சாந்தம்—பலவீனத்திற்கு அடையாளமா?
பைபிளின் கருத்து
சாந்தம்—பலவீனத்திற்கு அடையாளமா?
‘கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டை பண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனாக இருக்க வேண்டும்.’—2 தீமோத்தேயு 2:24.
அம்மாவின் வயிற்றில் இருக்கும்போதே வளரத் தொடங்குகிற நம்முடைய தோல் தொடுவுணர்வைப் பெற்றுக்கொள்கிறது. கனிவான விதத்தில் அம்மா நம்மை மென்மையாக வருடிக்கொடுக்க வேண்டுமென்று பிறந்ததிலிருந்தே நாம் ஏங்குகிறோம். குழந்தைப் பருவத்தில் நம்முடைய பெற்றோர்களிடமிருந்து எந்தளவுக்கு அன்பையும் அரவணைப்பையும் பெறுகிறோமோ, அந்தளவுக்குப் புன்னகையைத் தவழவிடத் தூண்டப்படுகிறோம், உணர்ச்சி ரீதியில் வளர்ச்சியடைகிறோம், உரையாடும் திறனை வளர்க்க உந்துவிக்கப்படுகிறோம்.
ஆனால் கடைசி காலங்களில் மக்கள் “தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும்” இருப்பார்கள் என்று பைபிள் முன்னறிவித்தது. மனுஷர்கள் “தற்பிரியராயும்,” “கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்” இருப்பதால், தயவு, இரக்கம் போன்ற மென்மையான குணங்கள் அவர்களிடம் அறவே இல்லாமல் போய்விடுகிறது.—2 தீமோத்தேயு 3:1-3.
மற்றவர்களிடம் கடுகடுப்பாகவும் ஈவிரக்கமற்ற விதத்திலும் நடந்துகொள்ள வேண்டும் என்றே அநேகர் இன்று நினைக்கிறார்கள். சாந்தம்
பலவீனத்தின் அடையாளமென அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், அது உண்மையிலேயே பலவீனத்தின் அடையாளமா?சாந்தமானவர்கள், ஆனால் பலமிக்கவர்கள்
“யுத்தத்தில் வல்லவர்” என்று யெகோவா விவரிக்கப்படுகிறார். (யாத்திராகமம் 15:3) அவர் பலத்தின் பிறப்பிடமாக இருக்கிறார். (சங்கீதம் 62:11; ரோமர் 1:20) என்றாலும், உண்மையுள்ள யோபுவை ஆசீர்வதிக்கையில் அவர் ‘மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராய்’ இருந்தார், அதற்கு அவரது பலம் முட்டுக்கட்டையாய் இருக்கவில்லை. (யாக்கோபு 5:11) பாலூட்டும் ஒரு தாய் தன் ‘கர்ப்பத்தின் பிள்ளையின் மீது’ எவ்வாறு இரக்கத்தைக் காட்டுவாளோ அதே போன்ற மென்மையான உறவைத்தான் யெகோவாவும் இஸ்ரவேல் தேசத்தார் மீது வைத்திருந்தார்; இதை அவர்களிடம் நடந்துகொண்ட முறையில் வெளிக்காட்டினார்.—ஏசாயா 49:15.
அதே விதமாக இயேசுவும்கூட பலமுள்ளவராகவும் இருந்தார், அதேசமயம் சாந்தமுள்ளவராகவும் இருந்தார். பாசாங்குத்தனம் செய்த அன்றைய மதத் தலைவர்களை அவர் பகிரங்கமாக கண்டனம் செய்தார். (மத்தேயு 23:1-33) பண ஆசை பிடித்த காசுக்காரர்களையும் ஆலயத்திலிருந்து முழு பலத்தோடு விரட்டியடித்தார். (மத்தேயு 21:12, 13) ஆனால் அநீதியின் மீதும் பேராசையின் மீதும் அவருக்கிருந்த வெறுப்பு அவரை உணர்ச்சியற்ற நபராக ஆக்கியதா? இல்லவே இல்லை! அவர் சாந்த சொரூபியென பெயர்பெற்றிருந்தார். சொல்லப்போனால், “தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்” ஒரு தாய்க் கோழிக்குத் தம்மை ஒப்பிட்டுப் பேசினார்.—லூக்கா 13:34.
முரட்டுத்தனமான வெளித்தோற்றமா, உள்பலமா?
உண்மை கிறிஸ்தவர்கள் இயேசுவைப் பின்பற்றி, ‘கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்துகொள்ளும்படி’ உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். (எபேசியர் 4:20-24, பொது மொழிபெயர்ப்பு) நண்டு வளருகையில் தன் பழைய ஓட்டைக் களைவது போல, நாமும் ‘பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிடும்படி’ ஊக்குவிக்கப்படுகிறோம். (கொலோசெயர் 3:9, பொ.மொ.) பழைய ஓட்டைக் களைந்த பிறகு நண்டின் உடல் சீக்கிரத்திலேயே மறுபடியும் கடினமாகிறது; ஆனால் நாம் அவ்வாறு இல்லாமல் எப்பொழுதுமே “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், . . . நீடிய பொறுமையையும்” உடுத்திக்கொள்ளும்படி கட்டளையிடப்படுகிறோம். (கொலோசெயர் 3:12) எனவே, நாம் சாந்தமே உருவானவர்களாய் இருக்க வேண்டும்.
மென்மையான குணங்களை உடுத்திக்கொள்வது பலவீனத்தின் அடையாளமல்ல. மாறாக, நாம் “அவருடைய [யெகோவாவுடைய] ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்பட” வேண்டும். (எபேசியர் 3:16) உதாரணத்திற்கு, லீ என்பவரை எடுத்துக்கொள்வோம். அவர் இவ்வாறு சொல்கிறார்: “கொஞ்ச நாளைக்கு முன்னால் நான் முரடனாக இருந்தேன், கொடூரமாக நடந்து கொண்டேன். என் உடம்பில் ஆங்காங்கே துளையிட்டு நகைகளை அணிந்திருந்தேன்; அதனால் பார்க்கவே பயங்கரமாக இருந்தேன். கொள்ளை கொள்ளையாக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டேன். நினைத்ததை அடைய எதற்குமே நான் தயங்கவில்லை, ஆம், சரமாரியாக கெட்ட வார்த்தைகளைக் கொட்டினேன், அடிதடியிலும் இறங்கினேன். ஈவிரக்கமற்றவனாக இருந்தேன்.” ஆனாலும் தன்னுடன் வேலை செய்து வந்தவரோடு அவர் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். யெகோவாவைப் பற்றித் திருத்தமாய் தெரிந்து கொண்டார்; அவரை நேசிக்கத் தொடங்கினார். பழைய மனித இயல்பை, அதாவது பழைய சுபாவங்களைக் களைந்து போட்டார். தன்னடக்கத்தை வளர்க்கக் கற்றுக்கொண்டார். இன்று மற்றவர்களுக்கு பைபிளைக் கற்றுக்கொடுக்க நேரம் செலவிட்டு வருகிறார்; இவ்வாறு மக்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தி வருகிறார்.
ஒருகாலத்தில் பவுலும்கூட ‘கொடுமை செய்கிறவராய்’ இருந்தார். தான் நினைத்ததைச் சாதிக்க வன்முறையில் இறங்கினார். (1 தீமோத்தேயு 1:13; அப்போஸ்தலர் 9:1, 2) யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் அவர் மீது இரக்கத்தையும் அன்பையும் காட்டியதால் பவுல் தன் போற்றுதலைக் காண்பித்தார். அதுமுதல் அவர்கள் காட்டிய குணங்களைத் தானும் காட்ட கடும் பிரயாசப்பட்டார். (1 கொரிந்தியர் 11:1) கிறிஸ்தவ தராதரங்களைப் பின்பற்றுவதில் பவுல் கண்டிப்புமிக்கவராக இருந்தாலும், மற்றவர்களுடன் பழகுகையில் சாந்தத்தைக் கடைப்பிடிக்க கற்றுக்கொண்டார். உண்மையிலேயே, தன் சகோதரர்களிடம் கனிவான அன்பு காட்டுவதில் பவுல் எந்த வரையறையையும் வகுத்துக்கொள்ளவில்லை.—அப்போஸ்தலர் 20:31, 36-38; பிலேமோன் 12.
சாந்தமாயிருக்கப் பலத்தைப் பெறுதல்
மற்றவர்களிடம் சாந்தமாய் நடந்துகொள்ள கற்றுக்கொள்வதற்கு, ஒருவர் பலவீன சுபாவமுள்ளவராய் ஆக வேண்டியதில்லை என்பதையே லீ, பவுல் ஆகியோரின் உதாரணங்கள் காட்டுகின்றன. சொல்லப்போனால், அதற்குப் பலம்தான் அவசியம். சாந்தமாக இருப்பதற்கு ஒருவர் தன் சிந்தையிலும் செயலிலும் மாற்றங்கள் செய்வதற்கும், “தீமைக்குத் தீமை” செய்ய வேண்டுமென்ற இயல்பான மனச்சாய்வை எதிர்த்துப் போராடுவதற்கும் மிகுந்த பலம் படைத்தவராய் இருக்க வேண்டும்.—ரோமர் 12:2, 17.
நாமும்கூட தவறாமல் கடவுளுடைய வார்த்தையைப் படித்து, யெகோவா தேவனும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் நம்மீது காட்டியுள்ள அன்பையும் இரக்கத்தையும் பற்றி தியானித்தால் கனிவான இரக்கத்தைக் காண்பிக்க கற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு செய்யும்போது, கடவுளுடைய வார்த்தையிலுள்ள வல்லமை நம் இருதயங்களை மென்மையாக்க அனுமதிப்போம். (2 நாளாகமம் 34:26, 27; எபிரெயர் 4:12) நாம் எப்படிப்பட்ட பின்னணியிலிருந்து வந்திருந்தாலும் சரி, நம் வாழ்க்கை அனுபவங்கள் எவ்வளவு கடுமையானவையாக இருந்திருந்தாலும் சரி, ‘எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவர்களாய்’ இருக்க நம்மால் கற்றுக்கொள்ள முடியும்.—2 தீமோத்தேயு 2:24. (g05 1/8)
[பக்கம் 18-ன் படம்]
ஒரு நல்ல தகப்பன் தன் பிள்ளைகளிடம் சாந்தமாகவே நடந்துகொள்வார்