நிஜமாகவே அத்தனை வருடங்கள் வாழ்ந்தார்களா?
நிஜமாகவே அத்தனை வருடங்கள் வாழ்ந்தார்களா?
பைபிள் பதிவு குறிப்பிடுகிறபடி, ஆதாம் 930 வருடங்கள் வாழ்ந்தார்; சேத் 912 வருடங்கள் வாழ்ந்தார்; மெத்தூசலா 969 வருடங்கள் வாழ்ந்தார்—இவர் இன்னும் 31 வருடங்கள் வாழ்ந்திருந்தால் ஆயிரம் வருடங்களை எட்டியிருப்பார்! (ஆதியாகமம் 5:5, 8, 27) இந்த வருடங்கள் எவ்வளவு நீண்டவை? இப்போதைய வருடங்களின் கால அளவை உடையவையா அல்லது அவற்றைவிட குறுகிய காலப் பகுதியை உடையவையா? சிலர் சொல்வதுபோல், அன்றைய வருடங்கள் தற்போதைய மாதங்களுக்குச் சமமானவையா?
நாம் தற்போது கணக்கிடுவதுபோல்தான் அன்றைய வருடங்களும் கணக்கிடப்பட்டதாக பைபிளிலேயே உள்ள அத்தாட்சிகள் சான்றளிக்கின்றன. சற்று யோசித்துப் பாருங்கள்: அன்றைய வருடம் இன்றைய மாதத்திற்குச் சமமாக இருந்திருந்தால், கீழே குறிப்பிடப்படும் சிலர், சிறு வயதிலேயே அப்பாக்களாக ஆகியிருக்க வேண்டும். அந்த வயதில் அதற்கு சாத்தியமே இல்லை. உதாரணமாக, கேனான் ஆறு வயதடையும் முன்பேயும் மகலாலெயேலும் ஏனோக்கும் ஐந்து வயதை எட்டிய கொஞ்ச நாட்களிலேயும் அப்பாக்களாக ஆகியிருப்பர்.—ஆதியாகமம் 5:12, 15, 21.
மேலும், அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் நாட்களையும் மாதங்களையும் வருடங்களையும் வேறுபடுத்திக் கண்டார்கள். (ஆதியாகமம் 1:14-16; 8:13) சொல்லப்போனால், நோவாவின் விவரமான காலக்கணக்கிலிருந்து ஒரு மாதம் எவ்வளவு நீளமானது என்பதைக் கணக்கிட முடிகிறது. ஆதியாகமம் 7:11, 24-ஐயும் ஆதியாகமம் 8:3, 4-ஐயும் ஒப்பிடும்போது, இரண்டாம் மாதம் 17-ஆம் தேதியிலிருந்து ஏழாம் மாதம் 17-ஆம் தேதிவரை உள்ள ஐந்து மாதங்கள் 150 நாட்களுக்கு சமமாக இருப்பதைக் காட்டுகிறது. அப்படியானால், நோவா போட்ட கணக்கில், ஒரு மாதத்திற்கு 30 நாள் என்பதும், அதுபோன்ற 12 மாதங்கள் சேர்ந்து ஒரு வருடத்தைக் குறித்தது என்பதும் தெள்ளத்தெளிவாகிறது.—ஆதியாகமம் 8:5-13. a
ஆனால் மக்கள் 900-க்கும் அதிகமான வருடங்கள் வாழ்வது சாத்தியம்தானா? மனிதர் என்றென்றுமாக வாழ்வதற்காகவே கடவுள் அவர்களைப் படைத்ததாகவும் ஆதாம் செய்த பாவத்தின் காரணமாகவே அபூரணமும் மரணமும் மனித குடும்பத்தைத் தொற்றிக்கொண்டதாகவும் பைபிள் நமக்குச் சொல்கிறது. (ஆதியாகமம் 2:17; 3:17-19; ரோமர் 5:12) நாம் இப்போது இருப்பதைவிட, ஜலப்பிரளயத்திற்கு முன் வாழ்ந்தவர்கள் பரிபூரண நிலைக்கு மிகவும் அருகாமையில் இருந்தனர். எனவே அவர்களுடைய நீண்ட ஆயுசுக்கு அது ஒரு முக்கிய காரணி என்பதில் சந்தேகமே இல்லை. மெத்தூசலாவை எடுத்துக்கொண்டால், அவர் ஆதாமுக்குப் பிறகு ஏழாம் தலைமுறையிலேயே பிறந்தவர்.—லூக்கா 3:37, 38.
என்றாலும் சீக்கிரத்தில் யெகோவா தேவன், ஆதாமினால் வந்த பாவத்தின் விளைவுகளை எவ்விதச் சுவடும் தெரியாமல் நீக்கிவிடுவார். தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தில் விசுவாசம் வைக்கிற அனைவருக்கும் இவ்வாறு செய்வார். “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.” (ரோமர் 6:23) ஆம், மெத்தூசலா வாழ்ந்த 969 வருடமெல்லாம் மிக சொற்ப காலமே என்று நினைக்கும் நாள் நிச்சயமாகவே வரும்!
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வேதாகமத்தின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 2, பக்கம் 1214-ஐப் பார்க்கவும்.
[பக்கம் 30-ன் வரைபடம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
1000
மெத்தூசலா
ஆதாம்
சேத்
900
800
700
600
500
400
300
200
100
இன்றைய சராசரி மனிதன்