பிள்ளைகளுக்குச் சப்தமாக வாசித்துக் காட்டுவதன் பலன்கள்
பிள்ளைகளுக்குச் சப்தமாக வாசித்துக் காட்டுவதன் பலன்கள்
போலந்திலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
“போலந்து நாட்டவரே பிள்ளைகளுக்கு வாசித்துக் காட்டுங்கள்” என்ற பிரச்சாரம் வருடாவருடம் செய்யப்படுகிறது. அதை ஏற்பாடு செய்பவர்கள் பின்வருமாறு சொல்கிறார்கள்: “அறிவையும் புத்தியையும் பெறுவதற்கு வாசிப்பது மிக மிக அவசியம். . . . சிந்தனைத் திறன், அறிவுத் திறன் ஆகியவற்றை தூண்டுவதற்கும் வாசிப்பது மிக மிக முக்கியம்.” இது உண்மையென்றால், பெரியவர்களும்சரி பிள்ளைகளும்சரி, ஏன் வேண்டாவெறுப்புடன் வாசிக்கிறார்கள்?
“வாசிக்கும் பழக்கத்தையும் புத்தகங்கள் மீது ஆர்வத்தையும் பிள்ளைப் பருவத்திலேயே ஊட்டி வளர்க்க வேண்டும்” என்று இந்தப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தவர்கள் சொல்கிறார்கள். “உங்கள் பிள்ளைகள் படிப்பிலும் வாழ்க்கையிலும் கெட்டிக்காரர்களாகவும் வெற்றி காண்பவர்களாகவும் திகழ வேண்டுமென்றால் தினமும் 20 நிமிடங்களாவது அவர்களுக்குச் சப்தமாக வாசித்துக் காட்டுங்கள்” என்று பெற்றோரிடம் சொல்கிறார்கள்.
அதோடு, பிள்ளைகளுக்கு வாசித்துக் காட்டுவதை தள்ளிப்போடாமல் “முடிந்தளவு சீக்கிரமாய் தொடங்கும்படி” பெற்றோர்களுக்குச் சொல்லப்படுகிறது. எவ்வளவு சீக்கிரம் தொடங்க வேண்டும்? “குழந்தைப் பருவத்திலேயே தொடங்க வேண்டும். குழந்தையை அணைத்தபடி, அன்போடு அதைப் பார்த்து, ஆர்வத்தைத் தூண்டும் தொனியில் வாசிக்க வேண்டும்” என சொல்லப்படுகிறது. “இப்படி வாசிக்கும்போது குழந்தை பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் உணரும், அதோடு வாசித்துக் காட்டுகிற நபருடன் நெருக்கமாகவும் உணரும். இது குழந்தையின் மன வளர்ச்சியையும் தூண்டிவிடும்.”
“குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டுவது எப்போதையும்விட இப்போது அதிக முக்கியம்” என்று இப்பிரச்சாரத்தை ஏற்பாடு செய்தவர்கள் சொல்கிறார்கள். அப்படி வாசித்துக் காட்டுவதால் விளையும் மற்ற நன்மைகளைப் பற்றியும் அவர்கள் எடுத்துச் சொல்கிறார்கள். சப்தமாக வாசிப்பது பிள்ளைகளை யோசிக்க வைக்கிறது, “உலகத்தை, மற்றவர்களை, ஏன் அவர்களையேகூட புரிந்துகொள்ள உதவுகிறது, . . . ஆர்வத்தைத் தூண்டி, கற்பனை வளத்தை அதிகரிக்கச் செய்கிறது, உணர்ச்சி ரீதியில் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது, இரக்கம், அனுதாபம் போன்ற குணங்களை வளர்க்கிறது, ஒழுக்க நெறிகளை கற்பிக்கிறது, . . . சுய மரியாதையைக் கூட்டுகிறது.” ஆம், வாசிப்பது, “குழந்தைகளின் மனதையும் சிந்தனையையும் கெடுக்கக்கூடிய . . . அநேக தீய செல்வாக்குகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறது” என்று சொல்லி முடிக்கிறார்கள் அப்பிரச்சாரத்தின் தலைவர்கள்.
வாசித்துக் காட்டுவது நல்ல பலன் தர வேண்டுமானால், பரலோகத்திலுள்ள படைப்பாளரிடம் நெருங்கிச் செல்ல உதவும் புத்தகங்களை அவர்களுக்கு வாசித்துக் காட்ட வேண்டும். கடவுளிடம் நெருங்கிச் செல்வதற்கு பைபிளே மிகச் சிறந்த புத்தகம். ‘சிசுப் பருவத்திலிருந்தே’ தீமோத்தேயுவிற்கு ‘பரிசுத்த வேத எழுத்துக்கள்’ போதிக்கப்பட்டதாக பைபிள் சொல்கிறது. (2 தீமோத்தேயு 3:15, NW) பிள்ளைகளுக்குச் சப்தமாக வாசித்துக் காட்ட என்னுடைய பைபிள் கதை புத்தகம், பெரிய போதகரிடம் கற்றுக்கொள் போன்ற பிரசுரங்களைப் பெற்றோர் பயன்படுத்தலாம். இவற்றை பிள்ளைகளுக்கென்றே யெகோவாவின் சாட்சிகள் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். (g04 10/22)