Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இந்தப் பழக்கத்தை முறியடிப்பது எப்படி?

இந்தப் பழக்கத்தை முறியடிப்பது எப்படி?

இளைஞர் கேட்கின்றனர் . . .

இந்தப் பழக்கத்தை முறியடிப்பது எப்படி?

“எனக்கு எட்டு வயதாக இருந்தபோதே தற்புணர்ச்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். கடவுள் அதை வெறுக்கிறார் என்பதை பிற்பாடு அறிந்து கொண்டேன். இந்தப் பழக்கத்தில் மீண்டும் ஈடுபட்ட ஒவ்வொரு முறையும் மிகவும் மோசமாக உணர்ந்தேன். ‘என்னைப் போன்ற ஒருவனை கடவுள் எப்படி நேசிப்பார்?’ என்று என்னையே நொந்துகொள்வேன். தப்பிப்பிழைத்து கடவுளுடைய புதிய உலகிற்குள் நிச்சயம் போகமுடியாது என்றே நினைத்தேன்.”​—⁠லுயீஸ். a

நீங்களும் லுயீஸைப் போல ஒருவேளை தற்புணர்ச்சி பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கலாம். அந்த ஆசை வரும்போது அதைக் கட்டுப்படுத்தி, கடவுளுடைய பரிசுத்த ஆவியின் கனியான இச்சையடக்கத்தைக் காட்டினால் யெகோவா பிரியப்படுவார் என்பதும் உங்களுக்குத் தெரியும். (கலாத்தியர் 5:22, 23; 2 பேதுரு 1:5, 6) ஆனாலும், சில சமயங்களில் நீங்கள் தோற்றுவிடுகிறீர்கள். ஒவ்வொரு முறையும் அந்த ஆசை தலைக்காட்டும்போது, உங்களால் திருந்தவே முடியாது என்றும் கடவுளுடைய நீதியான நெறிகளுக்கு இசைவாக உங்களால் வாழவே முடியாது என்றும் நினைக்கிறீர்கள்.

இளைஞனாகிய பேட்ரோவும்கூட அவ்வாறுதான் நினைத்தான். அவன் கூறுவதாவது: “அதை மறுபடியும் செய்தபோது ரொம்ப மோசமாக உணர்ந்தேன். அந்தத் தவறுக்கு பரிகாரமாக ஒன்றுமே செய்ய முடியாது என்று நினைத்தேன். ஜெபம் செய்வதுகூட கஷ்டமாக இருந்தது. ‘யெகோவாவே, இந்த ஜெபத்தை கேட்பீரோ இல்லையோ தெரியவில்லை, ஆனாலும் . . . ’ என்று சொல்லித்தான் என் ஜெபங்களை ஆரம்பிப்பேன்.” ஆன்ட்ரே என்ற இளைஞனும் அதேபோலத்தான் நினைத்தான். “நான் வெளிவேஷம் போடுவதைப் போல உணர்ந்தேன். படுக்கையைவிட்டு எழுந்து அந்த நாளின் வேலைகளை ஆரம்பிப்பதே பெரும்பாடாக இருந்தது. கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்வதோ வெளி ஊழியத்தில் பங்குகொள்வதோ ரொம்ப கஷ்டமாக இருந்தது” என்று கூறுகிறான்.

லுயீஸ், பேட்ரோ, ஆன்ட்ரே உணர்ந்ததைப் போலவே நீங்களும் உணருகிறீர்களா? கவலைப்படாதீர்கள், உங்களைப் போன்ற ஏராளமானோர் இருக்கிறார்கள்! உங்களால் திருந்தவே முடியாது என்று நினைக்க வேண்டிய அவசியமில்லை. அநேக இளைஞரும், ஏன் முதியோரும்கூட, தற்புணர்ச்சி பழக்கத்தோடு போராடி இருந்திருக்கிறார்கள்; இப்போது அதன்மீது வெற்றி பெற்றிருக்கிறார்கள். நீங்களும்கூட வெற்றிபெற முடியும். b

குற்றவுணர்வைச் சமாளித்தல்

ஆரம்பத்தில் சொன்னபடி, தற்புணர்ச்சி பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அடிக்கடி குற்றவுணர்வால் கூனிக்குறுகிப் போகிறார்கள். ‘தேவனுக்கேற்ற துக்கமடைவது’ இந்தப் பழக்கத்தை முறியடிக்க உங்களுக்கு தூண்டுதலை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. (2 கொரிந்தியர் 7:11) ஆனால், அளவுக்கு அதிகமான குற்றவுணர்வு பயனளிக்காது. அது உங்களை மிகவும் சோர்வுறச் செய்து, போராடுவதையே விட்டுவிடும்படி செய்யலாம்.​—நீதிமொழிகள் 24:10.

ஆகவே, காரியங்களை சரியான கண்ணோட்டத்தில் பார்க்க முயலுங்கள். தற்புணர்ச்சி என்பது ஒருவகை அசுத்தம்தான். அது உங்களைப் ‘பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்படுத்திவிடலாம்.’ (தீத்து 3:3) அதோடு, மனதைக் கெடுக்கும் மனப்பான்மைகளையும் வளர்த்துவிடலாம். என்றாலும், தற்புணர்ச்சி என்பது வேசித்தனம் போல மிகமோசமான பாலுறவு ஒழுக்கக்கேட்டின் வகையல்ல. (எபேசியர் 4:19) ஆகவே, தற்புணர்ச்சி என்ற கண்ணியில் நீங்கள் சிக்கியிருந்தால் மன்னிக்க முடியாத பாவத்தை செய்துவிட்டதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். அந்த ஆசை எழும்போது அதைத் தடுப்பதும், தொடர்ந்து எதிர்த்துப் போராடுவதும்தான் மிகவும் முக்கியம்.

கொஞ்ச காலம் விட்டிருந்து மறுபடியும் அப்பழக்கத்தில் வீழ்ந்துவிடுகையில் சுலபமாகச் சோர்ந்துபோய்விடலாம். அவ்வாறு சம்பவிக்கும்போது, நீதிமொழிகள் 24:16-⁠ல் உள்ளதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்: “நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.” தற்காலிகமான பின்னடைவு உங்களைத் துன்மார்க்கனாக மாற்றிவிடாது. ஆகவே, சோர்ந்துவிடாதீர்கள். அதற்குப் பதிலாக, என்ன காரணத்தினால் அப்பழக்கத்தில் மறுபடியும் ஈடுபட்டீர்கள் என்பதைச் சிந்தித்துப் பார்த்து அந்த விதமான செயல்களைத் தவிர்க்க முயலுங்கள்.

அந்தப் பிரச்சினைக்காக உங்களையே சதா திட்டிக்கொண்டிருப்பதற்கு பதிலாக, கடவுளுடைய அன்பையும் இரக்கத்தையும் பற்றி தியானிக்க நேரமெடுங்கள். பல முறை தவறுகள் செய்த சங்கீதக்காரனாகிய தாவீது இவ்வாறு கூறினார்: “தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.” (சங்கீதம் 103:13, 14) நம்முடைய அபூரணத்தை யெகோவா கவனத்தில் கொள்கிறார்; ஆகவே, தவறு செய்கையில் நம்மை ‘மன்னிக்கத் தயாராய் இருக்கிறார்.’ (சங்கீதம் 86:5, NW) அதேசமயத்தில், முன்னேற்றம் செய்வதற்காக நாம் முயல வேண்டும் என்றும் விரும்புகிறார்.

இந்தப் பழக்கத்தை வெற்றிகொள்ளவும், மறுபடியும் அதில் விழுவதைத் தவிர்க்கவும் நீங்கள் என்ன நடைமுறையான காரியங்களைச் செய்யலாம்?

மனந்திறந்து பேசுவதன் மதிப்பு

அநேக நாடுகளில் செக்ஸ் பற்றி மிகவும் பரவலாகப் பேசப்பட்டாலும் அதைப் பற்றி தகுந்த விதத்திலும், கண்ணியத்தோடும் பேச அநேகர் பயப்படுகிறார்கள். உங்கள் விஷயத்திலோ, வெட்கம் காரணமாக நெருங்கிய நண்பரிடம்கூட அதைப் பற்றிப் பேசுவதற்கு நீங்கள் தயங்கலாம். இந்தப் பழக்கத்தோடு பல வருடங்களாக போராடிய ஒரு கிறிஸ்தவர் இவ்வாறு கூறினார்: “இளைஞனாக இருந்தபோதே, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அதைப் பற்றி யாரிடமாவது பேசியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! எத்தனை வருடங்களாக குற்றவுணர்வு என்னைப் பாடாய்ப்படுத்தியது! அதுமட்டுமா மற்றவர்களோடும் முக்கியமாக யெகோவாவோடும் உள்ள உறவை மிக மோசமாகப் பாதித்தது.”

நீங்கள் யாரிடம் பேசலாம்? ஆன்மீகத்தில் முதிர்ச்சியுள்ள ஒருவரிடம் பேசுவதே மிகவும் சிறந்தது; அதிலும், உங்கள் பெற்றோரிடம் பேசுவது நல்லது. “ஒரு விஷயம் என் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது, அதைப் பற்றி உங்களிடம் பேசலாமா?” என்று சொல்லி நீங்கள் ஆரம்பிக்கலாம்.

மார்யோ, தன் பிரச்சினையைப் பற்றி அப்பாவிடம் பேச முடிவு செய்தான். அவர் அவனைப் புரிந்துகொண்டு அனுதாபம் காட்டினார். தான் சிறுவனாக இருந்தபோது இதே பிரச்சினையோடு போராடியதாகவும் மார்யோவிடம் கூறினார். மார்யோ இவ்வாறு கூறுகிறான்: “அப்பா நேர்மையாகவும், மறைக்காமலும் பேசியது என்னை பெரிதும் உற்சாகப்படுத்தியது. அவரால் அதை முறியடிக்க முடிந்ததென்றால் என்னாலும் முடியும் என்ற முடிவுக்கு வந்தேன். அவருடைய மனநிலை என்னை மிகவும் நெகிழச்செய்ததால் விம்மிவிம்மி அழ ஆரம்பித்தேன்.”

ஆன்ட்ரே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒரு கிறிஸ்தவ மூப்பரிடம் பேசினான். அதற்காக சந்தோஷமும் அடைந்தான். c அவன் கூறுவதாவது: “நான் சொன்னதைக் கேட்டபோது அவர் கண்கள் கலங்கின. நான் பேசி முடித்ததும், யெகோவா இன்னும் என்னை நேசிப்பதாக அவர் உறுதி கூறினார். இந்தப் பிரச்சினை அநேகருக்கு இருப்பதாகச் சொன்னார். என்னுடைய முன்னேற்றத்தைக் கண்காணிப்பதாகவும் பைபிள் சார்ந்த புத்தகங்களிலிருந்து கூடுதலான விஷயங்களை எடுத்துத் தருவதாகவும் உறுதி கூறினார். அவரிடம் பேசியதால், அப்பழக்கத்தில் மறுபடியும் விழ நேர்ந்தாலும் இந்தப் போராட்டத்தை விட்டுவிடக் கூடாது என்று தீர்மானித்தேன்.”

இந்தப் பழக்கத்தை முறியடிப்பதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சியில், மார்யோவையும் ஆன்ட்ரேவையும் போல உங்களுக்கும்கூட உதவி கிடைக்கும். “எதிர்த்துப் போராடுங்கள்!” என்ற பெட்டியிலிருக்கும் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள். இந்தப் போராட்டத்தில் உங்களால் வெற்றிபெற முடியும் என்பது நிச்சயம்!

[அடிக்குறிப்புகள்]

a இந்தக் கட்டுரையிலுள்ள பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b இந்தக் கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஆண்கள் என்றாலும் அநேக பெண்களும்கூட தற்புணர்ச்சி பழக்கத்தில் சிக்கியிருக்கிறார்கள். ஆகவே, இதிலுள்ள ஆலோசனைகள் இரு பாலாருக்கும் பொருந்தும். தனக்குத்தானே சுயபுணர்ச்சி செய்துகொள்வதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரை பேசுகிறது. திருமணத் துணையல்லாத மற்றொரு நபரோடு இதுபோன்ற காரியங்களைச் செய்வதை வேசித்தனத்தோடு பைபிள் சம்பந்தப்படுத்துகிறது; இது, கடவுளுடைய பார்வையில் மிகவும் மோசமான பாவமாகும்.​—⁠2004, ஆகஸ்ட் 8, தேதியிட்ட எமது இதழில் 12-14 பக்கங்களில் வெளிவந்த, “இளைஞர் கேட்கின்றனர் . . . திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதில் என்ன தப்பு?” என்ற கட்டுரையைக் காண்க.

c ஒரு இளம் பெண் தன் தாயிடமோ சபையிலுள்ள முதிர்ச்சிவாய்ந்த ஒரு சகோதரியிடமோ பேசலாம்.

[பக்கம் 19-ன் படக்குறிப்பு]

மீண்டும் சறுக்கி விழுவது தோல்வியல்ல!

[பக்கம் 19-ன் படக்குறிப்பு]

‘நான் தோற்றுவிட்டதால், முயற்சி செய்யாமல் விட்டுவிடுவதே மேல்’ என்று நினைத்துவிடுவது எவ்வளவு சுலபம். அந்த எண்ணத்தை எதிர்த்துப் போராடுங்கள். ஒரு முறை அல்லது பல முறை பின்னடைவு ஏற்பட்டாலும் தோற்றுவிட்டதாக நினைக்க ஆரம்பிக்காதீர்கள்.

ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்: மாடிப் படியில் ஏறிக்கொண்டிருக்கையில் தடுமாறி, ஓரிரு படிகள் கீழே விழுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக, ‘முதல் படிக்கே சென்று மறுபடியும் ஏற ஆரம்பிக்க வேண்டியதுதான்’ என்று நினைப்பீர்களா? இல்லை, அல்லவா? அப்படியென்றால், கெட்ட பழக்கங்களுக்கு எதிராக போராடும்போது மட்டும் இந்தத் தவறான எண்ணத்திற்கு ஏன் இடம்கொடுக்க வேண்டும்?

பின்னடைவுக்குப் பிறகு குற்றவுணர்வு ஏற்படுவது சகஜம்தான். அதைப் பற்றியே அளவுக்கதிகமாக யோசித்து, நீங்கள் ரொம்ப மோசமானவர் என்றும், அந்தப் பழக்கத்தை முறியடிக்க உங்களுக்குத் திறமையில்லை என்றும், எதற்கும் லாயக்கற்றவன் என்றும் நினைக்க ஆரம்பித்துவிடலாம். இப்படிப்பட்ட அளவுக்கதிகமான குற்றவுணர்வில் மூழ்கிப்போக அனுமதிக்காதீர்கள். தொடர்ந்து போராடுவதற்குத் தேவையான பலத்தை அது உறிஞ்சிவிடும். பூமியில் வாழ்ந்தவர்களிலேயே மிகப் பெரிய மனிதரான இயேசு கிறிஸ்து, பாவிகளையே இரட்சிக்க வந்தார், பரிபூரணர்களை அல்ல என்பதையும் நினைவில் வையுங்கள். ஆகவே, தற்போது நாம் யாருமே எதையும் கன கச்சிதமாக செய்ய முடியாது.​—⁠ஏப்ரல் 8, 1991, தேதியிட்ட ஆங்கில விழித்தெழு! பக்கம் 15-லிருந்து.

[பக்கம் 20-ன் படக்குறிப்பு]

எதிர்த்துப் போராடுங்கள்!

[பக்கம் 20-ன் படக்குறிப்பு]

உங்கள் மனதைக் கட்டாயப்படுத்தி வேறு காரியங்களைச் சிந்தியுங்கள்.​—பிலிப்பியர் 4:8.

[பக்கம் 20-ன் படக்குறிப்பு]

கெட்ட ஆசைகளைத் தூண்டிவிடும் காரியங்களைப் பார்க்காதீர்கள்.சங்கீதம் 119:37.

[பக்கம் 20-ன் படக்குறிப்பு]

‘இயல்பிற்கு அப்பாற்பட்ட வல்லமைக்காக’ ஜெபியுங்கள்.​—2 கொரிந்தியர் 4:7, NW.

[பக்கம் 20-ன் படக்குறிப்பு]

கிறிஸ்தவ வேலைகளில் தொடர்ந்து சுறுசுறுப்பாக ஈடுபடுங்கள்.​—1 கொரிந்தியர் 15:58.

[பக்கம் 20-ன் படக்குறிப்பு]

கூடுதலான உதவி

[பக்கம் 20-ன் படக்குறிப்பு]

தற்புணர்ச்சி பழக்கத்தை முறியடிக்க கூடுதலான தகவலுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட இளைஞர் கேட்கும் கேள்விகள் . . . பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தில் 25, 26 அதிகாரங்களைக் காண்க.

[பக்கம் 20-ன் படக்குறிப்பு]

சிந்திப்பதற்கு

◼யெகோவா, ‘மன்னிக்கத் தயாராய் இருக்கிறார்’ என்பதை நினைவில் வைத்திருப்பது ஏன் முக்கியம்?​சங்கீதம் 86:5, NW.

◼தற்புணர்ச்சி பழக்கத்தை முறியடிக்க நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள்?

◼உதவி கேட்க நீங்கள் ஏன் வெட்கப்பட வேண்டியதில்லை?

◼கற்புள்ளவற்றையே சிந்தித்துக்கொண்டிருக்க நீங்கள் என்ன செய்யலாம்?

[பக்கம் 20-ன் படக்குறிப்பு]

www.watchtower.org/ype என்ற வெப் சைட்டில் “இளைஞர் கேட்கின்றனர் . . .” தொடரின் கூடுதலான கட்டுரைகளைப் பார்க்க முடியும்

[பக்கம் 20-ன் படக்குறிப்பு]

இளைஞர் கேட்கும் கேள்விகள்

பலன்தரும் விடைகள்