Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விசித்திரங்கள் நிறைந்த ஐரோப்பிய டெல்டா

விசித்திரங்கள் நிறைந்த ஐரோப்பிய டெல்டா

விசித்திரங்கள் நிறைந்த ஐரோப்பிய டெல்டா

ருமேனியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

டேன்யூப் ஆறு ஜெர்மனியில் உள்ள பிளாக் ஃபாரஸ்ட் எனும் காட்டுப் பிரதேசத்தில் ஜனனமாகிறது. இளமை துடிப்புமிக்க நீரோட்டமாக அது கிழக்கே ஆஸ்திரியாவைத் தாண்டி ஸ்லோவாக்ய எல்லை வழியே துள்ளிச் செல்கிறது. பிறகு, புரண்டு வரும் பெரு வெள்ளமாக தெற்கே ஹங்கேரிக்குள் பாய்கிறது, பிற்பாடு குரோஷியா, செர்பியா, மான்டனீக்ரோ ஆகிய நாடுகளின் எல்லைகள் வழியே ஓட்டமாய் ஓடுகிறது. அதன்பின், வடக்கே ருமேனியாவுக்குள் செல்வதற்கு முன் பல்கேரியாவின் எல்லை வழியே வளைந்து நெளிந்து வேகத்தைக் குறைத்துக்கொண்டு, அகல விரிகிறது. கடைசியில் உக்ரைனின் எல்லையைத் தொட்டவாறு மெதுவாகச் செல்கிறது.

முதிர்நிலை அடைந்த இந்த ஆறு, வண்டல் மண்ணைச் சுமந்தபடி, சுமார் 300 கிளையாறுகளிலிருந்து சேர்கிற தண்ணீர்களுடன் பெருக்கெடுத்து, இறுதியில் கருங்கடலின் கரைகளில் ஓர் அழகிய டெல்டாவைப் பிறப்பிக்கிறது. ருமேனியாவின் தென்கிழக்கில் உள்ள டூல்ச்சா என்ற நகருக்கு அருகே, டேன்யூப் மூன்று கிளையாறுகளாக, அதாவது கீலீயா, சூலீனா, செ. ஜார்ஜ் என்ற மூன்று முக்கிய கிளையாறுகளாகப் பிரிந்து கடைசியில் கருங்கடலில் தன் ஓட்டத்தை முடிக்கிறது.

டேன்யூப்பின் இந்த மூன்று கிளையாறுகள் டெல்டாவுக்குள் நளினமாகச் செல்லும்போது, அவை ஏராளமான சிறிய சிறிய நீரோட்டங்களாகப் பிரிந்து எண்ணற்ற சதுப்புநிலங்களுக்கும் ஏரிகளுக்கும் நீர்வளத்தைச் சேர்க்கின்றன. ஆற்றிலுள்ள வண்டலும் கடலிலுள்ள மணலும் சேரும்போது மிகப் பெரியளவில் மணல்திடல்களும் தீவுகளும் உண்டாகின்றன. காராவார்மான் என்ற மணல்திடலில் உள்ளதைப் போன்ற சில மணற்குன்றுகள் கிட்டத்தட்ட ஆறு மீட்டர் அளவுக்கு உயரமாக இருக்கின்றன, பார்ப்பதற்குப் பாலைவனம் போலவும் காட்சி அளிக்கின்றன.

என்றாலும் டேன்யூப் டெல்டா, வண்டலும் மணலும் வந்து குவிகிற இயற்கை இடம் மட்டுமே அல்ல. இன்னும் நிறைய சிறப்பம்சங்களும் அதற்கு உண்டு. இந்த டெல்டா சுமார் 4,300 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உடையது; ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய சதுப்புநில இயற்கை வாழிடமாக உள்ளது. அதுமட்டுமல்ல, உலகிலேயே மிகப் பரந்தளவில்​—⁠ஏறக்குறைய 1,700 சதுர கிலோமீட்டருக்கு​—⁠நாணல் படுகைகள் மண்டிக்கிடக்கும் இடமாகவும் உள்ளது.

எல்ம், ஓக், ஆல்டர் ஆகிய மரங்கள் நிறைந்த காடுகள் இந்த டெல்டாவின் ஏகப்பட்ட மணல்திடல்களில் கம்பீரமாய் நிற்கின்றன. குறுக்கும் நெடுக்குமாக பின்னிப்பிணைந்திருக்கும் ஏராளமான காட்டுத் திராட்சைக் கொடிகளும், ஐவி மற்றும் லியானா என்ற படர்செடி வகைகளும், இன்னும் பிற தாவரங்களும் சூரிய ஒளிக்காக எப்போதும் போட்டிப் போட்டுக்கொண்டு அந்த மரங்களின் மீது படர்ந்து ஏறுகின்றன. கரிமப் பொருள்களாலான இந்த டெல்டா ஏதோவொரு விதத்தில் பிரமாண்டமான ‘ஃபில்டராக’ வேலை செய்கிறது, இவ்வாறு ஐரோப்பாவில் உள்ள மிகப் பெரிய தண்ணீர் சுத்திகரிப்பு அமைப்பாகச் செயல்படுகிறது.

விலங்கினங்களின் ‘சொர்க்கம்’

பறவைகளின் இந்தச் ‘சொர்க்க’ பூமிக்கு 300-⁠க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் லட்சக்கணக்கில் திரண்டு வருகின்றன. உலகிலுள்ள வெள்ளை நிற பெலிக்கன் பறவைகளில் சுமார் 50 சதவீதமும், பிக்மி கார்மராண்ட் நீர்ப்பறவைகளில் 60 சதவீதத்திற்கு அதிகமும் இந்த டேன்யூப் டெல்டாவில் இனப்பெருக்கம் செய்கின்றன. அதுமட்டுமா, உலகெங்குமே அழிந்துபோகும் ஆபத்திலுள்ள செந்நிற மார்கொண்ட ஒரு வகை வாத்துகள் கிட்டத்தட்ட அனைத்தும் குளிர்காலத்தில் இங்குதான் வாழ்கின்றன. மார்ச் மாதத்தில், பெலிக்கன் பறவைகள் ஒதுக்குப்புறமான இடங்களிலுள்ள மிதக்கும் நாணல் தீவுகளின் மீது கூட்டைக் கட்டி, முட்டையிடுகின்றன. இலையுதிர் காலம் தொடங்கும்போது, அவை அங்கிருந்து புறப்பட்டு நைல் டெல்டாவுக்கும், கிரீஸுக்கும், இந்தியா வரையுள்ள ஆசிய கரையோரப் பகுதிகளுக்கும் பறந்து செல்கின்றன.

ஆனால், மீண்டும் டேன்யூப் டெல்டாவிடமே அந்தப் பறவைகள் கவரப்படுகின்றன; அங்குள்ள கச்சிதமான சூழல் மட்டுமல்ல, அங்குள்ள மீன்களும் அதற்குக் காரணம். டெல்டாவின் கிளைநதிகளில் 90-⁠க்கும் மேற்பட்ட மீன் வகைகள் உயிர் வாழ்கின்றன. சொல்லப்போனால், ருமேனிய மக்களால் உண்ணப்படும் நன்னீர் மீன்களில் 50 சதவீதம் இந்த டெல்டாவிலிருந்தே கிடைக்கின்றன. இங்குள்ள மிகப் பிரபலமான மீன்களில் ஒன்று ஸ்டர்ஜன் ஆகும்; முட்டையிடுவதற்காக இது இனப்பெருக்க காலத்தில் டேன்யூப் ஆற்றில் உள்நோக்கி நீந்திச் செல்கிறது. கேவியர் என்றும் அழைக்கப்படுகிற அதன் முட்டைகள் விலை உயர்ந்தவை, மிகவும் விரும்பத்தக்கவை, படு ருசியானவை.

இவ்விடத்தில் நிலப்பகுதி வெகு குறைவுதான்​—⁠13 சதவீத நிலப்பகுதி மட்டுமே நீர்நிலைக்கு மேல் இருக்கிறது. ஓநாய்களும், நரிகளும், முயல்களும், மஸ்கராட் என்ற நீர்வாழ் விலங்கு வகையும் இங்கு உயிர்வாழ்கின்றன. அழியும் ஆபத்திலுள்ள உயிரினங்களான நன்னீர் நீர்நாயும் ஐரோப்பிய கீரி வகையும் இவ்விடத்தில் வாழ்கின்றன; இந்தக் கீரியின் மயிர்த்தோலினால் ஆன மேலாடைகள் ஒருகாலத்தில் நவநாகரிக மங்கையரின் மனங்கவர்ந்த ஆடைகளாக இருந்தன. இதெல்லாம்போக, 1,800-⁠க்கும் அதிகமான பூச்சி வகைகள் படுசுறுசுறுப்பாக, இந்த உல்லாச உலகைச் சுற்றி ஊர்ந்து செல்கின்றன.

பாதுகாக்கப்பட வேண்டிய இயற்கை சூழல்

1991-⁠ல், டேன்யூப் டெல்டா உலக ஆஸ்திகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதற்கு அடுத்த வருடம், இயற்கை ஒதுக்கீட்டுப் பகுதியாக சர்வதேச அளவில் அது அங்கீகாரம் பெற்றது. இந்த இயற்கைப் பகுதி டூல்ச்சா நகரிலிருந்து மிகக் கவனமாக நிர்வகிக்கப்படுகிறது. மீன்பிடிக்க அங்கு சட்டப்படி தடைவிதிக்கப்பட்டிருந்தாலும், திருட்டுத்தனமாக அது நடந்துவருவது தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருக்கிறது.

அதோடு, டெல்டாவின் ஆரோக்கியமான சூழல் நகரங்களினாலும் தொழில்துறை மையங்களினாலும் பாதிக்கப்படுகிறது, ஏனெனில் அவற்றிலிருந்து வருகிற அத்தனை கழிவுப் பொருள்களும் டேன்யூப் ஆற்றில் ‘உமிழ்ந்துவிடப்படுகின்றன.’ ஆம், கடலை நோக்கிச் செல்லும் அதன் 2,850 கிலோமீட்டர் தூரப் பயணத்தின்போது வழியெல்லாம் கழிவுப் பொருள்கள் அதில் கலக்கப்படுகின்றன. டேன்யூப் ஆறு டெல்டாவுக்குள் நுழைவதற்கு முன்னர், ஏராளமான சதுப்புநில புல்வெளிகள் அதை கடந்த பல வருடங்களாக வடிகட்டி வந்தன. இப்போதோ, அந்தப் புல்வெளிகளில் ஏறக்குறைய 80 சதவீதம் மறைந்துவிட்டன.

இன்று டேன்யூப் டெல்டா கருங்கடலுக்குள் ஆண்டுதோறும் 30 மீட்டர் தூரம் அளவுக்கு விரிந்துகொண்டே போகிறது. விசித்திரங்கள் நிறைந்த இந்த டெல்டாவை டேன்யூப் ஆறு ஆயிரக்கணக்கான வருடங்களாக எப்படி விரிவாக்கி, புதுப்பித்து, புத்துயிரூட்டி வந்ததோ அப்படியே இன்றும் செய்துவருகிறது. (g05 10/22)

[பக்கம் 24-ன் தேசப்படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

உக்ரைன்

மால்டோவா

ருமேனியா

புகாரெஸ்ட்

டேன்யூப் டெல்டா

கருங்கடல்

டேன்யூப் ஆறு

பல்கேரியா

[பக்கம் 24-ன் படம்]

உலகிலேயே மிகப் பரந்தளவு விரிந்திருக்கும் டெல்டாவின் நாணல் படுகைகள், எல்லாவித உயிரினங்களுக்கும் புகலிடமாக இருக்கின்றன

[பக்கம் 24-ன் படம்]

மஸ்கராட்

[பக்கம் 25-ன் படங்கள்]

உலகின் வெள்ளை நிற பெலிக்கன்களில் சுமார் 50 சதவீதம் இங்கு இனப்பெருக்கம் செய்கின்றன

[பக்கம் 26-ன் படம்]

பறவைகளின் இந்த ‘சொர்க்க’ பூமிக்கு மீன்கொத்திப் பறவைகள் உட்பட, 300-⁠க்கும் அதிகமான மற்ற பறவை இனங்களும் திரண்டு வருகின்றன

[பக்கம் 26-ன் படங்கள்]

டேன்யூப் டெல்டாவில் 1,800-⁠க்கும் மேற்பட்ட பூச்சி வகைகள் காணப்படுகின்றன

[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]

All photos: Silviu Matei

[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]

All photos: Silviu Matei

[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]

All photos: Silviu Matei