Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஹான்பாக்—கொரியாவின் தேசிய உடை

ஹான்பாக்—கொரியாவின் தேசிய உடை

ஹான்பாக்—கொரியாவின் தேசிய உடை

கொரியா குடியரசிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

கொரிய நாட்டவர் உடலை மறைப்பதற்காக மட்டும் உடை அணிவதில்லை என்பதற்கு அவர்களுடைய பாரம்பரிய உடையே ஓர் எடுத்துக்காட்டு. அதன் பெயர் ஹான்பாக்.

தனித்தன்மை வாய்ந்த டிசைன்

ஹான்பாக்கில் இடுப்பளவு நீளமுள்ள லூசான மேல் சட்டையும், நீளமான பாவாடையும் தனித்தன்மை வாய்ந்த அளவு-விகிதங்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும். a சிலவற்றில், மேல் சட்டையைவிட பாவாடை நான்கு மடங்கு அதிக நீளமாய் இருக்கும். அதன் காரணமாக, அதை அணிந்திருக்கையில் குள்ளமான பெண்களும் பார்ப்பதற்கு உயரமாக காட்சியளிக்கிறார்கள்.

ஹான்பாக் லேசான மடிப்புகளையும் எளிமையான வடிவமைப்பையும் உடையது. மேல் சட்டையின் கைகள் சிறகுகளைப் போல தொளதொளவென்று பெரிதாக இருக்கும். பாவாடையோ மார்புப் பகுதியிலிருந்து ஆரம்பித்து தரை வரைக்கும் தழையத் தழைய அழகாக தொங்கும். மார்புப் பகுதியை எடுத்துக் காட்டும் வண்ணம் ஒரு வித்தியாசமான முடிச்சு இருக்கும். மேல் சட்டையின் முன்புறத்திலுள்ள அந்த முடிச்சின் இரு நீளமான முனைகள் ஏறக்குறைய கணுக்காலைத் தொடும். அநேக ஹான்பாக் உடைகளில், மேல் சட்டையின் கழுத்துப் பகுதியைச் சுற்றியும், கை மடிப்புகளிலும், ஏன் பாவாடைகளிலும் பூக்களின் வடிவங்களிலும் மற்ற வடிவங்களிலும் அழகிய எம்பிராய்டரி போடப்பட்டிருக்கும். ஆம், ஹான்பாக்கின் அளவு-விகிதங்கள், வரிகள், வண்ணங்கள் எல்லாம் சேர்ந்து அதை உண்மையில் எழில்மிகு ஆடையாக்குகின்றன!

பல்வகைப் பயனுள்ள உடை

எல்லா காலத்துக்கும் ஒத்துவரும் பாணியில் ஹான்பாக் வடிவமைக்கப்பட்டிருப்பதன் காரணமாக அதன் அழகு மேலும் கூடுகிறது. பொதுவாக இயற்கை நார்ப்பொருட்களால் தயாரிக்கப்படும் ஹான்பாக்கை எல்லா காலத்திலும் தாராளமாக அணியலாம். உதாரணத்திற்கு, ராமீ மற்றும் சணல் போன்ற தாவரங்களின் நார்ப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் ஹான்பாக் போதுமான காற்றோட்டத்துடன் இருப்பதால் அதை அணிகையில் புழுக்கமாக இருக்காது. ஏறக்குறைய முழு உடம்பையும் மூடுகிற இந்த ஆடையை, வெயில் காலத்தில் அணிந்திருந்தாலும் குளுகுளுவென்றே இருக்கும். மற்ற நூலிழைகளால் தயாரிக்கப்படும் ஹான்பாக் ஆடைகள் உடலின் உஷ்ணத்தைக் காத்திட உதவுகின்றன, ஆகவே குளிர்காலத்திற்கு ஏற்றதாயிருக்கின்றன.

ஹான்பாக் அணிந்திருக்கையில் சௌகரியமாகவும் இருக்கும். இது ஃபேஷனுக்காக அவ்வாறு வடிவமைக்கப்படவில்லை. மாறாக, நூற்றாண்டுகளுக்கு முன்னர் அந்தப் பகுதியில் குதிரைகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டதால், அதில் சவாரி செய்வதற்கு தோதாகவே அவ்வாறு வடிவமைக்கப்பட்டது. கலாச்சாரமும் நானும் என்ற ஆங்கில பத்திரிகையில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “குளிருக்கும் வேட்டைக்கும் நாடோடி வாழ்க்கைக்கும் ஏற்ப இந்த ஆடைகள் வடிவமைக்கப்பட்டன.” எனவே கொரியாவில் குதிரை சவாரி செய்பவர்கள் அசெளகரியமான உடைகளை தவிர்த்தனர். இன்று ஹான்பாக் உடையை அணிந்து மகிழும் கொரிய நாட்டவர் அது அளிக்கும் சௌகரியத்திற்காக தங்கள் மூதாதையருக்கே நன்றிக் கடன்பட்டுள்ளனர்!

ஹான்பாக் உடையின் மற்றொரு சிறப்பம்சம், ஏதோவொன்றுக்கு அடையாளமாக வண்ணங்களை உபயோகிக்கும் பழங்கால பாரம்பரியமாகும். கொரியாவில் கடந்த காலங்களில், ஆளும் வர்க்கத்தினரே அடிக்கடி கண்கவர் வண்ணங்களில் ஆடைகளை அணிந்தார்கள். விவசாயிகளோ பெரும்பாலும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்தார்கள். மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் கலந்த ஆடையை ஒரு பெண் அணிவது அவள் திருமணம் ஆகாதவள் என்பதற்கு அடையாளமாக இருந்தது. திருமணத்திற்குப் பின் அந்தப் பெண் அணியும் ஹான்பாக்கின் நிறம், அவளுடைய கணவனின் சமுதாய அந்தஸ்தை வெளிக்காட்டியது. இப்போதெல்லாம், திருமணங்களில் மணமகளுடைய அம்மா பிங்க் நிறத்திலும், மணமகனுடைய அம்மா நீல நிறத்திலும் ஹான்பாக் உடுத்துவது வழக்கமாகிவிட்டது. இந்தப் பழக்கத்தின் மூலம் அவர்களைக் கண்டுபிடிப்பது மிக சுலபமல்லவா!

இன்றைய ஹான்பாக்

கொரியப் போரை (1950-53) தொடர்ந்து நவநாகரீக உடைகளின் தாக்கம் ஆரம்பமானது. அதன் விளைவாக, 1970-⁠க்குள், கிழக்கத்தியப் பாணி உடைகள் களத்தில் இறங்கினதால், ஹான்பாக் அணிவது பழைய ஃபேஷனாகிவிட்டது. இதனால், ஒரு காலத்தில் தினந்தோறும் உடுத்தப்பட்ட அந்த உடை பின்பு அலமாரிகளில் முடங்கிவிட்டது. திருமணங்கள், விடுமுறை நாட்கள் போன்ற விசேஷ தருணங்களில் மட்டுமே அது கண்ணில் தென்பட்டது.

இருந்தபோதிலும், சமீப நாட்களில் ஹான்பாக் மீண்டும் பிரபலமாகி வருகிறது. உதாரணத்திற்கு, 1996-⁠ல், மாதத்தின் முதல் சனிக்கிழமையை “ஹான்பாக் அணியும் நாள்” என அறிவிப்பதன் மூலம் இந்த உடையை மீண்டும் பிரசித்திப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இளவட்டங்களைக் கவருவதற்காக புதுப்புது ஹான்பாக்குகளை ஆடை உற்பத்தியாளர்கள் அறிமுகப்படுத்தினார்கள். ஒருவரின் முற்கால பாரம்பரியத்தை மீண்டும் பின்பற்ற ஆரம்பிப்பது ஆத்ம திருப்தி அளிப்பதுபோல தோன்றுகிறது. ஏனென்றால், இந்த நவநாகரீக ஹான்பாக் அமோக வரவேற்பு பெற்றிருக்கிறது. ஆபாசமான ஆடைகளே லேட்டஸ்ட் ஃபாஷனாக வலம்வரும் இந்த யுகத்தில், அழகிய மற்றும் அடக்கமான உடைக்கு ஹான்பாக் ஓர் உதாரணம்.​—1 தீமோத்தேயு 2:⁠9, NW. (g04 11/8)

[அடிக்குறிப்பு]

a ஆண்கள், பெண்கள் ஆகிய இரு சாராருமே ஹான்பாக் உடைகளை அணிந்தாலும், பெண்களுக்கான ஹான்பாக் உடையே இக்கட்டுரையில் கலந்தாலோசிக்கப்படுகிறது.