உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
“உணவு பற்றாக்குறையால் ஐந்து வினாடிகளுக்கு ஒரு பிள்ளை என்ற கணக்கில் ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 60 லட்சம் பிள்ளைகள் இறக்கிறார்கள்.”—ஜேம்ஸ் டி. மோரிஸ், உலக உணவு திட்டத்தின் செயற்குழு இயக்குநர்
◼ ஆகஸ்ட் 2005-ல், அமெரிக்காவின் தென் பகுதியைத் தாக்கிய கேட்ரீனா என்ற சூறாவளிக்குப் பலியானவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 1,300-யும் தாண்டியிருக்கிறது.—த வாஷிங்டன் போஸ்ட், அமெரிக்கா.
◼ அக்டோபர் 2005-ல், வடக்கு பாகிஸ்தானையும் இந்தியாவையும் உலுக்கிய பூமியதிர்ச்சி 74,000-க்கும் அதிகமான உயிர்களைக் காவுகொண்டது.—பிபிஸி நியூஸ், பிரிட்டன்.
◼ “உலகெங்கும் ஒவ்வொரு வருடமும் சுமார் 12 கோடி பேர் சாலை விபத்தில் சாகிறார்கள்” என்பதாக ஓர் அறிக்கை சொல்கிறது.—சௌத் ஆஃப்ரிக்கன் மெடிக்கல் ஜர்னல், தென் ஆப்பிரிக்கா.
களவு போகும் கலைப் பொக்கிஷங்கள்
ஒரு காலத்தில் பெரு நாடு ஸ்பெயினின் ஆதிக்கத்தில் இருந்தது; அக்காலப்பகுதியைச் சேர்ந்த கலைப் பொக்கிஷங்கள் பெரு நாட்டின் சர்ச்சுகளை அலங்கரிக்கின்றன; இவற்றைக் கட்டிக்காக்க முடியாமல் ரோமன் கத்தோலிக்க சர்ச் அதிகாரிகள் திணறுகிறார்கள். கடந்த ஆறு ஆண்டுகளில், 200 சர்ச்சுகளில் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள். குஸ்கோ நகரத்தில் மட்டும் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 5,000 கலைப்பொருள்கள், முக்கியமாய் விலைமதிப்புமிக்க ‘ஆயில் பெயிண்டிங்குகள்’ களவு போயிருக்கின்றன. நாடெங்கும் மொத்தம் எத்தனை ஓவியங்கள் களவு போயிருக்கின்றன என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை. திருடர்களின் கண்களில் மண்ணைத் தூவ, சில சர்ச்சுகள் தங்கள் ஓவியங்களை ஒளித்து வைத்திருக்கின்றன, ஆனால், ஒரு சர்ச் ‘ஆயில் பெயிண்டிங்குகளை’ பத்திரமான இடத்தில் வைக்காததால் அவற்றில் பலவற்றை எலிகள் கொறித்துப் போட்டன.
பின்லாந்தில் தொழிலாளர் தட்டுப்பாடு
பின்லாந்து நாட்டின் தொழில்துறையும் பணித்துறையும் அடிப்படை தொழிற்கல்வி பயின்ற கைதேர்ந்த வேலையாட்களை இருகரம் நீட்டி வரவேற்கின்றன. இந்நாட்டில், தச்சர்கள், கொத்தனார்கள், பிளம்பர்கள், வெல்டர்கள், மெக்கானிக்குகள், மெஷின் ஆப்பரேட்டர்கள், நர்சுகள் போன்றவர்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி. ஏன்? உயர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதே இதற்கு காரணமென ஹெல்சிங்கின் சாநாமாட் என்ற செய்தித்தாள் விளக்குகிறது. “இளம் தலைமுறையினர் எல்லாருமே கலை மற்றும் அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர்களாகவும் முதுகலை பட்டம் பெற்றவர்களாகவும் ஆவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. தொழிற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டும்” என்று ஹீக்கி ராப்பான்னன் சொல்கிறார்; இவர் பின்லாந்து வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்.
பிரான்சில் சாதகமான தீர்ப்பு
1996-ல், யெகோவாவின் சாட்சிகள் “மத உட்பிரிவினர்” என்று முத்திரை குத்தப்பட்டு குற்றவாளிகளின் கரும்பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள். இப்பட்டியல் போலீஸாருடைய ஆவணங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 1, 2005-ல், போலீஸாரிடமிருந்த அந்த ஆவணங்களைப் பார்க்க யெகோவாவின் சாட்சிகளுக்கு அனுமதி வழங்கும்படி பாரிஸின் மேல்முறையீட்டு மன்றம் பிரான்சின் உள்துறை அமைச்சருக்கு ஆணை பிறப்பித்தது. ரகசிய வழக்கு விசாரணை அடிப்படையில் இந்தக் கரும்பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது, ‘தேசிய மற்றும் பொது பாதுகாப்பு’ கருதி போலீஸாரின் ஆவணங்களிலிருந்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. எனினும், அவற்றில் யெகோவாவின் சாட்சிகளுடைய நடவடிக்கைகளால் ஏற்பட்ட “பாதிப்புகளாக விமர்சிக்கப்பட்டவை” உண்மையில் “அற்ப விஷயங்கள்” என்று நீதிமன்றம் கண்டறிந்தது. அப்படியிருந்தும், பிரான்சிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுக்கு தீங்கு விளைவிப்பதை நியாயப்படுத்த அடிக்கடி இந்தப் பட்டியல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
“பசுமை பெருஞ்சுவர்”
கால்நடைகளை அளவுக்கு அதிகமாக புல் மேயவிட்டதாலும் காடுகளை அழித்ததாலும் வறட்சியாலும் நீர் வளங்களை மட்டுக்குமீறி பயன்படுத்தியதாலும் சீனாவின் பெரும் பகுதி நீண்டகாலமாக வறண்டுபோய் கிடக்கிறது, அங்கு புழுதிப் புயல் வீசுகிறது. எனவே சீன அதிகாரிகள் “உலகம் கண்டிராத மாபெரும் சுற்றுச்சூழல் திட்டத்தை” ஆரம்பித்திருக்கிறார்கள் என நியு சைன்டிஸ்ட் பத்திரிகை சொல்கிறது. “‘பசுமை பெருஞ்சுவர்’ என்றழைக்கப்படும் இத்திட்டத்தின்படி, நாட்டிற்குள் புழுதி வீசாமல் தடுப்பதற்கு அரண்போல் ஏராளமான மரங்கள் என்றுமில்லாதளவு நடப்பட்டன.” மண்ணை இறுக பிடித்துக்கொள்வதற்குப் புற்களும் புதர்ச்செடிகளும்கூட நடப்பட்டன. 8 கோடியே 60 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் மரங்களையும் வறட்சியைத் தாக்குப்பிடிக்கும் தாவரங்களையும் நடும் நோக்கத்துடன் 1978-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம் இப்போது கிட்டத்தட்ட அரைக்கிணறு தாண்டிவிட்டது.