Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எல்லாருக்கும் நல்ல வீடு—ஒருவழியாக!

எல்லாருக்கும் நல்ல வீடு—ஒருவழியாக!

எல்லாருக்கும் நல்ல வீடு​—⁠ஒருவழியாக!

கென்யாவின் தலைநகரான நைரோபிக்குச் சற்று வெளியே 140 ஏக்கர் பரப்பளவிலுள்ள அழகான இடத்தில் அமைந்திருக்கிறது ஐக்கிய நாடுகளின் கிகிரி காம்பவுண்டு. UN-HABITAT அமைப்பின் தலைமையகமும் அங்குதான் உள்ளது. உலகெங்கும் உள்ள வீடில்லாத் திண்டாட்டத்தைத் தீர்க்கும் பொறுப்பு அனைத்து தேசங்களுக்கும் இருக்கிறது என்பதற்கு இந்த அமைப்பு ஒரு சின்னமாக விளங்குகிறது. அந்தக் காம்பவுண்டிலுள்ள கிகிரி நேச்சர் ட்ரெய்ல் வழியே நடக்கையில் ஒரு விஷயம் பளிச்சென புலப்படுகிறது; அதாவது கூட்டு முயற்சியும் போதிய நிதியும் இருந்தால் எந்தக் காரியமும் வெற்றிபெறும் என்பது புலப்படுகிறது. ஏனெனில், முன்பு குப்பையும் கூளமுமாக இருந்த இந்த இடம், இப்போது பணியாளர்களுக்குப் பயனுள்ள இடமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்குப் பொழுதுபோக்கு இடமாகவும் மிக அழகாக மாற்றப்பட்டுள்ளது.

ஆனால், அதற்கு சில கிலோமீட்டர் தூரத்திலேயே மற்றொரு இடம் இருக்கிறது; அது புதியதாக இருந்தாலும் வேகமாக விரிவடைந்து வருகிறது. அது ஒரு சேரி. தற்போதைய வீடில்லாத் திண்டாட்டத்தைத் தீர்ப்பது எவ்வளவு கடினம் என்பதற்கு அது ஒரு சோகமான நினைப்பூட்டுதல். மண்ணினாலும், குச்சிகளினாலும், தகர ஷீட்டுகளினாலும் கட்டப்பட்ட அங்குள்ள குடிசைகள் குறைந்தபட்சம் நான்கு சதுர மீட்டர் அளவிலானவை. குடிசைகளுக்கு இடையிலான நடைபாதைகளில் துர்நாற்றம் வீசுகிற சாக்கடை ஓடுகிறது. அங்கு வாழ்பவர்கள் தண்ணீருக்காகச் செலுத்தும் தொகை, ஐக்கிய மாகாணங்களில் குடியிருக்கிற சராசரி குடிமக்கள் செலுத்துகிற தொகையைவிட ஐந்து மடங்கு அதிகம். அங்கு வாழ்கிற கிட்டத்தட்ட 40,000 பேரில் பெரும்பாலோர் இருபதுக்கும் நாற்பதுக்கும் இடைப்பட்ட வயதினர். அவர்கள் வேலைசெய்ய விரும்பாத சோம்பேறிகள் அல்ல. ஆனால், வேலை தேடி அருகிலுள்ள நைரோபியிலிருந்து வந்திருந்தவர்கள்.

இதற்கு நேர்மாறாக சுத்தமான, வசதியான, கவர்ச்சியான சுற்றுச்சூழல் உள்ள இந்த கிகிரி காம்பவுண்டுக்கு உலகத் தலைவர்கள் கூடிவருகிறார்கள். எதற்காக? அதன் அருகிலுள்ள அந்தச் சேரி வாசிகளின் எதிர்காலத்தைக் குறித்து விவாதிப்பதற்காக! ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் சொன்னபடி, சேரிவாசிகளின் வாழ்க்கையை முன்னுக்குக் கொண்டுவருவதற்கான “வளங்களும், அறிவும், சக்தியும் இந்த உலக மக்களிடம் இருக்கிறது” என்பதுதான் கசப்பான உண்மை. அப்படியானால் என்ன செய்யப்பட வேண்டும்? மிஸ்டர் அன்னன் முடிவாக இவ்வாறு சொல்கிறார்: “முன்னேற்றத்திற்குத் தடையாய் இருக்கிற அக்கறையற்ற மனப்பான்மையையும், அரசியல்வாதிகளின் உறுதியற்ற மனப்பான்மையையும் சம்பந்தப்பட்ட எல்லாரும் முறியடிக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.”

என்றாலும், அந்த எதிர்பார்ப்பு எந்தளவு நடைமுறையானது? பன்னாட்டுத் தலைவர்களும் அந்தந்த நாட்டுத் தலைவர்களும் தங்களுடைய சொந்த அக்கறைகளை மறந்துவிட்டு எல்லாருடைய நன்மைக்காகவும் உழைக்கும்படி செய்வதற்கு என்ன தேவை? இந்தத் திண்டாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான எல்லா வளங்களும், அறிவும், சக்தியும் உள்ள ஒருவர் இருக்கிறார். அதைவிட முக்கியமாக, சீக்கிரத்திலேயே அதைச் செய்வதற்கான அக்கறையும், அனுதாபமும், உறுதியும் உள்ளவராகக்கூட அவர் இருக்கிறார். சொல்லப்போனால், உலகெங்குமுள்ள வீடில்லாப் பிரச்சினையை அடியோடு ஒழித்துக்கட்டுவதற்கு விரிவான திட்டத்தை அவரது அரசாங்கம் ஏற்கெனவே வகுத்துள்ளது.

ஒரு புதிய வீட்டுவசதித் திட்டம்

படைப்பாளரான யெகோவா தேவன் தாம் என்ன செய்யப்போகிறார் என்பதை பைபிளில் தெரிவித்துள்ளார். “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்” என வாக்குக் கொடுத்திருக்கிறார். (ஏசாயா 65:17) அது மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த ‘வானம்,’ அதாவது புதிய அரசாங்கம், தற்போதைய மனித அரசாங்கங்கள் செய்ய முடியாத காரியங்களைச் செய்யும். கடவுளுடைய அரசாங்கம் புதிய பூமியில் வாழப்போகும் மக்கள் ஒவ்வொருவருக்கும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் சுய கௌரவத்தையும் அளிக்கும். புதிய மனித சமுதாயமாக இந்தப் பூமியில் வாழப்போகிற மக்கள், ‘கடைசி நாட்களின்போது’ கூட்டிச்சேர்க்கப்படுவார்கள் என ஏசாயா தீர்க்கதரிசியிடம் முன்பே சொல்லப்பட்டிருந்தது. (ஏசாயா 2:1-4) அப்படியென்றால், இந்த மாற்றங்கள் வெகுவிரைவில் நிகழவிருக்கின்றன.​—மத்தேயு 24:3-14; 2 தீமோத்தேயு 3:1-5.

அப்போது வாழ்பவர்கள் ஒவ்வொருவருக்கும் கடவுள் நிரந்தரமான ஒரு வீட்டைக் கொடுப்பார் என ஏசாயா 65-⁠ம் அதிகாரத்தின் பிற வசனங்கள் காட்டுகின்றன. “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள்” என்றும், “அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதுமாயிருப்பதில்லை” என்றும் அவ்வசனங்களில் கடவுள் கூறுகிறார். (ஏசாயா 65:21, 22) கடைசியில், அந்த அற்புதமான பரதீஸில் வசதியான வீட்டில், சுத்தமான சுற்றுச்சூழலில், பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்வதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள்! அப்படிப்பட்ட காரியங்களுக்காக ஏங்காதோர் யாரேனும் உண்டா? ஆனால், கடவுள் கொடுத்துள்ள வாக்குறுதி நிறைவேறும் என்பதில் நீங்கள் எப்படி நிச்சயமாயிருக்கலாம்?

இந்த வாக்குறுதியில் நம்பிக்கை வைக்கலாம்

முதன்முதலில் ஆதாம் ஏவாளை கடவுள் படைத்தபோது, ஒன்றுக்கும் உதவாத இடத்தில் அல்ல, ஆனால் சுத்தமான காற்றும், ஏராளமான தண்ணீரும், உணவும் கிடைத்த அழகிய ஏதேன் தோட்டத்தில் அவர்களைக் குடிவைத்தார். (ஆதியாகமம் 2:8-15) பிறகு, ‘பூமியை நிரப்பும்படி’ ஆதாமிடம் சொன்னார், அதை ஜனநெருக்கடிமிக்கதாக ஆக்கும்படி சொல்லவில்லை. (ஆதியாகமம் 1:28) பூமியில் எல்லாரும் ஒழுங்கையும் ஒத்திசைவையும் ஏராளமான நல்ல காரியங்களையும் அனுபவிக்க வேண்டுமென்பதே கடவுளுடைய ஆதி நோக்கமாயிருந்தது.

பிற்பாடு, நோவாவின் காலத்தில், வன்முறையும் ஒழுக்கக்கேடும் பூமியில் பெருகியது; அதனால் “பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது.” (ஆதியாகமம் 6:11, 12) அவர் அதைக் கண்டும்காணாமல் விட்டுவிட்டாரா? இல்லை. உடனடியாக நடவடிக்கை எடுத்தார். தம்முடைய பெயரின் நிமித்தமும், நீதிமானாகிய நோவா மற்றும் அவருடைய குடும்பத்தினரின் நிமித்தமும், பூகோள ஜலப்பிரளயத்தின் மூலம் இந்தப் பூமியைச் சுத்தப்படுத்தினார். நோவா பேழையைவிட்டு இறங்கி, புதிய வீடான இந்தப் பூமியில் அடியெடுத்து வைத்தபோது, பூமியெங்கும் பரவும்படியும் ‘பலுகிப் பெருகி, பூமியை நிரப்பும்படியும்’ அவரிடம் கடவுள் சொன்னார்.​—ஆதியாகமம் 9:1.

அதற்கு பிற்பாடும்கூட, முற்பிதாவான ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்கின்படியே கடவுள் இஸ்ரவேலருக்கு ஒரு தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுத்தார். வாக்குப்பண்ணப்பட்ட அந்தத் தேசம், ‘பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசம்’ என விவரிக்கப்பட்டது. (யாத்திராகமம் 3:8) இஸ்ரவேலர் கீழ்ப்படியாமல் போனதால், சொந்த வீடின்றி 40 ஆண்டுகள் வனாந்தரத்தில் சுற்றித்திரிந்தார்கள். இருந்தாலும், கடவுள் தம்முடைய வாக்கைக் காப்பாற்றுவதற்காக, கடைசியில் அவர்களுக்கு அந்தத் தேசத்தைக் கொடுத்து அங்கு குடியமர்த்தினார். கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தை இவ்வாறு அறிவிக்கிறது: ‘கர்த்தர் அவர்களை . . . இளைப்பாறப்பண்ணினார்; கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.’​—யோசுவா 21:43-45.

எல்லோருக்கும் வீடு​—⁠ஒருவழியாக

அப்படியானால், ஏசாயா 65-⁠ல் சொல்லப்பட்டுள்ள யெகோவாவின் வார்த்தைகள் வெறும் வெற்று வாக்குறுதிகள் அல்ல என்பது தெளிவாகிறது. அனைத்தையும் படைத்த சிருஷ்டிகராக இருப்பதால், இப்பூமியைச் சுத்தப்படுத்தி தம் ஆதி நோக்கத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான எல்லாவற்றையும் செய்ய அவருக்குச் சக்தி இருக்கிறது. (ஏசாயா 40:26, 28; 55:10, 11) அப்படிச் செய்ய அவர் விருப்பமுள்ளவராய் இருக்கிறார் எனவும் பைபிள் உறுதி அளிக்கிறது. (சங்கீதம் 72:12, 13) நீதிமான்களுக்கு நல்ல வீடுகளை அளிப்பதற்காக முற்காலத்தில் அவர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். விரைவில் மறுபடியும் நடவடிக்கை எடுக்கப் போகிறார்.

சொல்லப்போனால், அவருடைய மகனான இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்தபோது, ‘கடவுளுடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக’ என்று ஜெபிக்கும்படி தம் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 6:10) இந்தப் பூமி ஒரு பரதீஸாக மாறும் எனவும் அவர் குறிப்பிட்டார். (லூக்கா 23:43) அப்போது அந்தப் பரதீஸ் எப்படியிருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். சேரிகள் இருக்காது, புறம்போக்கு குடியிருப்புகள் இருக்காது, மக்கள் தெருக்களில் தூங்க மாட்டார்கள், வீட்டை காலி செய்யச் சொல்லி விரட்டப்பட மாட்டார்கள். எப்பேர்ப்பட்ட ஆனந்தம்! கடவுளுடைய ராஜ்யத்தில், ஒருவழியாக எல்லாரும் நிரந்தரமான வீட்டைப் பெற்றிருப்பார்கள்! (g05 9/22)

[பக்கம் 10-ன் பெட்டி/படம்]

பூர்வ இஸ்ரவேலில் வீடுகள்

இஸ்ரவேலர்கள் தங்களுக்கு முன்னிருந்த கானானியர்களைப் போல, கற்களாலான வீடுகளில் குடியிருக்கவே விரும்பினார்கள். ஏனெனில், அவை மற்ற வீடுகளைவிட அதிக உறுதியானவையாக இருந்தன, அதோடு யாரும் அத்துமீறி உள்ளே நுழையாதபடி பாதுகாப்பு அளித்தன. (ஏசாயா 9:9; ஆமோஸ் 5:11) என்றாலும், தாழ்நிலங்களில் வீட்டுச் சுவர்களைக் கட்டுவதற்கு வெயிலில் காயவைத்த செங்கற்கள் அல்லது சூளையில் சுட்ட செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. பெரும்பாலான வீடுகளின் கூரைகள் தட்டையாக இருந்தன, சில சமயங்களில் அவற்றின் மீது மேலறையும் கட்டப்பட்டன. பெரும்பாலும், வீட்டின் முற்றத்தில்தான் அடுப்பு இருந்தது, சில சமயங்களில் ஒரு கிணறு அல்லது தண்ணீர் தொட்டிகூட இருந்தது.​—⁠2 சாமுவேல் 17:18.

வீடு சம்பந்தமாக அநேக சட்டங்கள் நியாயப்பிரமாணத்தில் இருந்தன. பாதுகாப்புக்கு உண்மையிலேயே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. விபத்துகள் ஏற்படாதிருக்க தட்டையான கூரையைச் சுற்றி கைப்பிடி சுவர் கட்டப்பட வேண்டியிருந்தது. நியாயப்பிரமாணத்தின் பத்தாவது கட்டளை, பிறனுடைய வீட்டை இச்சியாதிருக்கும்படி இஸ்ரவேலரை எச்சரித்தது. யாரேனும் வீட்டை விற்க வேண்டியிருந்தால், ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் அதைத் திரும்ப மீட்டுக்கொள்ளும் உரிமை அளிக்கப்பட்டது.​—⁠யாத்திராகமம் 20:17; லேவியராகமம் 25:29-33; உபாகமம் 22:8.

இஸ்ரவேலிலிருந்த ஒரு வீடு, ஆன்மீகப் போதனையைப் பெறுவதற்கேற்ற முக்கிய இடமாகவும் இருந்தது. பிள்ளைகள் வீட்டில் உட்கார்ந்திருக்கையில் அவர்களுக்குக் கடவுளைப் பற்றிய காரியங்களைத் தகப்பன்மார் போதிக்க வேண்டுமென நேரடியாகக் கட்டளையிடப்பட்டிருந்தது. அதோடு, உருவ வழிபாட்டுக்குரிய எந்தவொரு பொருளும் வீட்டில் இருக்கக் கூடாது எனவும் கட்டளையிடப்பட்டிருந்தது.​—⁠உபாகமம் 6:​6, 7; 7:26.

[படம்]

பூர்வ இஸ்ரவேலில், கூடாரப் பண்டிகை போன்ற ஆன்மீகக் காரியங்களுக்கு வீடுகள் பயன்படுத்தப்பட்டன

[பக்கம் 12-ன் பெட்டி/படம்]

பண்டைக் கால வீடுகள்

முதல் மனிதனான ஆதாம், ஒரு வீட்டில் வசித்தானா என்பது பற்றி பைபிள் எதுவும் குறிப்பிடுவதில்லை. ஆனால், காயீன் “ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான்” என ஆதியாகமம் 4:17 சொல்கிறது. இன்றைய தராதரங்களின்படி, இந்தப் பட்டணம் பாதுகாப்பான ஒரு கிராமம் போலவே இருந்ததாகத் தெரிகிறது. ஆனால், அங்கு எப்படிப்பட்ட வீடுகள் இருந்தன என்று அப்பதிவு சொல்வதில்லை. ஒருவேளை அந்த முழு கிராமத்திலும் காயீனுடைய நெருங்கிய உறவினர்கள் குடியிருந்திருக்கலாம்.

பண்டைக் காலத்திலெல்லாம், கூடாரங்களில் வசிப்பது வழக்கமாக இருந்தது. காயீனுடைய சந்ததியைச் சேர்ந்த யாபால் ‘கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பன்’ என அழைக்கப்பட்டான். (ஆதியாகமம் 4:20) அப்படிப்பட்ட கூடாரங்கள், புதிதாக அமைப்பதற்கும் மறுபடியுமாகப் பிரித்து வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் எளிதாக இருந்திருக்கும்.

காலப்போக்கில், நாகரிகங்கள் வளர்ந்தபோது வசதிபடைத்த வீடுகளைக்கொண்ட பட்டணங்கள் உருவாயின. உதாரணமாக, முற்பிதாவான ஆபிராம் (ஆபிரகாம்) ஒருசமயம் வாழ்ந்த ஊர் என்ற பட்டணத்தில் நன்கு சாந்து பூசி வெள்ளையடிக்கப்பட்ட, 13 அல்லது 14 அறைகளைக்கொண்ட வசதியான வீடுகளில் சிலர் குடியிருந்ததாக அதன் இடிபாடுகள் காட்டுகின்றன. அக்காலத்தில் அத்தகைய வீடுகள் மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு இருந்திருக்கலாம்.

[பக்கம் 8, 9-ன் படம்]

நீதிமான்களுக்குப் பாதுகாப்பான வீடுகளை அளிப்பதாக கடவுள் வாக்குக் கொடுக்கிறார்