எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
அப்பாக்கள் “ஒரு நல்ல அப்பாவாக இருக்க” என்ற தொடரை இப்போதுதான் படித்து முடித்தேன். (செப்டம்பர் 8, 2004) குடும்பத்திலும் சபையிலும் பொறுப்புகளை நிறைவேற்ற நிறைய நேரம் கிடைக்கும் விதத்தில் என் வேலைகளை அட்ஜஸ்ட் செய்கிறேன். சிலசமயம், என்னுடைய பொருளாதார நிலையின் காரணமாக, அதிக மணிநேரம் வேலை செய்து நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஆனால் பணத்தைவிட குடும்பத்துடன் செலவிடும் நேரம்தான் மிக முக்கியம் என்பதை இந்தக் கட்டுரை எனக்குப் புரிய வைத்தது. நல்ல அப்பாக்களின் உதாரணங்கள் எனக்கு உற்சாக டானிக்.
கே. எஸ்., ஜப்பான்
நானும் என் தங்கையும் இந்தத் தொடரைப் படித்தோம்; அதற்கு நன்றி சொல்ல எங்கள் மனம் துடித்தது. நாங்கள் அப்பாவுடன் ரொம்ப பேசினதில்லை. எல்லோரையும் போல் நாங்களும் அப்பாவை நேசிக்கிறோம். வாய்திறந்து சொல்லாவிட்டாலும் அவரும் எங்களை நேசிக்கிறார் என்றுதான் நினைக்கிறோம். இந்தக் கட்டுரைகளைப் படித்தபோது எங்களைப் புரிந்துகொள்வதற்கு ஒருவர் இருக்கிறார் என்பது தெரிய வந்தது. மனமார்ந்த நன்றி உங்களுக்கு!
வி. டி., இத்தாலி
புகழ் “புகழைவிட சிறந்த ஒன்று” என்ற கட்டுரையை என் ஜெபத்திற்குக் கிடைத்த பதில் என்று சொல்வேன். (செப்டம்பர் 8, 2004) முழுநேர ஊழியத்தை நான் மீண்டும் தொடருவதுதான் ஞானமான தீர்மானம் என்பதை அது உணர்த்தியது. இந்தக் கட்டுரையில் சொல்லியிருந்தபடி, சார்ல்ஸின் தீர்மானத்தை அவரது அப்பா முதலில் எதிர்த்தார். ஆனால் பிற்பாடு சார்ல்ஸின் வாழ்க்கையில்தான் எத்தனை ஆசீர்வாதங்கள்! யெகோவாவின் சேவையில் அதிகம் ஈடுபட வேண்டும் என்ற என்னுடைய தீர்மானத்தையும் என் அம்மா ஏற்றுக்கொள்ளும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இப்படிப்பட்ட கட்டுரைகள் மூலம் யெகோவாவின் உண்மையான ஊழியர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு மிக்க நன்றி.
வை. பி., உக்ரைன்
ஓர் இளம் பெண்ணான நான் சில சமயங்களில் இந்த உலகத்திடமும் உலகக் காரியங்களிடமும் கவரப்படுகிறேன். புகழைத் தேடித்தரும் ஒரு வேலையைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் இந்தக் கட்டுரையைப் படித்தபோதுதான் யெகோவாவைச் சேவிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் நான் வேலையைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை உணர்ந்தேன். சகோதரர் சார்ல்ஸ் சினட்கோவின் வாழ்க்கை சரிதையைப் படித்து மனம் நெகிழ்ந்து போனேன். ஏனென்றால் அவர் புகழை ருசித்திருந்தபோதிலும் யெகோவாவைச் சேவிக்கவே விரும்பினார். யெகோவாவிற்கு முழுநேர சேவை செய்வதைவிட வேறு எதுவுமே இந்த உலகத்தில் சிறந்ததாக இருக்க முடியாது என்பதை இந்தக் கட்டுரை எனக்குப் புரிய வைத்தது.
ஆர். கே., கனடா
யெகோவாவுக்கு முழுநேர சேவை செய்வதற்காக, சகோதரர் சினட்கோ நல்ல வருமானத்தைத் தந்த பாட்டுத் தொழிலை விட்டுவிட்டதை வாசித்தது என் மனதை ஆழமாகத் தொட்டது. நானும் என் கணவரும் சந்தோஷமாக பயனியர் ஊழியம் செய்துவருகிறோம். சகோதரர் சினட்கோவின் உதாரணத்தைப் பின்பற்றி அவரைப் போலவே யெகோவாவின் மீது விசுவாசம் வைத்து எங்கள் வாழ்க்கையில் கடவுளுடைய ராஜ்யத்திற்கு முதலிடம் கொடுக்க விரும்புகிறோம். உற்சாகமளிக்கும் இப்படிப்பட்ட வாழ்க்கை சரிதைகளை வெளியிட்டதற்குக் கோடி நன்றி.
ஈ. எஸ்., ஜப்பான்
திருமணத்திற்கு முன் உடலுறவு “இளைஞர் கேட்கின்றனர் . . . திருமணத்திற்கு முன் உடலுறவை நான் எப்படி தவிர்ப்பது?” என்ற கட்டுரைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். (செப்டம்பர் 8, 2004) டீச்சராகவும் கவுன்சலராகவும் இருக்கும் நான் இந்தக் கட்டுரையில் ஆர்வமூட்டும் விஷயங்களைக் கண்டேன். யெகோவாவின் பார்வையில் சுத்தமானவர்களாகவும் ஒழுக்கமானவர்களாகவும் இருக்க சில உபயோகமான குறிப்புகளை வகுப்பின்போது என் மாணவர்களுக்கு எடுத்துச் சொன்னேன். மேலும், திருமணத்திற்கு முன் பாலுறவு கொண்டு அவதிப்படுவதற்குப் பதிலாக, படிப்பில் நன்றாக முன்னேறுவதற்கு உதவும் குறிப்புகளையும் சொன்னேன். அநேக மாணவர்கள் பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பப்பட்டார்கள்! மற்ற டீச்சர்கள் சிலர், தங்கள் வகுப்பு மாணவர்களிடமும் பேசும்படி என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இப்போது ஒவ்வொரு வாரமும் இளைஞர் கேட்கின்றனர் புத்தகத்திலிருந்து வித்தியாசப்பட்ட தலைப்புகளில் என் வகுப்பு மாணவர்களிடம் கலந்து பேசுகிறேன்.
பி. சி., மொசம்பிக்
எனக்கு இப்போது வயது 25. கற்புடன் வாழ நான் கடுமையாகப் போராடியிருக்கிறேன். கண்ணியமான திருமண வாழ்க்கையைத் தொடங்க முன்பைவிட இப்போது அதிக உறுதியுடன் இருக்கிறேன். இப்படிப்பட்ட அருமையான கட்டுரைகளைத் தொடர்ந்து பிரசுரியுங்கள்.
எஃப். கே., உகாண்டா (g05 6/8)