Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ரோமா ஆயிரவருட இன்பமும் துன்பமும்

ரோமா ஆயிரவருட இன்பமும் துன்பமும்

ரோமா ஆயிரவருட இன்பமும் துன்பமும்

அந்நிகழ்ச்சி மிகப்பெரிதான பாரம்பரிய திருமணத்தைப் போலிருந்தது. உண்பதற்கும் குடிப்பதற்கும் ஏராளமாய் இருந்தன, வீடே இசை வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. கூச்சத்தோடு நிற்கும் மணமகனையும் சந்தோஷத்தில் பிரகாசிக்கும் மணமகளையும் வாழ்த்துவதற்கு உறவினர்கள் வந்தவண்ணமாக இருந்தனர். ஆனால் அது திருமண விழா அல்ல. அதற்கு முந்தைய இரவில் நடக்கும் நிச்சயதார்த்த விழா. அதில் கலந்துகொள்ள 600-⁠க்கும் மேற்பட்ட விருந்தாளிகள் வந்திருந்தனர். இங்கே மணமகன் வீட்டார் தட்சணைப் பணத்தை தங்களுடைய சம்பந்தியிடம் கொடுக்கிறார்கள். மறுநாள் மணமகனும் அவனுடைய வீட்டாரும் புதுப்பெண்ணை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வர், அங்கே திருமணத்தோடு இன்னொரு விழாவும் நடைபெறும்.

புதுமண ஜோடியின் உறவினர்கள் அனைவரும் ரோமானி மொழி பேசுகிறார்கள். அவர்கள் எந்த இடத்தில் வாழ்ந்தாலும் அவ்விடத்து மக்களுக்கு ரோமானி அந்நிய மொழியாகவே இருக்கும். இம்மொழி பல்வேறு கிளை மொழிகளைக் கொண்டிருக்கிறது. அநேக பாரம்பரிய பழக்கங்களையும் திருமணச் சம்பிரதாயங்களையும் இம்மக்கள் பின்பற்றுகிறார்கள். உலகமெங்கும் பரவியிருக்கும் இம்மக்களின் கலாச்சாரத்தில் இவையெல்லாம் அடங்கியிருக்கின்றன. அவர்களுக்கென்று சொந்த தேசமோ அரசாங்கமோ இல்லை. அவர்கள்தான் ரோமா மக்கள். a

ரோமா மக்கள் யார்?

ரோமா மக்களுடைய மொழி, கலாச்சாரம், மரபுவழி ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது அவர்கள் சுமார் 1,000 வருடங்களுக்கு முன்னால் வட இந்தியாவில் இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. அவர்களுடைய மொழி இந்தியாவில் தோன்றியது என்பது தெளிவாக இருக்கிறது; சமீபத்தில் அம்மொழியில் சேர்க்கப்பட்ட சில வார்த்தைகள் மட்டுமே வேறுபடுகின்றன. அவர்கள் ஏன் இந்தியாவை விட்டுச் சென்றார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. அவர்களுடைய முன்னோர்கள் கைவினைஞர்களாகவும் கலைநிகழ்ச்சி நடத்துபவர்களாகவும் இருந்தனர்; இராணுவ கலகத்திற்குப் பிறகு நாட்டை விட்டுப்போன படைவீரர்களோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தனர் என்றெல்லாம் சில அறிஞர்கள் இவர்களைப் பற்றி சொல்கிறார்கள். விஷயம் எவ்வாறாக இருந்தாலும், ரோமா மக்கள் பொ.ச. 1300-⁠க்கு முன்னால் பெர்சியா, துருக்கி ஆகிய நாடுகள் வழியாக ஐரோப்பாவுக்குச் சென்றனர்.

ரோமா மக்களை ஐரோப்பாவில் பொதுவாக புகழ்ந்தும் இகழ்ந்தும் பேசுகின்றனர். ஒருபுறம், சில நாவல்களிலும் படங்களிலும் அவர்கள் உபசரிப்பவர்களாகவும், உல்லாச விரும்பிகளாகவும், வாழ்க்கையின் இன்பதுன்பங்களை ஆடல் பாடல் மூலமாக தடையின்றி சொல்பவர்களாகவும், நாடோடிகளாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். மறுபுறத்திலோ அவர்கள் துரோகிகளாக, புதிரானவர்களாக, தந்திரமுள்ளவர்களாக, நிரந்தர அந்நியர்களாக, யாரோடும் ஒட்டாதவர்களாக, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களாக இருப்பதாய் இழிவுபடுத்தியும் சொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுபோன்ற கருத்துக்கள் உருவான காரணத்தைத் புரிந்துகொள்ள ரோமா மக்களின் கடந்த காலத்தைச் சற்று சிந்திக்கலாம். அது உண்மையிலேயே ஆர்வத்தைத் தூண்டும் ஒன்று.

ஒதுக்கப்பட்ட காலம்

மத்திப காலத்தில், பெரும்பாலான ஐரோப்பியர்களுக்கு அவர்கள் வாழ்ந்த கிராமம் அல்லது நகரம்தான் அவர்களுடைய உலகமே. ரோமா மக்கள் தங்கள் கிராமங்களில் காலடி எடுத்து வைத்ததை பார்த்தபோது அவர்கள் மனதில் என்னவெல்லாம் ஓடியிருக்கும் என்பதைச் சற்று கற்பனை செய்துபாருங்கள். அவர்களைப் பற்றிய அநேக விஷயங்களை அறிந்துகொள்ள அந்த கிராமவாசிகள் ஆர்வத்தோடு இருந்திருப்பார்கள். அவர்களுடைய கருமைநிற மேனி, கருவிழிகள், கறுப்பான முடி மட்டுமல்லாமல், அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், பழக்கவழக்கங்கள், மொழி எல்லாமே முற்றிலும் வித்தியாசமாக இருந்தன. கூடுதலாக, சாதி, இனப் பிரிவினைகள் நிறைந்த இந்திய சமுதாயத்தில் ரோமா மக்கள் வாழ்ந்திருந்ததால், இங்கு வந்த பிறகும் மற்றவர்களிடமிருந்து பிரிந்து வாழும் மனப்பான்மை அவர்களுக்கு இருந்தது. சில பத்தாண்டுகளுக்குள் ஐரோப்பியர்களுக்கு அவர்கள் மேலிருந்த ஆர்வம் போய் அவநம்பிக்கை குடிகொண்டது.

ரோமா மக்கள் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்; கிராமங்களின் எல்லையோரமாக கூடாரம்போட்டுத் தங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள்; பொருள்களை வாங்குவதற்கோ தண்ணீர் எடுக்கவோகூட கிராமத்திற்குள் வர அனுமதிக்கப்படவில்லை. “அவர்கள் குழந்தைகளைத் திருடித் தின்பவர்கள்!” என்ற புரளியும் பரவியிருந்தது. சில இடங்களில் ரோமா மக்கள் தங்கள் வீட்டுக்கு வெளியே சமையல் செய்யவேண்டும் என்ற சட்டமும் இருந்தது. இதனால் யார் வேண்டுமானாலும் அவர்களுடைய சமையல் பானையை சோதனையிட முடிந்தது. பெரும்பாலும் இப்படி சோதிக்கும்போது அந்த நாளுக்கான சாப்பாடு தரையிலே கொட்டப்பட்டது. இதனால், அவர்களில் சிலர் தங்கள் பசியை ஆற்றிக்கொள்ள உணவைத் திருடியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

இந்தப் பிரிவினைகளை சமாளிப்பதற்காக ரோமா மக்கள் தங்கள் மத்தியில் நெருங்கிய உறவை வளர்த்துக்கொண்டார்கள். நூற்றாண்டுகளாக குடும்ப வாழ்வில் அவர்கள் சந்தோஷத்தையும் ஆதரவையும் பெற்றுவந்திருக்கிறார்கள். பாரம்பரியமாக, ரோமாப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்கிறார்கள்; அவர்களுடைய பிள்ளைகளும் அப்படியே தங்கள் வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்கிறார்கள். ரோமா மக்கள் அநேகர் ஒழுக்கம், கண்ணியம் ஆகியவை சம்பந்தமாக காலங்காலமாக பின்பற்றப்படும் தராதரங்களை உறுதியாகக் கடைப்பிடிக்கிறார்கள்.

நாடோடி வாழ்க்கை

எல்லாரும் அவர்களை விரட்டியடித்ததால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறி மாறி சென்றுகொண்டேயிருந்தார்கள். இந்த நாடோடி வாழ்க்கையானது உலோக வேலை, வியாபாரம், பொழுதுபோக்கு ஆகியவற்றில் திறமையானவர்களாக அவர்களை ஆக்கியது. அவசியமான இந்தச் சேவைகளை செய்வதன்மூலம் அவர்கள் பிழைப்புக்கு வழிதேடிக் கொண்டார்கள். ரோமா மக்களுக்கு ஆவிகளுடைய சக்தி இருக்கிறது என்று பிரபலமாக சொல்லப்பட்டதை சாதகமாகப் பயன்படுத்தி சில ரோமா பெண்கள் பணம் சம்பாதிப்பதற்காக குறிசொல்லும் தொழிலைச் செய்தார்கள். இப்படி நாடோடிகளாக வாழ்க்கையை ஓட்டியதால் ரோமா இனத்தைச் சாராத பிற மக்களோடு [ரோமானி மொழியில் காட்ஜேகளோடு] நெருங்கிப் பழகுவதால் வரும் கலாச்சார, ஒழுக்க சீர்குலைவு தடுக்கப்பட்டது. b

இதற்கிடையில், தப்பெண்ணம் துன்புறுத்தலுக்கு வழிநடத்தியது. ஐரோப்பாவின் சில பகுதிகளிலிருந்து ரோமா மக்கள் துரத்தியடிக்கப்பட்டார்கள். மற்ற பகுதிகளிலோ நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டார்கள். இந்த அடிமைத்தனம் 1860-களில் முடிவுக்கு வந்தது. இதன் பிறகு, ஏகப்பட்ட ரோமா மக்கள் மேற்கு ஐரோப்பா வட, தென் அமெரிக்கா போன்ற இடங்களுக்கு சிதறிச் சென்றனர். சென்ற இடங்களுக்கெல்லாம் தங்கள் மொழி, பழக்கவழக்கங்கள், திறமைகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றார்கள்.

அடித்து நொறுக்கப்பட்ட நிலையிலும் ரோமா மக்கள் நாட்டியம், நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்துவதன்மூலம் கொஞ்சம் ஆத்மதிருப்தி அடைந்தார்கள். ஸ்பெயினில், ரோமா கலாச்சாரத்தோடு மற்ற கலாச்சாரங்கள் கலந்ததால் ஃபிலமெங்கோ இசையும் நடனமும் உருவாயின. கிழக்கு ஐரோப்பாவிலோ, ரோமா இசைக்கலைஞர்கள் உள்ளூர் நாட்டுப்புறப் பாடல்களில் தங்களுடைய பாணியை கலந்தார்கள். உள்ளத்தை உருக்கும் மெட்டுகளை இவர்களுடைய இசை நிகழ்ச்சிகளில் கேட்க முடிந்தது; பாரம்பரிய இசைக்கலைஞர்களான பீத்தோவன், ப்ராம்ஸ், ட்வார்ஸாக், ஹைடன், லிஸ்ட், மோட்சார்ட், ராக்மானநாஃப், ரவெல், ராஸீனீ, சென்சான்ஸ், சாரசாடே போன்றவர்களுடைய இசையில் இவை தாக்கத்தை ஏற்படுத்தின.

தற்கால ரோமா மக்கள்

இன்று ரோமா மக்களை உலகின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் பார்க்க முடிகிறது. அவர்களுடைய எண்ணிக்கை 20 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை இருக்கும்; அதற்கும் அதிகமாகவும் இருக்குமென சிலர் சொல்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் ஐரோப்பாவில் வாழ்கின்றனர். அநேகர் நாடோடி வாழ்க்கை வாழ்வதில்லை; சிலர் பொருளாதார ரீதியில் நன்றாகவே இருக்கிறார்கள். ஆனால், அநேக இடங்களில் ரோமா மக்கள் இன்னும் வசதிவாய்ப்பற்ற ஏழ்மையான சூழலில்தான் வாழ்கின்றனர்.

கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிஸ்ட் சகாப்தத்தில் அனைத்துக் குடிமக்களும் சமமே என்று அரசாங்க கொள்கை கூறியது. வேலை, அரசாங்க குடியிருப்புகளில் வீடு ஆகியவற்றைக் கொடுத்து ரோமா மக்களின் நாடோடி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்தது; இவை எல்லா இடங்களிலும் ஒரேவிதமாக வெற்றியடையவில்லை. இம்முயற்சியின் விளைவாக, அவர்களுடைய ஆரோக்கியமும் வாழ்க்கைத் தரமும் ஓரளவிற்கு முன்னேற்றம் கண்டது. ஆனால் நூற்றாண்டுகளாக ரோமா மக்களுக்கும் பிறருக்கும் இடையே எரிந்து வந்த பகை எனும் நெருப்பை இது அணைத்துப் போடவில்லை.

கிழக்கு ஐரோப்பாவில் 1990-களில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் ரோமா மக்களுக்கு அனுகூலமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று நம்பப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு. அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சமூக உதவித் திட்டங்கள் குறைக்கப்பட்டன; ஒதுக்கப்படுவதற்கு எதிரான சட்டங்கள் ஏட்டளவில் மட்டுமே இருந்தன. இவையெல்லாம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல அமைந்தன. இதனால், ரோமா மக்கள் பலருடைய வாழ்க்கை சமுதாய ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் மீண்டும் அதலபாதாளத்திற்குச் சென்றது.

நம்பிக்கை ஒளியும் நலமிகு வாழ்வும்

ஆன்ட்ரேயா என்ற பெண், கருகரு கூந்தல் கொண்டவள். கிழக்கு ஐரோப்பாவிலுள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். அப்போதும் ரோமா மக்களின் நிலை மோசமாகவே இருந்தது. அவளுடைய வகுப்பில் அவள் மட்டுமே ரோமா இனத்தைச் சேர்ந்தவள். அவள் நெஞ்சுரம் கொண்டவளாக இருந்தபோதிலும் பள்ளியில் கேலி செய்யப்பட்டதையும் ஒதுக்கப்பட்டதையும் நினைக்கும்போது, பொங்கியெழும் கண்ணீரை அவளால் கட்டுப்படுத்த முடிவதில்லை. அவள் இவ்வாறு சொல்கிறாள்: “விளையாட்டில் அணிகளை தேர்ந்தெடுக்கும்போது கடைசியாக தேர்ந்தெடுக்கப்படும் ஆள் நானாகத்தான் இருக்கும். இங்கிருந்து இந்தியாவிற்கு ஓடிவிடலாம் என்று நினைப்பேன். அங்கு போனால் நான் மட்டும் வித்தியாசமாக தெரியமாட்டேனே! சொல்லப்போனால், என் நண்பனைப் பார்த்து ‘இந்தியாவுக்குத் திரும்பிப்போ!’ என்று ஒருவன் கத்தினான். ‘என்னிடம் பணமிருந்தால் நான் எப்பவோ போயிருப்பேன்’ என்று என் நண்பன் பதிலளித்தான். எங்களை ஏற்றுக்கொள்ள யாருமே இல்லை. எல்லாரும் எங்களை வெறுத்து ஒதுக்கினார்கள்.” ஆன்ட்ரேயா அருமையாக நடனமாடுவாள். நடனக் கலையில் பேரும் புகழும் பெற வேண்டும் என்று கனவு கண்டாள். ஆனால் தன் பருவ வயதில் அதைவிட மிகச்சிறந்த ஒன்றைக் கண்டுபிடித்தாள்.

ஆன்ட்ரேயா இவ்வாறு சொல்கிறாள்: “ஒருநாள், பிராஸ்கா என்ற இளம்பெண் எங்களுடைய வீட்டிற்கு வந்தார். அவர் ஒரு யெகோவாவின் சாட்சி. கடவுள், மனிதகுலத்தை நேசிப்பது மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரையும்கூட தனிப்பட்ட விதமாக நேசிக்கிறார் என பைபிளிலிருந்து எனக்குக் காட்டினார். நான் விரும்பினால் கடவுளோடு நல்ல உறவை வைத்துக்கொள்ள முடியும் என்று விளக்கினார். கடவுள் என்னை முக்கியமானவளாக கருதுகிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். கடவுளுடைய பார்வையில் அனைவரும் சமம் என்பதை அறிந்து கொண்டேன். அது எனக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்தது.

“பிராஸ்கா என்னை சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றார்; அங்கே ரோமா மக்களையும் பிறரையும் சந்தித்தேன். அவர்கள் ஒற்றுமையாக இருப்பதைக் கவனித்தேன். இரண்டு பின்னணிகளைச் சேர்ந்த சாட்சிகளிலும் உண்மையான நண்பர்கள் எனக்குக் கிடைத்தார்கள். பிராஸ்காவுடன் ஒன்றரை வருடங்களாக பைபிள் படித்தபிறகு, நானும் யெகோவாவின் சாட்சியாக ஆனேன்.” இன்று ஆன்ட்ரேயாவும் அவளுடைய கணவரும் முழுநேர பிரசங்க ஊழியத்தைச் செய்கிறார்கள். எல்லா தேசத்து மக்களுக்கும் கடவுளின் கனிவான அன்பைக் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“சமமானவனாக ஏற்றுக்கொள்ளப்பட்டேன்”

ரோமா மக்களில் ஒருவரான ஹைரோ தன் வாலிபப் பருவத்தைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: “சட்டத்தை மதிக்காத மற்ற பையன்களுடன் சேர்ந்து அடிக்கடி சிக்கலில் மாட்டிக்கொண்டேன். ஒருமுறை நான் அந்தப் பையன்களுடன் சேர்ந்து திருடியதற்காக காவல்துறையினர் என்னைக் காவலில் வைத்தனர். அவர்கள் என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். காவல்துறையினருக்குப் பயந்ததைவிட அம்மாவை நினைத்துதான் மிகவும் பயப்பட்டேன். ஏனெனில், திருடுவது தவறு என்று வீட்டில் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். நிறைய ரோமா குடும்பங்களில் இப்படிச் சொல்லிதான் பிள்ளைகளை வளர்ப்பார்கள்.”

ஹைரோ வளர்ந்தபோது, அவரும் அவருடைய குடும்பமும் யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்தனர். தப்பெண்ணம், ஒதுக்கப்படுவது போன்ற பிரச்சினைகளின் பிடியில் கசங்கும் மனித சமுதாயத்தை கடவுளுடைய அரசாங்கம் விடுவிக்கும் என்ற பைபிளின் வாக்குறுதி ஹைரோவுடைய இருதயத்தில் ஆழமாகப் பதிந்தது. அவர் இவ்வாறு சொல்கிறார்: “ரோமா மக்களின் நலனைக் கவனித்துக்கொள்ள அவர்களுக்கென்று சொந்தமாக அரசாங்கம் இருந்ததேயில்லை. அதனால்தான், கடவுளுடைய அரசாங்கம் எப்படி எல்லா மக்களுக்கும் நன்மையளிக்கப் போகிறது என்பதை ரோமா மக்கள் நன்கு புரிந்துகொள்ளும் நிலையில் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுதேகூட அந்த நன்மைகளை நான் பார்க்கிறேன். நான் ராஜ்ய மன்றத்திற்குச் சென்ற வினாடியிலிருந்தே அப்போஸ்தலன் பேதுரு கூறிய பின்வரும் வார்த்தைகள் எந்தளவு உண்மை என்பதை உணர்ந்தேன்: ‘தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.’ (அப்போஸ்தலர் 10:34, 35) நான் எல்லாராலும் சமமானவனாக ஏற்றுக்கொள்ளப்பட்டேன். ரோமா இனத்தைச் சாராத சாட்சிகள் என்னை ரோமானியில் ப்ராலா​—⁠‘சகோதரா’ என்று அழைத்தபோது என் செவிகளையே என்னால் நம்பமுடியவில்லை.

“முதலில், என் குடும்பத்திலுள்ள சிலர் தீவிரமாக எதிர்த்தனர். பைபிள் நியமங்களுக்கு இசைவாக வாழ்வதற்கு நான் செய்த மாற்றங்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், பைபிள் தராதரங்களில் உறுதியாக இருந்ததால் நான் சந்தோஷமாக இருக்கிறேன், நிறைய நல்ல விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை எங்கள் சொந்தக்காரர்களும் பிற ரோமா மக்களும் கவனித்திருக்கின்றனர். அவர்களில் அநேகர் தங்களுடைய வாழ்க்கையையும் இதேபோல் மாற்ற விரும்புகிறார்கள்.” ஹைரோ தற்பொழுது கிறிஸ்தவ மூப்பராகவும், முழுநேர பிரசங்கிப்பாளராகவும் சேவை செய்கிறார். அவருடைய மனைவி மேகன் ரோமா இனத்தவர் அல்ல. இன்றைக்கும் என்றைக்கும் சந்தோஷமான வாழ்க்கையைக் கொண்டிருக்க பைபிள் எவ்வாறு உதவும் என ரோமா மக்களுக்கும் மற்றவர்களுக்கும் அவர் கற்பிக்கிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “என் கணவருடைய குடும்பமும் ரோமா சமுதாயத்தினரும் என்னை முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ரோமா இனத்தைச் சாராத ஒருவர் அவர்களிடம் இதுபோன்று அக்கறை காட்டுவதை அவர்களும் விரும்புகிறார்கள்.”

[அடிக்குறிப்புகள்]

a உலகின் பல்வேறு பகுதிகளில் ரோமா மக்கள், ஜிப்ஸீ, கீடானோஸ், ட்ஸிகாய்னா, ட்ஸிகானீ, ஸிகானி, என்று அழைக்கப்படுகிறார்கள். இச்சொற்களெல்லாம் அவர்களை இழிவுபடுத்தும் விதத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ரோமா என்றால் அவர்களுடைய மொழியில் “மனிதன்” என்று அர்த்தம். அநேக ரோமா ஜனங்கள் தங்களைப் பற்றிக் குறிப்பிட இந்த வார்த்தையையே பயன்படுத்துகிறார்கள். ரோமானி பேசும் சில பிரிவினர் வேறு பெயரால் அறியப்படுகிறார்கள். அதற்கு ஸின்டீகள் ஓர் உதாரணம்.

b சில ரோமா மக்கள் நிறைய பாரம்பரியங்களை விடாப்பிடியாக பின்பற்றினாலும், அவர்கள் தங்கும் பிராந்தியங்களில் வாழும் பெரும்பாலோர் பின்பற்றும் மதத்தை அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

[பக்கம் 23-ன் படக்குறிப்பு]

ஐரோப்பாவில் நாசி சகாப்தத்தின்போது, ஹிட்லரால் சித்திரவதை முகாம்களில் 4,00,000 அல்லது அதற்கும் மேற்பட்ட ரோமா மக்கள் கொல்லப்பட்டார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. அப்படி கொல்லப்பட்டவர்களில் யூதர்கள், யெகோவாவின் சாட்சிகள், பிற ஜனங்கள் ஆகியோரும் அடங்குவர். ஹிட்லருடைய துடைத்தழிக்கும் படலம் பெரியளவில் பரவுவதற்கு முன்னாலேயே 1940-⁠ல், ரோமா இனத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர் சார்லீ சாப்ளின், ஹிட்லரையும் அவனுடைய நாசி இயக்கத்தையும் கேலி செய்யும் விதத்தில் மகா சர்வாதிகாரி (த கிரேட் டிக்டேடர்) என்ற படத்தை உருவாக்கினார். பின்வரும் பிரபலமான கலைஞர்களும் ரோம மரபினர்களே: நடிகர் யூல் பிரினர், நடிகை ரீடா ஹேவர்த் (கீழே), ஓவியர் பாப்லோ பிக்காசோ (கீழே), ஜாஸ் இசையமைப்பாளர் ஜாங்கோ ரைன்கார்ட், மற்றும் மாசிடோனியப் பாடகர் எஸ்மா ரீட்ஜெபோவா. மேலும், ரோமா மக்கள் பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும், பேராசிரியர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் ஆகியிருக்கின்றனர்.

[பக்கம் 22-ன் படக்குறிப்பு]

© Clive Shirley/Panos Pictures ▸

[பக்கம் 22-ன் படக்குறிப்பு]

◀ By courtesy of the University of Liverpool Library

[பக்கம் 22-ன் படக்குறிப்பு]

போலந்து

[பக்கம் 22-ன் படக்குறிப்பு]

இங்கிலாந்தில் ரோமா மக்கள், 1911

[பக்கம் 22-ன் படக்குறிப்பு]

ஸ்லோவாக்யா

[பக்கம் 23-ன் படக்குறிப்பு]

◀ © Mikkel Ostergaard/Panos Pictures

[பக்கம் 23-ன் படக்குறிப்பு]

AFP/Getty Images

[பக்கம் 23-ன் படக்குறிப்பு]

Photo by Tony Vaccaro/Getty Images ▸

[பக்கம் 23-ன் படக்குறிப்பு]

மாசிடோனியா

[பக்கம் 24-ன் படக்குறிப்பு]

ருமேனியா

[பக்கம் 24-ன் படக்குறிப்பு]

மாசிடோனியா

[பக்கம் 24-ன் படக்குறிப்பு]

செக் குடியரசு

[பக்கம் 24-ன் படக்குறிப்பு]

ஸ்பெயின்

[பக்கம் 24-ன் படக்குறிப்பு]

ருமேனியா: © Karen Robinson/Panos Pictures; மாசிடோனியா: © Mikkel Ostergaard/Panos Pictures; செக் குடியரசு: © Julie Denesha/Panos Pictures

[பக்கம் 25-ன் படக்குறிப்பு]

நடனத்தின் மூலம் புகழும் அங்கீகாரமும் பெறலாமென ஆன்ட்ரேயா கனவு கண்டார்

[பக்கம் 24-ன் படக்குறிப்பு]

இன்று ரோமா மக்கள் கிட்டத்தட்ட பூமியின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் வாழ்கின்றனர்

[பக்கம் 26-ன் படக்குறிப்பு]

ரோமா சாட்சிகள்

ரோமா மக்கள் அநேகர் யெகோவாவின் சாட்சிகளாக மாறியிருக்கின்றனர். அவர்களில் சிலர் சபை மூப்பர்களாகவும் முழுநேர பயனியர்களாகவும் சேவை செய்கின்றனர். அவர்கள் வசிக்கும் இடத்திலுள்ள அரசாங்க அதிகாரிகளும் ரோமா இனத்தைச் சாராத பிற மக்களும் அவர்களை வெகுவாக மெச்சுகிறார்கள். ஸ்லோவாக்யாவில் உள்ள ஒரு ரோமா சாட்சி இவ்வாறு சொல்கிறார்: “ஒருநாள் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டினார். அவர் ரோமா இனத்தைச் சேர்ந்தவர் அல்ல. ‘என்னுடைய குடும்பத்தில் பயங்கர பிரச்சினை. ஆனால், உங்களால் எங்களுக்கு உதவ முடியும்,’ என்று சொன்னார். ‘நாங்கள் உதவமுடியுமென நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?’ என நாங்கள் கேட்டோம். ‘ரோமா ஜனங்களாகிய நீங்கள் நல்லபடியாக வாழ உங்கள் கடவுள் உதவுகிறாரே, அப்படியிருக்கையில், எங்களுக்கும் அவரால் உதவமுடியும் என்று நினைக்கிறேன்’ என்று அவர் பதிலளித்தார். குடும்ப வாழ்க்கை சம்பந்தமாக யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் சார்ந்த புத்தகம் ஒன்றை அவரிடம் கொடுத்தோம்.

“பிறகு, அவருடைய மனைவியும் வந்து கதவைத் தட்டினாள். அவளுடைய கணவர் ஏற்கனவே வந்துபோயிருந்தது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. தன்னுடைய கணவர் சொன்னதையே அவளும் சொன்னாள். ‘உங்களைத் தவிர இந்தக் குடியிருப்பில் இருக்கிற யாராலும் எங்களுக்கு உதவ முடியாது’ என்றாள். அவளுடைய கணவருக்கு கொடுத்த அதே புத்தகத்தின் ஒரு பிரதியை அவளுக்கும் கொடுத்தோம். தாங்கள் வந்ததைப் பற்றி தங்கள் துணைவரிடம் சொல்லவேண்டாம் என இருவருமே எங்களிடம் கேட்டுக்கொண்டனர். ஒன்றரை மாதத்திற்குப் பிறகு, அந்தத் தம்பதிக்கு பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தோம். பைபிள் சத்தியத்திற்கு இசைவாக வாழ்வதால் மக்கள் எங்களைப் பற்றி உயர்வாகக் கருதுகிறார்கள்; ஆகவே, ஆன்மீக ரீதியில் உதவி தேவைப்படுகையில் எங்களை நாடி வருகிறார்கள்.”

[பக்கம் 26-ன் படக்குறிப்பு]

நார்பான், பிரான்சு

[பக்கம் 26-ன் படக்குறிப்பு]

கிரனடா, ஸ்பெயின்

[பக்கம் 26-ன் படக்குறிப்பு]

“கடவுளுடைய அரசாங்கம் எப்படி எல்லா மக்களுக்கும் நன்மையளிக்கப் போகிறது என்பதை ரோமா மக்கள் நன்கு புரிந்துகொள்ளும் நிலையில் இருக்கிறார்கள்.”​—⁠ஹைரோ