Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பூத்துக் குலுங்கும் அழகிய பள்ளத்தாக்கு

பூத்துக் குலுங்கும் அழகிய பள்ளத்தாக்கு

பூத்துக் குலுங்கும் அழகிய பள்ளத்தாக்கு

உக்ரைனிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

கார்பேத்தியன் மலைகள் கூரைபோல் இருக்க, அதன் கீழே ‘குடியிருக்கிறது’ இந்தச் சின்னஞ்சிறிய பள்ளத்தாக்கு; வசந்தம் வருகையில், அதன் வளமிக்க நிலம், வெண்ணிற மலர்களின் கம்பளத்தால் மெல்ல மெல்ல போர்த்தப்படுகிறது. வசந்த காலம் பிரியாவிடை பெறும் சமயமே, இந்தப் பள்ளத்தாக்கைப் போய் பார்ப்பதற்கு ஏற்ற சமயமாகும்; அப்போது அந்த மலைப்பகுதியிலுள்ள புல்வெளியைத் தாண்டி காற்றில் தவழ்ந்து வரும் நறுமணம், “பக்கத்தில் வந்து பாருங்களேன்” என பார்வையாளர்களுக்கு வசீகர அழைப்பு விடுக்கிறது.

எங்கே இத்தகைய அழகைக் கண்களால் பருக முடியும்? நார்ஸிஸி பள்ளத்தாக்கில்தான்; இது மேற்கு உக்ரைனில், கௌஸ்ட் என்ற இடத்திற்கு அருகிலுள்ள இயற்கை காப்பிடமாகும். இங்குக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காட்டு நார்ஸிஸஸ் பூக்கள்தான் தெரிகின்றன. இந்தப் பள்ளத்தாக்கில் 400-⁠க்கும் அதிகமான தாவர வகைகள் வளர்ந்தாலும் நார்ஸிஸஸ்தான் ராஜா.

சொல்லப்போனால், இந்தக் காப்பிடத்திற்கு இப்பெயர் வருவதற்கு இந்த மலர்தான் காரணம்; இதற்கு குறுகிய இலை நார்ஸிஸஸ், அல்லது டாஃபெடில் என்ற பெயருமுண்டு. நீண்ட, மெல்லிய இலைகளையும், நடுவே ஊதுகொம்பு வடிவ மகுடத்தையும், சுற்றிலும் வெள்ளை அல்லது மஞ்சள் நிற இதழ்களையும் கொண்ட இந்தப் பூண்டுத் தாவரம், ஆல்ப்ஸிலும் பால்கனிலும் பரவலாகக் காணப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக, நார்ஸிஸஸின் அழகுக்கு கவிஞர்களும் இசைக்கலைஞர்களும் புகழாரம் சூட்டியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு, இந்த இனத்தைச் சேர்ந்த ஒரு வகை பூவிற்கு நார்ஸிஸஸ் பொயட்டிகஸ் அல்லது கவிஞரின் நார்ஸிஸஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் இதன் அழகு கவிஞர்களின் கண்களில் மட்டுமே படவில்லை. ஒருசமயம் பூர்வ ரோம அரசர்கள், வெற்றி வாகை சூடிவரும் தங்கள் படையினரை எல்லார் முன்பும் கௌரவிக்க மஞ்சள் நிற நார்ஸிஸஸ் மலரைப் பயன்படுத்தினார்கள். ப்ரஷ்யா நாட்டில் அன்புக்கும் மகிழ்ச்சிக்கும் அடையாள சின்னமாக இந்த மலர் விளங்கியது. இன்று அகிலமெங்குமுள்ள சமுதாயத்தினர் வருடாந்தர பண்டிகைகளிலும் கொண்டாட்டங்களிலும் தொடர்ந்து இந்த அழகிய மலரின் புகழ் பாடி வருகிறார்கள்.

இருந்தாலும், நார்ஸிஸஸை அழகிய மலராக மட்டுமே கருதிவிட முடியாது. நார்ஸிஸஸ் என்ற பெயர் நார்கியா என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து பிறந்தது; இதற்கு “மதி மயங்குதல்” என்பது அர்த்தம். நார்ஸிஸி நிஜமாகவே இத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறதா? நார்ஸிஸி பள்ளத்தாக்கில் இம்மலர் பூத்துக் குலுங்கும்போது பார்வையாளர்களை ஓரளவு ‘வசப்படுத்தலாம்’ அல்லது மயக்கத்தையும் ஏற்படுத்தலாம்!

இதன் நறுமணம் இதமளிப்பதைக் கண்ட சிலர் இதற்கு சுகப்படுத்தும் சக்தி இருக்கிறதென்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அரேபியர்கள், நார்ஸிஸஸ் தைலத்தை உபயோகித்து வழுக்கைக்குச் சிகிச்சை அளிக்கிறார்கள்; பிரெஞ்சுக்காரர்கள் காக்காய்வலிப்பு, ஹிஸ்டீரியா ஆகியவற்றிற்குச் சிகிச்சை அளிக்க இதைப் பயன்படுத்துகிறார்கள். இன்று நார்ஸிஸஸ் தைலம் வாசனை திரவங்களில் பயன்படுத்தப்படுகிறது; அதை இன்னும் சுத்திகரிக்கையில் அரோமாதெரபிக்கும், அதாவது வாசனை சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படுகிறது.

பாதுகாக்கப்படுமா?

குறுகிய இலை நார்ஸிஸஸ், மலை உச்சிகளின் புஷ்பமாகக் கருதப்படுகிறது. இது பொதுவாக கடல் மட்டத்துக்கு மேலே 1,100 முதல் 2,060 மீட்டர் உயரத்தில் வளருகிறது. ஆனால் நார்ஸிஸி பள்ளத்தாக்கின் உயரமோ கடல் மட்டத்துக்கு மேலே 200 மீட்டர்தான்; விசேஷித்த இந்தப் பூ பூத்துக் குலுங்கும் மிகத் தாழ்வான பள்ளத்தாக்கு இதுவே.

இயற்கையின் இந்த அதிசய படைப்பைக் கட்டிக்காப்பதற்கு 1979-⁠ல் நார்ஸிஸி பள்ளத்தாக்கு ஒரு காப்பிடமாக ஆக்கப்பட்டது. சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு, இந்தக் குறுகிய இலை நார்ஸிஸஸ், பாதுகாக்கப்படும் இனம் என கவுன்சில் ஆஃப் யூரப் அறிவித்தது.

நார்ஸிஸி பள்ளத்தாக்கில், பூ பூக்கும் காலத்திற்குப் பிறகு புற்களை வெட்டுவதற்கு ஆரம்பத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொஞ்ச வருடங்களுக்குள்ளாகவே மலர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. ஏன்? புற்களை அப்படியே விடுகையில் இளம் பூந்தளிர்களை நெருக்கித் தள்ளிக் கொண்டு அவற்றை வளரவிடாமல் தடுப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்தார்கள். புற்களை வெட்டுவதன் மீதான கட்டுப்பாடு தளர்த்தப்பட்டபோது இந்தப் பள்ளத்தாக்கு பழையபடி சமநிலை அடைந்து பூத்துக் குலுங்க ஆரம்பித்தது. எனவே இப்போது, வசந்த காலத்தில் இந்தப் பள்ளத்தாக்கு கொள்ளை அழகுடன் காட்சியளிக்கிறது, குளிர் காலம் முழுவதும் கால்நடைகளுக்குத் தீவனத்தையும் அளிக்கிறது.

வியப்பில் ஆழ்த்தும் இந்த மலரின் அழகு, இந்த முழு பூமியும் ஒருநாள் பூஞ்சோலையாக மாறும் என்பதற்கு ஒரு நினைப்பூட்டுதலாகும். உண்மைதான், கடவுளுடைய ராஜ்ய ஆட்சியில் ‘வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, [அழகில்] . . . செழிக்கப் போகிற’ நாளை பைபிள் மாணாக்கர் பலர் எதிர்நோக்கியிருக்கிறார்கள். (ஏசாயா 35:1) அப்போது, ஏதேன் தோட்டம் இருந்ததைப் போல் பூமி முழுவதும் பரதீஸாக மாறுகையில் நார்ஸிஸி பள்ளத்தாக்கைப் போன்றதொரு வனப்பு திரும்பிய திக்கெல்லாம் தென்படும்.​—⁠ஆதியாகமம் 2:8-15. (g05 4/22)