டிவி “மறைமுக ஆசான்”
டிவி “மறைமுக ஆசான்”
கல்வி புகட்டுவதற்குச் சிறந்த விதத்தில் டிவி பயன்படுகிறது. இதன் வாயிலாக, நாம் பார்க்க வாய்ப்பில்லாத தேசங்களையும் மக்களையும் பற்றி கற்றுக்கொள்கிறோம். உட்கார்ந்த இடத்திலிருந்தே, வெப்பமண்டலக் காடுகளையும், பனி மூடிய துருவப் பிரதேசங்களையும், மலைச் சிகரங்களையும் ஆழ்கடல்களையும் பார்த்துவிடுகிறோம். அணு ஆகட்டும் நட்சத்திரங்கள் ஆகட்டும், அவற்றைப் பற்றிய வியப்பூட்டுகிற தகவல்களை நாம் தெரிந்துகொள்கிறோம். உலகின் மறுபக்கம் நடக்கும் சம்பவங்களை நேரடி ஒளிபரப்பில் “சுடச்சுட” அறிந்துகொள்கிறோம். அரசியல், வரலாறு, நடப்புச் செய்திகள், கலாச்சாரம் போன்றவற்றை ஊடுருவிப் பார்க்கிறோம். மக்கள் சந்திக்கும் அவலங்களையும், அவர்கள் புரியும் சாதனைகளையும் டிவி பளிச்சென படம்பிடித்துக் காட்டுகிறது. இது மகிழ்விக்கிறது, கற்பிக்கிறது, தூண்டுவிக்கவும் செய்கிறது.
எனினும், டிவியில் ஒளிபரப்பப்படும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் பயனும் அளிப்பதில்லை, கல்வியும் புகட்டுவதில்லை. பெரும்பாலும், டிவியில் அப்பட்டமாகக் காட்டப்படுகிற எக்கச்சக்கமான வன்முறையையும் செக்ஸையும் வன்மையாய் கண்டிப்பவர்களிடமிருந்தே கடும் விமர்சனம் வருகிறது. உதாரணத்திற்கு அமெரிக்காவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது; டிவியில் காட்டப்படும் மூன்று நிகழ்ச்சிகளில் கிட்டத்தட்ட இரண்டு நிகழ்ச்சிகளில் வன்முறைக் காட்சிகள் இடம்பெறுவது, அதுவும் ஒரு மணிநேரத்திற்கு சராசரியாக ஆறு காட்சிகள் இடம்பெறுவது அந்த ஆய்விலிருந்து தெரிய வந்தது. ஒரு சிறுவன் வளர்ந்து வாலிபன் ஆவதற்குள்ளாக டிவியில் ஆயிரக்கணக்கான வன்முறைச் செயல்களையும் கொலைகளையும் பார்த்திருப்பான். செக்ஸ் காட்சிகளுக்கும்கூட பஞ்சமே இல்லை. மொத்த நிகழ்ச்சிகளில் 3-ல் 2 பங்கு நிகழ்ச்சிகளில் செக்ஸ் பற்றிய பேச்சு அடிபடுகிறது; 35 சதவீதம் பாலியல் பழக்கங்களைப் பற்றியே காட்டப்படுகின்றன; a
இவை பொதுவாக, ஆபத்தற்றவையாகவும், இயல்பானவையாகவும், மணமாகாத ஆட்கள் ஈடுபடத் தகுந்தவையாகவும் காட்டப்படுகின்றன.செக்ஸையும் வன்முறையையும் சித்தரிக்கும் நிகழ்ச்சிகளுக்கு உலகெங்கும் ஏகப்பட்ட மவுசு உள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு, பின்னர் டிவியில் ஒளிபரப்பப்படும் ஆக்ஷன் திரைப்படங்களை வெளிநாட்டு டிவி கம்பெனிகள் எனக்கு உனக்கு என போட்டி போட்டுக்கொண்டு வாங்குகின்றன. சொல்லப்போனால், அந்தப் படங்களில், நல்ல நடிப்போ, சிந்திக்க வைக்கும் வசனங்களோ இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை; அவை இல்லாவிட்டாலும் எளிதில் கதை புரிந்துவிடுகிறது. அவற்றில் முழுக்க முழுக்க, சண்டைக் காட்சிகளும் கொலைகளும் ஸ்பெஷல் எஃபெக்ட் உத்திகளோடுகூட, பார்ப்பவரின் கவனத்தை ஈர்த்துப் பிடிக்கிற செக்ஸ் காட்சிகளுமே இடம் பெறுகின்றன. இருப்பினும் இப்படி மணிக்கணக்காக ஆட்களைப் பிடித்து வைத்துக்கொள்வதற்கு அவ்வப்போது சில மாற்றங்களும் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரே மாதிரியான காட்சிகளையே திரும்பத் திரும்பப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு சீக்கிரத்தில் சலிப்புத் தட்டிவிடுகிறது; உணர்ச்சியை உசுப்பிவிடும் காட்சிகள் சர்வசாதாரணம் ஆகிவிட்டிருக்கின்றன. எனவே, பார்வையாளர்களின் ஆர்வம் தணியாதிருக்க, மிதமிஞ்சிய அளவில் திகில் காட்சிகளும், உணர்ச்சியைத் தூண்டுகிற காட்சிகளும் நிறைந்த படங்களை உருவாக்க தயாரிப்பாளர்கள் முன்வந்திருக்கிறார்கள்; அந்தப் படங்களில் வன்முறைக் காட்சிகளை எக்கச்சக்கமாகவும், மிகத் தத்ரூபமான, படு செக்ஸியான, வெகு கொடூரமான காட்சிகளை ஏராளமாகவும் அவர்கள் புகுத்த முன்வந்திருக்கிறார்கள்.
டிவியின் பாதிப்பைப் பற்றிய சர்ச்சை
டிவியில் வன்முறையையும் செக்ஸையும் சதா பார்த்துக்கொண்டிருப்பதால் நேயர்கள் எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? டிவியில் காட்டப்படும் வன்முறைக் காட்சிகளை விமர்சகர்கள் சாடுகிறார்கள்; அவை, ஆட்களை மூர்க்கத்தனமாக நடந்துகொள்ள வைத்திருக்கிறது என்றும் நிஜ வாழ்க்கையில் வன்முறைத் தாக்குதலுக்குப் பலியாகிறவர்களைப் பார்த்து அந்தளவு அனுதாபப்படாதபடி செய்துவிடுகிறது என்றும் சொல்கிறார்கள். செக்ஸ் காட்சிகளைக் காட்டி வருவது, முறைதகாத பாலுறவைத் தூண்டுவித்து, ஒழுக்க நெறிகளை மதிப்பற்றவையாய் ஆக்குகிறது என்றும் அவர்கள் ஆணித்தரமாய் கூறுகிறார்கள்.
இவற்றுக்கெல்லாம் டிவிதான் முக்கியக் காரணமா? இந்தக் கேள்வி, பல பத்தாண்டுகளாக பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது; இந்த விஷயத்தின் பேரில் நூற்றுக்கணக்கான ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன; ஆயிரக்கணக்கான புத்தகங்களும் கட்டுரைகளும்கூட வெளிவந்திருக்கின்றன. அந்தச் சர்ச்சையில் உட்பட்டுள்ள முக்கியப் பிரச்சினை, ஒரு குறிப்பிட்ட காரியம் நிகழ்வதற்கு இதுவே காரணமென்று நிரூபிக்க முடியாதிருப்பதே; அதாவது, சின்னஞ்சிறு வயதிலேயே ஒருவர் டிவியில் வன்முறைக் காட்சிகளைப் பார்ப்பதால் அவர் வளர்ந்து பெரியவராகும்போது வலுச்சண்டைக்குப் போகிறவராய் ஆகிறார் என்பதை நிரூபிக்க முடியாதிருக்கிறது. காரண காரியங்களுக்கு உள்ள தொடர்பை நிரூபிப்பது சில சமயங்களில் கடினமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, முதல் தடவையாக நீங்கள் ஒரு மருந்தை சாப்பிடுவதாக வைத்துக்கொள்வோம். சில மணிநேரத்திலேயே உங்கள் தோலில் தடிப்புகள் ஏற்படுகின்றன. அப்போது, அந்த மருந்தால் உங்களுக்கு அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது என்பது சட்டென தெரிந்துவிடுகிறது. இருப்பினும், சில சமயங்களில் மெல்ல மெல்லவே அலர்ஜி ஏற்படுகிறது. அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், ஒரு குறிப்பிட்ட மருந்துதான் அலர்ஜிக்குக் காரணம் என திட்டவட்டமாகச் சொல்வது அதிக கடினம், ஏனெனில் அலர்ஜி ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
அதே விதமாக, டிவியில் காட்டப்படும் வன்முறைக் காட்சிகளே குற்றச்செயலுக்கும் சட்டவிரோதமான செயல்களுக்கும் காரணமென நிரூபிப்பது கடினமாய் இருந்திருக்கிறது. ஆனால் இவற்றுக்கு இடையே அத்தகைய தொடர்பிருப்பதாக அநேக ஆய்வுகள் காட்டுகின்றன. தங்கள் மனப்பான்மைகளுக்கும் வன்முறைப் போக்கிற்கும் டிவியில் தாங்கள் பார்த்தவையே காரணமென சில குற்றவாளிகள்கூட ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். மறுபட்சத்தில், வேறுபல காரியங்களும் மக்களைப் பாதிக்கின்றன. வன்முறையைத் தூண்டுவிக்கும் வீடியோ கேம்ஸுகள், நண்பர்கள், குடும்பத்தார் ஆகியோரிடம் உள்ள உறவுகள், பொதுவான வாழ்க்கைச் சூழல்கள் போன்றவையும்கூட வெறித்தனமான நடத்தைக்குக் காரணமாகலாம்.
எனவே, இந்த விஷயத்தில் எதிரும்புதிருமான கருத்துகள் நிலவுவதில் ஆச்சரியமில்லை. கனடா நாட்டைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “வன்முறைக் காட்சிகளைப் பார்ப்பது மக்களை மூர்க்கத்தனம் மிக்கவர்களாக ஆக்குகிறது அல்லது அவர்களுடைய உணர்ச்சிகளை மரத்துப்போகச் செய்கிறது என்பதற்கு விஞ்ஞான ரீதியான ஆதாரம் எதுவும் இல்லை.” இருப்பினும், அமெரிக்கன் சைக்கலாஜிக்கல் அசோஸியேஷன் கமிட்டி ஆன் மீடியா அண்ட் சொஸைட்டி இவ்வாறு சொன்னது: “டிவியில் வன்முறைக் காட்சிகளைப் பார்த்துப் பார்த்து ஜனங்கள் வெறித்தனமான மனப்பான்மைகளைச் சகித்துக்கொள்கிறார்கள், வெறித்தனமாக நடந்துகொள்ளவும் செய்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.”
சிந்திக்கும் விதத்தை டிவி பாதிக்குமா?
வெறித்தனமான காட்சிகளைப் பார்ப்பது வெறித்தனத்தைத் தூண்டிவிடுவதாக நிரூபிக்க முடியுமா? இந்தக் கேள்வி நிபுணர்கள் மத்தியில் விவாதிக்கப்படுகிறது என்பதை மறக்க வேண்டாம். இருப்பினும், நாம் சிந்திக்கும் விதத்தையும் நம் நடத்தையையும் டிவி பாதிக்காது என்று சிலர் சொல்லிக்கொள்கிறார்கள். இதைச் சற்று யோசித்துப் பாருங்கள். ஒரேவொரு ஃபோட்டோ நம்மை கோபப்படுத்தவோ, கண்ணீர் சிந்தவோ, சந்தோஷப்படவோ வைக்கலாம். இசையும்கூட நம் உணர்ச்சிகளை வெகுவாய் பாதிக்கிறது. புத்தகங்களில் காணப்படும் வார்த்தைகள்கூட நம்மைச் சிந்திக்க வைக்கின்றன, வேதனைப்படுத்துகின்றன, செயல்படத் தூண்டுகின்றன. அப்படியென்றால், காட்சிகள், இசை, வசனங்கள் ஆகியவை திறம்பட்ட விதத்தில் கதம்பமாகக் கலந்து ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைப் பற்றி கேட்கவா வேண்டும்? மக்களை டிவி இந்தளவு மயக்கி வைத்திருப்பதைக் குறித்து ஆச்சரியமே இல்லை! மேலும், அது இல்லாத இடமே இல்லை எனலாம். ஓர் எழுத்தாளர் இவ்வாறு சொல்கிறார்: “மனிதன் தன் எண்ணங்களை முதன்முதலாக எழுத்தில் வடிக்கக் கற்றுக்கொண்டதிலிருந்து . . . அதற்காக அவன் பயன்படுத்தியிருக்கும் எந்தப் புதிய உத்தியும் டிவி அளவுக்குப் பெரும் தாக்கத்தை நாகரிகத்தின் மீது ஏற்படுத்தவில்லை.”
பார்வையாளர்கள் தாங்கள் காண்பவற்றாலும் கேட்பவற்றாலும் வசீகரிக்கப்படுவார்கள் என்பதை அறிந்திருப்பதாலேயே ஒவ்வொரு வருடமும் விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கான பணத்தை தொழில் நிறுவனங்கள் தண்ணீர் போல் செலவழிக்கின்றன. விளம்பரங்களால் பலன் கிடைக்குமா, கிடைக்காதாவென சந்தேகத்துடன் அவற்றின் உரிமையாளர்கள் பணத்தை வாரி இறைப்பதில்லை; கண்டிப்பாகப் பலன் கிடைக்குமென அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்த விளம்பரங்கள் பொருள்களை வாங்க வைக்கின்றன. 2004-ல் கோகோ கோலா கம்பெனி தன் தயாரிப்பைப் பற்றி புத்தகங்கள், செய்தித்தாள்கள், ரேடியோ, டிவி மூலம் உலகெங்கும் விளம்பரம் செய்வதற்கென 220 கோடி ரூபாயைச் செலவிட்டது. அப்படி விளம்பரம் செய்ததால் பலன் கிடைத்ததா? அந்த வருடத்தில் மட்டும் அந்தக் கம்பெனி கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்தது. ஒரு முறை விளம்பரத்தைப் பார்ப்பது ஒருவருடைய மனதை மாற்றிவிடாது என்பதை விளம்பரதாரர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அதனால், வருடக்கணக்கில் திரும்பத் திரும்ப விளம்பரப்படுத்தும்போது ஏற்படுத்தும் பாதிப்பையே அவர்கள் முழுக்க முழுக்க நம்பியிருக்கிறார்கள்.
30 வினாடிகள் காட்டப்படும் விளம்பரங்களைப் பார்ப்பதே நம் மனப்பான்மைகளையும் நடத்தையையும் பாதிக்கிறதென்றால் மணிக்கணக்காக டிவி பார்க்கும்போது நம் சிந்தனைகள் எந்தளவு பாதிக்கப்படும்! டெலிவிஷன்—ஆன் இன்டர்நேஷனல் ஹிஸ்டரி என்ற புத்தகத்தின் ஆசிரியர் இவ்வாறு சொல்கிறார்: “வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், டிவியில் தினசரி சாதாரணமாய் பார்க்கிற பொழுதுபோக்கு மறைமுக ஆசான் போலவே செயல்படுகிறது.” எ பிக்டோரியல் ஹிஸ்டரி ஆஃப் டெலிவிஷன் என்ற புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “நாம் சிந்திக்கும் விதத்தையே டெலிவிஷன் மாற்றிவிடுகிறது.” அப்படியானால், பின்வரும் கேள்வியை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘நான் எப்படிச் சிந்திக்க விரும்புகிறேனோ அப்படிச் சிந்திக்க டிவி எனக்கு உதவுகிறதா?’
கடவுளைச் சேவிக்கிற நபர்களுக்கு அந்தக் கேள்வி விசேஷ முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது. பெரும்பாலான டிவி நிகழ்ச்சிகள், பைபிள் கற்பிக்கும் மேம்பட்ட நியதிகளுக்கும் ஒழுக்க நெறிகளுக்கும் நேர்மாறாக உள்ளன. பைபிள் கண்டனம் செய்யும் வாழ்க்கைமுறையும் பழக்கவழக்கங்களும் ஏற்கத்தக்கவையாக, சாதாரணமானவையாக, நவீன போக்காகக் காட்டப்படுகின்றன. அதே சமயத்தில், ஏசாயா 5:20.
கிறிஸ்தவர்களின் மதிப்பீடுகளும், அவற்றைக் கடைப்பிடிப்பவர்களும் பெரும்பாலும் ஒதுக்கப்படுகிறார்கள், கேலிசெய்யப்படுகிறார்கள், அல்லது மட்டமானவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். ஓர் எழுத்தாளர் இவ்வாறு புலம்பினார்: “விதிமுறைகளை மீறி நடப்பதை இயல்பானதாய் காட்டுவது போதாதென்று, இயல்பானதை விதிமுறையை மீறி நடப்பதாகவும் காட்டுகிறார்கள்.” இந்த ‘மறைமுக ஆசான்’ எப்போதுமே “தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும்” சொல்லி மோசம்போக்குகிறது.—டிவி நிகழ்ச்சிகள் நாம் சிந்திக்கும் விதத்தைப் பாதிக்கும் என்பதால் என்ன பார்க்கிறோம் என்பதைக் குறித்து கவனமாய் இருக்க வேண்டும். “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 13:20) ஆடம் கிளர்க் என்ற பைபிள் அறிஞர் இவ்வாறு சொல்கிறார்: “ஒரு நபரோடு நடப்பது, அவரை நேசிப்பதையும் அவர்மீது பாசம் வைத்திருப்பதையும் அர்த்தப்படுத்துகிறது; மேலும் நாம் நேசிப்பவர்களைப் பின்பற்றாமல் இருக்கவே முடியாது. எனவே, ‘அவனுடைய நண்பன் யாரென்று காட்டுங்கள், அவன் யாரென்று சொல்லிவிடுகிறேன்’ என்று கூறுகிறோம். அவர் யாருடன் சகவாசம் வைக்கிறார் என்பதை அறிந்தால் அவர் ஒழுக்கசீலரா என்பதை ஊகிப்பது எளிது.” நாம் பார்த்தபடி, பெரும்பாலோர் டிவியில் வரும் கதாபாத்திரங்களுடன்தான் எக்கச்சக்கமான நேரத்தைச் செலவழிக்கிறார்கள்; அந்தக் கதாபாத்திரங்கள் ஞானியின் வரிசையில் இடம்பெறுவதில்லை; உண்மை கிறிஸ்தவர் ஒருவர் அத்தகைய ஆட்களை தன் வீட்டுக்கு வரும்படி அழைப்பதைப் பற்றி கனவிலும் நினைத்துப் பார்க்க மாட்டார்.
உங்கள் டாக்டர் சிபாரிசு செய்த வீரியமிக்க மருந்தை வாங்குவதற்குமுன் அதனால் வரும் நன்மை தீமைகளை கவனமாய் ஆராய்ந்து பார்ப்பீர்கள், அல்லவா? தவறான மருந்தைச் சாப்பிடுவது, அல்லது ஒருவேளை சரியான மருந்தை அதிகமாகச் சாப்பிடுவதும்கூட உங்கள் உடல்நலத்தைப் பாதிக்கும். டிவி பார்ப்பதும் அவ்வாறே இருக்கிறது. எனவே டிவியில் எதைப் பார்க்கிறோம் என்பதைக் குறித்து கவனமாய் சிந்திப்பது புத்திசாலித்தனம்.
உண்மையுள்ளவையாக, ஒழுக்கமுள்ளவையாக, நீதியுள்ளவையாக, கற்புள்ளவையாக, அன்புள்ளவையாக, நற்கீர்த்தியுள்ளவையாக, புண்ணியமுள்ளவையாக, புகழப்படத்தக்கவையாக உள்ள காரியங்களைக் குறித்து சிந்திக்கும்படி அப்போஸ்தலன் பவுல் பரிசுத்த ஆவியின் ஏவுதலால் கிறிஸ்தவர்களை ஊக்குவித்தார். (பிலிப்பியர் 4:6-8) அந்தப் புத்திமதியை நீங்கள் பின்பற்றுவீர்களா? அப்படிப் பின்பற்றினால் நீங்கள் சந்தோஷமாய் இருப்பீர்கள்.
[அடிக்குறிப்பு]
a அமெரிக்க டிவி நிகழ்ச்சிகளும் திரைப்படங்களும் உலகெங்கும் ஒளிபரப்பப்படுவதால் அமெரிக்காவின் புள்ளிவிவரங்கள் பிற நாடுகளுடையதோடு ஒத்திருக்கின்றன.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
“நீங்கள் அழைக்க விரும்பாத ஆட்களோடு சேர்ந்துகொண்டு நடுவீட்டில் பொழுதைக் கழிக்கச் செய்கிற ஒரு கண்டுபிடிப்புதான் டெலிவிஷன்.”—டேவிட் ஃப்ராஸ்ட், பிரிட்டிஷ் ஒளிபரப்பாளர்
[பக்கம் 5-ன் பெட்டி]
பைபிளில் குறிப்பிடப்படும் செக்ஸும் வன்முறையும் —ஒரு கண்ணோட்டம்
வன்முறையும் செக்ஸும் டிவியில் காட்டப்படுகின்றன, பைபிளும் அவற்றைப் பற்றி குறிப்பிடுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் பைபிளுக்கும் டிவிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? வன்முறையும் செக்ஸும் நமக்குப் பாடம் புகட்டும் விதத்திலேயே பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளன, நம்மை குஷிப்படுத்துவதற்காக அல்ல. (ரோமர் 15:4) பூர்வத்தில் நடந்த உண்மைச் சம்பவங்கள் பைபிளில் உள்ளன. இவை, எல்லா விஷயங்களிலும் கடவுளுடைய நோக்குநிலையைப் புரிந்துகொள்வதற்கும் மற்றவர்களுடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதற்கும் நமக்கு உதவுகின்றன.
பெரும்பாலான நாடுகளில் டிவி வர்த்தக விளம்பரங்களில் செக்ஸும் வன்முறையும் காட்டப்படுகின்றன—பாடம் புகட்டுவதற்கு அல்ல, லாபம் சம்பாதிப்பதற்காக. எத்தனை பேரை முடியுமோ அத்தனை பேரையும் வசீகரிக்க விளம்பரதாரர்கள் முயற்சி செய்கிறார்கள்; செக்ஸும் வன்முறையும் உள்ள காட்சிகளைக் காட்டுவதன் மூலம் பார்ப்பவர்கள் அந்த இடத்தைவிட்டு நகராதபடி செய்துவிடுகிறார்கள். விளைவு: மக்கள் வர்த்தக விளம்பரங்களைப் பார்ப்பார்கள், விளம்பரப்படுத்தும் பொருள்களை வாங்குவார்கள். செய்தி ஒளிபரப்பாளர்களின் கொள்கையும் இதுதான்: “கோர சம்பவங்கள் எந்தளவு காட்டப்படுகிறதோ அந்தளவு அது முக்கியச் செய்தியாகிறது.” வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், குற்றச்செயல், பேரழிவு, போர் போன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் முன்னணியில் இருக்கும் முக்கியச் செய்திகள் ஆகின்றன.
வன்முறைச் செயல்களைப் பற்றி பைபிள் குறிப்பிட்டாலும், அது சமாதானத்துடன் வாழவே மக்களை ஊக்குவிக்கிறது; பழிவாங்குவதற்கு முயற்சி செய்யாமல் சுமுகமாக பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள ஊக்குவிக்கிறது. செக்ஸ் விஷயத்தில் எப்போதுமே ஒழுக்க நெறியை ஊக்குவிக்கிறது. டிவி நிகழ்ச்சிகளிலோ சமாதானமும் ஒழுக்க நெறியும் ஊக்குவிக்கப்படுவதில்லை.—ஏசாயா 2:2-4; 1 கொரிந்தியர் 13:4-8; எபேசியர் 4:32.
[பக்கம் 7-ன் பெட்டி/படம்]
டிவியும் மழலைகளும்
“வன்முறைச் செயல்களை மழலைகள் பார்ப்பது அவர்களை மோசமாய் பாதிக்கிறது என்ற திட்டவட்டமான முடிவுக்கு அறிவியல் சமுதாயமும் பொது நல சமுதாயமும் வந்திருக்கின்றன; பல பத்தாண்டு காலமாக நடத்தப்பட்ட ஆய்வுகளிலிருந்து படிப்படியாகக் கிடைத்த அத்தாட்சிகளின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்திருக்கின்றன.”—த ஹென்ரி ஜே. கைஸர் ஃபேமிலி ஃபௌண்டேஷன்.
“‘இரண்டு வயது குழந்தைகளும், அதைவிடச் சிறிய குழந்தைகளும் [டிவி பார்க்கக்] கூடாது’ என குழந்தைகளுக்கான அமெரிக்க அகடமி சொல்வதை [நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்]. இந்தக் குழந்தைகளின் மூளை வெகு வேகமாக வளர்ச்சியடைந்து வருவதால் அவர்கள் சுறுசுறுப்பாக ஓடியாடி விளையாட வேண்டும், நேருக்கு நேர் ஜனங்களுடன் பழக வேண்டும்; இது, அவர்களுடைய உடல் வளர்ச்சிக்கும், திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கும், மற்றவர்களுடன் நல்ல விதத்தில் நடந்துகொள்வதற்கும் உதவும்.”—த நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆன் மீடியா அண்ட் த ஃபேமிலி.
[பக்கம் 6, 7-ன் படம்]
நான் எப்படிச் சிந்திக்க விரும்புகிறேனோ அப்படிச் சிந்திக்க டிவி எனக்கு உதவுகிறதா?