எய்ட்ஸை ஒழிப்பதில் முன்னேற்றம்
எய்ட்ஸை ஒழிப்பதில் முன்னேற்றம்
“இவ்வளவு சிக்கலான ஒரு வியாதியைப் பற்றி இவ்வளவு குறுகிய காலத்தில் மனித சரித்திரத்தில் இதுவரை இவ்வளவு அதிகமாக கற்றுக் கொள்ளவில்லை” என எய்ட்ஸ் அப்டேட் 2003 என்ற நூலில் எழுதுகிறார் டாக்டர் ஜெரால்டு ஜே. ஸ்டைன். “ஹெச்ஐவி/எய்ட்ஸ் பற்றிய ஆராய்ச்சி விஞ்ஞான சாதனைகளிலேயே குறிப்பிடத்தக்க ஒரு சாதனை” என அவர் சொல்கிறார். என்ன சாதிக்கப்பட்டுள்ளது?
ஹெச்ஐவி தொற்றிய மக்களுக்கு புது நம்பிக்கையூட்டுகிற பல்வேறு கூட்டு மருந்துகளைத் தயாரிக்க நவீன மருத்துவ அறிவும் திறமையும் ஆராய்ச்சியாளர்களுக்குக் கைகொடுத்திருக்கின்றன. அதோடு, எய்ட்ஸ் கல்வித் திட்டங்களும் பல்வேறு நாடுகளில் பலன் அளித்திருக்கின்றன. ஆனால் இத்தகைய முயற்சிகளால் கிடைத்திருக்கும் வெற்றி சாவுக்கேதுவான இந்தக் கொள்ளைநோயின் அழிவுக்கு அச்சாரமாக இருக்கிறதா? எய்ட்ஸ் பரவுவதை தற்போதைய அறிவியல் மற்றும் கல்வி சாதனைகள் தடுத்து நிறுத்திட முடியுமா? பின்வரும் விஷயங்களைச் சிந்தித்துப் பாருங்கள்.
மருந்து சிகிச்சை முறை
“எய்ட்ஸ் ஒழிப்பு—நம்பிக்கை ஒளிக்கீற்று” என செப்டம்பர் 29, 1986 தேதியிட்ட டைம் பத்திரிகையில் தலைப்புச் செய்தி வந்திருந்தது. ஹெச்ஐவி-யை அழிப்பதற்குத் தயாரிக்கப்பட்ட ஒரு மருந்துதான் அஸிடோதைமிடின் (AZT), இதைப் பயன்படுத்தி மருத்துவ பரிசோதனையில் பெற்ற பலன்களால் பிறந்ததே இந்த “நம்பிக்கை ஒளிக்கீற்று.” AZT-ஐ சாப்பிட்ட ஹெச்ஐவி நோயாளிகள் நெடுநாள் வாழ்ந்தது குறிப்பிடத்தக்கதாகும். அது முதற்கொண்டு, ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகள் (antiretroviral drugs [ARV-கள்]) லட்சோபலட்சம் ஆட்களுடைய உயிர்களை நீடிக்கச் செய்திருக்கின்றன. (“ARV-கள் என்பது என்ன?” என்ற பெட்டியை பக்கம் 7-ல் காண்க.) ஹெச்ஐவி தொற்றை குணப்படுத்துவதில் இவை எந்தளவு வெற்றி தந்திருக்கின்றன?
AZT வெளிவந்த ஆரம்பத்தில் அதிக உற்சாகம் பிறந்தபோதிலும், “எய்ட்ஸை ஒழிப்பதில் AZT தீர்வான ஆயுதமல்ல” என்று ஆராய்ச்சியாளர்கள் சொன்னதாக டைம் பத்திரிகை அறிக்கை செய்தது. அவர்கள் சொன்னது சரியே. ஏனென்றால் AZT-ஐ உட்கொண்டதால் ஏற்பட்ட விளைவுகளை நோயாளிகள் சிலரால் சகிக்க முடியவில்லை, ஆகவே மற்ற ARV-கள் தயாரிக்கப்பட்டன? பிற்பாடு, ஐ.மா. உணவு மற்றும் மருந்து பங்கீடு, எய்ட்ஸ் நோய் முற்றிய நிலையில் இருப்பவர்களுக்கு கொடுப்பதற்காக ARV-கள் அடங்கிய கூட்டு மருந்து ஒன்றை அங்கீகரித்தது. கூட்டு மருந்து சிகிச்சை முறையை, அதாவது மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கிருமி எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்தும் முறையை எய்ட்ஸ் தொண்டர்கள் உற்சாகம் பொங்க வரவேற்றனர். சொல்லப்போனால், 1996-ல் நடைபெற்ற சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில், இந்த மருந்துகளால் ஹெச்ஐவி-யை உடலிலிருந்து முழுமையாக ஒழிக்க முடியும் என்றுகூட டாக்டர் ஒருவர் அறிவித்தார்!
ஆனால், மூன்று மருந்துகளைத் தவறாமல் சாப்பிட்டும்கூட ஹெச்ஐவி-யை ஒழிக்க முடியவில்லை என்பது ஒரே ஆண்டில் பட்டவர்த்தனமாக தெரிந்தது. இருந்தாலும், “ARV கூட்டு மருந்து சிகிச்சை முறை ஹெச்ஐவி-பாசிட்டிவ் ஆட்கள் நீண்ட காலம் வாழவும் ஆரோக்கியமாக வாழவும் அதிக பலன்தரும் வாழ்க்கை வாழவும் உறுதுணை செய்திருக்கிறது” என UNAIDS அறிக்கை ஒன்று கூறுகிறது. உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களிலும் ஐரோப்பாவிலும் ARV-ஐ பயன்படுத்துவது 70 சதவீதத்திற்கும் அதிகமாக எய்ட்ஸ் மரணத்தைக் குறைத்திருக்கிறது. அதோடு, தேர்ந்தெடுத்து ARV சிகிச்சை அளிப்பது இந்நோய் தொற்றிய கர்ப்பிணியிடமிருந்து அவளுடைய குழந்தைக்கு ஹெச்ஐவி பரவுவதை பேரளவில் குறைக்கிறது என்பதை பல்வேறு ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.
என்றபோதிலும், லட்சக்கணக்கான ஹெச்ஐவி நோயாளிகளுக்கு ARV-கள் கிடைப்பதில்லை. ஏன்?
“ஏழைகளின் நோய்”
ARV சிகிச்சை முறை உயர்ந்த வருமானமுள்ள நாடுகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும், வளரும் நாடுகள் சிலவற்றில், ARV சிகிச்சை முறை தேவைப்படுகிறவர்களில் 5 சதவீதத்தினருக்கு மட்டுமே இந்த மருந்துகள் கிடைக்கின்றன என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) கணக்கிடுகிறது. இந்தப் பாகுபாட்டை “பயங்கர அநீதி” என்றும் “நவீன உலகின் படுமோசமான தார்மீக குற்றம்” என்றும் வர்ணிக்கும் அளவுக்கு ஐக்கிய நாடுகளின் தூதுவர்கள் சென்றுவிட்டனர்.
இந்த மருந்து கிடைப்பதில் பாகுபாடு ஒரே நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் மத்தியிலும் நிலவலாம். எய்ட்ஸ் நோயினால் சாகும் மூன்று கனடா நாட்டவர்களில் ஒருவருக்கு ஒருபோதும் ARV மருந்துகளைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படவில்லை என த குளோப் அண்டு மெயில் அறிக்கை செய்கிறது. கனடாவில் இந்த மருந்துகள் இலவசமாக கிடைக்கிறபோதிலும், சில தொகுதியினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். “மிகவும் முக்கியமாக மருந்து தேவைப்படுகிற பழங்குடியினருக்கும் பெண்களுக்கும் ஏழைகளுக்குமே தகுந்த சிகிச்சை கிடைப்பதில்லை” என குளோப் கூறுகிறது. ஹெச்ஐவி தொற்றிய ஆப்பிரிக்க தாய் ஒருவர் இவ்வாறு சொன்னதாக த கார்டியன் என்ற செய்தித்தாள் மேற்கோள் காட்டியது: “எனக்கு இது விளங்கவே மாட்டேங்குது. ஆணோடு ஆண் உடலுறவு கொள்கிற இந்த வெள்ளையர்களால் உயிர் வாழ முடிகிறது, நான் மட்டும் ஏன் சாக வேண்டும்?” மருந்து உற்பத்தி செய்து விநியோகம் செய்யும் பொருளாதாரத்தில்தான் அவருடைய கேள்விக்குப் பதில் இருக்கிறது.
ஐக்கிய மாகாணங்களில் மூன்று மருந்து சாப்பிடும் ARV சிகிச்சை முறையின் சராசரி விலை ஆண்டுக்கு 4,80,000 ரூபாய்க்கும் 7,20,000 ரூபாய்க்கும் இடைப்பட்டதாக இருக்கிறது. வேறு பெயரில் கிடைக்கும் இதே கூட்டு மருந்துகள் வளரும் நாடுகள் சிலவற்றில் 14,000 ரூபாய்க்கு அல்லது அதற்குக் குறைவான விலைக்குக் கொடுக்கப்படுகின்றன, இருந்தபோதிலும், ஹெச்ஐவி தொற்றிய அதேசமயத்தில் ARV-கள் மிகவும் அதிகமாக தேவைப்படும் இடங்களில் வாழ்கிற அநேகருக்கு இது விலைகொடுத்து வாங்க முடியாத ஒன்றாகவே இன்னும் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையை டாக்டர் ஸ்டைன் இவ்வாறு ரத்தினச்சுருக்கமாக கூறுகிறார்: “எய்ட்ஸ் என்பது ஏழைகளின் நோய்.”
மருந்து தயாரிக்கும் பிஸினஸ்
வேறு பெயரில் கிடைக்கும் மருந்துகளைக் குறைந்த விலைக்குத் தயாரித்து விற்பது சுலபமல்ல. அநேக நாடுகளில் காப்புரிமை சட்டங்கள் ரொம்ப கெடுபிடியாக இருக்கின்றன, அங்கீகாரமின்றி ‘பிரான்டுநேம்’ மருந்துகள் தயாரிப்பதை இந்தச் சட்டங்கள் தடை செய்கின்றன. “இது ஒரு பொருளாதார போர்” என கூறுகிறார் பெரிய மருந்து கம்பெனி ஒன்றின் தலைவர். இலாபம் சம்பாதிப்பதற்காக வேறு பெயரில் மருந்துகள் தயாரித்து வளரும் நாடுகளுக்கு விற்பது “அந்த மருந்தைக் கண்டுபிடித்த கம்பெனிகளுக்கு நியாயமல்ல.” இலாபம் குறைந்துகொண்டே வந்தால் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற திட்டங்களுக்கு செலவிடப்படுகிற நிதியும் குறைந்து போகும் என்றும் ‘பிரான்டுநேம்’ கம்பெனிகள் வாதிடுகின்றன. வளரும் நாடுகளுக்காக தயாரிக்கப்படும் குறைந்த விலை ARV-கள் வளர்ச்சியடைந்த நாடுகளில் கள்ளச் சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும் என மற்றவர்கள் கவலைப்படுகின்றனர்.
மருந்து கம்பெனிகள் கூறும் விலையில் 5 முதல்
10 சதவீதத்திற்கே புதிய மருந்துகளைத் தயாரிக்க முடியுமென குறைந்த விலை ARV மருந்துகளை சிபாரிசு செய்பவர்கள் எதிர்வாதம் செய்கின்றனர். அதிக ஏழ்மை நிலையிலுள்ள நாடுகளைப் பாதிக்கும் வியாதிகளைக் குணப்படுத்தக்கூடிய மருந்துகளை ஆராய்வதற்கும் முன்னேற்றுவிப்பதற்கும் தனியார் மருந்து கம்பெனிகள் தயங்குகின்றன என்றும்கூட அவர்கள் சொல்கின்றனர். ஆகவே, முக்கியமான மருந்துகளைக் கிடைக்க வழி செய்தல் என்ற திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் டான்யெல் பெர்மன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “புதிய மருந்துகளைப் பொறுத்தவரை, வளரும் நாடுகளில் உள்ளவர்கள் வாங்கக்கூடிய அளவுக்கு விலையை குறைக்கும் சர்வதேச திட்டம் ஒன்று இருக்க வேண்டும்.”ARV சிகிச்சை முறைக்கான உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, “ஐந்துக்குள் மூன்று” என்ற ஒரு திட்டத்தை WHO முன்னேற்றுவித்திருக்கிறது; அதாவது 2005-ம் ஆண்டு முடிவுக்குள் ஹெச்ஐவி/எய்ட்ஸ் தொற்றிய மூன்று மில்லியன் மக்களுக்கு ARV-களை கொடுப்பதே இத்திட்டம். “‘ஐந்துக்குள் மூன்று’ என்ற இத்திட்டம் ஐநா-வின் மற்றொரு தோல்வி திட்டமாக மாறிவிடக் கூடாது” என மேடிசன் சான் ஃபிரன்டியேர் என்ற அமைப்பைச் சேர்ந்த நேதன் ஃபோர்டு எச்சரித்தார். “3 மில்லியன் என்ற எண்ணிக்கை, இன்று சிகிச்சை தேவைப்படுகிற ஹெச்ஐவி/எய்ட்ஸ் தொற்றிய ஆட்களில் பாதியே என கணக்கிடப்படுகிறது, ஆனால் 2005-க்குள் இந்த எண்ணிக்கை மிக அதிகமாகிவிடும்.”
வேறுசில முட்டுக்கட்டைகள்
வளரும் நாடுகளுக்குப் போதுமான ARV-களை சப்ளை செய்தாலும்கூட, வேறுசில முட்டுக்கட்டைகளை முறியடிக்க வேண்டும். சில மருந்துகளை உணவுடனும் சுத்தமான தண்ணீருடனும் சாப்பிட வேண்டும், ஆனால் சில நாடுகளில் லட்சக்கணக்கானோர் ஒருநாள் விட்டு ஒருநாள்தான் சாப்பிட முடிகிறது. ARV-களை (பெரும்பாலும் 20 அல்லது அதற்கும் அதிகமான மாத்திரைகளை) ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சமயத்தில் சாப்பிட வேண்டும், ஆனால் பெரும்பாலான நோயாளிகளிடம் ஒரு கடிகாரம்கூட கிடையாது. நோயாளியின் நிலைமைக்கேற்ப மருந்துகளின் கூட்டுக் கலவையை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் அநேக நாடுகளில் மருத்துவர்களுக்கு அதிக தட்டுப்பாடு இருக்கிறது. ஆகவே, வளரும் நாடுகளுக்கு ARV சிகிச்சை முறையை அளிப்பது உண்மையிலேயே சமாளிப்பதற்குக் கஷ்டமான ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது.
வளர்ச்சியடைந்த நாடுகளிலுள்ள நோயாளிகளும்கூட இந்தக் கூட்டு மருந்து சிகிச்சை முறையை பயன்படுத்துவதில் பிரச்சினைகளை எதிர்ப்படுகிறார்கள். எழுதிக் கொடுக்கப்படும் எல்லா மருந்துகளையும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட தவறுவது சர்வ சாதாரணம் என்பதை ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இதனால் மருந்துகளின் வீரியத்தைத் தாக்குப்பிடிக்கும் கிருமிகள் உருவாவதற்கு வழிநடத்தலாம். இத்தகைய ஹெச்ஐவி கிருமிகள் மற்றவர்களுக்கும் பரவலாம்.
ஹெச்ஐவி நோயாளிகள் எதிர்ப்படும் மற்றொரு சவாலையும் டாக்டர் ஸ்டைன் சுட்டிக் காட்டுகிறார். “சில சமயங்களில் நோயைவிட இந்தச் சிகிச்சை அதிக வலியை உண்டாக்குவது ஹெச்ஐவி-க்குச் சிகிச்சை அளிப்பதிலுள்ள இரண்டக நிலையாகும், முக்கியமாக நோய் அறிகுறி தென்படுவதற்கு முன்பு சிகிச்சையை ஆரம்பிக்கையில் இது நேரிடுகிறது” என அவர் கூறுகிறார். ARV-களை பயன்படுத்தும் ஹெச்ஐவி நோயாளிகள் நீரிழிவு நோய், கொழுப்பு மீண்டும் பரவுதல், உயர் கொலஸ்டரால், எலும்பின் அடர்த்தி குறைதல் போன்ற பக்க விளைவுகளால் அவதியுறுகின்றனர். சில பக்க விளைவுகள் உயிருக்கே ஆபத்தானவையாக இருக்கின்றன.
தடுப்பு முயற்சிகள்
எய்ட்ஸ் பரவுவதைத் தாமதப்படுத்துவதிலும் பேராபத்தை விளைவிக்கும் நடத்தை முறைகளை மாற்றுவதிலும் தடுப்பு முயற்சிகள் எந்தளவு வெற்றி பெற்றுள்ளன? 1990-களில் உகாண்டாவில் நடத்தப்பட்ட தீவிர எய்ட்ஸ் கல்வித் திட்டங்களால் ஹெச்ஐவி பரவுவது 14 சதவீதத்திலிருந்து 2000-ல் சுமார் 8 சதவீதத்திற்கு குறைந்ததாக கணக்கிடப்படுகிறது. இதைப் போலவே, ஹெச்ஐவி தொற்றும் ஆபத்தைப் பற்றி குடிமக்களுக்கு அறிவிக்க செனிகல் முயற்சி எடுத்தது, அதனால் வயதுவந்தவர்கள் மத்தியில் ஹெச்ஐவி பரவுவதை 1 சதவீதத்திற்குக் குறைக்கும் அளவுக்கு இம்முயற்சி கை கொடுத்திருக்கிறது. இத்தகைய பலன்கள் ஊக்கமளிக்கின்றன.
மறுபட்சத்தில், பிற நாடுகளில் எய்ட்ஸ் கல்வி அவ்வளவாக வெற்றி தரவில்லை. உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 50 சதவீதத்தினர் எய்ட்ஸை குணப்படுத்த முடியுமென நம்பியதாக 2002-ல் 11,000 இளம் கனடா நாட்டவரை வைத்து நடத்தப்பட்ட சுற்றாய்வு காட்டியது. அதே ஆண்டில் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின்படி, 10 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட பையன்களில் 42 சதவீதத்தினர் ஹெச்ஐவி பற்றியோ எய்ட்ஸ் பற்றியோ கேள்விப்பட்டதே இல்லை. என்றாலும், ஹெச்ஐவி-யையும் எய்ட்ஸையும் குணப்படுத்த முடியாதென அறிந்திருந்த இளைஞர்களும்கூட கவலைப்படாமல் இருக்கிறார்கள். “பெரும்பாலான இளைஞர்களுக்கு ஹெச்ஐவி என்பது தங்களுடைய வாழ்க்கையில் நேரிடும் பல பிரச்சினைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. உதாரணமாக, அவர்களுக்குச் சுவையான உணவு கிடைக்குமா, யாருடன் அவர்கள் வாழப் போகிறார்கள், பள்ளிக்குச் செல்கிறார்களா என்ற பல பிரச்சினைகளில் இதுவும் ஒன்றாக ஆகிவிட்டது” என டாக்டர் ஒருவர் கூறுகிறார்.
அப்படியானால், “இந்தக் கொள்ளைநோயை எதிர்ப்பதற்கு, முக்கியமாக அதிகமாக பரவியுள்ள நாடுகளில் இளைஞர்கள் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துவதே மிகவும் பலன்தரக்கூடிய முறை” என WHO குறிப்பிடுவதில் ஆச்சரியமில்லை. எய்ட்ஸ் பற்றி தங்களுக்குக் கிடைத்த எச்சரிக்கைகளின்படி செயல்பட இளைஞர்களுக்கு எப்படி உதவலாம்? இதற்கு நிவாரணி கிடைக்குமென நம்புவது எதார்த்தமாக இருக்கிறதா? (g04 11/22)
[பக்கம் -ன் சிறு குறிப்பு] 6]
கடந்த வருடம் ஆப்பிரிக்காவில் ARV-கள் தேவைப்பட்டவர்களில் 2 சதவீதத்தினருக்கு மட்டுமே அவை கிடைத்தன, ஆனால் அமெரிக்காவில் 84 சதவீதத்தினருக்கு கிடைத்தன
[பக்கம் -ன் பெட்டி/படங்கள்] 7]
ARV-கள் என்பது என்ன? a
ஆரோக்கியமாக இருக்கும் ஒருவருடைய உடலில் ஹெல்ப்பர் T செல்கள் தொற்று நோய்களைத் தாக்குவதற்கு நோய் எதிர்ப்புச் சக்தி மண்டலத்தைத் தூண்டுகின்றன. ஹெச்ஐவி முக்கியமாக இந்த ஹெல்ப்பர் T செல்களைக் குறிவைக்கிறது. அது பெருகுவதற்காக அந்த செல்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. இவ்வாறு, நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் கடுமையாக பாதிக்கப்படும் வரை, ஹெல்ப்பர் T செல்களை பலவீனப்படுத்தி அழிக்கிறது. ARV-கள் இந்த நகலெடுக்கும் வேலையை தடை செய்கின்றன.
தற்போது ARV-களில் நான்கு முக்கியமான வகைகள் கொடுக்கப்படுகின்றன. நியூக்ளியோசைடு அனலாகஸ் மற்றும் நான்-நியூக்ளியோசைடு அனலாகஸ் ஒருவருடைய டிஎன்ஏ-க்குள் ஹெச்ஐவி நகலெடுப்பதைத் தடுக்கின்றன. புரோட்டீயேஸ் இன்ஹிபிட்டர்ஸ் நோய் தொற்றிய செல்களிலுள்ள குறிப்பிட்ட புரோட்டீயேஸ் என்ஸைம் வைரஸ்களை மீண்டும் உருவாக்கி கூடுதலாக ஹெச்ஐவி-யை உற்பத்தி செய்வதைத் தடுக்கின்றன. செல்களுக்குள் ஹெச்ஐவி நுழைய முடியாமல் ஃபியூஷன் இன்ஹிபிட்டர்ஸ் தடுக்கின்றன. ஹெச்ஐவி பெருகுவதைத் தடுப்பதன் மூலம் ஹெச்ஐவி தொற்று எய்ட்ஸ் நோயாக—மருத்துவ ரீதியில் ஹெச்ஐவி நோயின் மிக மோசமான வடிவாக—உருவெடுப்பதை ARV-கள் தாமதப்படுத்த முடியும்.
[அடிக்குறிப்பு]
a ஹெச்ஐவி தொற்றிய அனைவருக்கும் ரெட்ரோ வைரஸ்களை எதிர்க்கும் சிகிச்சை முறை (Antiretroviral therapy) சிபாரிசு செய்யப்படுவதில்லை. ஹெச்ஐவி நோய் தொற்றிய அல்லது அப்படி தொற்றியிருப்பதாக சந்தேகப்படுகிறவர்கள் எந்தவொரு சிகிச்சை முறையையும் ஆரம்பிப்பதற்கு முன்பு சுகாதார நல மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பிட்ட எந்தவொரு சிகிச்சை முறையையும் விழித்தெழு! சிபாரிசு செய்வதில்லை.
[படம்]
கென்யாவில் ARV சிகிச்சை பற்றி மருத்துவர் ஒருவர் எய்ட்ஸ் நோயாளிக்கு அறிவுரை கொடுக்கிறார்
[படத்திற்கான நன்றி]
© Sven Torfinn/Panos Pictures
[படம்]
கென்யாவில் எய்ட்ஸ் நோயாளி ஒருவர் ஆஸ்பத்திரியில் ARV மருந்து வாங்குகிறார்
[படத்திற்கான நன்றி]
© Sven Torfinn/Panos Pictures
[பக்கம் -ன் பெட்டி/படங்கள்] 8]
பெண்களும் எய்ட்ஸும்
இப்பொழுது, ஹெச்ஐவி/எய்ட்ஸ் நோயுடன் வாழ்பவர்களில் 50 சதவீதத்தினர் பெண்கள்
1982-ல், பெண்களுக்கு எய்ட்ஸ் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தபோது, போதை ஊசி போட்டுக்கொள்வதால் அவர்களுக்கு நோய் தொற்றியிருக்கலாம் என கருதப்பட்டது. இயல்பான பாலுறவின் மூலம் இந்நோய் தொற்றக்கூடும் என்பதும் அவர்களே முக்கியமாக ஹெச்ஐவி தொற்றும் பேராபத்தில் இருக்கிறார்கள் என்பதும் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பொழுது, உலகெங்கிலும் ஹெச்ஐவி/எய்ட்ஸ் நோயுடன் வாழ்பவர்களில் பெண்கள் 50 சதவீதத்தினர் ஆவர். “பெண்கள், பருவவயது பிள்ளைகள் என பாகுபாடின்றி இந்தக் கொள்ளைநோய் பாதிக்கிறது; இவர்கள் சமுக, கலாச்சார, உயிரியல் மற்றும் பொருளாதார ரீதியில் அதிகமாக பாதிக்கப்படும் நிலையில் இருக்கிறார்கள். இவர்களே நோய்வாய்ப்பட்டவர்களையும் மரிக்கும் நிலையில் இருப்பவர்களையும் கவனித்தும் வருகிறார்கள்” என UNAIDS அறிக்கை செய்கிறது.
பெண்கள் மத்தியில் இந்நோய் அதிகரித்து வருவது எய்ட்ஸ் சேவகர்களுக்கு ஏன் கவலைக்குரியதாக இருக்கிறது? ஹெச்ஐவி தொற்றிய பெண்கள் பெரும்பாலும் ஆண்களைவிட அதிக பாரபட்சத்தை எதிர்ப்படுகிறார்கள், முக்கியமாக வளரும் சிலநாடுகளில். ஒரு பெண் கருத்தரித்தால், அவளுடைய குழந்தையின் ஆரோக்கியமும் ஆபத்தில் இருக்கிறது; அவளுக்கு ஏற்கெனவே பிள்ளைகள் இருந்தால், முக்கியமாக ஒற்றைத் தாயாக இருந்தால், அவர்களைக் கவனிப்பது சவாலாக ஆகிறது. மேலும், ஹெச்ஐவி தொற்றிய பெண்களின் தனிப் பண்புகளைப் பற்றியும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதைப் பற்றியும் இன்னும் அதிகமாக தெரியவில்லை.
முக்கியமாக, சில கலாச்சார காரணிகள் பெண்களுடைய சூழ்நிலையை இன்னும் அதிக ஆபத்தாக்குகின்றன. பெரும்பாலான நாடுகளில் செக்ஸ் பற்றி பெண்கள் பேசக் கூடாது, உடலுறவுகொள்ள மறுத்தால் துஷ்பிரயோகம் செய்யப்படுவார்கள். பொதுவாக ஆண்களுக்குப் பல செக்ஸ்-பார்ட்னர்கள் இருக்கிறார்கள், அதனால் தங்களை அறியாமலேயே ஹெச்ஐவி-யை அவர்களுக்குக் கடத்திவிடுகிறார்கள். ஹெச்ஐவி-யை தவிர்ப்பதற்காக அல்லது கன்னிப் பெண்களுடன் உடலுறவு கொண்டால் எய்ட்ஸ் குணமாகிவிடும் என்ற தவறான நம்பிக்கையில் ஆப்பிரிக்க ஆண்கள் சிலர் இளம் பெண்களுடன் பாலுறவு கொள்கிறார்கள். WHO இவ்வாறு குறிப்பிடுவதில் ஆச்சரியமில்லை: “பெண்களைப் பாதுகாக்க வேண்டுமாகில், ஆண்களை (அதோடு பெண்களையும்) குறிவைத்து செயல்பட வேண்டும்.”
[படம்]
பெருவில் ஹெச்ஐவி-நெகட்டிவ் மகளுடன் ஹெச்ஐவி-பாஸிட்டிவ் தாய்
[படத்திற்கான நன்றி]
© Annie Bungeroth/Panos Pictures
[படம்]
தாய்லாந்தில் மாணவிகள் தங்களுடைய கல்வியின் பாகமாக, எய்ட்ஸ் நோயாளிகளைச் சந்திக்கிறார்கள்
[படத்திற்கான நன்றி]
© Ian Teh/Panos Pictures
[படம்]
கென்யாவில் எய்ட்ஸோடு வாழும் பெண்கள் நிறுவன உறுப்பினர் கூட்டம்
[படத்திற்கான நன்றி]
© Sven Torfinn/Panos Pictures
[பக்கம் 9-ன் பெட்டி/படம்]
எய்ட்ஸ் பற்றிய கட்டுக்கதைகள்
◼ ஹெச்ஐவி தொற்றியவர்கள் வெளிறிப்போய் இருப்பார்கள். “ஹெச்ஐவி தொற்றியவருக்கு எய்ட்ஸ் வரவேண்டுமானால் சராசரியாக 10 முதல் 12 ஆண்டுகள் எடுக்கின்றன” என டாக்டர் ஜெரால்டு ஜே. ஸ்டைன் கூறுகிறார். “இந்தக் காலப்பகுதியில், ஹெச்ஐவி தொற்றியவரிடம் வெகு சில அறிகுறிகளே தென்படும், அல்லது எந்த அறிகுறிகளுமே தென்படாது, ஆனால் அவர்கள் மற்றவர்களுக்குக் கடத்த முடியும்.”
◼ எய்ட்ஸ் என்பது ஓரினப்புணர்ச்சிக்காரர்களுடைய வியாதி. 1980-களின் ஆரம்பத்தில், எய்ட்ஸ் என்பது ஓரினப்புணர்ச்சிக்காரர்களுடைய வியாதி என சொல்லப்பட்டது. ஆனால் இன்றோ எதிர்பாலாரிடம் பாலுறவு கொள்வதே ஹெச்ஐவி கடத்தப்படுவதற்கு முக்கிய வழி.
◼ வாய்வழி புணர்ச்சி “பாதுகாப்பான பாலுறவு.” நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் சொல்கிறபடி, “வாய்வழி புணர்ச்சியின் மூலம் ஹெச்ஐவியும் பிற பாலியல் நோய்களும் கடத்தப்படுவதை எண்ணற்ற ஆராய்ச்சிகள் மெய்ப்பித்துக் காண்பித்திருக்கின்றன.” வாய்வழி புணர்ச்சியின் மூலம் ஹெச்ஐவி-யை கடத்தும் ஆபத்து, வேறுசில பாலியல் பழக்கங்களைப் போல் அவ்வளவு அதிகமாக இல்லை. என்றாலும், இந்தப் பழக்கம் அதிகமாக பரவியுள்ளது, ஆகவே ஹெச்ஐவி பரவுவதற்கு இது முக்கிய வழியாக ஆகலாம் என்று டாக்டர்கள் சிலர் எதிர்பார்க்கிறார்கள்.
◼ எய்ட்ஸுக்கு நிவாரணம் உண்டு. சில நோயாளிகளுக்கு ARV சிகிச்சை முறை ஹெச்ஐவி-யிலிருந்து எய்ட்ஸ் உண்டாவதை தாமதப்படுத்துகிற போதிலும், தற்போது எந்தவித தடுப்பு ஊசியோ நிவாரணியோ கிடையாது.
[படம்]
செக் குடியரசில் எய்ட்ஸ் இரத்தப் பரிசோதனை, இதற்கு தற்சமயம் சிகிச்சை உண்டு, ஆனால் குணப்படுத்தக் கூடியது அல்ல
[படத்திற்கான நன்றி]
© Liba Taylor/Panos Pictures
[பக்கம் 6-ன் படம்]
ஜாம்பியாவில் இரு ஹெச்ஐவி பாஸிட்டிவ் பெண்கள் மருந்திற்காக காத்திருக்கிறார்கள்
[படத்திற்கான நன்றி]
© Pep Bonet/Panos Pictures