Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பின்ஞ் டிரிங்கிங்—அதில் என்ன தவறு?

பின்ஞ் டிரிங்கிங்—அதில் என்ன தவறு?

இளைஞர் கேட்கின்றனர் . . .

பின்ஞ் டிரிங்கிங்​—⁠அதில் என்ன தவறு?

“நானும் என் ஃபிரெண்டும் ஒரு பார்ட்டியில் மணிக்கணக்காக குடித்துக் கொண்டிருந்தோம். பிறகு விஸ்கி பாட்டிலும் கையுமாக நடுராத்திரி 1:00 மணிக்கு இரண்டு பேரும் வெளியே வந்தோம். குடித்துக் கொண்டே வீட்டைப் பார்த்து நடந்தோம். அவ்வளவுதான் எனக்கு ஞாபகம், அடுத்து கண் முழித்துப் பார்த்தால் பொழுது விடிஞ்சிருந்தது; பாதை மாறி நடந்து வந்திருந்தது அப்போதுதான் தெரிஞ்சுது. சொல்லப்போனால், நாங்கள் ஒரு ஹைவேயில் நடந்து வந்திருந்தோம். நல்ல வேளையாக, எந்த வண்டியிலும் அடிபடவில்லை.”​—⁠க்ளே. a

‘பின்ஞ் டிரிங்கிங்’ (binge drinking). போதை தலைக்கு ஏறும்வரை குடிப்பதுதான் இதன் அர்த்தம் என்கிறார்கள் சிலர். ஒரு நிறுவனம் இதற்கு இன்னும் குறிப்பான விளக்கத்தை அளித்தது. ‘பின்ஞ் டிரிங்கிங்’ என்பது “ஆண்கள் தொடர்ந்து ஐந்து கிளாஸோ b அதற்கு அதிகமாகவோ குடிப்பதையும், பெண்கள் நான்கு கிளாஸோ அதற்கு அதிகமாகவோ குடிப்பதையும்” அர்த்தப்படுத்துவதாக சொன்னது.​—⁠யு.எஸ். நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆன் ஆல்கஹால் அப்யூஸ் அண்டு ஆல்கஹாலிசம்.

இப்படி பின்ஞ் டிரிங்கிங்கில் ஈடுபடுவதை “மிகப் பெரிய பொதுநலப் பிரச்சினை” என அமெரிக்காவிலுள்ள உடல்நல அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளி பிள்ளைகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வின்போது, “13, 14 வயதினரில் 25 சதவீதத்தினர் ஒரே சமயத்தில் அடுத்தடுத்து ஐந்து கிளாஸை ‘உள்ளே தள்ளியதாக’ சொல்லிக் கொண்டார்கள்.” ஆய்வு செய்யப்பட்ட 15, 16 வயதினரில் 50 சதவீதத்தினரும்கூட இப்படிக் குடித்ததாக தெரிவித்தார்கள்.

அமெரிக்காவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது; இந்த ஆய்வு நடத்தப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு குறைந்தது ஒரு முறையாவது கல்லூரி மாணவ மாணவியரில், 5 பேரில் இருவர் பின்ஞ் டிரிங்கிங்கில் ஈடுபட்டிருந்தார்கள்.

ஐ.மா. உடல்நலத் துறையின்படி, “12 முதல் 20 வயது வரையுள்ள 1 கோடியே 4 லட்சம் வளரிளம் பருவத்தினர் மதுபானத்தை உபயோகிப்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் 51 லட்சம் பேர் பின்ஞ் டிரிங்கிங்கில் ஈடுபடுபவர்கள், அதிலும் 23 லட்சம் பேர் மொடா குடியர்கள், இவர்கள் மாதத்தில் ஐந்து முறையாவது பின்ஞ் டிரிங்கிங்கில் ஈடுபடுகிறார்கள்.” ஆஸ்திரேலியாவில் பையன்களைவிட பெண் பிள்ளைகளே பின்ஞ் டிரிங்கிங்கில் அதிகமாய் ஈடுபடுவதாக அந்நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு காட்டுகிறது; அவர்கள் ஒரு சமயத்தில் அடுத்தடுத்து 13 முதல் 30 கிளாஸ் வரை குடிக்கிறார்களாம்!

கூடவே இருக்கும் நண்பர்கள் தூண்டி விடுவதாலேயே இளைஞர்கள் பெரும்பாலும் இப்படிக் குடிக்கிறார்கள். “குடிப்பதில் புதுமையான, சாகச விளையாட்டுகள் பெருகி வருகின்றன: வெறிக்கும் வரை குடிப்பது என்ற குறிக்கோளுடன் கும்பலாக ஈடுபடுகிறார்கள். உதாரணத்திற்கு, அந்த விளையாட்டுகள் சிலவற்றில், பங்கேற்போர் அனைவரும் ஒரு டிவி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அல்லது தொகுதியாக உரையாடிக் கொண்டிருக்கும்போது குறிப்பிட்ட சமயங்களில் ஒரு “பெக்” மதுபானத்தை எதுவும் கலக்காமல் அப்படியே குடிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது” என்று ஆராய்ச்சியாளரான காரல் ஃபிளாக்காவ்ஸ்கி அறிக்கை செய்கிறார்.

பின்ஞ் டிரிங்கிங்​—⁠அதன் ஆபத்துகள்

அதிகமாக குடிப்பது சிலருக்கு ஒரு விளையாட்டாக இருக்கலாம், ஆனால் அது படு ஆபத்தான விளையாட்டு! மதுபானத்தை மிதமிஞ்சி குடிக்கையில் மூளைக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் போய்விடுகிறது; உடலில் முக்கிய செயல்பாடுகள் மெல்ல மெல்ல நின்றுவிடுகின்றன. வாந்தியெடுப்பது, நினைவிழப்பது, மெதுவாகவோ சீரற்ற விதத்திலோ சுவாசிப்பது போன்ற அறிகுறிகள் தென்படலாம். சிலருக்கு மரணமும்கூட நேரிடலாம். கிம் என்ற 17 வயது பெண் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்து சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, “வேண்டியளவு குடிக்க” அனுமதிக்கப்படும் பார்ட்டிக்குப் போனாள். அங்கு 17 கிளாஸ் குடித்ததும் சுய நினைவை இழந்தாள். பிறகு அவளுடைய அக்கா அங்கு வந்து அவளை வீட்டிற்குக் கொண்டு சென்றாள். மறுநாள் காலையில் அவளுடைய அம்மா அவளை பிணமாகத்தான் பார்த்தார்.

இப்படி அளவுக்கு அதிகமாக குடிக்கும்போது மரணம் ஏற்படுவது அபூர்வமென்றாலும், அது உடல் நலத்திற்கு அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. “மதுபானம் உங்கள் உடலின் எந்த உறுப்பை வேண்டுமானாலும் படுமோசமாக சேதப்படுத்திவிடலாம். மதுபான துஷ்பிரயோகத்தால் நரம்பு மண்டலம், கல்லீரல், இருதயம் போன்றவை சேதமடைவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது” என்கிறார் மனநல நிபுணர் ஜெரோம் லெவின். “குடிப்பழக்கமுள்ள இளைஞர்கள் ஆபத்தை வலிய தேடிக் கொள்கிறார்கள் என நவீன ஆய்வு கருத்துத் தெரிவிக்கிறது. 20 முதல் 29 வயது வரை மூளை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால் எக்கச்சக்கமாக குடிக்கும் டீனேஜர்களின் அறிவுத்திறன் பெருமளவு பாதிக்கப்படலாம்” என குறிப்பிடுகிறது டிஸ்கவர் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை. பழக்கமாக மதுபானம் குடித்து வருவது வேறு பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதாக தெரிகிறது; அதாவது, சருமத்தில் பருக்கள் அதிகரிப்பது, வெகு சீக்கிரத்திலேயே சருமத்தில் சுருக்கங்கள் தோன்றுவது, உடல் எடை அதிகரிப்பது, உடலின் உள் உறுப்புகள் சேதமடைவது, மதுவில்லாமல் எதையும் செய்ய முடியாதிருப்பது, போதை மருந்துக்கு அடிமையாவது ஆகியவை ஏற்படுகின்றன.

எக்கச்சக்கமாக குடிப்பதில் இன்னும் சில ஆபத்துகள் உள்ளன. குடிபோதையில் இருக்கும்போது நீங்கள் கேவலமாக நடத்தப்படலாம். ஆம், நீங்கள் தாக்கப்பட்டு விடலாம், ஏன், கற்பழிக்கவும் படலாம். அதுமட்டுமல்ல, குடிக்காமல் நிதானத்தோடு இருக்கையில் நினைத்துக்கூடப் பார்க்க விரும்பாத காரியங்களை நீங்கள் செய்து விடலாம்; அதாவது, பிறருக்கு ஆபத்து விளைவிக்கவும், சுயக் கட்டுப்பாட்டை இழக்கவும் நேரிடலாம். எனவே, மட்டுக்குமீறி குடிக்கையில் “உன் கண்கள் பரஸ்திரீகளை [“விசித்திரமானவற்றை,” NW] நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்” என பைபிள் எச்சரிக்கிறது. (நீதிமொழிகள் 23:33) மனதை ரணமாக்கும் வேறு பல பாதிப்புகளும் ஏற்படலாம், அதாவது நட்பு முறிந்து விடுவது, பள்ளியிலோ வேலை செய்யுமிடத்திலோ மந்தமாகி விடுவது, குற்றச்செயலில் ஈடுபடுவது, வறுமையில் வீழ்ந்து விடுவது போன்றவை ஏற்படலாம். cநீதிமொழிகள் 23:⁠21.

குடிப்பதற்குக் கட்டாயப்படுத்தப்படுதல்

இத்தகைய ஆபத்துகள் இருந்தபோதிலும் மதுபானத்திற்கு ஏகபோக ஆதரவு இருக்கிறது, பல நாடுகளில் அது எளிதில் கிடைக்கிறது. சொல்லப்போனால், மது அருந்துவது டிவியிலும் பத்திரிகை விளம்பரங்களிலும் கவர்ச்சிகரமாய் காட்டப்படுகிறது. எனினும், சகாக்களின் கட்டாயத்தால்தான் பெரும்பாலும் இளைஞர்கள் பின்ஞ் டிரிங்கிங்கில் இறங்கிவிடுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் மதுபான விழிப்புணர்வு பற்றிய சுற்றாய்வு நடத்தப்பட்டது; அப்போது, கேள்விக்குப் பதிலளித்தவர்களில் 36 சதவீத இளைஞர்கள் முக்கியமாய், “சமுதாய நடவடிக்கைகளில் தங்கள் சகாக்களுடன் ஒத்துப் போவதற்காகவே” அவ்வாறு குடிப்பதாக சொன்னார்கள். குடியும் கூத்தும் நடக்கும் “பியர் பார்ட்டிகளில்,” கூச்ச சுபாவமுள்ள ஒருவருக்கு அவரது சகாக்கள் மாற்றி மாற்றி கிளாஸில் ஊற்றிக் கொடுக்கும்போது, அவர் அந்தப் பார்ட்டியையே களைகட்டிவிடச் செய்கிறார். கேட்டி என்ற இளம் பெண் இப்படித்தான் அளவு தெரியாமல் குடிக்கப் போய், கோமா நிலைக்கு ஆளாகி வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டாள். அவளுக்குப் பழக்கமான ஒரு பையன், “கேட்டி, நீ என்ன இப்போ சின்னப் பெண்ணா, இந்தா குடி; ஒரே மூச்சில் மடக் மடக்கென்று குடிக்க கத்துக்கோ” என சொல்லி மதுபானத்தை ஊற்றி ஊற்றி அவளுக்குக் கொடுத்திருக்கிறான்.

பின்ஞ் டிரிங்கிங் ஆபத்தானது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஆதாரம் இருந்தாலும்கூட ஜாலியாக பொழுதைக் கழிக்க வேண்டும், மற்றவர்களோடு ஒத்துப்போக வேண்டும் என்ற ஆசை கட்டுக்கடங்காமல் போவதால் இப்படியொரு குடிப்பழக்கம் தொடர்ந்து பிரபலமடைந்து வருகிறது.

உங்கள் தெரிவு என்ன?

இது சம்பந்தமாக பின்வரும் கேள்விகள் எழுகின்றன: குடிப்பதைப் பொறுத்ததில் நீங்கள் என்ன தெரிவுகளைச் செய்வீர்கள்? கண்ணை மூடிக்கொண்டு உங்கள் சகாக்களைப் பின்பற்றுவீர்களா? “எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?” என ரோமர் 6:16 சொல்வதை நினைவில் வையுங்கள். உங்கள் சகாக்கள் உங்களுடைய ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்த அனுமதித்தீர்களென்றால் நீங்கள் அவர்களுக்கு அடிமையாகவே ஆகிவிடுகிறீர்கள். சுயமாக சிந்தித்துத் தீர்மானம் எடுக்கும்படி பைபிள் உங்களை ஊக்குவிக்கிறது. (நீதிமொழிகள் 1:4) பயங்கரமான தவறுகளைச் செய்துவிடாதபடி உங்களைக் காக்கும் அறிவுரைகள் அதில் உள்ளன. மதுபானத்தைப் பற்றி அது என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள்.

உண்மையில் மது அருந்துவதை பைபிள் கண்டனம் செய்வதில்லை, இளைஞர்கள் ஜாலியாக பொழுதைக் கழிப்பதைத் தவறென சாடுவதும் இல்லை. ஆனால் அளவுக்கு மிஞ்சி குடிப்பதைக் குறித்து அது எச்சரிப்புக் குரல் கொடுக்கிறது. “திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளி பண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல” என நீதிமொழிகள் 20:1 சொல்கிறது. ஆம், மதுபானம் ஒருவரை கேவலமாக நடந்துகொள்ளும்படியும் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணும்படியும் செய்விக்கலாம்! அது தற்காலிக சந்தோஷத்தைத் தரும் என்பது உண்மைதான், ஆனால் மிதமிஞ்சி குடித்தால் அது ‘பாம்பைப் போல் கடித்துவிடும்,’ விளைவு? உடலிலும் உள்ளத்திலும் ஏராளமான ‘காயங்கள்’ ஏற்பட்டு விடும்.​—⁠நீதிமொழிகள் 23:32.

அநேக நாடுகளில் மதுபானம் குடிப்பதற்கு குறைந்தபட்ச வயதுவரம்பு இருக்கிறது என்பது கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம். கிறிஸ்தவர்கள் இத்தகைய சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார்கள். (தீத்து 3:1) இச்சட்டங்கள் உங்களைப் பாதுகாப்பதற்கே!

கடைசியில், மிக முக்கியமாக, மிதமிஞ்சிக் குடிப்பதால் ஏற்படும் ஆவிக்குரிய பாதிப்பைப் பற்றியும் எண்ணிப் பாருங்கள். நீங்கள் “முழு மனதோடு” தம்மை சேவிக்க வேண்டுமென்றுதான் யெகோவா தேவன் விரும்புகிறார், குடித்துக் குடித்து இற்றுப்போன மனதுடன் அல்ல. (மத்தேயு 22:37) கடவுளுடைய வார்த்தை மிதமிஞ்சி ‘மதுபானம் பண்ணுவதை’ கண்டனம் செய்வதோடு, ‘வெறிப்பதையும்’ [‘மது அருந்தும் விருந்துகளையும்,’ ஈஸி டு ரீட் வர்ஷன்] கண்டனம் செய்கிறது. (1 பேதுரு 4:3) எனவே, பின்ஞ் டிரிங்கிங் கடவுளுடைய சித்தத்திற்கு விரோதமாக இருக்கிறது. இப்படி அளவுக்கு அதிகமாக குடிப்பது கடவுளுடன் நெருங்கிய உறவை அனுபவிக்க விடாமல் செய்துவிடுகிறது.

பின்ஞ் டிரிங்கிங் பழக்கத்தில் நீங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் என்ன செய்ய வேண்டும்? பெற்றோரிடமோ முதிர்ச்சி வாய்ந்த ஒரு கிறிஸ்தவரிடமோ பேசி, உடனடியாக உதவியைப் பெறுங்கள். d யெகோவா தேவனை ஜெபத்தில் அணுகி உதவி கேட்டு மன்றாடுங்கள். நம்முடைய “ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணை”யாக இருப்பது அவர்தானே. (சங்கீதம் 46:1) பெரும்பாலும் நண்பர்களின் கட்டாயத்தினால்தான் பின்ஞ் டிரிங்கிங்கில் பலர் ஈடுபடுகிறார்கள், அதோடு உரிய வயதிற்கு முன்னரே குடிக்கவும் ஆரம்பிக்கிறார்கள். எனவே உங்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் பொழுதுபோக்கு விஷயங்களிலும் நீங்கள் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம். அத்தகைய மாற்றங்களைச் செய்வது எளிதல்ல என்றாலும், யெகோவாவின் உதவியுடன் நீங்கள் வெற்றி காண முடியும். (g04 9/22)

[அடிக்குறிப்புகள்]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b உதாரணத்திற்கு, அமெரிக்காவில் பொதுவாக ஒரு கிளாஸ் என்பது 12 அவுன்ஸ் (360 மிலி) பியரை, 5 அவுன்ஸ் (150 மிலி) ஒயினை, அல்லது 1.5 அவுன்ஸ் (45 மிலி) சாராயத்தை [80 ப்ரூஃப் (40%)] குறிக்கிறது. இவற்றில் 14 கிராம் எத்தில் ஆல்கஹால் இருப்பதாக சொல்லப்படுகிறது.

c ஐ.மா. ஆய்வு ஒன்றின்படி, “அடிக்கடி பின்ஞ் டிரிங்கிங்கில் ஈடுபட்டவர்கள், வகுப்புக்குச் செல்லாமல் கட் அடிப்பது, பள்ளிப் பாடங்களைச் செய்யாதிருப்பது, காயம் பட்டுக்கொள்வது, பள்ளியின் உடைமைகளைச் சேதப்படுத்துவது ஆகியவற்றில் மற்றவர்களைவிட எட்டு மடங்கு அதிகமாக உட்பட்டார்கள்.”

d சிலருடைய விஷயத்தில் தகுதிவாய்ந்த மருத்துவரின் உதவி தேவைப்படலாம்.

[பக்கம் 15-ன் பெட்டி/படம்]

பின்ஞ் டிரிங்கிங்​—⁠துயரகரமான புள்ளிவிவரங்கள்

அமெரிக்காவில் கல்லூரி மாணவ மாணவியர் மத்தியில் பின்ஞ் டிரிங்கிங்கில் ஈடுபடுவதால் உண்டாகும் சோகமான விளைவுகளைப் பின்வரும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது:

மரணம்: மோட்டார் வாகன விபத்துகள் உட்பட மதுபானத்துடன் சம்பந்தப்பட்ட எதிர்பாராத காயங்களால் ஒவ்வொரு வருடமும் 18 முதல் 24 வயதுக்குட்பட்ட 1,400 கல்லூரி மாணவ மாணவியர் மரணமடைகிறார்கள்

காயங்கள்: 18 முதல் 24 வயதுக்குட்பட்ட 5,00,000 மாணவ மாணவியர் குடிபோதையில் இருக்கையில் எதிர்பாராமல் காயமடைகிறார்கள்

தாக்கப்படுதல்: 18 முதல் 24 வயதுக்குட்பட்ட 6,00,000-⁠க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் குடித்திருக்கும் சக மாணவனால் தாக்கப்படுகிறார்கள்

பாலியல் துஷ்பிரயோகம்: 18 முதல் 24 வயதுக்குட்பட்ட 70,000-⁠க்கும் அதிகமான மாணவ மாணவியர் மதுபானம் சம்பந்தப்பட்ட பாலியல் துஷ்பிரயோகத்துக்குப் பலியாகிறார்கள் அல்லது டேட்டிங் செய்யும் ஆட்களால் கற்பழிக்கப்படுகிறார்கள்

[படத்திற்கான நன்றி]

தகவல்: யு.எஸ். நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆன் ஆல்கஹால் அப்யூஸ் அண்டு ஆல்கஹாலிசம்

[பக்கம் 13-ன் படம்]

பின்ஞ் டிரிங்கிங்கில் ஈடுபட உங்கள் சகாக்கள் கட்டாயப்படுத்தலாம்