ஆன்மீக ரீதியில் செல்வந்தராயிருக்க தீர்மானமாய் இருத்தல்
ஆன்மீக ரீதியில் செல்வந்தராயிருக்க தீர்மானமாய் இருத்தல்
பொ ருளாதார ரீதியில் செல்வந்தராக வேண்டுமென்றால் தீவிர முயற்சியும் தியாகமும் அவசியம். ஆன்மீக ரீதியில் செல்வந்தராக வேண்டுமென்றாலும் அதுவே முக்கியம். “பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்” என்று சொல்வதன் மூலம் இயேசுவும் இந்தக் கருத்தை வலியுறுத்தினார். (மத்தேயு 6:20) ஆன்மீகச் செல்வங்கள் தானாக சேர்ந்துவிடாது. வங்கியில் கணக்கு வைத்திருப்பது மட்டுமே எப்படி ஒருவரை செல்வந்தராக ஆக்கிவிடாதோ, அப்படியே ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருப்பது மட்டுமே ஒருவரை ஆன்மீக ரீதியில் செல்வந்தராக ஆக்கிவிடாது. கடவுளிடம் நெருங்கிய உறவை கொண்டிருப்பதற்கும், ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கும், கடவுளுக்குப் பிரியமான குணங்களை வளர்த்துக்கொள்வதற்கும் உறுதியான தீர்மானம், நேரம், தீவிர முயற்சி, தியாகம் ஆகியவை அவசியம்.—நீதிமொழிகள் 2:1-6.
ஆஸ்தியும், ஆன்மீகமும்—இரண்டுமே சாத்தியமா?
ஆன்மீகச் செல்வங்களோடுகூட ஏராளமான பொருள் செல்வங்களையும் ஒருவர் சொந்தமாக்கிக்கொள்ள முடியாதா? ஒருவேளை முடியலாம், ஆனால் அவற்றில் ஒன்றை மட்டும்தான் ஒழுங்காக நாட முடியும். அதைப்பற்றி இயேசு இவ்வாறு சொன்னார்: “தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் [அதாவது, செல்வத்துக்கும்] ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.” (மத்தேயு 6:24ஆ) ஏன்? ஏனெனில், ஆன்மீகச் செல்வங்களை நாடும் அதே சமயத்தில் பொருளாதாரச் செல்வங்களையும் நாடுவது கடினம், ஒன்றின் வழியில் மற்றது குறுக்கிடும். எனவேதான், ஆன்மீகச் செல்வங்களைச் சேர்த்து வைக்கும்படி தம் சீஷர்களுக்குச் சொல்வதற்கு முன்பாக இயேசு இவ்வாறு கூறினார்: “பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம் [“சேர்த்து வைப்பதை நிறுத்துங்கள்,” NW]; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.”—மத்தேயு 6:19.
இயேசுவின் இந்த அறிவுரையை அசட்டை செய்து, ஆன்மீகச் செல்வத்தோடுகூட ஒருவர் பொருளாதார செல்வத்தையும் நாடினால் என்ன நடக்கும்? “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 6:24அ) இவை இரண்டையுமே ஒருவர் நாடிக்கொண்டிருந்தால் கடமைக்கென்றுதான் ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுவார், ஆனால் அதுகூட அவருக்குப் பெரும் தொல்லையாகிவிடலாம், எப்போதுமே அது தனக்கு இடைஞ்சலாக இருப்பதாக அவர் கருதலாம். வாழ்க்கையின் கவலைகளைச் சமாளிப்பதற்கு கடவுளைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக பணத்தையும் பொருளையுமே சார்ந்திருப்பார். அது இயேசு சொன்னவற்றுக்கு பொருத்தமாக இருக்கிறது: “உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.”—மத்தேயு 6:21, பொது மொழிபெயர்ப்பு.
ஒவ்வொரு கிறிஸ்தவரும் தன்னுடைய நேரத்தை எதில் செலவிட விரும்புகிறார் என்பதையும் தன்னுடைய கவனத்தையும் மனதையும் எதில் ஒருமுகப்படுத்த விரும்புகிறார் என்பதையும் தீர்மானிப்பதற்கு முன்பு இதுபோன்ற பைபிள் அறிவுரையைச் சிந்திக்க வேண்டும். ஒரு கிறிஸ்தவர் எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் என்பதில் கடவுள் எந்தவொரு வரையறையையும் விதிக்கவில்லை, இருப்பினும், பேராசை பிடித்தவர்களை கடவுள் தண்டிக்காமல் விடமாட்டார். (1 கொரிந்தியர் 6:9, 10) பைபிள் அறிவுரைகளை அசட்டை செய்து பொருளாதார ரீதியில் செல்வந்தராக வேண்டுமென தீர்மானமாய் இருப்பவர்கள் ஆன்மீக ரீதியிலும் மன ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் பாதிக்கப்படுவார்கள் என நாம் ஏற்கெனவே பார்த்தோம். (கலாத்தியர் 6:7) அதற்கு மாறாக, தங்கள் ஆன்மீகத் தேவைகளைக் குறித்து உணர்வுள்ளவர்கள் சந்தோஷமாய் இருப்பார்கள் என இயேசு சொன்னார். (மத்தேயு 5:3) நம்முடைய சந்தோஷத்திற்கும் நலனிற்கும் எது மிக அவசியம் என்பது நம்முடைய படைப்பாளருக்கும் அவருடைய மகனுக்கும் நிச்சயம் தெரியும்.—ஏசாயா 48:17, 18.
இந்தத் தீர்மானத்தில் உங்களுக்கு வருத்தமிருக்காது
நீங்கள் கடவுளை நாடுவீர்களா அல்லது செல்வங்களை நாடுவீர்களா? நம்முடைய பொருளாதார தேவைகளுக்கும் கவனம் செலுத்த வேண்டும் என்பது உண்மைதான். தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு சொன்னார்: “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.” கிறிஸ்தவர்கள், பணத்தில் தங்கள் நம்பிக்கையை வைக்காமல் கடவுளை சார்ந்திருக்கும்படியும் “நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும்” பவுல் உற்சாகப்படுத்தினார். (1 தீமோத்தேயு 5:8; 6:17, 18) உங்கள் கவனத்தை எதில் ஒருமுகப்படுத்துவீர்கள்? எதை நாடுவீர்கள்? நற்கிரியைகள் என பவுல் குறிப்பிட்டவற்றில் முக்கியமானது, பிரசங்கித்து சீஷராக்கும் வேலையே. இந்த வேலையைச் செய்யும்படியே இயேசு தம் சீஷர்களுக்குச் சொன்னார். (மத்தேயு 28:19, 20) கிறிஸ்தவர்கள் மனமுவந்து தங்கள் வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்வதற்கான காரணம், அவர்கள் வேலையை குறைத்துக்கொண்டு வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவிப்பதற்காக அல்ல, ஆனால் இந்த முக்கியமான வேலையில் இன்னும் அதிகத்தைச் செய்வதற்காகவே; அப்படிச் செய்கையில் அவர்கள் கடவுளுடைய வாக்குப்பண்ணப்பட்ட புதிய பூமியில் ‘வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கிறார்கள்.’ ஆன்மீகச் செல்வங்களைச் சம்பாதிப்பது “பொன்னைச் சம்பாதிப்பதிலும் . . . எவ்வளவு உத்தமம்!” என்பதை அவர்கள் இப்பொழுதே உணருகிறார்கள்.—1 தீமோத்தேயு 6:19; நீதிமொழிகள் 16:16; பிலிப்பியர் 1:10, NW.
எடீ என்பவருடைய அனுபவத்தைக் கவனியுங்கள். அவர் சிறு பிள்ளையாக இருந்தபோதே அவருடைய குடும்பத்தினர் யெகோவாவின் சாட்சிகளாக ஆனார்கள். ஒருசமயம் அவருடைய குடும்பம் எல்லா சொத்துக்களையும் இழந்து, தங்கள் வீட்டைவிட்டே வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதைக் குறித்து எடீ இவ்வாறு சொல்கிறார்: “எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டால் என்ன செய்வோம் என்ற கவலை எப்பொழுதுமே எனக்கு இருந்தது. இப்பொழுதோ எங்களிடம் உண்மையிலேயே எதுவுமில்லை. ஆனால் என்ன நடந்தது தெரியுமா? பயப்படும் விதமாய் எதுவும் நடக்கவில்லை! இந்த நிலையிலும்கூட சாப்பிடுவதற்கு உணவும் உடுத்துவதற்கு உடையும் எங்களுக்குக் கிடைத்தது. யெகோவா எங்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தார்; நாங்களும் எங்களுடைய இழப்புகளிலிருந்து மீண்டு வெளியே வந்தோம். இந்த அனுபவம், மத்தேயு 6:33-ல் உள்ள இயேசுவின் வாக்குறுதிக்கு கவனம் செலுத்த எனக்கு கற்றுத் தந்தது. அதாவது, நம்முடைய வாழ்க்கையில் கடவுளுடைய ராஜ்யத்திற்கு முதலிடத்தைக் கொடுக்கும்போது பொருளாதார தேவைகளைக் குறித்து நாம் ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை.” இன்று தன்னுடைய மனைவியோடு எடீ முழுநேர பயணக் கண்காணியாக சேவை செய்து வருகிறார். பொருளாதார ரீதியில் அவர்களுக்கு தேவையானதை பெற்றிருக்கிறார்கள்; முக்கியமாக, ஆன்மீக ரீதியில் அவர்கள் செல்வந்தர்களாக இருக்கிறார்கள்.
அளவிலா பலன்கள்
பூமியிலிருக்கும் பொக்கிஷங்களை திருடர்கள் திருடிவிடலாம், ஆனால் ஆன்மீகச் செல்வங்கள் நிரந்தரமானவை. (நீதிமொழிகள் 23:4, 5; மத்தேயு 6:20) ஆன்மீக முன்னேற்றத்தை அளப்பது கடினம்தான். ஒருவர் பொருளாதாரத்தில் எந்தளவு முன்னேறியிருக்கிறார் என்பதைச் சுலபமாய் சொல்லிவிடலாம், ஆனால் அன்பிலோ சந்தோஷத்திலோ விசுவாசத்திலோ எந்தளவு முன்னேறியிருக்கிறார் என்பதைச் சொல்வது அவ்வளவு சுலபமல்ல. ஆனால் ஆன்மீகச் செல்வங்கள் அளவிலா பலன்களை அளிக்கக்கூடியவை. ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுவதற்காக வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான வீடுகளையும் நிலங்களையும்கூட தியாகம் செய்கிற தம் சீஷர்களைக் குறித்து இயேசு இவ்வாறு சொன்னார்: “என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, . . . பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—மாற்கு 10:29, 30.
உங்களுடைய வாழ்க்கையில் எதற்கு முதலிடத்தைக் கொடுப்பீர்கள்? கடவுளுக்கா, செல்வங்களுக்கா?
[பக்கம் 8, 9-ன் படங்கள்]
பொருளாதார செல்வங்களை நாடுகிறீர்களா . . .
. . . அல்லது ஆன்மீக செல்வங்களை நாடுகிறீர்களா?