நம்பிக்கையிழந்த வாழ்வில் சுடர்விட்ட சந்தோஷம்
நம்பிக்கையிழந்த வாழ்வில் சுடர்விட்ட சந்தோஷம்
பிசேன்டே கொன்ஸ்ஸாலேஸ் சொன்னபடி
நான்கு முறை என்னையே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சாகப் பார்த்தேன். ஆனால் சாகவில்லை. அதனால் அக்கம்பக்கத்தார் என்னை “சூப்பர்மேன்” என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். உண்மையில் நான் ஒன்றும் “சூப்பர்மேன்” கிடையாது. சரி, எதற்காக தற்கொலை செய்துகொள்ள முயன்றேன் என்பதைச் சொல்கிறேன், கேளுங்கள்.
ஈக்வடாரிலுள்ள குயாகுவில் என்ற இடத்தில் 1951-ம் ஆண்டு பிறந்தேன். நாங்கள் மொத்தம் ஒன்பது பிள்ளைகள். கடலோரமாக இருந்த தி இன்வேஷன்ஸ் என்ற பகுதியில் நாங்கள் குடியிருந்தோம். அது அரசாங்கத்திற்குச் சொந்தமான இடம். ஆனால் ஏழைபாழைகள் அந்த இடத்தை ஆக்கிரமித்து வீடுகட்டி குடித்தனம் ஆரம்பித்துவிட்டார்கள்; அவர்கள் மூங்கில்களால் சுவர்களையும் தகரங்களால் கூரைகளையும் அமைத்தார்கள். என்னுடைய பெற்றோரும் அங்கு ஒரு வீட்டைக் கட்டினார்கள். அது கடலோரப் பகுதியாகவும் சதுப்பு நிலப் பகுதியாகவும் இருந்ததால் வீடுகள் உயரமான கம்பங்கள்மீது கட்டப்பட்டன. அங்கு மின்வசதி இல்லாததால் கரி அடுப்பில்தான் சமைத்தோம். குடி தண்ணீர் எடுத்துவர ஒரு கிலோமீட்டர் தூரம் போனோம்.
வீட்டில் பண நெருக்கடி இருந்ததால் என் அக்காவும் அண்ணனும் சிறு வயதிலேயே வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டார்கள். 16 வயதில் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு ஒரு ஃபேக்டரியில் பியூனாக வேலைக்குச் சேர்ந்தேன். என் நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க ஆரம்பித்தேன், ஒழுக்கங்கெட்ட நடத்தையில் ஈடுபட்டேன். என் மனசாட்சி என்னை உறுத்தியபோதெல்லாம் பாவ மன்னிப்புப் பெற சர்ச்சுக்குப் போனேன். பாதிரி என்னிடம், “மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்று சொல்லுவார். ஆனால் திருந்துவதற்காக பைபிளிலிருந்து எந்தப் புத்திமதியும் கொடுக்க மாட்டார். எனவே, திரும்ப திரும்ப அதே தவறுகளைச் செய்துகொண்டிருந்தேன். பாவம் செய்வதும், பாவ மன்னிப்பு கேட்பதும் வீண்போல் தோன்றின. எனவே, சர்ச்சுக்குப் போவதையே நிறுத்திவிட்டேன். ஆனால், சுற்றிச்சூழ எங்கும் அநியாயங்கள் நடப்பதைக் கவனித்தேன். ஏகப்பட்ட ஏழைபாழைகள் வாழ்க்கை நடத்தவே திண்டாடுவதைக் கவனித்தேன். ஆனால் சொற்பமாக இருந்த பணக்காரர்கள் சொகுசாக வாழ்ந்ததைப் பார்த்தேன். அவர்கள் அர்த்தமில்லாத வாழ்க்கை வாழ்வதாக நினைத்தேன். என் எதிர்காலம் இருண்டு போனதாகவும், என் வாழ்க்கைக்கு நோக்கமில்லாததாகவும் தோன்றியது.
ஒருநாள் என்னுடைய இரண்டு அக்காக்களும் இரண்டு தங்கைகளும் யெகோவாவின் சாட்சிகளுடைய புத்தகங்களை வாசிப்பதைப் பார்த்தேன். நானும் அவற்றை வாசிக்கத் தொடங்கினேன். அவர்களிடமிருந்த ஒரு புத்தகம் என்னைக் கவர்ந்தது. நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகமே அது. பைபிளிலுள்ள அநேக விஷயங்களை அது நியாயமான முறையில் விளக்கியது. ‘இதுதான் சத்தியம்!’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டது இன்றும் நினைவிலிருக்கிறது. ஆனால் சத்தியத்தின்படி வாழ்வது எவ்வளவு சவால்மிக்கது என்பதை அடுத்து வந்த 15 வருடங்களில் புரிந்துகொண்டேன்.
22 வயதில் ஒரு வங்கியில் வேலைக்குச் சேர்ந்தேன். ஒருநாள், என்னோடு வேலை செய்த ஒருவன், வங்கியிலிருந்து யாருக்கும் தெரியாமல் பணத்தை எப்படி எடுப்பது, பிறகு அதை அங்கேயே எப்படித் திருப்பி வைப்பது என்பதைச் சொல்லிக் கொடுத்தான். நானும் அப்படியே செய்யத் தொடங்கினேன். இப்படி எடுத்து எடுத்து பணத்தைத் திரும்பவும் வைக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டேன். அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தேன். வேறு வழியே இல்லை, போய் உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டியதுதான் என்று நினைத்தேன். பிறகு, எனக்கு நானே தக்க தண்டனை அளித்துக்கொள்வதற்கு தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்தேன்.
வங்கிக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுப் போய் சிறு துப்பாக்கி ஒன்றை வாங்கினேன்; கடற்கரையில் தனிமையான ஓர் இடத்திற்கு சென்று இரண்டு முறை தலையிலும் இரண்டு முறை நெஞ்சிலும் சுட்டுக்கொண்டேன். பயங்கர காயம் ஏற்பட்டதே தவிர நான்
சாகவில்லை. அந்த வழியாக சைக்கிளில் வந்த ஒருவர் உடனடியாக என்னை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். குணமான பிறகு நான் செய்த திருட்டுக்காக நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. தண்டனைக் காலம் முடிந்த பிறகு விடுதலை ஆனேன். ஆனால் குற்றவாளியென முத்திரை குத்தப்பட்டதால் தலைநிமிர்ந்து நடப்பதற்கே அவமானமாக இருந்தது, அதோடு சோர்வும் என்னை வாட்டியது. நான்கு குண்டுகள் பாய்ந்தும் உயிரோடிருந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தார் என்னை “சூப்பர்மேன்” என்று கூப்பிட ஆரம்பித்தார்கள்.திருந்த ஒரு வாய்ப்பு
ஏறக்குறைய அந்தச் சமயத்தில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான பால் ஸான்ஷேஸ் என்ற மிஷனரியைச் சந்தித்தேன். எப்போதும் அவர் சிரித்த முகத்துடன் இருப்பதைத்தான் முதலில் கவனித்தேன். அவர் சந்தோஷத்தோடும், நம்பிக்கையோடும் இருந்ததைப் பார்த்து அவருடன் பைபிளைப் படிப்பதற்கு ஒத்துக்கொண்டேன். ‘சந்தோஷத்தையும் வாழ்க்கையின் அர்த்தத்தையும் கண்டுபிடிக்க அவர் எனக்கு ஒருவேளை உதவலாம்’ என்று நினைத்துத்தான் படிப்புக்கு ஒத்துக்கொண்டேன்.
ஒரு நோக்கத்தோடுதான் கடவுள் மனிதர்களைப் படைத்திருக்கிறார் என்பதையும் தம்மை நேசித்து, தமக்குக் கீழ்ப்படிகிறவர்களைப் பூங்காவனம் போன்ற பரதீஸ் பூமியில் சீக்கிரத்தில் வாழ வைக்கப்போகிறார் என்பதையும் சகோதரர் பால் கற்றுக்கொடுத்தார். (சங்கீதம் 37:29) அதோடு, அநியாயத்திற்கும் பசிபட்டினிக்கும் கடவுள் காரணர் அல்ல, மனிதன் அவருக்கு விரோதமாக நடந்துகொண்டதே காரணம் என்பதையும் புரிந்துகொண்டேன். (உபாகமம் 32:4, 5) இந்தச் சத்தியங்கள் என் வாழ்க்கை பாதைக்கு ஒளியூட்டின. பைபிள் படிப்பது சுலபமாயிருந்தாலும் என்னை மாற்றிக்கொள்ள ரொம்பவே கஷ்டப்பட்டேன்.
எனக்கு ஒரு கம்பெனியில் வேலை கிடைத்தது. அது, கம்பெனி நிதிகளைக் கையாளும் வேலை. மறுபடியும் கை அரிப்பு தாங்க முடியாமல் கஜானாவில் கைவைத்துவிட்டேன். குற்றத்தை இனி மறைக்க முடியாது என்ற நிலைமை வந்த போது ஊரைவிட்டு ஓடினேன். ஈக்வடாரிலேயே இன்னொரு நகரத்திற்கு சென்று அங்கு ஒரு வருடம் தங்கினேன், பிறகு நாட்டைவிட்டே போய்விட முயற்சி செய்தேன், ஆனால் முடியவில்லை. அதனால் என் சொந்த ஊருக்கே திரும்பினேன்.
அங்கு சகோதரர் பால் என்னை மறுபடியுமாகச் சந்தித்து பைபிள் படிப்பை தொடங்கினார். இந்த முறை பைபிள் நியமங்களை வாழ்க்கையில் பின்பற்றி யெகோவாவை சேவிக்கத் தீர்மானித்தேன். அதனால் இதற்கு முன் செய்த திருட்டைப் பற்றி பாலிடம் சொன்னேன். அவர் நேரடியாக அறிவுரை கொடுத்தார். அவர் பைபிளிலிருந்து எடுத்துக்காட்டிய வசனங்களில் ஒன்று எபேசியர் 4:28. “திருடுகிறவன் இனித் திருடாமல் . . . தன் கைகளினால் நலமான வேலை செய்து, பிரயாசப்படக்கடவன்” என்று அது சொல்கிறது. எனவே, என் தவறை ஒத்துக்கொண்டு அதற்குரிய தண்டனையைப் பெற தீர்மானித்தேன்.
அந்தச் சமயத்தில் ஓவியனாக சொந்த தொழில் செய்ய ஆரம்பித்தேன். ஒருநாள் என் கடைக்கு வந்த ஒருவர் என் ஓவியம் நன்றாக இருக்கிறது என்றார். ஆனால், அவர் ஓர் உளவாளி, என்னை கைதுசெய்வதற்கு வாரென்டுடன் வந்திருந்தார். அதனால் மறுபடியும் நீதிமன்றத்திற்கும் பின்னர் சிறைக்கும் அழைத்துச் செல்லப்பட்டேன். பால் என்னை வந்து சந்தித்தார், நான் அவரிடம் இப்படியாக உறுதி அளித்தேன்: “எனக்கு பைபிள் சொல்லி தர நீங்கள் எடுக்கும் முயற்சி ஒருபோதும் வீண்போகாது.” நாங்கள் சிறையிலேயே மீண்டும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தோம்.
என் வாக்கைக் காப்பாற்றினேன்
விடுதலையானதும், யெகோவாவை முழு இருதயத்துடன் சேவிக்கத் தீர்மானித்தேன். அடுத்த இரண்டு வருடங்களுக்குள் என் வாக்கைக் காப்பாற்றினேன். 1988-ல் யெகோவாவின் சாட்சியாக முழுக்காட்டுதல் பெற்றேன். நான் இதுவரை வீணாக்கிய நேரத்தை ஈடுகட்ட பயனியராக முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தேன். ரெளடி கும்பல்களைச் சேர்ந்த இளைஞர்களைச் சந்தித்து சாட்சி கொடுக்க விசேஷ முயற்சி எடுத்தேன்.
ஒரு ரெளடி கும்பல் எப்போதும் எங்கள் ராஜ்ய மன்றத்தின் சுவரில் கிறுக்கி அசிங்கம் செய்தது. அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களையும், அவர்கள் வசித்த இடத்தையும் தெரிந்து வைத்திருந்தேன். அதனால் அவர்களைச் சந்தித்து ராஜ்ய மன்றம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்கினேன். ராஜ்ய மன்றத்திற்கு மரியாதை காட்டும்படி அவர்களிடம் தயவாகக் கேட்டுக்கொண்டேன். அதன் பிறகு அப்படிக் கிறுக்குவதை அவர்கள் நிறுத்திவிட்டார்கள்.
பிறகு, நாங்கள் ராஜ்ய மன்றத்தைப் புதுப்பிப்பதற்காகச் சுவரிலிருந்த பழைய பெயிண்ட்டை சுரண்டி எடுத்துக்கொண்டிருந்தோம். அப்போது, ஃபெர்னான்டோ என்ற இளம் சாட்சி சுவரில் “தவளை” (ஸ்பானிய மொழியில் லா ரானா) என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தான். உடனே அவன், “நான்தான் எழுதினேன்!” என்றான். ஒருகாலத்தில் ரௌடி கும்பலில் இருந்த ஃபெர்னான்டோ இந்தச் சுவரில் தன் பட்டப்பெயரை எழுதியிருந்தான். இப்போதோ அதை அவனே சுரண்டி எடுத்துக்கொண்டிருந்தான்!
ஃபெர்னான்டோவை நான் முதன்முதலில் சந்தித்தபோது அவன் மிதமிஞ்சிய போதையில் இருந்தான். அவனுடைய அம்மா அவனை இரண்டு மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைத்தும் திருந்தவில்லை. அதனால், அவனைத் திருத்தவே முடியாது என்ற முடிவுக்கு வந்த அவனுடைய அம்மா அவனை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வெளியேறிவிட்டார். ஃபெர்னான்டோ போதைப்பொருள் வாங்குவதற்காக எல்லாவற்றையும் விற்றுத்தொலைத்தான். கதவு, ஜன்னல், கூரை என எதையுமே அவன் விட்டுவைக்கவில்லை.
ஒருநாள் அவனை நான் தெருவில் பார்த்தேன். அவனுக்குச் சோடா வாங்கிக்கொடுத்தேன். பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி அவனிடம் சொன்னபோது படிப்பதற்கு ஒத்துக்கொண்டான். அதுமட்டுமல்ல படித்தவற்றை வாழ்க்கையில் பின்பற்றவும் ஆரம்பித்தான். எனக்கு ஓரே ஆச்சரியம்! ரௌடி கும்பலைவிட்டு விலகினான், போதைப்பொருள் பயன்படுத்துவதை நிறுத்தினான், சபைக் கூட்டங்களுக்கு வரத்தொடங்கினான், சீக்கிரத்தில் முழுக்காட்டுதலும் பெற்றான்.நானும் ஃபெர்னான்டோவும் வெளி ஊழியத்திற்குச் சேர்ந்து போனால் மக்கள் எங்களைப் பார்த்து, “தவளை!,” “சூப்பர்மேன்!” என்ற எங்கள் பட்டப்பெயர்களில் அழைத்து நாங்கள் என்ன செய்கிறோம் என்று விசாரிப்பார்கள். ஒருகாலத்தில் ரௌடி கும்பலில் இருந்தவனையும் முன்பு திருடனாக இருந்தவனையும் இப்போது பைபிளும் கையுமாகப் பார்த்தபோது அவர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
ஒருசமயம் நான் ஒரு நபரிடம் சாட்சி கொடுத்துக்கொண்டிருந்தபோது ஃபெர்னான்டோ அடுத்த வீட்டில் பேசிக்கொண்டிருந்தான். நான் பேசிக்கொண்டிருந்த நபர் ஃபெர்னான்டோவை சுட்டிக்காட்டி, “இவன் ஒரு முறை என்னை சுட்டுவிடுவதாக சொல்லி என் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டினான்” என்றார். ஃபெர்னான்டோ இப்போது திருந்திவிட்டதையும் பைபிள் நியமங்களுக்கு இசைவாக வாழ்வதையும் பற்றி சொல்லி அவரைச் சமாதானப்படுத்தினேன். பிறகு ஃபெர்னான்டோ பேசி முடித்ததும் அவனை அழைத்து இவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். “தம்பி, நீ இந்தளவு மாறியிருப்பதைப் பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது” என்றார் அவர்.
இதுபோன்ற நிறைய பாராட்டுக்கள் எனக்கும் ஃபெர்னான்டோவுக்கும் கிடைத்திருக்கின்றன. இவை மற்றவர்களுக்குச் சாட்சி கொடுக்க வழிசெய்திருக்கின்றன. இதனால் நிறைய பைபிள் படிப்புகள் கிடைத்திருக்கின்றன. யெகோவாவின் சாட்சிகள் என சொல்லிக்கொள்வதில் நானும் ஃபெர்னான்டோவும் பெருமிதம் கொள்கிறோம்.
என் வாழ்க்கையில் ஒரு மைல்கல்
2001-ல் என் 50-வது வயதில், பெருவில் நடக்கவிருந்த ஊழியப் பயிற்சிப் பள்ளியில் கலந்துகொள்ள அழைப்பு கிடைத்தபோது, எனக்கு ஒரே ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. இந்தப் பள்ளி தகுதிவாய்ந்த சாட்சிகளுக்குக் கருத்தாழமிக்க ஆன்மீக கல்வியை அளிக்கிறது. எட்டு வாரங்கள் நடைபெறும் இப்பள்ளி ஊழியத்தைத் திறம்பட செய்வதில் உதவுகிறது.
பள்ளியின் ஒவ்வொரு அம்சத்தையும் சந்தோஷமாக அனுபவித்தேன், ஆனால் ஒரு அம்சம் மட்டும் என்னை குலைநடுங்க வைத்தது; ஆம், மேடையிலிருந்து பேச ரொம்பவே பயப்பட்டேன். என்னைவிட வயதில் சிறியவர்கள் பேச்சுகளைச் சிறப்பாகக் கொடுத்தார்கள், அவர்கள் பேச்சில் தன்னம்பிக்கை தெரிந்தது. சிறுவயதிலிருந்தே தாழ்வு மனப்பான்மை என்னை வாட்டியெடுத்தது. என் முதல் பேச்சைக் கொடுக்க மேடைக்கு சென்றபோது மறுபடியும் அது என்னைத் தொற்றிக்கொண்டது. என் முழங்கால்கள் நடுங்கின, என் கைகள் வியர்த்துக் கொட்டின, என் பேச்சும் குழறியது. என்றாலும் யெகோவா என்னை பரிசுத்த ஆவி மூலமாகவும் அன்பான சகோதரர்கள் மூலமாகவும் பலப்படுத்தினார். போதனையாளர்களில் ஒருவர் என்னிடம் விசேஷ அக்கறை காட்டினார், வகுப்பு முடிந்த பிறகு என்னோடுகூட இருந்து பேச்சுகளைத் தயார் செய்வதில் உதவினார். முக்கியமாக யெகோவாமீது சார்ந்திருக்க கற்றுத்தந்தார். பள்ளி முடியும் சமயத்தில் வாழ்க்கையில் முதன்முறையாக எல்லார் முன்பாகவும் பயப்படாமல் பேச்சுக் கொடுத்தது சந்தோஷமாக இருந்தது.
குயாகுவில் நகரில் நடந்த யெகோவாவின் சாட்சிகள் மாநாட்டில் என் தன்னம்பிக்கைக்கு மிகப் பெரிய பரீட்சை காத்திருந்தது. நான் எப்படி யெகோவாவின் சாட்சியாக ஆனேன் என்பதை மாநாட்டுக்கு வந்திருந்த 25,000 பேருக்கு முன்பாகச் சொன்னேன். இப்படி இத்தனை பேரை உற்சாகமூட்டும் சிலாக்கியம் எனக்குக் கிடைத்ததை நினைத்தபோது உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன், அது என் குரலில் வெளிப்பட்டது. மாநாட்டிற்கு வந்திருந்த ஒருவர் பிறகு என்னிடம் வந்து இப்படியாகச் சொன்னார்: “சகோதரர் கொன்ஸ்ஸாலேஸ், உங்கள் அனுபவத்தைக் கேட்டு நாங்கள் எல்லாருமே அழுதுவிட்டோம்.” தங்களுடைய பழக்கவழக்கங்களை விட்டுவிலக கஷ்டப்படுகிறவர்கள் என்னுடைய அனுபவத்தைக் கேட்டு ஊக்கம் பெற வேண்டும் என்பதுதான் என் இலட்சியமாக இருந்தது.
நான் இப்போது மூப்பராகவும் ஒழுங்கான பயனியராகவும் சேவை செய்கிறேன். பைபிள் சத்தியத்தின் திருத்தமான அறிவைப் பெறுவதற்கு 16 பேருக்கு உதவியிருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். என் பெற்றோரும் என் இரண்டு அக்காக்களும் இரண்டு தங்கைகளும் யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்திருப்பது எனக்கு மிகுந்த சந்தோஷம். என் அம்மா 2001-ல் இறந்துவிட்டார், சாகும்வரை அவர் யெகோவாவுக்கு உண்மையுள்ளவராக இருந்தார். தம்மை அறிந்துகொள்ள யெகோவா எனக்கு உதவியிருப்பதற்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. மற்றவர்களும் அவரிடம் நெருங்கி செல்ல உதவுவதே அவருக்கு என் நன்றியைக் காட்ட சிறந்த வழி என்று நினைக்கிறேன்.—யாக்கோபு 4:8.
[பக்கம் 12-ன் படம்]
ரௌடி கும்பலைச் சேர்ந்த, தவளை என்றழைக்கப்பட்ட ஃபெர்னான்டோவுக்கு உதவினேன்
[பக்கம் 12-ன் படம்]
பால் ஸான்ஷேஸ்—எனக்கு பைபிள் படிப்பு நடத்தின மிஷனரி
[பக்கம் 13-ன் படம்]
இன்று பிசேன்டே கொன்ஸ்ஸாலேஸ்