அன்று எதிரிகள் இன்று நண்பர்கள்
அன்று எதிரிகள் இன்று நண்பர்கள்
ஜப்பானை சேர்ந்த முன்னாள் விமானி டோஷியாகி நிவாவின் வாழ்க்கை சரிதை ஜனவரி 8, 2003 விழித்தெழு!-வில் வந்திருக்கிறது. இரண்டாம் உலக யுத்தத்தின்போது காமிகாஸி என்ற தற்கொலை பணிக்காக அவர் பயிற்றுவிக்கப்பட்டார். 1945-வது வருடம் ஆகஸ்ட் மாதம் அமெரிக்க போர்க் கப்பல்களின் மீது தற்கொலை தாக்குதல் நடத்த ஆர்டர் வருவதற்காக கியோடோவிற்கு அருகேயுள்ள விமான படைத்தளத்தில் தான் காத்திருந்ததாக நிவா சொன்னார். ஆனால் அந்த ஆர்டர் வரவில்லை. சில நாட்களிலேயே போர் முடிந்துவிட்டது. பல ஆண்டுகளுக்குப் பின் யெகோவாவின் சாட்சிகளுடன் நிவா பைபிளைப் படிக்கத் தொடங்கியபோது கடவுளைப் பிரியப்படுத்த நினைப்பவர்கள் போரில் ஈடுபட மாட்டார்கள் என்பதைக் கற்றுக்கொண்டார். அத்துடன் சக மனிதர் எல்லாரையும்—எங்கு இருந்தாலும் சரி, எந்தத் தேசத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, எல்லாரையும்—அவர்கள் மதிக்கிறார்கள் என்பதையும் கற்றுக்கொண்டார். (1 பேதுரு 2:17) போர்வீரனாக இருந்த நிவா இப்போது அமைதி காப்பவராக, பைபிள் விஷயங்களை—ஜனங்களை ஒன்றிணைக்கும் விஷயங்களை—மற்றவர்களிடம் சொல்லி வருகிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ரஸல் வெர்ட்ஸ், நிவாவின் கதையைப் படித்து மனம் நெகிழ்ந்து போனார். காரணம்? அவரும் அதே போரில் ஈடுபட்டவர், ஆனால் எதிர் தரப்பில் இருந்தவர். நிவாவிற்கு எழுதிய கடிதத்தில் வெர்ட்ஸ் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “ஆகஸ்ட் 1945-ல் வரவிருந்த தாக்குதலுக்காக நீங்கள் காத்துக்கொண்டிருந்ததாக எழுதியிருந்தீர்கள். அதே சமயத்தில்தான் அந்தத் தாக்குதலுக்கான கடைசிகட்ட பயிற்சியை நான் பெற்றுக்கொண்டிருந்தேன். போர் மட்டும் அன்று முடிந்திருக்காவிட்டால் நாம் இருவருமே நேருக்கு நேர் மோதி உயிரிழந்திருப்போம். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் போலவே பின்பு நானும் என் மனைவியும் யெகோவாவின் சாட்சிகளானோம். ஒரு காலத்தில் கொலைவெறி பிடித்த பகைவர்களாக இருந்த நாம் இன்று நண்பர்களாக மட்டுமல்ல சகோதரர்களாகவும் ஆகியிருக்கிறோம்; இந்தச் சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை!”
டோஷியாகி நிவா மற்றும் ரஸல் வெர்ட்ஸ் போலவே ஒரு காலத்தில் ஜென்ம விரோதிகளாக இருந்தவர்கள் இப்போது சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்கிறார்கள். ஏனென்றால் கடவுளுடைய வார்த்தையான பைபிளைப் படித்து தங்களுடைய வாழ்க்கையில் அதை பின்பற்றியிருக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் யூதர்களும் அரேபியர்களும், ஆர்மீனியர்களும் துருக்கியர்களும், ஜெர்மானியர்களும் ரஷ்யர்களும், ஹூட்டுகளும் டூட்ஸிகளும் இருக்கிறார்கள். இவர்களெல்லாரும் தங்களை உண்மை கிறிஸ்தவர்கள் என்று நிரூபிக்கிறார்கள். இயேசு இவ்வாறு சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”—யோவான் 13:35. (g04 9/8)
[பக்கம் 27-ன் படங்கள்]
இரண்டாம் உலகப் போரின்போது டோஷியாகி நிவாவும் ரஸல் வெர்ட்ஸும்