மேன்மைமிகு மேகாங்கை வந்துபாருங்கள்
மேன்மைமிகு மேகாங்கை வந்துபாருங்கள்
மேகாங் ஆறு ஆசியாவின் ஆறு தேசங்களை ஊடுருவிப் பாய்ந்து அந்தத் தேசங்களின் கிட்டத்தட்ட 100 இனங்களையும் வித்தியாசப்பட்ட கலாச்சாரங்களையும் சேர்ந்த சுமார் 10 கோடி மக்களுக்குப் பேராதரவு அளிக்கிறது. இந்த ஆறு, வருடந்தோறும் 13 லட்சம் டன் மீன்களை வாரிவழங்குகிறது. இது, வட கடலில் ஒரு வருடத்திற்குப் பிடிக்கப்படும் மீன்களின் அளவைவிட நான்கு மடங்கு அதிகமாம்! 4,350 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடும் இந்த ஆறுதான் தென்கிழக்கு ஆசியாவிலேயே நீண்டது. இது பல தேசங்களைக் கடந்து செல்வதால் பல பெயர்மாலைகளைச் சூட்டிக்கொள்கிறது, தாய்லாந்து மக்கள் இதை மே னாம் காங் என அழைக்கிறார்கள். சற்றே சுருக்கி மேகாங் என்ற பெயரிலேயே இது பிரபலமாக அறியப்படுகிறது.
இமயத்தின் உச்சியில் பிறக்கிற மேகாங், வாலிப முறுக்குடன் பீறிட்டு அருவிகளின் கொத்துக்களாய் மலைச்சரிவில் வீழ்கிறது; ஆழமான மலை இடுக்குகள் வழியாக பேரிரைச்சலுடன் கொட்டுகிறது. அது சீனாவைவிட்டு வெளியேறுகையில், லான்ட்சாங் என்று அழைக்கப்படுகிறது; ஆற்றின் மொத்த நீளத்தில் கிட்டத்தட்ட பாதியளவு அங்கேயே கடந்துவிடுகிறது. அங்கே, பிரமிப்பூட்டும் விதத்தில் 4,500 மீட்டர் உயரத்திலிருந்து ஓவென்று கீழ்நோக்கி விழுகிறது. அவ்வாற்றின் பிற்பாதி 500 மீட்டர் உயரத்திலிருந்து பாய்வதால், சலசலப்பின்றி அமைதியாய் ஓடுகிறது. சீனாவைக் கடந்தவுடன் மயன்மாருக்கும், லாவோஸுக்கும் இடையே அது எல்லையாக அமைகிறது. அதோடு, லாவோஸ், தாய்லாந்து இவ்விரண்டிற்கும் இடையேயுள்ள பெரும்பகுதிக்கும் இதுவே எல்லையாக அமைகிறது. கம்போடியாவில் இரண்டாகப் பிரிந்து, வியட்நாமுக்குள் வழிந்தோடி, பல கால்வாய்களை உருவாக்கியப் பின் தென் சீனக் கடலில் சங்கமிக்கிறது.
1860-களின் பிற்பகுதியில், மேகாங் வழியாக சீனாவுக்குள் நுழைவதற்கு பிரெஞ்சு நாட்டவர் ஒரு மார்க்கத்தைக் கண்டுபிடிக்க முயன்றனர். என்றாலும், கம்போடியாவிலுள்ள க்ராட்டியே நகருக்கருகில் ஆற்றின் ஆக்ரோஷத்தையும், தெற்கு லாவோஸிலிருக்கும் கான் நீர்வீழ்ச்சி என்றழைக்கப்படுகிற அச்சம்தரும் கும்பலான நீர்வீழ்ச்சிகளையும் சந்திக்க நேர்ந்தபோது அவர்கள் ஏமாற்றமடைந்தனர். உலகத்திலுள்ள எந்த நீர்வீழ்ச்சியைக் காட்டிலும் கான் நீர்வீழ்ச்சிகள் அதிகமான தண்ணீரை வாரிக்கொட்டுகின்றன, இது கனடாவுக்கும் ஐக்கிய மாகாணங்களுக்கும் இடையேயுள்ள எல்லையின் இருபுறமும் பாயும் நயாகரா நீர்வீழ்ச்சி கொட்டுகிற தண்ணீரைக் காட்டிலும் இருமடங்கு அதிகம்.
ஜீவனளிக்கும் ஆறு
மேகாங், தென்கிழக்கு ஆசியப் பொருளாதாரத்தின் மூலாதாரமாய் விளங்குகிறது. லாவோஸின் தலைநகர் வியன்டியனும் கம்போடியாவின் தலைநகர் நாம் பென்னும் இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ள இரு துறைமுக நகரங்கள். இதனுடைய முனைப்பகுதி வியட்நாம் மக்களுக்கு உயிர்நாடி. அங்கே இது ஏழு கிளைகளாகப்
பிரிந்து, ஒரு கணிப்பின்படி 3,200 கிலோமீட்டர் நீளமான நீர்வழிகளுடன் 40,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய ஒரு கழிமுகப் பகுதியை உருவாக்குகிறது. இந்த ஏராளமான தண்ணீர் வயல்களுக்கும் நெல்லுக்கும் நீர்ப்பாசனமாய் இருப்பதோடு வண்டல்மண்ணையும் கொடுத்து வளமூட்டுகிறது; இதனால் விவசாயிகள் வருடந்தோறும் நெல்லை மூன்றுபோகம் அறுக்கிறார்கள். உண்மையில், இந்தப் பிரபலமான உணவுப்பயிரை ஏராளமாய் ஏற்றுமதி செய்வதில் தாய்லாந்துக்குப் பிறகு வியட்நாம் உலகில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது.ஒரு கணிப்பின்படி 1,200 வகை மீன்கள் மேகாங்கில் வாழுகின்றன, அவற்றில் சிலவகை மீன்களும் இறால்களும் பண்ணையில் வளர்க்கப்படுகின்றன. ட்ரே ரியல் என்ற பிரபலமான உள்ளூர் மீன் ஒரு விசேஷ காரணத்திற்காகப் பேர்பெற்று விளங்குகிறது; அதாவது, கம்போடியா நாட்டின் ‘ரியல்’ நாணயம் இந்த மீனின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. அழிந்துவரும் ஒருவகை கெளித்தி மீன்களுக்கும் இந்த ஆறு அடைக்கலம் தருகிறது, இந்த மீன்கள் ஒன்பது அடி நீளம்வரை வளரலாம். 2005-இல் மீனவர்கள் 290 கிலோ எடையுள்ள ஒரு கெளித்தி மீனை பிடித்தனர், உலகத்தில் எங்கும் பார்க்கமுடியாத மிகப்பெரிய நன்னீர் மீன் இதுவாகவே இருக்கலாம்! எண்ணிக்கையில் குறைந்து வரும் மற்றொரு உயிரினம் ஐராவதி டால்ஃபின்கள். இவை 100-க்கும் குறைவாகவே இந்த ஆற்றில் இருக்கலாமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
லட்சக்கணக்கான மக்களுக்குப் படியளக்கும் மேகாங் ஆறு, எல்லா அளவிலான கடல் போக்குவரத்துக்கும் நெடுஞ்சாலையாகவும் திகழ்கிறது; பயணிகளை ஏற்றிச் செல்லும் சிறிய தோணிகள், பொருள்களைச் சுமந்து ஊர்ந்துபோகும் பெரிய மரக்கப்பல்கள், மற்றும் சமுத்திரத்திலிருந்து போக்கும் வரத்துமாயிருக்கும் கப்பல்கள் இதில் அடங்கும். மேலும், கான் நீர்வீழ்ச்சிகளைக் கடந்து வியன்டியனுக்குப் போக விரும்பும் பல உல்லாசப் பயணிகளுக்கும் இந்த ஆறு பிரபலம். இந்நகரம் கால்வாய்களுக்கும், பல அடுக்குக் கோபுரங்களுக்கும், உயரமான கம்புகள்மீது கட்டப்பட்ட வீடுகளுக்கும் புகழ்பெற்றது. 1,000 வருடங்களுக்கும் மேலாக வணிகம், அரசியல் மற்றும் மதம் ஆகியவற்றிற்கு இந்நகரம் மையமாகத் திகழ்கிறது. வியன்டியனிலிருந்து, ஒருவர் ஆற்றுமூலத்தை நோக்கி லுவாங்பிராபாங்கிற்கு துணிந்து செல்லலாம். இந்தத் துறைமுக நகரம் நூற்றாண்டுகளாக தாய்-லாவோ மாகாணத்தின் தலைநகராக விளங்கியது; பிரெஞ்சு குடியேற்ற ஆட்சிக்காலம் உட்பட சிலகாலத்திற்கு லாவோஸின் அரசுத் தலைநகராகவும் விளங்கியது. பிரெஞ்சுக் குடியேற்றத்தின் பின்னணியை இந்தச் சரித்திரப் புகழ்வாய்ந்த நகரில் இன்னும் காணலாம்.
சமீப காலங்களில் மேகாங் ஆறு நெடுக, கவலைதரும் சில மாற்றங்களைப் பார்க்க முடிகிறது. நாசகரமான முறைகளைப் பயன்படுத்தி மீன்களைப் பிடித்தல், காடுகளை அழித்தல், நீர் மின்சக்திக்காக பிரமாண்டமான அணைகளைக் கட்டுதல் ஆகியவை இவற்றில் அடங்கும். இதைப் பார்க்கும் அநேகர், நிலைமை கைமீறிப் போய்விட்டதாக நினைக்கலாம். ஆனாலும் நம்பிக்கை உண்டு.
நமது அன்பான படைப்பாளர் தமது ராஜ்யத்தின் மூலம் மனித விவகாரங்களில் வெகுவிரைவில் தலையிடப் போகிறாரென பைபிள் வாக்களிக்கிறது. (தானியேல் 2:44; 7:13, 14; மத்தேயு 6:10) அந்தப் பரிபூரண உலக அரசாங்கத்தின் வழிநடத்துதலில், இந்த முழு பூமியும் நல்ல நிலைக்கு வரும். ஆறுகளும் குறிப்பான அர்த்தத்தில், மகிழ்ச்சியில் “கைகொட்டி” கெம்பீரிக்கும். (சங்கீதம் 98:7-9) அந்தக் கைதட்டலில் மேன்மைமிகு மேகாங்கும் கலந்துகொள்ளட்டும்.
[பக்கம் 24-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
சீனா
மயன்மார்
லாவோஸ்
தாய்லாந்து
கம்போடியா
வியட்நாம்
மேகாங் ஆறு
[பக்கம் 24-ன் படம்]
நெல் வயல்கள், மேகாங் கழிமுகம்
[பக்கம் 24-ன் படம்]
சுமார் 1,200 வகை மீன்கள் மேகாங் ஆற்றில் வாழுகின்றன
[பக்கம் 25-ன் படம்]
மிதவை அங்காடி, வியட்நாம்
[பக்கம் 24-ன் படங்களுக்கான நன்றி]
நெல் வயல்கள்: ©Jordi Camí/age fotostock; மீன்பிடித்தல்: ©Stuart Pearce/World Pictures/age fotostock; பின்னணி: © Chris Sattlberger/Panos Pictures
[பக்கம் 25-ன் படங்களுக்கான நன்றி]
அங்காடி: ©Lorne Resnick/age fotostock; பெண்: ©Stuart Pearce/World Pictures/age fotostock