அந்தச் சகாப்தத்தைச் சேர்ந்த வெகு சில கையெழுத்துப் பிரதிகளே எஞ்சியிருப்பதால் லத்தீனிலுள்ள இந்தப் பிரதி ஒரு புதையலாகவே கருதப்படுகிறது. ஏறக்குறைய 100 பக்கங்களை உடைய இந்தப் பிரதி நல்ல தரமான விதத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. ஆட்டுக்குட்டி அல்லது கன்றுக்குட்டியின் மென்மையான தோல்களால் ஆன இந்தப் பக்கங்கள் ஒன்றாக இணைத்துக் கட்டப்பட்டிருந்தன. “இந்த சங்கீதப் புத்தகத்தை மறைத்து வைக்க பயன்படுத்தப்பட்ட ஒரு விரிப்பு, ஒரு தோல் பை ஆகியவற்றின் எஞ்சிய பகுதிகள் கிடைத்திருப்பதிலிருந்து இது வேண்டுமென்றே ஒளித்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது; 1,200 ஆண்டுகளுக்கு முன் ‘வைக்கிங்’ என்ற கடற்கொள்ளையரிடமிருந்து பாதுகாப்பதற்காக ஒருவேளை இது இவ்வாறு வைக்கப்பட்டிருக்கலாம்” என்கிறது லண்டனின் செய்தித்தாளாகிய த டைம்ஸ். அதன் பக்கங்கள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டும் கொஞ்சம் அழுகியும் இருந்தபோதிலும், அவற்றைப் பிரித்தெடுத்துப் பாதுகாக்கலாம் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மண் சொல்லும் வரலாறு

எருசலேம் ஆலயம் இருந்த இடத்திலிருந்து வண்டி வண்டியாக எடுக்கப்பட்ட மண்ணை சலித்தெடுக்கையில் தொல்பொருள் ஆய்வாளர்கள் பல கைவினைப் பொருள்களைக் கண்டெடுத்தார்கள்; ஆயிரக்கணக்கில் கிடைத்த இந்தப் பொருள்கள் இஸ்ரவேலருக்கு முற்பட்ட காலத்திலிருந்து நவீன சகாப்தம் வரையான காலத்தைச் சேர்ந்தவை. இவற்றில் ஓர் அம்புத்தலை சிக்கியது. இது அந்த இடத்திலிருந்த முதல் யூத ஆலயத்தை அழித்த நேபுகாத்நேச்சாரின் படையால் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை அம்பாகும். பொ.ச.மு. ஏழாவது அல்லது ஆறாவது நூற்றாண்டைச் சேர்ந்த களிமண் முத்திரை ஒன்றும் கிடைத்தது. கதால்யாஹூ பென் இமர் ஹாகோஹன் என்ற எபிரெய பெயரைத் தாங்கியிருப்பதாகச் சொல்லப்படும் இந்த முத்திரை, ஆய்வாளர்கள் கண்டெடுத்தவற்றிலேயே மிகவும் குறிப்பிடத்தக்கது. “ஓர் ஆசாரியனாகவும் ஆலய அதிகாரியாகவும் பைபிளில் [எரேமியா 20:1] விவரிக்கப்பட்டுள்ள பஸ்கூர் பென் இம்மேர் என்பவரின் சகோதரனுக்கு” சொந்தமானதாக அந்த முத்திரை இருக்கலாம், என்கிறார் தொல்பொருள் ஆய்வாளர் கேப்ரியல் பார்க்கை.