அப்பா இல்லாமல்—வளர்ந்துவரும் ஒரு பிரச்சினை
அப்பா இல்லாமல்—வளர்ந்துவரும் ஒரு பிரச்சினை
அப்பாமார் குடும்பங்களை நடுத் தெருவில் விட்டுச் செல்வது இன்று அதிகரித்து வருகிறது. “அப்பாக்கள் இல்லாத குடும்பங்கள் நிறைந்த நாடுகளில் முன்னணி வகிப்பது” அமெரிக்காவே என 1990-களின் இறுதியில் யுஎஸ்ஏ டுடே செய்தித்தாள் குறிப்பிட்டது. ஆனால், வீடுகளில் அப்பாமார் இல்லாதிருப்பது ஓர் உலகளாவிய பிரச்சினையே.
பிரேசில் நாட்டில் 4.47 கோடி குடும்பங்களில் 1.12 கோடி குடும்பங்களை ஆண்களின் உதவியின்றி பெண்கள்தான் நடத்துகிறார்கள் என 2000-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை அறிக்கை காட்டியது. நிகாராகுவாவில் 25 சதவீத பிள்ளைகள் தங்களுடைய அம்மாவுடன்தான் வாழ்கிறார்கள். கோஸ்டா ரிகாவில் அப்பாமார் தங்களுடைய சொந்த பிள்ளைகளை நிராகரிப்பது அதிகமாகி வருகிறது; 1990-களில் 21.1 என்ற சதவீதத்திலிருந்து தற்போது 30.4 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளது.
இந்த மூன்று நாடுகளின் புள்ளிவிவரங்கள் இன்று உலகம் போகிற போக்கிற்கு சில எடுத்துக்காட்டுகளே. அப்பாமார் இல்லாத குடும்பங்களில் உருவாகும் பிரச்சினையின் மற்றொரு பரிமாணத்தை கவனியுங்கள்.
இருந்தும் இல்லை
“டாடி, நீங்க போயிட்டு எப்போ வருவீங்க?” என்ற பெட்டியை தயவுசெய்து பாருங்கள். நாவோ என்பவருக்கு இப்போது 23 வயது, அவர் இவ்வாறு கூறுகிறார்: “நான் எலிமென்ட்டரி ஸ்கூலுக்கு போக ஆரம்பிக்கிறதற்கு முன்னாடியே வீட்டில் அப்பாவை பார்ப்பது ரொம்ப அபூர்வமாக இருந்தது. ஒரு சமயம், அவர் வீட்டிலிருந்து கிளம்புகிற சமயத்தில், ‘டாடி, போயிட்டு திரும்ப வருவீங்கல்ல?’ என நான் கெஞ்சினேன்.”
நாவோவுக்கும் அவருடைய அப்பாவுக்கும் இடையே இருந்தது போன்ற குடும்ப உறவுகளே பையாட்டர் ஷ்சகெவிக் என்ற போலிஷ் எழுத்தாளரை இவ்வாறு சொல்லத் தூண்டியது: “அப்பா இல்லாதது குடும்பத்தில் ஒரு பெரிய குறையாக தெரிகிறது.” அநேக அப்பாமார், மனைவி மக்களோடு சேர்ந்து குடித்தனம் நடத்துகிறார்கள், குடும்பத்திற்குத் தேவையான பண்டம் பாத்திரமெல்லாம் வாங்கிப் போடுகிறார்கள் என்பது வாஸ்தவம்தான். ஆனால் “அநேக தகப்பன்மார் தங்கள் பிள்ளைகளுக்கு சாப்பாட்டுக்குத் தேவையானதை கொடுப்பதோடு திருப்தி அடைந்துவிடுகிறார்களே தவிர, அவர்களுக்குத் தேவையான விஷயங்களைக் கற்றுக் கொடுப்பதில்லை” என காப்பிட்டால் என்ற பிரெஞ்சு பத்திரிகை குறிப்பிட்டது.
பெரும்பாலான குடும்பங்களில், அப்பா என்று ஒருவர் வீட்டில் இருப்பார், ஆனால் தன் பிள்ளைகளுடைய காரியங்களில் அக்கறையே காட்டமாட்டார். அவருடைய கவனமெல்லாம் வேறெங்கோ இருக்கும். ஃபாமி க்ரேட்யென் என்ற பிரெஞ்சு பத்திரிகை குறிப்பிடுகிறபடி, “உடலளவில் [அப்பா] அங்கு இருந்தாலும் மனதளவில் அங்கு இருக்கமாட்டார்.” இன்று அநேக தகப்பன்மார் ஏன் மன ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் தங்கள் குடும்பத்தாரோடு இருப்பதில்லை?
“அப்பா அல்லது கணவர் என்ற ஸ்தானத்தை அவர் புரிந்துகொள்வதில்லை” என்பதே அதற்கு அடிப்படை காரணம் என மேற்குறிப்பிடப்பட்ட பத்திரிகை விளக்குகிறது. குடும்பத்திற்குத் தேவையான பணத்தை சம்பாதித்துக் கொண்டுவருவதுதான் ஒரு நல்ல அப்பாவுக்கு அழகு என அநேக தகப்பன்மார் நினைக்கிறார்கள். போலிஷ் எழுத்தாளர் யூஸெஃப் அகஸ்டின் சொன்ன விதமாக, “குடும்பத்திற்குத் தேவையான பணத்தை கொடுப்பதால் தாங்கள் நல்ல பெற்றோராகி விடுவதாக தகப்பன்மார் பலர் நினைக்கிறார்கள்.” ஆனால் அது தகப்பனுடைய பொறுப்புகளில் ஒரு பாகம் மட்டுமே.
உண்மை என்னவென்றால், பிள்ளைகள் தங்களுடைய அப்பாவின் சம்பாத்தியத்தை வைத்தோ, தங்களுக்கு அவர் கொடுக்கும் பரிசு பொருட்களின் விலையை வைத்தோ அவருடைய மதிப்பை எடை போடுவதில்லை. மாறாக, பரிசுகளைக் காட்டிலும் அப்பாவுடைய அன்பு, நேரம், கவனிப்பு இவற்றையே பிள்ளைகள் மிக அதிகமாக விரும்புகிறார்கள். இவையே அவர்களுக்கு மிகவும் முக்கியமானவை.
மறு ஆய்வு அவசியம்
கல்விக்கான ஜப்பானிய மத்திய கவுன்சிலின் அறிக்கைபடி, “வேலையே கதி என கிடக்கும் தகப்பன்மார் தங்களுடைய வாழ்க்கை பாணியை மறு பரிசீலனை செய்வது அவசியம்.” இப்போது கேள்வி என்னவென்றால், தன் பிள்ளைகளின் நலனுக்காக ஒரு தகப்பன் மாற்றங்கள் செய்வாரா? இதற்காக நடத்தப்பட்ட ஓர் ஆய்வைப் பற்றி ஜிஸனா ஆல்கெமைனா என்ற ஜெர்மன் செய்தித்தாள் குறிப்பிட்டது; அதாவது, பேட்டி காணப்பட்ட தகப்பன்மாரில் பெரும்பாலோர் தங்களுடைய வேலையைவிட பிள்ளைகளின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுத்ததாக அந்த ஆய்வு காட்டியது.
அப்பாவுக்கு தங்கள் மீது அக்கறை இல்லாததுபோல் பிள்ளைகளுக்குத் தோன்றும்போது அது அவர்களுக்கு வேதனையாக இருக்கலாம். போலந்தை சேர்ந்த லிட்யா என்பவருக்கு இப்போது 21 வயது; சிறுமியாக இருந்த சமயத்தில் அவரது அப்பா எப்படியிருந்தார் என்பது இன்னும் அவர் மனதில் பசுமையாக உள்ளது. “அப்பா எங்களோடு பேசவே மாட்டார். நாங்க எல்லாரும் தனித்தனி உலகங்களாக சுற்றிவந்தோம். எனக்கு நேரம் கிடைத்தபோதெல்லாம் டிஸ்கோ கிளப்புக்குப் போய் பொழுதை போக்கியது அப்பாவுக்குத் தெரியாது” என அவர் சொல்கிறார். அதே விதமாகவே, ஸ்பெயினைச் சேர்ந்த 21 வயது மாக்காரேனாவும் கூறுகிறார். அவர் சிறுமியாக இருந்தபோது, அவருடைய அப்பா “சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஃப்ரென்ட்ஸோடு சேர்ந்து ஜாலியாக சுற்ற போய்விடுவார். பல முறை நாட்கணக்காக அப்படியே காணாமல் போய்விடுவார்.”
சரியான முன்னுரிமைகளை தீர்மானித்தல்
தங்கள் பிள்ளைகளோடு போதியளவு நேரம் செலவிடுவதில்லை, அவர்களை கண்டுகொள்வதில்லை என்பதை பெரும்பாலான தகப்பன்மார் உணரலாம். ஜப்பானைச் சேர்ந்த ஒரு டீனேஜ் மகனையுடைய தகப்பன் இவ்வாறு கூறுகிறார்: “என்னுடைய சூழ்நிலையை என் பிள்ளை புரிந்துகொள்ளும் என்று நினைக்கிறேன். நான் பிஸியாக இருந்தால்கூட எப்போதும் அவனை பற்றியேதான் நினைத்துக் கொண்டிருப்பேன்.” ஆனால், அப்பா ஏன் வீட்டில் இருப்பதில்லை என்பதை ஒரு பிள்ளை புரிந்துகொள்ள வேண்டுமென விரும்பினால் மட்டுமே பிரச்சினை தீர்ந்துவிடுமா?
ஒரு பிள்ளையின் தேவைகளை திருப்திபடுத்துவதற்கு முயற்சி எடுத்தே ஆக வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆம், தியாகம் செய்வது அவசியம். என்றாலும், பிள்ளைகளுக்கு முக்கியமாக தேவைப்படுபவற்றை, அதாவது அன்பு, நேரம், கவனிப்பு ஆகியவற்றை அளிப்பது எளிதல்ல என்பது தெளிவாக தெரிகிறது. ‘மனுஷன் அப்பத்தினால் [அல்லது, உணவினால்] மட்டுமே வாழ்வதில்லை’ என இயேசு கிறிஸ்து சொன்னார். (மத்தேயு 4:4) அது போலத்தான், பிள்ளைகள் நல்ல முறையில் வளருவதற்கு பொருளாதார காரியங்கள் மட்டும் போதாது. பிள்ளைகளோடு நேரம் செலவிடுவதற்கு, ஓர் அப்பாவாக நீங்கள் உங்களுடைய பொன்னான நேரத்தை தியாகம் செய்ய—ஒருவேளை பதவி உயர்வைக்கூட தியாகம் செய்ய—மனமுள்ளவர்களாக இருக்கிறீர்களா?
பிள்ளைகள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை உணர்ந்த ஒரு தகப்பனைப் பற்றி பிப்ரவரி 10, 1986 தேதியிட்ட மைனிச்சி டெய்லி நியூஸ் செய்தித்தாள் குறிப்பிட்டது. “ஜப்பான் தேசிய ரயில்வேயில் (JNR) உயர் பதவி வகித்த ஒருவர் தன் குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருக்க விரும்பாததால் வேலையை ராஜினாமா செய்தார்” என அது குறிப்பிட்டது. “டைரக்டர் ஜெனரல் என்ற பதவியை யார் வேண்டுமானாலும் ஏற்கலாம். ஆனால் என் பிள்ளைகளுக்கு தகப்பனாக நான் மட்டும்தான் இருக்க முடியும்” என அந்த அதிகாரி சொன்னதாக அந்த செய்தித்தாள் மேலும் கூறியது.
ஆம், ஒரு நல்ல அப்பாவாக ஆவதற்கு முதற்படி, பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட ஒரு அப்பா தேவை என்பதை அறிந்துகொள்வதாகும். அப்படிப்பட்ட ஓர் அப்பாவாக இருப்பதில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது என்பதை நாம் ஆராயலாம். (g04 8/22)
[பக்கம் 3-ன் பெட்டி]
“டாடி, நீங்க போயிட்டு எப்போ வருவீங்க?”
ஜப்பானில், வேலைக்கு கிளம்பிய அப்பாவிடம் நாவோ என்ற ஐந்து வயது சிறுமி கேட்ட கேள்வியே இது. அவர் வீட்டோடு இருந்தாலும், இந்தச் சிறுமி அவரைப் பார்ப்பதே கிடையாது. ஏனென்றால், காலையில் அவள் எழும்புவதற்கு முன்பே அவர் வேலைக்கு போய்விடுவார், இரவில் அவள் தூங்கிய பின்பே வீடு திரும்புவார்.