‘இதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும்’
‘இதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும்’
நேர்மையாக இருப்பதன் அவசியத்தை கடவுளின் உண்மை ஊழியர்கள் அறிந்திருக்கிறார்கள். படைப்பாளரை நேசிப்பதாலே அவ்வாறு இருக்க தூண்டப்படுகிறார்கள். லாஸாரோ என்ற நபரின் உதாரணத்தைக் கவனியுங்கள். கொஞ்ச நாட்களுக்கு முன்பு மெக்சிகோவில் வாடூல்கோ என்ற இடத்திலுள்ள ஒரு ஓட்டலில் இவர் வேலை பார்த்தார். ஓட்டலின் முன்னறையில் 70 டாலர்கள் [சுமார் ரூ. 3,000] கிடப்பதைக் கண்டு, ட்யூட்டியிலிருந்த மானேஜரிடம் அதை உடனடியாக ஒப்படைத்தார். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, ஓட்டலின் குளியலறையில் பர்ஸ் ஒன்றைக் கண்டார். அதையும் வரவேற்பறையில் ஒப்படைத்தார். பர்ஸ் திரும்பக் கிடைத்த பெண்மணிக்குச் சந்தோஷம் ஒரு பக்கம், ஆச்சரியம் ஒரு பக்கம்.
லாஸாரோவைப் பற்றிய செய்தி ஜெனரல் மானேஜரின் காதிற்கு எட்டியபோது, பணத்தையும் பர்ஸையும் திருப்பிக் கொடுக்க காரணம் என்ன என்று அவரிடம் கேட்டார். அதற்கு லாஸாரோ, மற்றவர்களுடைய பொருளை எடுப்பது தவறென பைபிளிலிருந்து கற்றிருப்பதால் அவற்றைத் திருப்பிக் கொடுத்ததாகப் பதிலளித்தார். லாஸாரோவைப் பாராட்டி ஜெனரல் மானேஜர் இவ்வாறு கடிதம் எழுதினார்: “உலகத்தில் இன்று உயர்ந்த ஒழுக்க தராதரங்களைக் கடைப்பிடிக்கும் மக்களைப் பார்ப்பது ரொம்ப அபூர்வம். உங்களுடைய மனப்பான்மையை இந்த ஓட்டலே போற்றிப் புகழ்கிறது. நீங்கள் ஒரு ‘டீஸன்ட்’டான நபர். உங்களுடன் வேலை செய்பவர்களுக்கு நீங்கள் ஒரு ரோல்மாடலும்கூட. நீங்களும் உங்கள் குடும்பமும் இதற்காக பெருமைப்பட வேண்டும்.” லாஸாரோ, அந்த மாதத்தின் சிறந்த பணியாள் என்ற பட்டத்தைப் பெற்றார்.
அந்த ஓட்டலில் வேலை செய்த சிலர், லாஸாரோ பணத்தைத் திருப்பிக் கொடுத்தது முட்டாள்தனம் என்று நினைத்தார்கள். ஆனால் உயர்ந்த ஒழுக்க தராதரங்களைப் பின்பற்றியதற்காக லாஸாரோவை முதலாளி பாராட்டியதைப் பார்த்த பிறகோ, அவர்களும் லாஸாரோவைப் பாராட்டினார்கள்.
பைபிள், இயேசுவின் உண்மையான சீஷர்களை இவ்விதமாக உற்சாகப்படுத்துகிறது: ‘எல்லோருக்கும் நன்மைசெய்ய முன்வாருங்கள்,’ ‘அனைத்திலும் நன்னடத்தை உடையவர்களாய் இருங்கள்.’ (கலாத்தியர் 6:10; எபிரெயர் 13:18, பொது மொழிபெயர்ப்பு) ஒரு கிறிஸ்தவர் நேர்மையாக நடந்துகொள்வது, “நீதியும் செம்மையுமான” கடவுளாகிய யெகோவா தேவனுக்கு மகிமை சேர்க்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.—உபாகமம் 32:4. (g05 6/22)