ஒரு சிறுவனின் விசுவாசம்
ஒரு சிறுவனின் விசுவாசம்
டஸ்டின் என்ற சிறுவனுடைய அம்மாவுக்கு யெகோவாவின் சாட்சி ஒருவர் பைபிள் படிப்பு நடத்தி வந்தார். சில சமயங்களில் டஸ்டினும் அந்தப் படிப்பில் கலந்துகொள்வான். அவனுக்கு 11 வயதுதான்; என்றாலும் ஆழ்ந்து யோசிப்பவன். அதனால் நிறைய அர்த்தமுள்ள கேள்விகளைக் கேட்பான். கொஞ்ச நாட்களுக்குள் தனக்கும் படிப்பு நடத்தும்படி தன் அம்மாவுக்கு பைபிள் படிப்பு நடத்திய சகோதரியிடம் கேட்டான்; அவர் முன்பு மிஷனரியாக இருந்தவர். டஸ்டின் பைபிளிலிருந்து கற்றுக்கொண்டதை ஸ்கூல் பிள்ளைகளிடம் சொல்ல ஆரம்பித்தான்.
ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களுக்குப் போகத் தொடங்கினான். சபையாரிடம் கேள்விகள் கேட்கப்படுகையில் அவனும் பதில்சொல்ல தொடங்கினான். ஒருசமயம் அப்பாவைப் பார்ப்பதற்காக, அவனும் அவனுடைய தம்பி தங்கைகளும் சென்றிருந்தபோது, எல்லாரும் சேர்ந்து கண்டிப்பாக சர்ச்சுக்குப் போக வேண்டுமென்றார். ஆனால், ராஜ்ய மன்றத்திற்குப் போக தான் ஆசைப்படுவதற்கான காரணத்தை டஸ்டின் விளக்கியபோது, அப்பா அவனை அனுப்ப ஒத்துக்கொண்டார்.
ஒருநாள் கூட்டம் முடிந்த பிறகு, அவனுடைய அம்மா ராஜ்ய மன்றத்தில் டஸ்டினை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அம்மாவிடம் சொல்லாமலேயே அவன் போய் தேவராஜ்ய ஊழியப் பள்ளி கண்காணியிடம் தன்னையும் பள்ளியில் சேர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டிருந்தான். அதற்கு அவனுடைய அம்மாவும் ஒத்துக்கொண்டார். முதல் பேச்சைக் கொடுக்கப்போகும் நாளுக்காக அவன் ஆசை ஆசையாய் காத்திருந்தான். இதற்கிடையே அவனுக்கு இடுப்பு பகுதியில் கடுமையான வலி ஆரம்பித்ததால், பரிசோதனைக்காக பல டாக்டர்களிடம் அவனைக் கொண்டுப்போனார்கள். காத்திருந்து, காத்திருந்து கடைசியில் அவன் பேச்சு கொடுக்க வேண்டிய அந்த நாளும் வந்தது. அதற்குள்ளாக அவன் ஊன்றுகோலை உபயோகிக்க ஆரம்பித்திருந்தான். அவன் தாங்க முடியாத வலியில் தவித்தது அவனுடைய முகத்திலேயே தெரிந்தது. இருந்தாலும் ஊன்றுகோல் இல்லாமலேயே மேடைக்கு நடந்துசென்றான்.
அதன் பிறகு சீக்கிரத்திலேயே அவனுக்கு யூயிங் சார்கோமா எனும் அரிதான எலும்பு புற்றுநோய் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு அடுத்த வருடம் அவன், கலிபோர்னியாவில், சான் டியகோவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையிலேயே பெரும்பாலும் காலத்தைக் கழித்தான். கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை போன்றவை அவனுக்கு அளிக்கப்பட்டன, கடைசியில் வலது காலும் இடுப்பு எலும்பும் துண்டிக்கப்பட்டன. என்றாலும் யெகோவாமீது அவனுக்கிருந்த பலமான விசுவாசமும் அன்பும் சற்றும் தணியவில்லை. வாசிக்கக்கூட தெம்பில்லாத சமயத்தில், அம்மா அவனுக்குச் சத்தமாக வாசித்துக்காட்டினார். அம்மா எப்போதும் அவன் கூடவே இருந்தார்.
அவனுடைய உடல்நிலை மோசமடைந்த போதிலும், அதைப் பற்றி அவன் புலம்பவே இல்லை. மாறாக, எப்போதும் வீல்சேரில் சுற்றி வந்து மற்ற பேஷண்டுகளையும் அவர்களுடைய பெற்றோர்களையும் யெகோவாவின் சாட்சியாக இருக்கும் ஒரு பேஷண்டையும் உற்சாகப்படுத்தினான். அந்தச் சிறுவனும் டஸ்டினும் வித்தியாசப்பட்டவர்களாக இருந்ததை மருத்துவமனை பணியாளர்கள் கவனித்தார்கள். அவர்களுடைய விசுவாசம் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்ததைப் பார்த்தார்கள்.
டஸ்டின் முழுக்காட்டுதல் பெற ஆசைப்பட்டான். யெகோவாவின் சாட்சியாக முழுக்காட்டுதல் பெற விரும்புகிறவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளைக் கிறிஸ்தவ மூப்பர்கள் அவனிடம் கேட்டார்கள். அவனுக்கு உட்காருவதற்கே தெம்பு இல்லாததால், சோஃபாவில் படுத்தவாறே அவற்றிற்குப் பதில் சொன்னான். அக்டோபர் 16, 2004-ல் நடந்த ஒரு வட்டார மாநாட்டில் தனது பன்னிரண்டரை வயதில் முழுக்காட்டுதல் பெற்றான்.
முழுக்காட்டுதல் பேச்சு ஆரம்பிப்பதற்குச் சற்று முன்பு, முழுக்காட்டுதல் பெறவிருந்தோர் உட்கார்ந்திருந்த இடத்திற்கு அவன் வீல்சேரில் கொண்டுவரப்பட்டான். அவன் அழகாக டிரஸ் செய்துகொண்டு வந்திருந்தான். முழுக்காட்டுதல் பெறவிருந்தோரிடம் கேள்விகள் கேட்பதற்காக எழுந்து நிற்கும்படி சொல்லப்பட்டபோது, சேரின் கைப்பிடியை இறுகப் பிடித்துக்கொண்டு ஒற்றைக் காலில் நின்றான். கேட்கப்பட்ட கேள்விகளுக்குச் சத்தமாகவும் தெளிவாகவும் பதில் சொன்னான். அவனுடைய வீட்டில் எல்லாரும் மாநாட்டிற்கு வந்திருந்தார்கள், அப்பாவும் மாற்றாந்தாயும்கூட வந்திருந்தார்கள். மருத்துவமனை பணியாளர்களும், புற்றுநோயாளிகளின் பெற்றோர்களும் அவனுடைய முழுக்காட்டுதலைப் பார்க்க வந்திருந்தார்கள்.
முழுக்காட்டுதல் பெற்ற மறுநாளே அவன் திரும்பவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். உடம்பிலுள்ள எல்லா எலும்பிலும் புற்றுநோய் பரவியிருந்தது. அவனுடைய உடல்நிலை மோசமாகிக்கொண்டே போனது; சீக்கிரத்திலேயே இறக்கப் போவதை அறிந்ததும், ‘நான் இறந்துபோயிடுவேனா’ என்று அம்மாவிடம் கேட்டான். “ஏன் அப்படி கேட்கிறே, உனக்கு பயமா இருக்கா?” என்று அம்மா கேட்டார்.
அதற்கு அவன், “பயமெல்லாம் இல்ல. நான் அப்படியே கண்ணை மூடிடுவேன், உயிர்த்தெழும்பும்போது திரும்பவும் கண்ணை திறந்திடுவேன். அப்போ ஒரு செக்கண்டுக்கு முன் நான் கண்ணை மூடினதுபோலத்தான் இருக்கும். அப்போது எனக்கு வலியே இருக்காது” என்று சொன்னான். அதன் பிறகு, “உங்களையெல்லாம் நினைச்சால்தான் எனக்குக் கவலையாக இருக்கு” என்றான்.
அடுத்த மாதமே டஸ்டின் இறந்துவிட்டான். டாக்டர்கள், நர்ஸுகள், மருத்துவமனையில் வேலை செய்வோரின் குடும்பத்தார், டீச்சர்கள், அக்கம்பக்கத்தார், அவனுடைய குடும்பத்தார் எல்லாருமே—யெகோவாவின் சாட்சியாக இருந்தவர்களும் இல்லாதவர்களும்—அவனுடைய சவ அடக்கத்திற்கு வந்திருந்தார்கள். சவ அடக்கத்திற்கு வருவோரிடம் தன்னுடைய நம்பிக்கைகளைப் பற்றி நன்கு சாட்சிகொடுக்க வேண்டுமென அவன் ஏற்கெனவே சொல்லி வைத்திருந்தான். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் முதலும் கடைசியுமாக அவன் கொடுத்த பேச்சை அவனுக்கு நியமித்த அதே சகோதரர் சவ அடக்க பேச்சையும் கொடுத்தார். உட்காரக்கூட இடமில்லாதளவு நெருக்கமாக நின்றிருந்த கூட்டத்தார் முன்பாக விசுவாசத்தைப் பலப்படுத்தும் அருமையான பேச்சை அவர் கொடுத்தார்.
மத்தேயு 24:14-ம் 2 தீமோத்தேயு 4:7-ம் டஸ்டினுக்கு மிகவும் பிடித்தமான வசனங்கள்; இவை பிரிண்ட் செய்யப்பட்டு அங்கு வந்திருந்தோருக்குக் கொடுக்கப்பட்டன. அவனுடைய உறுதியான விசுவாசமும் உண்மைத்தன்மையும் அவனை அறிந்த எல்லாரையும் உற்சாகப்படுத்தின. உயிர்த்தெழுந்து வருகையில் அவனை வரவேற்க நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்.—டஸ்டினுக்கு பைபிள் படிப்பு நடத்திய சகோதரி சொன்னது.
[பக்கம் 27-ன் சிறு குறிப்பு]
“நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.”—2 தீமோத்தேயு 4:7
[பக்கம் 26-ன் படம்]
மேலே: டஸ்டின், நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கையில்
[பக்கம் 26-ன் படம்]
கீழே: பன்னிரண்டரை வயதில் டஸ்டின் முழுக்காட்டுதல் பெற்றபோது