Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகைக் கவனித்தல்

உலகைக் கவனித்தல்

உலகைக் கவனித்தல்

◼ “வட அரைக்கோளத்தில் இதுவரை பதிவானதிலேயே” கடந்த ஆண்டுதான் “மிக உஷ்ணமாக” இருந்தது; அதேபோல உலகளவில் பார்த்தால்கூட கடந்த ஆண்டுதான் “இரண்டாவது மிக உஷ்ணமான” ஆண்டாக இருந்திருக்கிறது. பதிவு செய்யப்பட்டதிலேயே “மிக உஷ்ணமான பத்து ஆண்டுகளில் எட்டு, கடந்த பத்தாண்டுகளைச் சேர்ந்தவை.”​—⁠பிபிசி செய்திகள், பிரிட்டன்.

◼ 2005-⁠ம் ஆண்டின் அட்லாண்டிக் சூறாவளி பருவமே இதுவரை பதிவு செய்யப்பட்டதில் “மிகவும் பரபரப்பானதாக”, “ஒருவேளை அதிக பேரழிவை ஏற்படுத்தியதாக” இருந்தது. பதிவுசெய்யப்பட்ட 14 சூறாவளிகளில் ஏழு, மணிக்கு 177 கிலோமீட்டரைவிட அதிக வேகத்தில் வீசியிருக்கின்றன.​—⁠ஐ.மா. தேசிய கடல் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாகம்.

◼ “மான்டானாவில் [அ.ஐ.மா.] உள்ள பனியாறு தேசிய பூங்காவில் 150-க்கும் மேலான பனியாறுகள் 1850-⁠ல் இருந்தன. இப்பொழுது 27 மட்டுமே உள்ளன.”​—⁠த உவால் ஸ்ட்ரீட் ஜர்னல், அ.ஐ.மா.

◼ “தங்கள் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிந்தால் புவிச் சூடு பிரச்சினையை அரசாங்கங்கள் கிடப்பில் போட்டுவிடுகின்றன. சுற்றுச்சூழல் மாற்றம் தொடர்பான அரசாங்க கொள்கைகளை பொறுத்தவரையில் இதுவே நிதர்சனமான உண்மை.”​—⁠டோனி பிளேர், பிரிட்டிஷ் பிரதமர்.

கத்தோலிக்கர்கள் “வீட்டுக்கு வீடு” ஊழியமா?

கடந்த 14 வருடங்களில் பிரேசில் நாட்டிலுள்ள கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 83 சதவீதத்திலிருந்து 67 சதவீதமாக குறைந்திருக்கிறது என்கிறார் சாவோ போலோ நகரின் பேராயர் க்ளாட்யூ யூமெஸ். “பல்வேறு காரணங்களால், ஞானஸ்நானம் பெற்ற அங்கத்தினர்களுக்கு நற்செய்தியை முழுமையாக பிரசங்கிக்க முடியாத திருச்சபையின் கையாலாகாத்தனத்தை” அந்தப் பேராயர் குறை கூறுகிறார். “உள்ளூர் திருச்சபையில் உள்ளவர்களுக்கு பிரசங்கித்தால் மட்டும் போதாது; வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பதன் மூலமும் பள்ளிகள், மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள் போன்ற நிறுவனங்களில் பிரசங்கிப்பதன் மூலமும் விசுவாசிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று யூமெஸ் சொல்கிறார். மிஷனரி பயிற்சி பெற்ற சாமானியர்கள் இந்த வேலையைச் செய்யவேண்டும் என்பதாக ஃபோல்யா ஆன்லைன் என்ற செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிரேசிலிலும், லத்தீன் அமெரிக்காவின் மற்ற பகுதிகளிலும் கத்தோலிக்க சர்ச் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று பாதிரிமார்கள் பற்றாக்குறையே.

ஜெர்மனியில் சட்டப்பூர்வ அங்கீகாரம்

ஜெர்மனி, லீப்ஜிக் நகரிலுள்ள கூட்டாட்சி நிர்வாக நீதிமன்றம் (ஃபெடரல் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கோர்ட்) பிப்ரவரி 10, 2006-⁠ல் ஒரு தீர்ப்பை பிரசுரித்தது. பெர்லின் அரசாங்கம், ஜெர்மனியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய மத அமைப்பை சட்டப்பூர்வ ஸ்தாபனமாக அங்கீகரித்தாக வேண்டுமென்று அதில் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தில் 15 வருடங்களாக நடந்த போராட்டத்தை இத்தீர்ப்பு முடிவுக்குக் கொண்டுவந்தது. இந்த வழக்கை, கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றம் (ஃபெடரல் கான்ஸ்ட்டிட்யூஷனல் கோர்ட்) உட்பட பல்வேறு ஜெர்மன் நீதிமன்றங்கள் பரிசீலனை செய்திருந்தன. ஜெர்மனியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய மத அமைப்பு ஒரு சட்டப்பூர்வ ஸ்தாபனமாக அங்கீகரிக்கப்பட்டதால் வரிவிலக்குகளையும் அந்நாட்டிலுள்ள முக்கிய மதத் தொகுதிகளுக்கு அளிக்கப்படும் மற்ற சலுகைகளையும் பெறும்.

‘இன்டர்நெட் கேம்ஸ்’ வலையில் சீன இளைஞர்கள்

“இன்டர்நெட் கேம்ஸுகளுக்கு அடிமையாகும் சீன இளைஞர்களின் எண்ணிக்கை மளமளவென்று அதிகரித்து வருகிறது” என்று ஹாங்காங்கின் சௌத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தித்தாள் கூறுகிறது. கொரிய குடியரசு, ஜப்பான், ஹாங்காங் போன்ற மற்ற கிழக்கத்திய நாடுகளில் உள்ள இளைஞர்களும் இந்த வலையில் விழுந்திருக்கிறார்கள். அந்த செய்தித்தாள் இப்படிக் குறிப்பிடுகிறது: “தங்கள் பிள்ளைகள் பெரிதாக சாதிக்க வேண்டுமென்று பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள். பல்கலைக்கழகத்தில் இடம்பிடிக்கவோ போட்டா போட்டி போட வேண்டியிருக்கிறது. இப்படியாக சமுதாயம் பிள்ளைகளின் கழுத்தை நெரிக்கிறது. ஆனால் பிள்ளைகளோ இன்டர்நெட் கேம்ஸ்களில் புகுந்து இந்த உலகத்தையே மறந்து விடுகிறார்கள். இது, எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் எதிரான மனப்பான்மை பிள்ளைகளிடம் இருப்பதையே காட்டுகிறது. இந்த அடிமைத்தனத்தை மேற்கொள்ள கிட்டத்தட்ட 60 லட்சம் சீன பிள்ளைகளுக்கு உதவி தேவைப்படுகிறது எனக் கணிக்கப்பட்டுள்ளது.