“சாப்பாட்டு நேரம் நம்மை நெருங்கி வரச்செய்கிறது”
“சாப்பாட்டு நேரம் நம்மை நெருங்கி வரச்செய்கிறது”
ஒரு நாளில் ஒருவேளை உணவையாவது நீங்கள் குடும்பமாகச் சேர்ந்து சாப்பிடுகிறீர்களா? வருத்தகரமாக, இன்றைய பரபரப்பான உலகில், சாப்பிடுவது ஏனோதானோவென்று ஆகிவிட்டது, அநேக வீடுகளில் தாங்கள் நினைத்த நேரத்தில் சாப்பிடுகின்றனர். எனினும், குடும்பமாகச் சேர்ந்து சாப்பிடுவது சரீரத் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, அதிமுக்கியமானத் தேவைகளையும் நிறைவு செய்கிறது. உதாரணத்திற்கு, பேசி மகிழ்வதற்கும் குடும்ப பிணைப்பை உறுதியாக்குவதற்கும் அது சந்தர்ப்பமளிக்கிறது.
அல்கிர்டாஸ், தன் மனைவி ரிமா மற்றும் மூன்று மகள்களுடன், வடக்கு ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் வாழ்ந்து வருகிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்: “நான் வேலைக்குச் செல்கிறேன், பிள்ளைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். என்றாலும், எங்களுடைய அட்டவணையை ஒழுங்கமைத்திருப்பதால், இரவு உணவை சேர்ந்தே சாப்பிடுகிறோம். சாப்பிடும் நேரத்தில் அன்றைய நாளில் நடந்த சம்பவங்களைப் பற்றிப் பேசுவதும், எங்களுடையப் பிரச்சினைகள், எண்ணங்கள், திட்டங்கள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதும் எங்கள் அனைவருக்குமே சுலபமாக இருக்கிறது. மேலும் ஆன்மீகக் காரியங்களைக் கலந்து பேசுவதற்கும் இந்நேரத்தைப் பயன்படுத்திக் கொள்கிறோம். சாப்பாட்டு நேரம் நம்மை நெருங்கி வரச்செய்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.”
கூடுதலாக ரிமா இவ்வாறு கூறுகிறார்: “பிள்ளைகளோடு சேர்ந்து உணவு தயாரிக்கும் சமயங்களில் ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேச முடிகிறது. சமையலறையில் ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்வது என் பிள்ளைகளுக்கு பிடித்திருக்கிறது. அதே சமயத்தில் அவ்வேலைகளில் திறமையானவர்களாகவும் ஆகியிருக்கிறார்கள். இப்படியாக, எங்களால் வேலையை சந்தோஷமாய் செய்ய முடிகிறது.”
அல்கிர்டாஸ், ரிமா, அவர்களுடைய பிள்ளைகள் ஆகிய அனைவரும் ஒன்று சேர்ந்து சாப்பிடுவதால் பல நன்மைகளைப் பெறுகின்றனர். நீங்கள் அப்படிச் செய்கிறதில்லை என்றால், ஒவ்வொரு நாளும் ஒருவேளை உணவையாவது குடும்பமாகச் சேர்ந்து சாப்பிடுவதற்கு ஏன் ஏற்பாடு செய்யக்கூடாது? நீங்கள் ஒற்றைப் பெற்றோராக இருந்தாலும் அதைச் செய்யலாம் அல்லவா? அப்படிச் செய்வதனால் கிடைக்கும் பலன்கள் நீங்கள் செய்யும் எந்தத் தியாகத்தையும்விட மிகவும் விலையேறப்பெற்றவை.