Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தீவிரவாத தாக்குதலின் அதிர்ச்சியிலிருந்து மீளுதல்

தீவிரவாத தாக்குதலின் அதிர்ச்சியிலிருந்து மீளுதல்

தீவிரவாத தாக்குதலின் அதிர்ச்சியிலிருந்து மீளுதல்

ஸ்பெயினிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

ஸ்பெயினிலுள்ள மாட்ரிட் நகரில் மார்ச் 11, 2004 அன்று மூன்று ரயில் நிலையங்களில் பத்து வெடிகுண்டுகள் வெடித்தன. சத்தத்தில் அந்நகரமே அதிர்ந்தது. நான்கு உள்ளூர் ரயில்களில் ஒரே சமயத்தில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் சுமார் 190 பேர் பலியானார்கள், 1,800 பேர் காயமடைந்தார்கள்.

காலையில், அதுவும் நெரிசலான சமயத்தில் இந்தக் குண்டுகள் வெடித்தன. எல்லா ரயில்களிலும் ஆட்கள் நிரம்பி வழிந்ததால், அது பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைக் கண்கூடாக கண்ட ஆரோவா என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “வெடிகுண்டின் சக்தி பயங்கரமாக இருந்தது, குண்டு வெடித்தபோது ஒரு கம்பார்ட்மென்டே [ஒரு மீட்டர்] உயரத்திற்கு எகிறியது. என்னுடைய கம்பார்ட்மென்டிலிருந்து இறங்கிப் பார்த்தபோது, அந்த இடமே யுத்த களம் போல் காட்சியளித்தது. அதுவும் நிஜ வாழ்வில் இதுபோன்ற படுகொலைகள் பீதியடைய வைக்கின்றன.” இதே மாதிரியான கோர சம்பவங்கள் நான்கு ரயில்களிலுள்ள பத்து கம்பார்ட்மென்டுகளில் நிகழ்ந்தன. எப்படி? முதுகுப் பைகளில் வெடிகுண்டுகளை நிரப்பி, தீவிரவாதிகள் அதை ரயில்களில் விட்டுச் சென்றுள்ளனர். பின்னர் மொபைல் ஃபோன் மூலம் அதை வெடிக்கச் செய்துள்ளனர்.

தங்கள் உயிருக்கு உலை வைத்திருக்கக்கூடிய அந்தக் கோர சம்பவங்களைச் சில பயணிகளால் நினைவுகூர முடியாமல் போனது அவர்களுக்கு நல்லதாகப் போயிற்று. ஆனால், ஆரோவாவைப் போன்ற நூற்றுக்கணக்கானோர் உடல் ரீதியிலும் மனோ ரீதியிலும் ஆறாத வடுக்களைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. ஆரோவா இவ்வாறு சொல்கிறார்: “அந்த வெடிச் சத்தத்தில் என்னுடைய காது படு மோசமாக பாதிக்கப்பட்டது. ஆனால் பயங்கரக் காட்சிகளால் என் மனம் ரொம்ப சித்திரவதைப்படுவதுதான் அதைவிட மோசம்.”

ஆரோவா தொடர்ந்து சொல்வதாவது: “யெகோவாவின் சாட்சியான எனக்கு மற்ற சகோதர சகோதரிகள் பக்கபலமாக இருந்து, மனதிற்கு தெம்பூட்டினார்கள், அதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாய் இருக்கிறேன். உலகெங்கிலுமிருந்து ஃபோன்களும் கடிதங்களும் எனக்கு வந்து குவிந்தபோது, நான் உலகளாவிய சகோதரத்துவத்தின் பாகமாக இருக்கிறேன் என்று நினைப்பூட்டப்பட்டேன். இந்த அட்டூழியங்கள் ஏன் நடக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள பைபிள் எனக்கு உதவியது. என்னுடன் வேலை பார்க்கும் சிலரிடம், ‘கடைசி நாட்களில்’ ஆட்கள் சுபாவ அன்பில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும் இருப்பார்கள் என்பதை பைபிள் ஏற்கெனவே முன்னுரைத்திருக்கிறது என்று விளக்கினேன். மன வேதனையைத் தணிக்க, முழுநேர ஊழியமே எனக்கு உதவியது.”​—2 தீமோத்தேயு 3:1-3.

படுகாயம் அடைந்த அநேக பயணிகளில் பேத்ரொ என்ற யெகோவாவின் சாட்சியும் ஒருவர். தன்னுடைய கம்பார்ட்மென்டில் வெடித்த குண்டிலிருந்து ஏறக்குறைய நான்கு மீட்டர் தொலைவில்தான் அவர் நின்றுகொண்டிருந்தார். அது வெடிக்கையில் அவர் தூக்கி எறியப்பட்டு தரையில் விழுந்ததால் தலையில் காயங்களும் சுவாசிப்பதில் கடும் பிரச்சினைகளும் அவருக்கு ஏற்பட்டன. ஐந்து நாட்களுக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பின்னரே குணமடைய ஆரம்பித்தார். அவரைச் சந்தித்து ஊக்கமூட்ட ஏராளமான யெகோவாவின் சாட்சிகள் வந்தார்கள்; அவ்வளவு பேர் வந்திருப்பதைப் பார்த்த நர்ஸுகளால் நம்பவே முடியவில்லை. “என்னுடைய 26 வருட சர்வீஸில், ஒருவரை இத்தனை பேர் வந்து பார்ப்பதையும் இவ்வளவு பரிசுகளைக் கொடுப்பதையும் நான் இதுவரை பார்த்ததே இல்லை!” என்று சொல்லி ஆச்சரியப்பட்டார் ஒரு நர்ஸ். அந்த ஆஸ்பத்திரியில் பணிபுரிபவர்களைப் பற்றி பேத்ரொ ஆர்வம் பொங்க இவ்வாறு சொல்கிறார்: “அவர்கள் ரொம்ப அருமையானவர்கள். நான் குணமடைய பெரிதும் உதவினார்கள்.”

குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களில் அநேகர் சமீபத்தில்தான் ஸ்பெயினில் குடியேறியிருந்தார்கள். கியூபா நாட்டைச் சேர்ந்த மான்வெல் என்பவர் சம்பவத்தன்று ஆடொசா ரயில் நிலையத்தில் இருந்திருக்கிறார். முதல் குண்டு அங்கு வெடித்தபோது அதில் காயமடைந்துள்ளார்; இரண்டாவது குண்டு வெடித்தபோது சுயநினைவை இழந்துள்ளார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “ஸ்டேஷனுக்குள்ளே பிளாட்ஃபார்மில் நான் முகங்குப்புற விழுந்து கிடந்தபோது, பீதியில் தலைதெறிக்க ஓடியவர்கள் என்னை மிதித்துக்கொண்டே ஓடினார்கள். எனக்கு சுயநினைவு திரும்பியபோது, என்னுடைய இரண்டு விலா எலும்புகள் முறிந்திருந்தன; ஒரு கால் அடிபட்டிருந்தது; ஒரு காது சுத்தமாகவே செவிடாகி விட்டிருந்தது.”

மான்வெல் தொடர்ந்து சொல்கிறார்: “எமர்ஜன்ஸி போலீஸாரும் தீயணைப்புப் படையினரும் ஆம்புலன்ஸ் சர்வீஸ்களும் விரைந்து வந்து, எங்களுக்கு வேண்டிய உதவியை சிறந்த விதத்தில் அளித்தார்கள். என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் துல்லியமாக அறிந்திருந்தார்கள். அவர்களுடைய சாமர்த்தியமும் திறமையும் பீதி அடையாமலிருக்க உதவியாக இருந்தன. எனக்குப் போதிய மருத்துவ உதவி அளிக்கப்படுகிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல், பரிவாகவும் தயவாகவும் என்னிடம் நடந்துகொண்டார்கள்.”

கோர சம்பவத்துக்குப்பின் தொடரும் அதிர்ச்சி

ஆரோவாவைப் போன்றே மான்வெலுக்கும் மனதில் ஏற்பட்ட ரணம் இன்னும் ஆறவில்லை. அவர் சொல்கிறார்: “சமீபத்தில் ஒரு ரயிலில் ஏறியபோது என் மனம் பதைபதைக்க ஆரம்பித்தது, சட்டென்று அதிலிருந்து இறங்க வேண்டியிருந்தது. பொதுப் போக்குவரத்தில் யாராவது முதுகுப் பையையோ அல்லது அதுபோன்ற பொருட்களையோ எடுத்துச் செல்வதைப் பார்க்கும் போதெல்லாம் இன்னமும் என் மனம் திக்திக்கென்று அடித்துக்கொள்ளும். என்னுடைய குடும்பம் ஸ்பெயினில் இல்லை, என்றாலும் மற்றவர்களைவிட எனக்கு நிறைய உதவி கிடைத்தது. ஆம், நூற்றுக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து ஃபோன் மேல ஃபோன் வந்துகொண்டிருந்தது. அதோடு, நான் தனிமையாக உணரக்கூடாது என்பதற்காக யெகோவாவின் சாட்சிகளான ஒரு குடும்பத்தார் தங்கள் வீட்டில் வந்து என்னைச் சில நாட்களுக்குத் தங்கச் சொன்னார்கள். நம்முடைய உலகளாவிய சகோதரத்துவத்தின் மூலம் கிடைத்த ஆதரவு என் மனக்கொந்தளிப்பைத் தணித்தது.”

செர்க்யோ என்ற பயணி உடல் காயமின்றி தப்பித்தாலும், தன்னைச் சுற்றி அவர் பார்த்த பயங்கரக் காட்சிகளால் இன்னமும் ஒவ்வொரு நாளும் அவதிப்படுகிறார். தன்னுடைய ரயில் பெட்டிக்கு முன்னாலிருந்த பெட்டியில் குண்டு வெடித்த உடனேயே பின்னாலிருந்த பெட்டியிலும் மற்றொரு குண்டு வெடித்ததைப் பார்த்தார். மான்வெலைப் போல, தன்னுடைய குடும்பத்தாரிடமிருந்தும் மற்ற சாட்சிகளிடமிருந்தும் வந்த அன்பான ஆதரவுக்கு அவர் நன்றியுள்ளவராக இருக்கிறார்: “அவர்கள் என் மீது பாசத்தைப் பொழிந்தது மட்டுமல்லாமல், ஒவ்வொரு அங்கத்தினரையும் கவனித்துக் கொள்கிற ஒன்றுபட்ட சகோதரத்துவத்தின் பாகமாக இருக்கிறேன் என்பதையும் எனக்கு உணர வைத்தார்கள். இந்த ஆதரவு தினமும் எனக்குக் கிடைத்தது. என்னுடைய உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ள பெரும்பாலும் நான் ரொம்ப சங்கடப்படுவேன். ஆனால் எனக்கு அநேக ஃபோன் கால்கள் வந்ததால் என்னுடைய உணர்ச்சிகளைத் தாராளமாக என்னால் வெளிப்படுத்த முடிந்தது.”

ரயில்களிலிருந்த சில பயணிகள் வேறு விதங்களில் பாதிக்கப்பட்டனர். டியேகோ என்பவர் தற்செயலாக ஒரு வெடிகுண்டுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துள்ளார். இந்தத் தாக்குதலில் வெடிக்காமல் போன நான்கு குண்டுகளில் அதுவும் ஒன்று என்பதால் எந்தவொரு சேதமுமின்றி அவரால் உயிர் தப்ப முடிந்தது. “ஆனால் காயமடைந்தவர்களுக்கு உதவாமல் போய்விட்டேனே என்ற குற்றவுணர்வு என்னை இன்னமும் வாட்டுகிறது. ஸ்டேஷனைவிட்டு எப்படியாவது வெளியேற வேண்டும் என நூற்றுக்கணக்கான ஆட்கள் அடித்துப்பிடித்து ஓடியபோது நானும் கூட்டத்தோடு கூட்டமாய் பயத்தில் ஓடி வந்துவிட்டேன்” என்று கூறுகிறார்.

ராமான் என்பவர் பிரேசிலைச் சேர்ந்த ஓர் இளைஞர்; அவர் பயணம் செய்த ரயிலில் ஏற்பட்ட விபத்து அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. நடமாட முடியாதளவுக்கு நிலைகுலையச் செய்திருக்கிறது. இருந்தாலும், தாக்குதலுக்குப் பின் இரண்டு நாட்கள் கழித்து கடவுளுடைய ராஜ்ய செய்தியை மற்றவர்களுக்குச் சொல்வதற்காக ஊழியத்தில் கலந்துகொள்ள தீர்மானித்தார். அப்போது போர்ச்சுகல் நாட்டவர் ஒருவரைச் சந்தித்தார். தான் உண்மை மதத்தைத் தேடிக் கொண்டிருப்பதாக அந்த நபர் சொன்னதும், ராமான் ஒரு பைபிள் படிப்பை அவரோடு தொடங்கினார். கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் அவர் வர ஆரம்பித்தார். இவ்வாறு “ஆன்மீக ரீதியில் மற்றவர்களுக்கு உதவும்போது நமக்கே தெம்பாக இருக்கும்” என்று ராமான் சொல்கிறார்.

உடல் ரீதியிலும் மனோ ரீதியிலும் பாதிக்கப்பட்ட எல்லாருக்கும் அதிலிருந்து குணமடைய காலம்தான் அருமருந்து. ஆனால் வருத்தகரமாக, நம்முடைய காலத்தில் எந்தக் காரணமுமின்றி எங்கு வேண்டுமானாலும் வன்முறை தலைதூக்கலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அதிர்ச்சியிலிருந்து மீள ஆன்மீக காரியங்கள் உதவினாலும் கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே இந்த எல்லாத் துயரச் சம்பவங்களையும் ஒட்டுமொத்தமாக துடைத்தழிக்கும்.​—வெளிப்படுத்துதல் 21:3, 4. (g04 11/8)

[பக்கம் 15-ன் பெட்டி/படங்கள்]

அதிர்ச்சியிலிருந்து மீள ஆன்மீக பலம்

மான்வெல் ஸ்வாரெஸ்

“ஆஸ்பத்திரிக்குப் போக காத்துக் கொண்டிருந்தபோது நான் அதிர்ச்சியில்தான் இருந்தேன். ‘யெகோவாவின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்’ என்ற நீதிமொழிகள் 18:10-⁠ன் வார்த்தைகளை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தேன். அந்த வார்த்தைகள் என்னை திடப்படுத்தின.”

ஆரோவா சான் ஹ்வான்

“இதுமாதிரியான சம்பவங்களை எதிர்ப்படுகையில், இவை கடைசி நாட்கள்தான் என்ற உணர்வு முன்பிருந்ததைவிட அதிகமாகும். ஆன்மீக காரியங்களுக்கு நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்பதை உணர்த்தும். நான் முழுநேர ஊழியம் செய்வதால் கொஞ்சம் கொஞ்சமாக அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருகிறேன்.”

ஃபெர்மின் கேசூஸ் மொசாஸ்

“எனக்கு தலையில் அடிபட்டிருந்த போதிலும், காயமடைந்த சில பயணிகளுக்கு என்னால் உதவியையும் நம்பிக்கையையும் அளிக்க முடிந்தது. யெகோவா நமக்கு அளித்திருக்கும் உயிர்த்தெழுதல் நம்பிக்கை இருந்ததால்தான் அச்சமயத்தில் என்னால் அமைதியாக இருக்க முடிந்ததென நினைக்கிறேன். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் இந்த நம்பிக்கை நம்மை பலப்படுத்துகிறது.”

பேத்ரொ காராஸ்கியா

“நான் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தபோது கடும் நெஞ்சு வலியால் துடித்துக் கொண்டிருந்தேன், அப்போது 1 தீமோத்தேயு 6:19 தான் திரும்பத் திரும்ப என் மனதிற்கு வந்தது. நித்திய ஜீவ நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படியும் வருங்காலத்திற்காக நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கும்படியும் அது நம்மை அறிவுறுத்துகிறது. தம்மீது அன்புகூருகிறவர்களுக்காக கடவுள் வாக்குறுதி அளித்திருக்கும் பரதீஸை இந்த வசனம் எனக்கு நினைப்பூட்டியது. அதை அடையத்தானே நாம் இவ்வளவு பாடு படுகிறோம்.”

[பக்கம் 13-ன் படம்]

மேலே: ஆடொசா ரயில் நிலைய தண்டவாளங்களில் காயமடைந்தவர்களுக்கும் குற்றுயிராய் கிடப்பவர்களுக்கும் மீட்புப் படையினர் உதவுகின்றனர்

[படத்திற்கான நன்றி]

மேலே: CORDON PRESS

[பக்கம் 13-ன் படம்]

வலது: அப்போதைக்கு செய்யப்பட்ட அஞ்சலி