எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
ஒத்துழைப்பு—வாழ்க்கைக்கு முக்கியம் (செப்டம்பர் 8, 2005 [ஆங்கிலம்]) இந்தப் பத்திரிகையின் அட்டையைப் பார்த்தவுடனே அதிலுள்ள விஷயம் எங்கே சுவாரசியமாக இருக்குப் போகிறதென நினைத்தது என்னவோ உண்மைதான். ஆனாலும் வாசித்தேன், அட்டைப்பட கட்டுரைகள் எல்லாம் சூப்பர்! வாசிக்கும்போது இடையிடையே நிறுத்தி, இப்படி எல்லாவற்றையும் அற்புதமாகப் படைத்திருப்பதற்காக யெகோவாவுக்கு நன்றி சொன்னேன். மிருகங்கள் ஒன்றுக்கொன்று உதவியாக இருப்பதே தனி அழகுதான்.
பி. கே., அமெரிக்கா
இளைஞர் கேட்கின்றனர் . . . தவறான ஆட்களுடன் பழகுவதை நான் எப்படி தவிர்ப்பது? (செப்டம்பர் 8, 2005) “தவறான” ஒரு நபரிடம் என் மனதைப் பறிகொடுத்தேன்; பைபிள் சத்தியத்தை அவர் நெஞ்சார நேசிக்கவே இல்லை. இப்படி ஆன்மீக ரீதியில் ஆட்டம்காணும் ஆளுடன் பழகுவது எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்துகொள்ள இந்தத் தகவல் எனக்கு உதவியது. எங்களிடம் யெகோவா கரிசனை காட்டுகிறார் என்பதை அறிந்துகொள்வது ஆறுதல் அளிக்கிறது. சரியான நேரத்தில் எனக்கு உதவினீர்கள், உங்களுக்கு ரொம்ப நன்றி.
எ.பி.கே., ஜாம்பியா
என் நண்பர்களை மாற்றிக்கொள்வது அவசியமென்பதைப் புரிந்துகொள்ள இக்கட்டுரை எனக்கு உதவியது. அப்படி மாற்றிக்கொள்வது எனக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் அடிக்கடி இக்கட்டுரையை எடுத்து வாசித்துப் பார்ப்பது எனக்கு ஊக்கம் அளிக்கிறது. இளைஞர்களாகிய எங்களுக்கு நீங்கள் தரும் உதவிக்கும் ஊக்கமூட்டுதலுக்கும் கோடி நன்றி.
எல். ஆர்., அமெரிக்கா
பைபிளின் கருத்து—கன்னி மரியாளிடம் ஜெபிக்கலாமா? (அக்டோபர் 8, 2005) யாரும் குற்றம்குறை சொல்லாதளவுக்கு நீங்கள் நடந்துகொள்வதால் யெகோவாவின் சாட்சிகளாகிய உங்கள்மீது எனக்கு மதிப்பு இருக்கிறது; அதோடு உங்கள் பத்திரிகைகள் அநேக விதங்களில் எனக்கு உதவியிருக்கின்றன. இருந்தாலும், மரியாளிடம் உதவி கேட்கக்கூடாதென நீங்கள் எப்படிச் சொல்லலாம்? நம் மனசாந்திக்காக அவர்கள் பிதாவிடம் பரிந்துபேசுகிறார்கள், அல்லவா?
ஈ. ஆர்., ஸ்பெயின்
“விழித்தெழு!” பதில்: கடவுளைத் தவிர வேறு யாரிடமும் ஜெபிக்கக் கூடாதென்று பைபிள் சொல்வதை அக்கட்டுரை தெள்ளத் தெளிவாக விளக்கியது. கத்தோலிக்க பாதிரியும் எழுத்தாளருமான ஆண்ட்ரூ கிரீலி என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “மரியாளின் உருவப்படம், பழங்கால புறமதங்களில் வழிபட்டு வந்த தெய்வத் தாய்களுடன் கிறிஸ்தவ மதத்தை நேரடியாக இணைக்கிறது.” எனவே மரியாளை வழிபடுவது, கிறிஸ்தவ மதத்துடன் அல்ல புறமதங்களுடனேயே பெருமளவு சம்பந்தப்பட்டுள்ளது. உண்மைதான், எங்கள் வாசகர்கள் பலருக்கு இது புதிய கருத்தாகத் தோன்றலாம், ஆனாலும் பைபிள் உண்மையில் என்ன கற்பிக்கிறது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் ஆராய்ந்து பார்க்க வேண்டுமென ஊக்குவிக்கிறோம். யெகோவாவின் சாட்சிகளில் பலர் ஒருகாலத்தில் கத்தோலிக்கராக இருந்தவர்கள்தான். எனினும் பைபிளைப் படித்த பிறகு, இயேசு கிறிஸ்து மட்டுமே நமக்காக பரிந்துபேசுபவர் என்பதையும் வேறு யார் மூலமாக அணுகுவதையும் கடவுள் விரும்புவதில்லை என்பதையும் தெரிந்துகொண்டார்கள். (எபிரெயர் 7:25) கூடுதல் தகவல் பெற விரும்பினால் “பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?” a என்ற புத்தகத்தில், “கடவுள் ஏற்றுக்கொள்கிற வணக்கம்” என்ற 15-ம் அதிகாரத்தைக் காண்க; இது, நம் நம்பிக்கைகள் பைபிளோடு ஒத்திருப்பது அவசியம் என்பதை விளக்குகிறது.
நகைச்சுவை உணர்வோடு நோயைச் சமாளித்தல் (மே 8, 2005) டிசம்பர் 2002-ல் கல்லீரல் செயலிழந்ததால் என் மனைவி இறந்துவிட்டாள். சுமார் எட்டு மாதங்களுக்குப் படாத பாடுபட்டாள். இருப்பினும் உற்சாகம் தரும் விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசிவந்தாள். வாய்விட்டு சிரிக்க வைக்கும் அனுபவங்களை சொல்லுவாள். கடைசி நிமிஷம்வரை மகிழ்ச்சியாகவே இருந்தாள். இந்தக் கட்டுரையைப் படித்த பிறகுதான் அவள் ஏன் அப்படி நடந்துகொண்டாள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நம்மைப் போலவே உற்சாகமான மனநிலை அவளுக்கும் தேவைப்பட்டிருக்கிறது. சகோதரி கோன்ச்சியைப் போலவே அத்தகைய மனநிலை அவளுக்கும் மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும். என் மனைவி ஏன் அப்படி நடந்துகொண்டாள் என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு உதவியதற்கு மிக்க நன்றி.
டி. ஹெச்., அமெரிக்கா
எமது வாசகரிடமிருந்து “எமது வாசகரிடமிருந்து” என்ற பகுதியை வாசிக்க எப்போதும் ஆவலோடு காத்திருப்பேன். சில சமயங்களில் யாராவது எழுதிய பகுதியை வாசிக்கும்போது, ‘அடடா, என்னைப் போலவே அவர்களும் யோசித்திருக்கிறார்களே!’ என ஆச்சரியப்படுவேன். இன்னும் சில சமயங்களில், ‘இந்தக் குறிப்பை வாசிக்காமல் போய்விட்டேனோ?’ என கேட்டுக்கொள்வேன். உடனடியாக அந்தக் கட்டுரையை மீண்டும் ஒருமுறை எடுத்து வாசித்துப் பார்ப்பேன். அவை என் மனதைத் தொடுவதாகவும், தெம்பளிப்பதாகவும் உணர்ந்திருக்கிறேன்.
எம். டி., ஜப்பான்
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.