எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
கெட்ட பழக்கங்கள் “பைபிளின் கருத்து: கெட்ட பழக்கங்களை விட்டொழிப்பது சாத்தியமா?” (மே 8, 2004) என்ற கட்டுரைக்கு என்னுடைய பாராட்டுக்கள்! கொஞ்ச நாளாகவே என்னுடைய எடையைக் குறைக்க போராடிக் கொண்டிருக்கிறேன். எடை கொஞ்சம் குறையும், திரும்பவும் கூடி விடும். இந்தக் கட்டுரை என் பிரச்சினையைப் பற்றி குறிப்பாக பேசாவிட்டாலும், அதற்குப் பொருந்தும் தகவலை அளித்தது. என்னுடைய கெட்ட பழக்கங்களையும் அவை எவ்வாறு என்னுடைய எடை கூடுவதற்கு காரணமாக இருந்திருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து பார்க்க இது உதவியது. நாம் போராடிக் கொண்டிருக்கும் தனிப்பட்ட பிரச்சினைகளை யெகோவா அறிந்திருக்கிறார், அதில் அக்கறையும் காட்டுகிறார் என்பதை நினைப்பூட்டியதற்காக மிக்க நன்றி.
எம். எஸ்., ஐக்கிய மாகாணங்கள் (g05 1/22)
நம்பிக்கை “நம்பிக்கை—நீங்கள் எங்கே கண்டடையலாம்” (மே 8, 2004) என்ற தொடர் கட்டுரைகளுக்கு எங்களுடைய ஆழ்ந்த நன்றி. அதை குடும்பமாக ஒன்றுசேர்ந்து படித்தோம். முடிக்கும் தறுவாயில் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தத் தொடர் கட்டுரைகளுக்கு ஏற்றவாறு கொடுக்கப்பட்டிருந்த பூவின் படம் கவனத்தை கவர்ந்தது!
ஹெச். ஹெச். & எல். ஹெச்., ஐக்கிய மாகாணங்கள் (g05 2/8)
இந்த இதழ் எனக்கு கிடைப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் என்னுடைய அம்மா இறந்துபோனார்கள். “சிசு தனது தாயின் கருப்பையில் பாதுகாப்பாக இருப்பது போல, இறந்தோர் மிகவும் பாதுகாப்பான சூழலில் இருக்கிறார்கள்” என்ற வார்த்தைகளைப் படிக்கப் படிக்க ரொம்பவே ஆறுதலாக இருந்தது. என்னுடைய அம்மாவின் மரணத்தைக் குறித்து நான் இன்னும் துக்கப்பட்டாலும், அவர்கள் யெகோவாவின் நினைவில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.
வி. எல்., ஐக்கிய மாகாணங்கள் (g05 2/8)
விழித்தெழு! பத்திரிகையை 50 வருடங்களாகப் படித்து வருகிறேன். பலமுறை எழுதிய ஒரு விஷயத்தை முற்றிலும் புதிய கண்ணோட்டத்திலிருந்து நீங்கள் அளிப்பதைக் கண்டு எப்போதுமே வியந்திருக்கிறேன். நம்பிக்கையற்ற மனநிலையைக் குறித்த ஆராய்ச்சி உண்மையில் சிந்திக்கத் தகுந்தது.
டி. ஹெச்., ஐக்கிய மாகாணங்கள் (g05 2/8)
எனக்கு தீரா வியாதி ஒன்று வந்துவிட்டது. என்னால் முடிந்தவரை நம்பிக்கையான மனநிலையோடு இருக்கவே நினைக்கிறேன். ஆனால் ஏனோ இன்றைக்கு காலையில் மனக்கசப்போடுதான் எழுந்தேன். அதனால் இந்தக் கட்டுரைகளை திரும்பத் திரும்ப படித்தேன். ஆழமான புரிந்துகொள்ளுதலுடன் எழுதப்பட்டிருந்ததைக் கண்டேன். பெரிதும் ஆறுதலடைந்தேன்.
பி. ஜே., பிரிட்டன் (g05 2/8)
என்னுடைய கணவர் கேன்சரோடு போராடி வருகிறார். என்னுடைய பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வதில் எனக்கு ஒரே டென்ஷனாகிவிட்டது. போதாக்குறைக்கு, என்னுடைய வேலையும் போய்விட்டது. “நம்பிக்கைக்கு காரணங்கள்” என்ற பகுதி என்னைப் பலப்படுத்தியது. என்னால் முடிந்தவரை நிறைய பேருடன் இக்கட்டுரையைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
ஒய். என்., ஜப்பான் (g05 2/8)
எனக்கு ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டால், அப்படியே பதறிப்போய் விடுவேன். இக்கட்டுரைகள் என்னுடைய ஜெபத்திற்கு கிடைத்த பதிலே! நம்பிக்கையற்ற மனநிலையை எதிர்த்துப் போராடுவதற்கான படிகள் அந்தளவு திட்டவட்டமாக இருந்ததால், அப்படிப்பட்ட எண்ணங்கள் வரும்போது அந்தப் படிகளை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டே வருகிறேன். இத்தொடர் கட்டுரைகளை என்னுடைய படுக்கைக்கு அருகில் வைத்துக்கொண்டு தினமும் எடுத்துப் பார்க்கிறேன்.
எஸ். டி., ஜப்பான் (g05 2/8)
டான்ஸ் கிளப் “இளைஞர் கேட்கின்றனர் . . . யூத் டான்ஸ் கிளப்புகளுக்கு நான் போகலாமா?” (மே 8, 2004) என்ற கட்டுரைக்காக நன்றி. இத்தகைய கிளப்புகள் கிறிஸ்தவர்களுக்கானதல்ல என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். இளம் வயதில் அப்படிப்பட்ட கிளப்புகளுக்கு நான் போய்வந்த சமயத்திலேயே யெகோவாவைப் பற்றி தெரியாமல் போய்விட்டதே என நினைத்து வருந்துகிறேன்.
எல்., இந்தோனேஷியா (g05 2/8)
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் போகக்கூடாத இடங்களுக்கெல்லாம் போயிருக்கிறேன். எனக்கு டான்ஸ் என்றாலே உயிர், அதனால் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லிவிட்டு போய்விடுவேன். ஆனால் அடுத்த நாள் என் மனம் குறுகுறுக்கும். அதற்குக் காரணம், நான் ஏதோ தப்புத்தண்டா செய்ததால் அல்ல, என்னைச் சுற்றி இருந்தவர்கள் தப்புத்தண்டா செய்ததுதான்! பல டான்ஸ் கிளப்புகள் ஆபத்தானவை மற்றும் ஒழுக்கக்கேடானவை என்ற உண்மைகளை இந்தக் கட்டுரை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
டி. கே., ஆஸ்திரேலியா (g05 2/8)